Monday, November 29, 2010

ரிசண்ட் படங்கள் - நவம்பர் 2010

குவாட்டர் படத்திற்கு பிறகு இப்படி ஒரு குவார்ட்டருக்கு படங்களைச் சேர்த்து எழுதுவேன் என்று நினைக்கவில்லை. எழுதி நாளாகிறது. எழுதுவதிற்கிடையே இடைவெளி கூடுகிறது. காரணம் பல. ஒன்று சொல்கிறேன். கேளுங்கள்.

அன்று ஒரு பதிவை மாங்கு மாங்கென்று டைப் செய்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். டைப் அடித்து, உடனுக்குடன் Ctrl+S அடிக்க மாட்டேன். நீளமாக, நேர்த்தியாக(!) நோட்பேடில் அடித்து முடிக்கும் சமயம், வீட்டில் இருந்த பொடிசு ஒன்று, கம்ப்யூட்டரை அசால்ட்டாக ஆஃப் செய்துவிட்டு சென்றுவிட்டது. திரும்ப ஆன் செய்து பார்த்தப்போது, முதல் பாரா மட்டுமே இருந்தது. அதை பார்த்தப்பிறகு, திரும்ப டைப் செய்யவா தோன்றும்? இருங்க, Ctrl+S பண்ணிக்கிறேன்!

---

மைனா

ஒவ்வொரு படமும் ஓட, ஒவ்வொரு காரணம் இருக்கும். இந்த படம் ஓட, விநியோகஸ்தர் முக்கிய காரணம். பருத்திவீரனின் பாதிப்பையும் மீறி, மக்களை கவர்ந்து கைத்தட்ட வைத்தது - போலீஸ் கேரக்டர் ருத்ரதாண்டவம் ஆடும் இறுதிக்காட்சி. பஸ் கவிழ்ந்து விழுந்த பிறகு, தலையை துடைத்துக்கொண்டே ஒருவர் போனில் பேசும் காட்சிக்கு ரொம்பவே சிரித்தேன். அதில் நீளமான வசனத்தை குறைத்திருக்கலாம்.

இமான் பாடல்கள் எப்போதும் பிடிக்கும். இப்படத்தின் பாடல்கள், படம் பார்த்தப்பிறகு இன்னமும் பிடித்தது. இந்த இயக்குன-இசையமைப்பாள கூட்டணி தொடர்ந்து ஹிட்டடித்தால் நன்றாக இருக்கும்.

நகரம் மறுபக்கம்

வடிவேலு, ரொம்ப நாட்கள் கழித்து, திரையரங்கை குலுங்க வைத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுந்தர் சி. இயக்கம் என்பதால் ஒரு பேமிலி காமெடி பட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தை பார்த்தால் சுராஜ் படம் போல் இருந்தது. சிஷ்யர்களின் படங்களில் குருவின் தாக்கம் தெரியும். இங்கு குருவின் படத்தில் சிஷ்யரின் பாதிப்பு. விறுவிறுப்பான சம்பவங்கள் மூலம் காட்சிகளை நகர்த்தியதால், பெரிய சேதாரம் இல்லை. மீண்டும் பழைய படி, ஒரு பொள்ளாச்சி ஏரியா படத்தை சுந்தர் சி.யிடம் எதிர்ப்பார்க்கிறேன்.

ஹாரி பாட்டர்

இதை எவண்டா குழந்தைகள் பார்க்குற படம்’ன்னு சொன்னது? செம மொக்கை. இந்த மாதிரி கிராபிக்ஸை, இன்னுமா மக்கள் ரசிக்கிறார்கள்? தயவுசெய்து, குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். இன்னொருமுறை, எந்திரனுக்குக்கூட கூட்டி செல்லலாம்.

நந்தலாலா



கமர்ஷியல் படத்தையும் கலைப்படைப்பாக எடுப்பதால்தான் மிஷ்கினை பிடித்திருந்தது. இதில் வெறும் கலை, அழகியல் மட்டும்.

எங்காவது நடந்துக்கொண்டிருப்பார்கள். பிறகு, எதையோ பார்த்து அப்படியே நின்றுவிடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்து, கேமரா தள்ளிவரும். அங்கு யாராவது நிற்பார்கள். இப்படி ஒரு முறை வந்தால் பரவாயில்லை. இப்படியே வந்துக்கொண்டிருந்தால்...?

