Thursday, December 30, 2010
மன்மதன் அம்பு
என்னையும் நம்பி ஒரு ஜீவன் கேட்டதால் இப்பதிவு.
நான் அவ்வப்போது படம் பார்க்கும் ஒரு தியேட்டரில், ஆன்லைன் ரிசர்வேஷன் கொண்டு வந்திருந்தார்கள். படம் வெளிவந்த அன்று காலை, 'ஆன்லைன் ரிசர்வேஷனில் ரஜினி படம் vs கமல் படம்' என்று ட்விட்டரில் ஒரு விவாதம் பார்த்தேன். பிறகு, இந்த தியேட்டரில் ஆன்லைன் ரிசர்வேஷன் நிலையைப் பார்க்கலாம் என்று சென்றேன். நான் தான் முதல் போணி.
ரிசர்வ் செய்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்றால், முதல் போணி மட்டுமல்ல, ஒரே போணி என்றும் தெரிந்தது. தியேட்டருக்குள் சென்றால், சொற்ப கூட்டம். முதல் நாள் கமல் படத்திற்கு இந்நிலையா? என்று ஆச்சரியமாக இருந்தது. இதற்கும் கே.எஸ். ரவிக்குமார் படம், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு.
ரொம்ப சிம்பிளான கதை. அதை எவ்வளவு கஷ்டமா கொடுக்கணுமோ, அப்படி கொடுத்திருக்கிறார்கள். இதற்கு தமிழின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சூர்யாவை, ஒரு பாடலுக்கு ஆட சொல்லியிருக்கிறார்கள். கன்னடத்தின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரமேஷ் அரவிந்திற்கு மொட்டையடித்திருக்கிறார்கள். மற்றபடி, நிறைய பேருக்கு கண்ணுக்கு தெரியாவண்ணம் மொட்டையடித்திருக்கிறார்கள்.
இது என்ன வகை படம் என்பதை புரிந்துக்கொள்ள முடியாதவண்ணம் படமெடுத்திருப்பது என்ன வகை நவீனத்துவம் என்று தெரியவில்லை. சில நேரங்களில் கௌதம் படத்தில் வருவதை போல வசனம் பேசுகிறார்கள். சில நேரங்களில் அதற்கு மேலே, மலையாளம், தெலுங்கு, பிரென்ச் என்று என்னை போன்றவர்களுக்கு ஒன்றுமே புரிந்துவிட கூடாது என்பது போல் பேசுகிறார்கள். Alimony என்றால் என்னவென்று வீட்டுக்கு சென்று டிக்ஷனரி எடுத்து பார்க்கவேண்டியதாக போய்விட்டது. அடுத்து கமல் வசனத்தில் வரும் படத்திற்கு, கையோடு டிக்ஷனரி எடுத்த செல்லலாம் என்றிருக்கிறேன்.
அதைப்போல் கண்ணீர் வடிய சீரியஸாக பேசுகிறார்கள். அதற்கு அடுத்த காட்சியில், மொக்கை காமெடி போடுகிறார்கள். அதற்கு, அடுத்த காட்சியில் அறிவுபூர்வமாக பேசுகிறார்கள். கமல் விஜய் டிவியில் பேசியதை போலவே, படத்திலும் பேசுகிறார். கமலுக்கும், த்ரிஷாவுக்கும் எப்போது காதல் வந்தது, எப்படி காதல் வந்தது என்று போட்டி வைத்தால், பரிசு கொடுப்பது மிச்சம். மாதவனுக்கும், சங்கீதாவுக்கும் எப்படி காதல் வந்தது என்று சொன்னால், அடுத்த கமல்-ரவிக்குமார் கதை டிஸ்கஷனில் நீங்களும் சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள்.
முட்டு சுவர், நடு ரோடு என்று வலிந்து திணிக்கப்பட்ட நிறைய குறியீடுகள் இருக்கிறது. பாராட்டுவார்கள் என்று பார்த்தால், ஒருவரும் பாராட்ட மாட்டேங்கிறார்கள்.
’நீல வானம்’ பாடல் படமாக்கத்திற்கு கமல் எப்படி வாயசைத்திருப்பார் என்று யோசித்ததிலேயே பாடல் முடிந்துவிட்டது. படத்தின் பாராட்டுக்குரிய ஒரே விஷயம் இதுதான்.
