எங்க ஊரில் தியேட்டரில் கூட்டம் அதிகமாகி, டிக்கெட் இல்லை என்று திரும்பி வர வேண்டியதே இல்லை. உள்ளே சீட் இல்லாவிட்டாலும், வெளியே டிக்கெட் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதனால், எவ்ளோ பெரிய ஸ்டார் படமாக இருந்தாலும், முதல் நாள் படம் பார்ப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. எக்ஸ்ட்ரா சேர் போட்டோ அல்லது தரையில் உட்கார்ந்தோ எப்படியோ பார்த்து விடலாம். ஆனால், ஒரு படத்திற்கு இரண்டு மூன்று முறை சென்றும் டிக்கெட் கிடைக்காமல், வீடு திரும்ப வேண்டி இருந்தது. அது அப்பொழுதுதான் கட்டப்பட்ட ஒரு நேர்மையான தியேட்டர். ஆனால், டிக்கெட் கிடைக்காததற்கு அது மட்டும் காரணம் அல்ல. படம் அப்படி. ஜென்டில்மேன். அதே போல், ஒரு தீபாவளி அன்று ஒரு இயக்குனரின் திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்தது முதல்வனுக்கு.
இன்று ஜென்டில்மேன் பிரமாண்டமான படமாக தெரியாது. ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து ஸ்டண்ட் காட்சி அமைத்த (முதல்?) படம் அது. பட டைட்டிலுடன் ‘சம்திங் ஸ்பெஷல்’ என்ற tag லைனுடன் வந்த முதல் படம். எலியை கடிப்பது, இருதயம் ரோட்டில் துடிப்பது என ரசிகர்களுக்கு பல பகீர்களைக் கொடுத்த படம். டபுள் மீனிங் தூக்கலாக வந்த படம். இது எல்லாவற்றையும் தாண்டி, இன்றும் பரவலாக விவாதிக்கப்படும் சமூக விஷயமான இட ஒதுக்கீட்டை (சரியோ, தவறோ) மையமாக கொண்டு வந்த படம்.
எனக்கு அந்த சமயம் அப்படத்தினுடைய மையக்கருத்தின் அரசியலெல்லாம் புரியவில்லை. ஒவ்வொரு முறையும் கொள்ளையடிக்க ஹீரோ போடும் புத்திசாலித்தனமான திட்டமும், ஆக்ஷன் காட்சிகளும், இசையும், நகைச்சுவையும் மட்டுமே புரிந்தது. பிடித்தது. பிறகு, சில காலம் கழித்து, பத்திரிக்கைகளில் சில கட்டுரைகளை வாசித்த போது, இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் விதமாக அதில் கருத்து சொல்லப்பட்டு இருந்தது லேட்டாக புரிந்தது. எது சரி, எது தவறு என்பது இப்போது விவாதமல்ல. ஒரு முக்கியமான விஷயத்தை, முதல் படத்தில் கருவாக வைத்த தைரியம். சொல்ல வந்த கனமான விஷயத்தை, கமர்ஷியல் கலந்து, இலகுவாக ரசிகனின் மண்டையில் ஏற்றி வெற்றி பெற்றது போன்றவை படத்தின் இயக்குனர் மேலான ஈர்ப்பை கூட்டியது.
ஷங்கர். விமர்சனங்கள் இருந்தாலும் இவர் மேலான ஈர்ப்பு, தமிழகத்திற்கு இன்னமும் குறையவில்லை. 17 வருடங்கள். இதுவரை எட்டே எட்டு தமிழ் படங்கள் இவரின் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது. பத்தாவது படம், இந்த வாரம் வெளியாகிறது. படத்தில் ரஜினி நடித்திருந்தாலும், இது ஷங்கர் படம். இந்த ஒரு வரி போதும், இவர் பெருமை கூற.