அஞ்சாதேயில் வந்ததை போல, கால்களிடையே உலாவும் கேமரா, இதில் அடிக்கடி அப்படியே உலாவுவதால், அந்த கிக்கும் போச்சு. படம் பார்க்கும் போது நிறைய விஷயங்கள் ரசித்தாலும், படத்தின் வேகத்தினால், யூகிக்க முடிந்த திருப்பங்களால், பாராட்டும்படியான படம் பார்த்த உணர்வு வரவில்லை. இதற்கும் அந்த ஜப்பான் படத்தை பார்க்கவில்லை. கடைசிக்காட்சியில் ரோகிணியின் கெட்டப்பைப் பார்த்தப்போது, இதுவும் ஜப்பான் படமாக தான் தெரிந்தது.

மிஷ்கின் நடிப்பைப் பார்த்தப்போது, எனக்கு நரேன் தான் நினைவுக்கு வந்தார். முந்தைய படங்களில், தன்னுடைய நடிப்பை நரேன் மூலம் வெளிக்காட்டி இருந்தார். இருந்தாலும், அரை நிமிடத்திற்கு ஒரு ஸ்டில் கொடுத்துவிட்டு, எதுவானாலும் பிறகு செய்ய ஆரம்பிப்பது ஓவரு உலகத்தரம்!

இளையராஜா இல்லாவிட்டால் அவ்வளவுதான். இம்மாதிரி படங்களில் இளையராஜா குரலில் ஒரு பாடல் வரும்போது, தொண்டை அடைக்கும். உ.தா. அழகி - உன் குத்தமா. இதிலும் ஒரு பாட்டு வருகிறது. ஒன்றும் அடைக்கவில்லை. அது ஏன் மிஷ்கின் இத்தனை பாடல்களை இளையராஜாவிடம் வாங்கி, சிலதை மட்டும் பயன்படுத்தினார்? முக்கியமாக குறவர் பாடல் இல்லை.

என்னமோ தெரியவில்லை. எழுத்தாளர்களுக்கெல்லாம் பிடித்திருக்கிறது. கமல் நடித்திருந்தால் எந்த படமாக இருந்தாலும், மனோரமாவும், காந்திமதியும் வந்து ‘என் பிள்ளை படத்தை என்னா அருமையா எடுத்திருக்கு!!!’ என்று கண்ணீருடன் சொல்வார்களே? அந்த மாதிரி. ஞாநி என்ன சொல்கிறார்? தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

உத்தமப்புத்திரன்

இப்போதெல்லாம் படம் நீளமாக இருந்தால் பிடிப்பதில்லை. நான் பிஸியாகிவிட்டேன் போலும். வேலை இருந்ததால், கடைசி பாடலின்போதே எழுந்து வந்துவிட்டேன். உசும்பலாரெசே பாட்டு பிடித்திருந்தது. டக்குன்னு டக்குன்னு, நச்சுக்கு நச்சுக்கு போன்ற இடங்களில் டிடிஎஸ்ஸை நன்றாக பயன்படுத்தியிருந்தார்கள். பொதுவாகவே, படத்தின் காட்சிகள் கலர்புல்லாக அழகாக இருந்தது. இப்படிப்பட்ட படத்திலும் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம் தெரிகிறார்.

தங்களை அவமதிப்பதாக சொல்லி ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, படத்தில் ஆங்காங்கே கீ கீ என்று சத்தம் வருகிறது. அந்த இடங்களிலெல்லாம் நானே ஒரு வார்த்தையை சப்ஸ்டிடுயூட் செய்து சிரித்துக்கொண்டேன்.

இயக்குனருக்கு தேவையில்லாத வேலை. அப்படியொன்றும் நேட்டிவிட்டியையும் கொண்டு வரவில்லை. ஏனோதானோவென்று எடுத்ததுபோல் இருந்தது. நாயகி ஒரு காட்சியில் தண்டபாணி என்கிறார். யாரும் சொல்லாமலே சிவா என்று சரியாக சொல்கிறார். தனுஷ் காலையில் மீசை இல்லாமல் இருக்கிறார். இரவில் மீசை-தாடியுடன் இருக்கிறார். விவேக் மட்டும் கொஞ்சம் புதுமாதிரியாக சிரிக்க வைக்கிறார்.

மந்திரப்புன்னகை

கடைசி அரைமணி நேரத்தை தவிர்த்து, இந்த படம் எனக்கு பிடித்திருந்தது. கதையே தேவையில்லை. இம்மாதிரி நச்சென்ற வசனங்களுக்காகவே, கரு. பழனியப்பனின் படம் பார்க்க நான் ரெடி. இம்மாதிரி கதை கொண்ட படத்தை, இவ்வளவு டீசண்டாக எடுத்ததே பாராட்டுக்குரியது.