த்ரிஷா, சங்கீதா இருக்கும் காட்சிகளில் த்ரிஷாவை விட சங்கீதாவையே நிறைய பேர் பார்த்திருப்பார்கள் என்பது நிச்சயம். இதுதான் சங்கீதாவின் ஒரிஜினல் குரல் என்றால், இவர்தான் ‘நித்தி பக்தை’ மாளவிகாவிற்கு குரல் கொடுப்பவரா? இந்த படத்தில் த்ரிஷாவின் அம்மா நடித்திருப்பதாக செய்திகள் வந்ததே? எந்த வேடத்திற்காக இருக்கும்?
படத்தின் ஆறுதலான விஷயங்கள், ஒளிப்பதிவும், இசையும்.
கமல், ரவிக்குமாரை கூடியவிரைவில் சந்தானபாரதி ஆக்கிவிடுவார் எனத் தோன்றுகிறது. கமல் பேச்சை கேட்காததால் தான், ரவிக்குமாரால் கமலை வைத்து தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுக்க முடிகிறது என்பார்கள். ரவிக்குமார், கமல் பேச்சை கேட்க தொடங்கிவிட்டார் போலும்.
கமல் அறிமுகமாகும் ஆரம்பக்காட்சிக்கு தியேட்டரில் கிடைக்கும் வரவேற்ப்பை நினைத்துப்பார்க்கும்போது, கமலை வைத்து இந்த பட்ஜெட்டில் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பிரமாண்ட கப்பல், அழகழகான லொக்கேஷன்கள், ஹெலிகாப்டர் ஒளிப்பதிவு என அனைத்து பிரமாண்டங்களையும், படத்தின் திரைக்கதையும், முடிவும் அமுக்கிவிடுகிறது.
Huge-budget films are good as long as they have solid content. இது கமல் சொன்னது. கமலுக்கே சொல்ல வேண்டியதாக இருக்கிறது.
.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//Huge-budget films are good as long as they have solid content. இது கமல் சொன்னது. கமலுக்கே சொல்ல வேண்டியதாக இருக்கிறது.//
சூப்பர்........
விமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பரே,
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நச். சூப்பர் விமர்சனம்
//சங்கீதாவின் ஒரிஜினல் குரல் என்றால், இவர்தான் ‘நித்தி பக்தை’ மாளவிகாவிற்கு குரல் கொடுப்பவரா?//
எனக்கும் இந்த சந்தேகம் வந்தது.அப்படியென்றால் ஐஸ்வர்யாவிற்கு(லஷ்மி மகள்)இவர்தான் இத்தனை நாட்களாக குரல் கொடுத்தாரா?
super review
படம் மாதிரி இல்லாம உங்க விமர்சனம் தெளிவா இருக்கு.
Thanks, good review!!!
ரசிக்கத்தக்க விமர்சனம் தல... சந்தான பாரதி, மாளவிகா குரல் எல்லாம் செம குத்து...
ஆங் அப்புறம் இன்னொரு ஜீவன் கேக்குது.. விருதகிரி விமர்சனம் அல்லாம் போட மாட்டீங்களா தொரை... ஹி,..ஹி..
my FB staus after the first show....
For me 'Man mathan Ambu" was not up to the level i expected, it's time for Kamal to work with a good director as only an actor & to tear up the fake labels says "direction by K.S. Ravikumar"...!!!
nalla otthupokuthu boss, namma thoufhts..nanri...:)
//ரொம்ப சிம்பிளான கதை. அதை எவ்வளவு கஷ்டமா கொடுக்கணுமோ, அப்படி கொடுத்திருக்கிறார்கள். இதற்கு தமிழின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சூர்யாவை, ஒரு பாடலுக்கு ஆட சொல்லியிருக்கிறார்கள். கன்னடத்தின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரமேஷ் அரவிந்திற்கு மொட்டையடித்திருக்கிறார்கள். மற்றபடி, நிறைய பேருக்கு கண்ணுக்கு தெரியாவண்ணம் மொட்டையடித்திருக்கிறார்கள்.//
-நச்!
-வினோ
//ரவிக்குமார், கமல் பேச்சை கேட்க தொடங்கிவிட்டார் போலும்//
நச்.. மேடைகள்'ல எல்லாம் கமல் சிறந்த சினிமா பத்தி பேசுறாரே.. ஆனா செயல்ல காட்ட மாட்டேங்கிறாரே.. ஏன்?
Post a Comment