முதல் படத்தில் இருந்து இப்போது வரை எடுத்துக்கொண்டால், ஷங்கர் நிறைய மாறி வந்திருக்கிறார். முன்பு போல, காட்டமான அரசியல் விமர்சனம் இருப்பதில்லை. இவருக்கான ரசிகர் வட்டம் கூட கூட, ஆரம்பத்தில் இருந்த டபுள் மீனிங் தற்போது இருப்பதில்லை. பாய்ஸை விட்டுவிடலாம். அது அவர் யதார்த்தமாக எடுக்க நினைத்து, கலாச்சார காவலர்களிடம் பதார்த்தமாக மாட்டிக்கொண்டது.
ஷங்கர் படங்களின் பலம், அவருடைய திரைக்கதை. ‘ஊருக்கு நல்லது செய்யும் ஹீரோ’ கதையை எத்தனை முறை எடுத்தாலும், தமிழ் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. காரணம், அவருடைய ட்ரீட்மெண்ட். அதை போன்ற கதையை, எத்தனை பேர் எடுத்தாலும், ஷங்கர் மட்டுமே வெற்றி பெறுகிறார். (விதிவிலக்கு-முருகதாஸ். ஆனாலும், ரமணாவில் ஷங்கர் படங்களின் ரிச்னெஸ் மிஸ்ஸிங்.) காரணம், திரைக்கதையில் கடைசி வரை அவிழ்க்காமல் ஒரு முடிச்சை வைத்திருப்பார். கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்பு தான், அதை அவிழ்ப்பார். அது வரை அதை வைத்து ரசிகர்களை கட்டிப்போடுபவர், அதற்கு பிறகு கிளைமாக்ஸை வைத்து ரசிகர்களைக் கட்டிப்போடுவார். அந்தியன் நேரத்தில் கதை ரீதியாக அவரிடம் சலிப்பு வந்துவிட்டாலும், அதிலும் மூன்று பேரை ஒரே ஆள் என எப்படி காட்டப்போகிறார் என்ற சஸ்பென்ஸை வைத்து சுவாரஸ்யம் கூட்டியிருந்தார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியமானதாக இருக்கும். அதையும் இண்ட்ரஸ்டிங்காக கொடுக்க பாடுபடுவார். உதவி இயக்குனர்களை நன்றாக கவனிக்கும் இயக்குனர் இவர். இவர் வழியை தொடர்ந்து, இவருடைய சிஷ்யர்களால் வெற்றியை கொடுக்கமுடியவில்லை. பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், காந்தி கிருஷ்னா, அறிவழகன் என இவர்களுடைய வழி வேறானது. இன்னமும் ஷங்கரின் வழி தனியானதாக இருக்கிறது. அந்தந்த காலக்கட்டத்தின் முக்கியமான திறமையான கலைஞர்களை தனது படத்தில் பயன்படுத்தி, அவர்களது முழுத்திறமையையும் கொண்டுவர வைத்துவிடுவதால், படத்தின் மேக்கிங் தரமானதாக இருந்துவிடும்.
அவருடைய எந்த படத்தின் கிளைமாக்ஸும் சாதாரணமாக முடியாது. ஒரு பைட்டை வைத்து, மகிழ்ச்சியாக நடிகர்கள் எல்லோரையும் சிரிக்க வைத்து முடிக்க மாட்டார். வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமாக இருக்கும். ஆனாலும், அதில் ஆக்ஷன் இருக்கும். ரசிகனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் முடிவு இருக்கும்.
நான் ஷங்கரை ஆரம்பத்தில் வெறும் மசாலா இயக்குனராகதான் பார்த்து வந்தேன். முன்பே சொன்னது போல், சிலருடைய விமர்சனங்களை படித்தப்பிறகு தான், அவர் ஒரு அதிபுத்திசாலி இயக்குனராக தெரிந்தார். இதற்கு காரணம், அந்த விமர்சகர்கள் தான். ஷங்கர் அப்படியெல்லாம் யோசித்து எடுத்தாரோ இல்லையோ, அவர்கள் கூறிய குற்றசாட்டுகள் - ‘இவர் இப்படியெல்லாம் கூட நினைச்சு எடுப்பாரா?’ என்று ஷங்கர் மீதான மதிப்பைக் கூட்டியது!
தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை, தமிழ் சினிமாவில் முயன்று பார்த்தவர். கௌதமி மேல் அனிமேஷன் அம்பு விடுவது, பிரபுதேவாவின் கோட்-சூட்-தொப்பி தனியே ஆடுவது, தத்ரூப தாத்தா மேக்கப், ஒரு பிரசாந்த் இன்னொரு பிரசாந்தை கட்டிப்பிடித்து அழுவது, ஒரு ஜனக்கடலையே நடிக்க வைப்பது, ஒரு ஸ்டில்லை 360 டிகிரியில் சுற்றிக்காட்டுவது, ரஜினியை வெள்ளையாக்குவது என டெக்னாலஜி மூலம் வெள்ளித்திரையில் மேஜிக் காட்டுபவர்.
ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் படங்களில், ஹிந்திக்கு அடுத்துப்படியாக அதிகம் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டது தமிழ்ப்படங்கள். இந்த தேர்ந்தெடுப்பு முறையில் படத்தின் தரத்திற்கு அடுத்தப்படியாக முக்கியத்துவம் பெறுவது, படைப்பாளிகளின் செல்வாக்கு. தற்போது, இப்படி செல்வாக்காக இருப்பவர் - அமீர்கான். தமிழில் இருந்து இதுவரை 8 படங்கள் ஆஸ்கருக்கு சென்று இருக்கிறதென்றால், அதற்கு காரணம் சில படைப்பாளிகள். கமல் (இவரால் தமிழ்படங்கள் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது) , மணிரத்னத்திற்கு அடுத்தப்படியாக ஷங்கர். இவருடைய இருப்படங்கள் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவருடைய படங்களில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட தேவையிருக்கிற கச்சாப்பொருள் இருக்கிறதா என்று வேறு விஷயம். இது இந்திய அளவில், தமிழகத்தை சேர்ந்த ஒரு படைப்பாளிக்கு இருக்கும் செல்வாக்கை காட்டுகிறது.
ஒவ்வொரு படத்திலும் தனது முந்தைய படத்தின் பிரமாண்டத்தை, வியாபாரத்தை தாண்டியவர் ஷங்கர். அவர் அடுத்ததாக ‘3 இடியட்ஸின்’ தமிழ்/தெலுங்கு ரீமேக்கை இயக்க போவதாக வரும் செய்திகள், எனக்கு மகிழ்வை கொடுக்கவில்லை. விஜய்/மகேஷ் பாபு என இரு பெரிய பிராந்திய மொழி ஹீரோக்களை வைத்து இயக்க வேண்டி இருப்பதை தவிர்த்து, ஷங்கருக்கு பெரிய வேலை இருப்பதில்லை. அவருக்கே உரிய ஜிகினா வேலைகளை செய்தாலும், அது அந்த கதைக்கு பொருத்தமாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அதற்கு பதில், வேறெதாவது பெரிதாக முயலலாம்.
கமர்ஷியலாக, பிரமாண்டமாக, தரமாக படமெடுப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. அதை வெற்றிக்கரமாக்குவது என்பது எளிதான வேலையல்ல. ஆனாலும், இச்சவாலை பலமுறை முடித்து காட்டியவர், ஷங்கர். வேண்டுமானால், பிறருடைய கதையை, பிறருடைய உதவியுடன் கூடிய திரைக்கதையை பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையாக படமெடுக்க தமிழில் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவருடைய தனித்திறமையான பிரமாண்ட டெக்னிக்கல் எக்ஸிக்யூசன் திறமையை கைவிடாமல், அதற்கு பொருத்தமான கதைக்களனுடன் கூடிய படங்களை அவர் தொடர்ந்து படமாக்க வேண்டும் என்பதே ஒரு ரசிகனாக என்னுடைய ஆசை.