இருந்தாலும், தன்னுடைய முதல் படத்தைப்போல, எல்லோரும் ரசிக்கும்படியான கதையை, இதேப்போல் புத்திசாலித்தனமாக இயக்குனர் எடுக்கவேண்டும் என்பதே என் ஆசை.

.

Sunday, November 21, 2010

பெங்களூர் புத்தகத்திருவிழா 2010

இந்த வருடம், புத்தகங்கள் வாங்கி நெடுநாளாகிவிட்டது. ஆனால், தினமும் ஏதேனும் புத்தகம் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். புத்தகங்கள் கடைவில் வாங்கவில்லையே தவிர, இரவலாக வாங்கி சில புத்தகங்கள் வாசித்தேன். இரவலாக வாங்கி வாசிக்கும் போது, ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. தவிர, சீக்கிரம் வாசித்துக்கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ‘ஒரு வேலையை முடிப்போம்’ என்ற கணக்கிலேயே வாசிக்க வேண்டி இருக்கும். அதனால், அடுத்ததாக எப்போது புத்தகம் வாங்குவோம் என்ற ஆர்வத்தில் இருந்தேன்.

பெங்களூர் புத்தகக்கண்காட்சி, இந்த வருடமும் அதே பேலஸ் க்ரவுண்டில் தான். ஆனால், உள்ளூக்குள் வேறொரு இடம். வழக்கம்போல், பைக்கிற்கு 10 ரூபாயும், அனுமதி சீட்டுக்கு 20 ரூபாயும். புத்தகங்களை நெருங்குவதற்கே 30 ரூபாய் செலவாகிறது. உள்ளே புத்தகங்களை கண்டபோது, அவையும் விலை உயர்ந்து இருந்தன. இருந்தாலும், புத்தகங்களுக்கு என்று ஒரு மதிப்பு இருப்பதால், இந்த மதிப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஸ்டால் வாடகை, பதினைந்தாயிரம் என்றார்கள். யப்பா! சில ஸ்டால்களை கண்டபோது, பாவமாக இருந்தது.

ஒருமுறை ஒரு முழு ரவுண்ட் சென்றுவிட்டு, வாங்க நினைத்த புத்தகங்களை பார்த்து வைத்துவிட்டு, திரும்ப வந்து வாங்கிக்கொண்டேன். எப்போதும் இருப்பதை விட, இந்த முறை கன்னட புத்தகங்கள் அதிகம் இருப்பதாக தோன்றியது. ஆனாலும், இந்த முறையும் அதிகம் இருந்தது, ஆங்கில புத்தகங்களே. தமிழ் வழக்கம் போல. வானதி, அல்லயன்ஸ், கண்ணதாசன், விகடன், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு பதிப்பக புத்தகங்கள் கிடைத்தன.

நான் சென்றதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்திருக்கும் போல. அந்த மேக்கப்பில் சில பெண்கள் வெளியே சென்றுக்கொண்டு இருந்தார்கள். புத்தக அரங்கை விட்டு, வெளியே வரும் வழியில் ஊறுகாய், ஊதுபத்தி கடைகளும் வழக்கம்போல இருந்தன.

கண்காட்சி என்றாலே டெல்லி அப்பளம், பஜ்ஜி, பேல் பூரி, பானி பூரி, ப்ரெட் ஆம்லெட், பஞ்சு மிட்டாய், ரோஸ் மில்க், சோடா இல்லாமலா? இருந்தது, ரொம்பவும் காஸ்ட்லியாக.

---

இந்த முறை நித்தியானந்தாவின் புத்தகங்கள் கிடைக்கவில்லை. இரண்டு புது சாமியார்களை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய இஸ்லாமிய புத்தக ஸ்டால்கள் இருந்தன.

மத்தியில் ஒரு பெரிய இடத்தில், குரானை இலவசமாக கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் கொடுத்து தள்ளினார்கள்.

பகவத் கீதை தள்ளுபடி விலையில் கிடைத்தது. 1000 ரூபாய் மதிப்புள்ளது, 120 ரூபாய்க்கே என்று விற்றார்கள்.

குரான் இலவசமாகவும், பகவத் கீதை தள்ளுபடியில் கிடைக்க, பைபிள் நிலை என்னவென்று தெரியவில்லை.

