Tuesday, February 1, 2011

சிறுத்தை - காவலன்

போன வாரம், சிறுத்தை. இந்த வாரம், காவலன்.



படத்தைப் பற்றி சொல்வதற்கு முன்பு, பின்னணி இசை பற்றி சொல்கிறேன். இரண்டு படத்திற்கும் இசை, வித்யாசாகர். இரண்டும் வெவ்வெறு வகையான படங்கள். வெவ்வெறு வகையான இசையை கொடுத்திருக்கிறார். சிறுத்தைக்கு, தரணி படத்திற்கு கொடுக்கும் இசை போல அதிரடியாகவும், காவலனுக்கு ரொம்ப மென்மையாக, நெகிழ வைக்கும் வகையிலும் இசையமைத்திருக்கிறார். காவலனில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு கோரஸுடன் கூடிய இசை, காட்சியின் பாரத்தை இன்னமும் மேலே கூட்டுகிறது.

முன்பு விஜய் படங்களின் பாடல்களை, படம் வருவதற்கு முன்பு வரை அதிகமாக கேட்பேன். படம் வந்தபிறகு கேட்பது குறையும். அல்லது, நின்று விடும். காவலன் படம் வருவதற்கு முன்பு, ஒருமுறைதான் கேட்டேன். படம் பார்த்தப்பிறகு தான், கேட்பது அதிகரித்துவுள்ளது.

இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் மட்டும்தான் தமிழ் நடிகர்கள். துணை நடிகர்களில் நிறைய பேர், மலையாளிகள் தான். அசின் அண்ணன், ராஜ்கிரண் அடியாள், வடிவேலு ஜோடி இப்படி பலர். காவலன் இப்படியென்றால் சிறுத்தையில் தெலுங்கு நெடி.

பார்க்கில் அசினிடம் லவ் ப்ரபோஸ் ப்ராக்டிஸ் செய்யும் காட்சியில், விஜய்யின் நடிப்பு நன்றாக இருந்தது. அதிலும் திரும்பி நடக்கும் போது, பெஞ்ச் தடுக்கி விழும் காட்சியில் சூப்பர். அதேப்போல், ’யாரது’ பாடலில் விஜய்யின் இன்னொசென்ஸ் அருமை. இவ்வளவு நாட்கள், ஆகாசசூரனாக வந்துவிட்டு, இப்போது இப்படி விவரமில்லாதவராக வருவதே பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. யாராவது நல்ல இயக்குனர் கையில் சிக்கினால், விஜய் கலங்கடிப்பார் என்பது உறுதி.

இந்த படத்தில் விஜய்க்காக (விஜய்யால்) செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன?

சிறுத்தை. காலத்தின் கோலம். விஜய் நடிக்கிற கதையில், கார்த்தி நடித்திருக்கிறார். கார்த்தி காட்டில் அடடா மழை, அடை மழை.

நிறுவனங்களில் ஆடிட் வரும்போது, செய்யப்பட்டிருப்பது எல்லாம் டாகுமெண்ட் செய்யப்பட்டிருக்கிறதா, டாகுமெண்ட் செய்யப்பட்டிருப்பது தான் செயல்படுத்தப்பட்டிருக்கிறதா என்று கவனிப்பார்கள். செய்தது தவறான முறை என்றாலும், அப்படித்தான் செய்யப்படும் என்று ஆவணப்படுத்தியிருந்தால், அது சரி என்று எடுத்துக்கொள்ளப்படும். சிறுத்தையில் தெலுங்கு வில்லன்கள் தமிழில் பேசிவிட்டு, அதற்கு முதலிலேயே டிஸ்கிளேமர் போடுவது இந்த மாதிரிதான்.

படத்தில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட், லவ் என்று கலந்துக்கட்டியிருக்கிறார்கள். என்னால் ஆந்திராக்காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

.