---

பெரிதாக எதுவும் திட்டமிட்டு வாங்கவில்லை. வாசிக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் தோன்றிய புத்தகங்களை எல்லாம் கையில் எடுத்தேன். பெரும்பாலும், ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த புத்தகங்களையே என் கைகள் தேர்வு செய்தன. அனைத்துமே, இணையத்தில் ஏதோ ஒருவகையில் அறிமுகம் கிடைத்தவை.

இன்னொரு விஷயம், கொஞ்சம் பிரபலமான ஆசிரியர்களையே வாங்கினேன். எதுவுமே திட்டமிடவில்லை. மனநிலை அப்படி இருந்தது.

வாங்கிய புத்தகங்களை, ஒரு சின்ன அனாலிஸிஸ் செய்து பார்த்த போது, இப்படி வந்தது.



இன்னும் ஒரு லெவல் உள்ளே சென்றபோது, இப்படி வந்தது.



பெரும்பாலானவை, வாழ்க்கை வரலாறும், கட்டுரை வடிவிலான புத்தகங்களும். அதுவும், எப்படிப்பட்ட புத்தகங்கள் என்று பார்த்த போது, திரைத்துறையும் அரசியலுமே முன்னிலை வகித்தன. பயணமும், வணிகமும் சின்ன இடத்தை பிடித்ததே ஆறுதலான விஷயம். இதன் மூலம், எனது வாசிப்பு விருப்பங்கள் எனக்கே தெரிகிறது.

இனி அடுத்த முறை எப்படி வருகிறது என்று பார்ப்போம். சென்ற வருட வரலாறு, இங்கே.

என்னென்ன புத்தகங்கள் என்பதை இனிவரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

.

Wednesday, November 17, 2010

ஹார்லிக்ஸ்

வெள்ளை ஆங்கிலேயர் ஜேம்ஸிற்கு அப்போது தெரிந்திருக்காது. 137 வருடத்திற்கு பிறகு, ஒரு பச்சைத்தமிழன் அவனுடைய வலைப்பூவில் அவரைப் பற்றி எழுதுவான் என்று. ஜேம்ஸ் அறிந்திராத வலைப்பூ, உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது அதைத்தான்.

போதும், மொக்கையைப் போட்டது. சொல்ல வந்த விஷயத்தை சொல்கிறேன்.

ஜேம்ஸின் முழுப்பெயரை சொன்னால், சொல்ல வரும் விஷயம் சூசகமில்லாமல் புரிந்துவிடும். ஜேம்ஸ் ஹார்லிக். இவருடைய தம்பி வில்லியம் ஹார்லிக். ஜேம்ஸ் ஒரு வேதியியல் பார்ட்டி. குழந்தைகளுக்கான உலர்ந்த உணவு தயாரிக்கும் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் அப்படி இப்படி என்று எதை எதையோ கலக்க, சில உணவு தயாரிப்புமுறைகளை தெரிந்துக்கொண்டார்.

பிறகு, அமெரிக்காவில் இருந்த தம்பியுடன் சேர்ந்து ஏதாவது செய்யலாம் என்று சென்றார். வில்லியமும் இவரை போல ஒரு ஐடியா மணி தான். ஆரோக்கிய உணவுகளை பற்றிய ஆய்வை செய்துக்கொண்டிருந்தார். சும்மா இல்லாமல் எதையாவது செய்துக்கொண்டிருக்க, நச்சென்று ஒரு ஐட்டம் கிடைத்திருக்கிறது. நமக்கு பால் கிடைத்தால், கட்-அவுட்டுக்கு ஊற்றுவோம். கோதுமை கிடைத்தால், சப்பாத்தி போட்டு சாப்பிடுவோம். அவர் அப்படியில்லாமல், பால், கோதுமை, பார்லி என்ற கோதுமை வகை போன்றவற்றை ஊற வைத்து, கொதிக்க வைத்து, காய வைத்து, கட்டியாக்கி, பொடியாக்கி, முடிவில் கையில் எடுத்துப்பார்த்த போது, மண்டையில் லைட் எரிந்திருக்கிறது.

உடனே ஒரு பேடண்ட் வாங்கிவிட, இன்று கூட நம் வீட்டு குழந்தை குடிக்கும் ‘ஹார்லிக்ஸ்’ எனப்படும் பால் சத்துமாவு உதயமானது. ரெண்டு ஹார்லிக்குகளும் சேர்ந்து தயாரித்ததால், ஹார்லிக்ஸ் ஆனது. முதலில் அமெரிக்காவில் தயாரித்தார்கள். பிறகு, இங்கிலாந்தில், ஆஸ்திரேலியாவில் என உலகம் முழுக்க தயாரிக்கிறார்கள். குடிக்கிறார்கள்.

இவர்கள் வசம் இருந்த ஹார்லிக்ஸ் நிறுவனத்தை, 1969இல் பீச்சம் குரூப் வாங்கினார்கள். பிறகு பீச்சம், ஸ்மீத்க்லைனுடன் இணைய, அது திரும்ப க்ளாக்ஸோவுடன் சேர, இன்று க்ளாக்ஸோ ஸ்மீத்க்லைன் நிறுவனம் வசம் ஹார்லிக்ஸ் இருக்கிறது.

---

முதலில் குழந்தைகளுக்கான ஆரோக்கியப்பானமாக இருந்தது, பிறகு பெரியோர்களும் குடிக்கும் பானமானது. தற்போது, இந்தியாவில் குழந்தைக்களுக்கான பானமாகவே விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கென்றே ஒரு வெரைட்டி கூட விட்டார்கள்.



ஒவ்வொரு நிறுவனத்திற்குமே, அவர்களின் தயாரிப்புகளுக்குமே, மக்களிடம் ஒரு வகையான பிரதிபலிப்பு இருக்கும். ஹார்லிக்ஸிற்கு ஒரு சாத்வீகமான முகம். நம்மூர் மக்கள் தங்களின் அன்பை, ஆறுதலை செலுத்த, ஹார்லிக்ஸை தான் பயன்படுத்துகிறார்கள்.

உடம்பு சுகமில்லாமலோ அல்லது அடிப்பட்டோ, இல்லை யாருக்கேனும் குழந்தை பிறந்திருக்கிறது என்றாலோ, டவுண் மக்கள் ஆஸ்பத்திரிக்கு கையோடு வாங்கிக்கொண்டு செல்வது ஹார்லிக்ஸைத் தான். முன்பு போல், இப்போது இல்லையென்றாலும், இன்னமும் மருத்துவமனைகளில் இதை காண்கிறேன். ஒரேடியாக காணாமல் போவதற்கு முன்பு, பதிவு செய்யலாம் என்பதற்காகவே இப்பதிவு.

குழந்தைகளை குறி வைத்தே தற்போதைய விளம்பரங்கள் வருவதால், இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

---

இந்தியாவில் ஆடி, ஓடி, விளையாட வைக்கும் பானமாக, குழந்தைகளை வளர வைக்கும் பானமாக விளம்பரப்படுத்தப்படும் ஹார்லிக்ஸ், இங்கிலாந்தில் உறங்க வைக்கும் பானமாக விளம்பரப்படுத்தப்படுகிறது!

சமீபகாலங்களில் நிறைய மாற்றங்களை சந்தித்துவரும் ஹார்லிக்ஸ், ஆரம்ப காலத்தில் ஒரு சிம்பிளான கண்ணாடி பாட்டிலில் வந்தது. பவுடர் காலியான பிறகு, அந்த பாட்டில்கள் தான் வீடுகளில் எண்ணெய் ஊற்றி வைக்கும் பாட்டில்களானது. பத்திரமாக பொருட்களை பாதுகாத்து வைக்கும் வீடுகளில், இன்னமும் அந்த பாட்டில்களை காணலாம்.

இதற்கு போட்டியாகத்தான் எத்தனை எத்தனை தயாரிப்புகள் வந்தன? விவா, மால்ட்டோவா, போர்ன்விட்டா, பூஸ்ட், காம்ப்ளான் என பல போட்டிகளை சந்தித்தாலும், இதற்கென்று ஒரு தனியிடம் உள்ளது. கொஞ்ச நாட்கள் முன்பு கூட, காம்ப்ளானுடன் தெருவில் உருண்டு புரண்டு சண்டை போட்டது.

---

ஹார்லிக்ஸ் பலவிதமான சுவைகளில் வருகிறது. ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, ஏலக்காய் சுவையில் வந்தது. சென்னை போன்ற பெருநகரங்களிலேயே அது கிடைத்தது.

தமிழகத்தின் சிறு நகரங்களில் இருந்து, யாரெனும் சென்னை வந்தால், அவர்கள் வாங்கி செல்லும் விசேஷ பொருட்களில், அதுவும் ஒன்றாக இருந்தது. என் பால்ய காலத்தில் ஹார்லிக்ஸ் குடிப்பதைவிட, ’அப்படியே’ சாப்பிடுவதுதான் எனக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது.

அதன் பிறகு, ஏகப்பட்ட மாற்றங்கள். ஆனாலும், ஹார்லிக்ஸ் என்ற பெயரில் எது வந்தாலும், ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

நூடுல்ஸ் மார்க்கெட்டில் முப்பது வருஷங்களாக கோலோச்சிக்கொண்டிருந்த மேக்கியின் சாம்ராஜ்ஜியத்தையே தகர்க்க தொடங்கியிருக்கிறது, ஹார்லிக்ஸ் ஃபூடுல்ஸ்.

---

கடைசியாக ஹார்லிக்ஸ் பற்றிய ஒரு வரலாற்று துணுக்கு.

முதல் பத்தியில் பார்த்த ஹார்லிக்ஸின் நிறுவனர் வில்லியம், காசு சம்பாதித்தப்பிறகு நிறைய விஷயங்களுக்கு செலவழித்து வந்திருக்கிறார். ரிச்சர்ட் என்னும் உலகம் சுற்றும் வாலிபன், அண்டார்டிகா பக்கம் சென்ற போது அவருக்கு நிறைய பணமும், ஹார்லிக்ஸும் கொடுத்தனுப்பினார் வில்லியம்.

ரிச்சர்டுடைய முக்கிய வேலை, புது புது இடங்களை கண்டறிவது. அண்டார்டிகாவில் ஒரு மலையை கண்டுபிடித்தவர், அதற்கு ஹார்லிக்ஸ் என்றே பெயர் வைத்துவிட்டார்.

இன்னமும் ஹார்லிக்ஸ் என்ற மலை இருக்கிறது. ஹார்லிக்ஸ் மலைதான்.

.

Friday, November 12, 2010

ஸ்பெக்ட்ரம் - அறிவியலும், அரசியலும்

ஸ்பெக்ட்ரமை தமிழில் அலைக்கற்றை என்று சொல்லுவார்கள். நாம் ஸ்பெக்ட்ரம் என்றே தொடரலாம். தகவல் பரிமாற்றத்திற்காக, வான் வழியே அனுப்பப்படும் அலைகள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் இது சம்பந்தமாக அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொடர்புத்தொடர்பு நிறுவனங்கள் வாங்க வேண்டிய சமாச்சாரம் இது மட்டும் தான். மற்றபடி, டவர் அமைத்து பைசா பிடுங்கி காசு சம்பாதிக்க தொடங்கிவிடலாம். வியாபாரமே இதை நம்பி இருப்பதால், அலைவரிசைகள் விற்கப்படுகிறது. அலைவரிசை குறிப்பிட்ட அளவிலும், வாங்குவதற்கு போட்டி அதிக அளவில் இருப்பதாலும் இது ஏலம் விடப்படுகிறது.



தொடர்த்தொடர்பு துறையில் ஏற்படும் முன்னேற்றத்தால், புது புது தலைமுறைகள் உருவாக்கப்படுகிறது. முதல் தலைமுறை (1G), இரண்டாம் தலைமுறை (2G), மூன்றாம் தலைமுறை (3G) என ஒவ்வொரு தலைமுறையிலும் அலைவரிசை அதிகரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கான வசதி அதிகரிக்கப்படுகிறது. வசதி அதிகரித்தால், அதிக காசு. அதிக போட்டி. ஏலம் ஜோரா போகும்.

இனி, புகழ்ப்பெற்ற இரண்டாம் தலைமுறைக்கான ஏலத்தில் நடந்த ஜோரை பார்க்கலாம்.

- 2008இல் விற்கப்பட்ட இந்தியா முழுமைக்குமான 2G லைசன்ஸ், 2001 ஆண்டிற்கான விலையில் ஒன்பது நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. (விலையை உயர்த்தினால், விலைவாசி விலைவாசி’ன்னு புலம்புறது. இல்லாட்டி இப்படியா!)

- 7442 கோடியில் இருந்து 47912 கோடி வரை மதிப்புள்ள லைசன்ஸ், 1651 கோடி கொடுக்கப்பட்டது. (சலுகை விலை. அடுத்த தேர்தலில் ஜெயிக்க வைத்தால், இலவச ஸ்பெக்ட்ரம்!)

- ஏலம் வைத்து அதிக விலை கேட்பவருக்கு கொடுக்காமல், முதலில் கேட்பவருக்கே கொடுக்கப்பட்டது. (தீயா வேலைப்பார்க்க வேண்டாம்?!!!)

- எந்த சட்டத்திட்டமும் இல்லாமல், ஏலத்தில் விலை கேட்பது தான்தோன்றித்தனமாய் நிறுத்தப்பட்டது. (ஒரு மத்திய மந்திரிக்கு அதுக்குக்கூட உரிமை இல்லையா?! இது என்ன நியாயம்? இதுவே....)

- 122 லைசன்ஸ்களில் 85 லைசன்ஸ்கள், ஏலத்தில் பங்குப்பெற இருக்க வேண்டிய தகுதிகள் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. (அப்புறம் அவுங்க எப்ப வளர்றது? இப்படித்தான் நாங்க...)

- சில நிறுவனங்களுக்கு அதிகப்படியான அலைவரிசை குறைந்த விலையில் வழங்கப்பட்டது. (ஒண்ணு வாங்குனா, ஒண்ணு ப்ரீ)

- நிதித்துறை அமைச்சகம், நீதித்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவை கூறிய அறிவுரைகளை மீறி ஏலம் நடத்தப்பட்டது. (ம்ம்க்கும். நான் ஒன்றை இங்கு கேட்கிறேன். தொலைத்தொடர்புத்துறையில் மூக்கை நுழைக்க அவர்கள் யார்?!)

இந்த ஏல முறைக்கூட்டினால்(!), ஒரு தமிழன் இந்திய அளவில் பெருமையடைந்துள்ளான். 1.77 லட்சக்கோடி என்று சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள அவனை நினைத்து ஒவ்வொரு தமிழனும் பெருமையடைய வேண்டும்.

---

நான் என்ன நினைக்கிறேன் என்றால், 1.77 லட்சக்கோடிகள் அந்த ஏலத்தில் அரசு சம்பாதித்திருக்கலாம். ஆனால், குறைவாக சம்பாதித்துள்ளது. முறைக்கேடு சில ஆயிரக்கோடிகள் இருக்கலாம். யார் யாருக்கு எவ்வளவு போனதோ? இருந்தாலும், 1.77 லட்சக்கோடியும் ஒரு குரூப் சம்பாதித்திருக்குமா? என்பது சந்தேகம் தான்.

ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. ஒரு வீட்டில் திருட்டு போகிறது. திருடன் வீட்டில் இருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்று விட்டான். போலீஸ் விசாரணை நடத்துக்கிறது. வீட்டுக்கார அம்மாவிடம் எவ்வளவு நகை, பணம் வீட்டில் வைத்திருந்தீர்கள் என்று கேட்கிறார்கள். அதான் திருட்டு போய்விட்டதே! எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம் என்று வீட்டுக்கார அம்மா பெருமைக்காக, ஒவ்வொன்றையும் கூட்டிக்கூட்டி சொல்கிறார். இது அடுத்தநாள் செய்தித்தாளில் வருகிறது. செய்தியை படித்த திருடன், கடுமையான கோபமும், வருத்தமும் கொள்கிறான். நாம் அவ்வளவு அடிக்கவில்லையே என்று.

நம் நாட்டிலும் சிலர், அந்த 1.77 லட்சக்கோடியை கேட்டு இவ்வுணர்வை அடைந்திருப்பார்கள்!

.

Sunday, November 7, 2010

தீபாவளி 2010

முன்பு தீபாவளி கொண்டாட்டம், ஒரு வாரத்திற்கு முன்புதான் தொடங்கும். இப்போது தீபாவளி திண்டாட்டம் மூன்று மாதத்திற்கு முன்பே தொடங்குகிறது. ட்ரெயின் டிக்கெட் எடுப்பதை சொல்கிறேன். இந்த முறை போவதற்கான டிக்கெட்டை மட்டுமே நினைவில் வைத்திருந்து முன்பதிவு செய்ய முடிந்தது.



டிக்கெட் கன்பர்ம் ஆனது, எக்ஸ்ட்ரா கோச்சில். நானும் என் நண்பனும் உட்கார்ந்திருந்த இடத்தை சுற்றி யாரும் இல்லை. நான் கூட போகும் வழியில் ஏறுவார்கள் என்று நினைத்திருத்தேன். கடைசி வரை யாரும் வரவில்லை. எல்லோரும் கிளம்புவதற்கு ஒருநாள் முன்பு சென்றதால், இப்படி இருந்திருக்கும்.

---

தீபாவளி அன்று காலையில் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வார்கள். நான் குளிக்காமல் ரயில்வே ஸ்டேஷன் சென்றேன். மணி ஆறரை இருக்கும். அங்கு ஒரு பெரும் கும்பலே இருந்தது. ஊரில் கைவசம் இணையம் இல்லாததால், தட்கலுக்காக ஸ்டேஷன் சென்றேன். இப்போதெல்லாம் பத்தே நிமிடங்களில் டிக்கெட் முடிந்துவிடும். இருந்தும், எப்படி இப்படி நீண்ட க்யூக்களில் நிற்கிறார்கள்? இப்படி க்யூக்களில் நிற்பவர்களின் சாபத்தினால் தான், ஐஆர்சிடிசியின் தளம் காலை எட்டில் இருந்து ஒன்பது வரை நடுங்குகிறது போலும்.

இதெல்லாம் ஆவுறத்துக்கில்லை என்று வீடு திரும்பிவிட்டேன். மொபைல் மூலம் டிக்கெட் ரிசர்வ் செய்ய முயன்றேன். ஒன்பது மணிக்கு மேல் தான், மொபைல் மூலம் ரிசர்வ் செய்ய முடியுமாம். க்யூவில் நிற்பவர்கள் வாழ்க!

பிறகு, ஒரு நாளுக்கு முன்பே டிக்கெட் எடுத்துவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

---

இப்படி டிக்கெட் இல்லாத சமயங்களில், அன்-ரிசர்வ்டு கோச்களில் உட்கார்ந்தோ, பஸ்களில் மாறி மாறியோ வந்திருக்கிறேன். இந்த முறையும் அப்படி வந்திருக்கலாம். மழைக்காலத்தில் அப்படி வருவதை நினைத்துப்பார்த்தாலே, நசநசவென இருந்தது.

இன்று காலையில் நான் வந்ததில் இருந்து சாயங்காலம் இப்ப வரைக்கும் பெங்களூரில் மழை தூறிக்கொண்டே இருக்கிறது. ஊட்டி பிலிங் கிடைக்கிறது. வந்ததும் நல்லதிற்கு தான்.

இருந்தாலும், ஊரில் இருந்து சீக்கிரமே வந்துவிட்டதால், இன்னும் சில வாரங்களில் மீண்டுமொரு சென்று, சும்மாவாவது வீட்டில் தூங்கி விட்டு வர வேண்டும்.

---

வீட்டின் பொடிசுகளுடன் ‘எந்திரன்’ சென்றேன். இன்னமும் அறுபது ரூபாய் டிக்கெட். ஊரில் இருக்கும் ஐந்தாறு தியேட்டர்களில் மூன்றில் வெளியாகி, இரண்டில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

பத்து, பதினைந்து பேர் இருந்திருப்போம். தொடர்ந்து ஒரு பத்து விளம்பரங்கள் போட்டிருப்பார்கள்.

பின்னால் இருந்த குடிமகன், அர்ச்சனை வார்த்தைகளால் ஆராதனை செய்ய தொடங்கிவிட்டார்.

“அறுபது ரூபா வாங்கிட்டு, விளம்பரமாடா போடுறீங்க... **********! முப்பது ரூபா வாங்கிட்டு போடு, தப்பில்லை... அறுபது ரூபா வாங்கிட்டு ஏண்டா போடுகிறீங்க? *******. தலைவன் படத்தை கேவலப்படுத்துறீங்களே, *******?”

---

இந்த தீபாவளிக்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு படமும் வரவில்லை. ’வ’ குவார்ட்டர் கட்டிங் மட்டும் பார்த்தேன். நொந்தேன்.

வெறும் வசனங்களால் சிரிக்க வைக்க முயன்று, வளவளவென்று எல்லா கேரக்டர்களும் பேசுகிறார்கள். சிவா மட்டும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ஜான் விஜய்க்காக தூத்துக்குடியில் ஆங்காங்கே பேனர்கள் வைத்திருக்கிறார்கள். மண்ணின் மைந்தன், சன் ஆப் த கன் (!) என்று அடைமொழிகள் வேறு.

ஸ்டோரி லைன் கேட்கும்போது வரும் சிரிப்பு, படம் பார்க்கும் போது வருவதில்லை. நிரவ்ஷா, ஆண்டனி, ஜிவி பிரகாஷ் போன்றவர்களால் கலர்புல்லாக, துள்ளலாக இருக்கும் படம், இயக்கிய தம்பதிகள் லோக்கலாக யோசித்திருந்தால் போரடிக்காமல் சுவாரஸ்யமாக வந்திருக்கும்.

.