.
14 comments:
ஷங்கரைப் பற்றி மிகவும் அருமையாக அலசியிருக்கிறீர்கள். நான் என்னுடைய எந்திரன் ஸ்பெஷலில் அடுத்ததாக ஷங்கரைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது உங்களுடைய பதிவைப் படித்த பின்பு,அவரைப் பற்றி நான் என்ன புதிதாக எழுதுவது எனத் தெரியவில்லை:-(
சங்கரின் மீதான பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராகி விட்டார். மிக விரிவான பதிவு! வாழ்த்துக்கள்!
super. enthiran ticket booking?
நல்ல பதிவு சரவணன், நீங்க இன்னும் கொஞ்சம் விரிவா எழுதிருக்கலாம். சமுதயத்த மாத்தனும் அப்படிங்கறது தான் ஷங்கரோட தாரக மந்திரம். இவரோட எல்லா படத்துலயும் இலவச கல்வி மற்றும் மருத்துவத்தை மகளுக்கு தரணும்னு சொல்லுவர், லஞ்சத்தை ஒழிக்கணும்னு சொல்லுவர். இப்படி சொல்லற ஒரு இயக்குனர் இவருதான். ஒரு படம்னு இல்லாம ஜென்ட்லேமன் தொடங்கி சிவாஜி வரைக்கும் எல்லா படத்துலயும் இந்த விஷயத்தை வச்சிருப்பார்.
சரியான அலசல் .... சரியான பார்வை..
சரியான அலசல் .... சரியான பார்வை..
சரியான அலசல் .... சரியான பார்வை..
நன்றி மோகன். நீங்களும் கண்டிப்பாக எழுதவும்.
இல்லை ரமேஷ். நேரா களத்துல குதிச்சிட வேண்டியது தான். :-)
கிறுக்கன்,
ஷங்கரைப் பற்றி எழுத இன்னமும் நிறைய இருக்கிறது. நீளம் கருதி இத்துடன் முடிக்க வேண்டியதாகிவிட்டது.
நன்றி சசிபானு
தமிழ்மகன் கூறுகிறார்…..
எதெல்லாம் தமிழ் சினிமாவில் முடியாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் நடத்திக் காட்டுகிற ஆர்வம் இயக்குநர் ஷங்கருக்கு உண்டு. சாலையெல்லாம் பெயிண்ட் அடிப்பது, ஒரு லட்சம் பானைகளை வாங்கி அதன் நடுவே நடிகர்களைப் பாடி ஆட வைப்பது, உலக அதிசயங்களையெல்லாம் ஒரே பாட்டில் காட்டுவது, கமல்ஹாசனை 70 வயதுக் கிழவனாக நடிக்க வைப்பது என்று தொடர்ந்து அவர் படத்தில் சில அம்சங்கள் இருக்கும். எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினையைப் பிரமிப்பான விதத்தில் தீர்த்து வைப்பது அவருடைய பாணி. ஊழலை வர்மக் கலை தெரிந்த கிழவன் தீர்த்து வைப்பது, லஞ்சமும் ஜாதிய வெறியும் உள்ள அரசியல் வாதியை ஒரு நாள் முதல்வனாக இருந்து தீர்த்துக் கட்டுவது, அப்பளம் போடும் அப்பாவி (போன்ற?) பிராமணன் ஒருவன் தமிழ்நாட்டு போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவது என்று ஒருவிதமான சுவாரஸ்யத்தைக் கண்டுபிடிப்பார். அதற்கு கிராபிக்ஸ், பிரமாண்டம், பாம்பே நட்சத்திரங்கள், கங்காரு, ஒட்டகம், ஏ.ஆர்.ரஹ்மான், பானை, ஓட்டை உடைசல் பாட்டில்கள் எல்லாம் சேர்ப்பார். அவருடைய தனித் திறமையே எல்லாருடைய திறமைகளையும் (சில நேரங்களில் அவர்களுக்கே தெரியாமலும் இருக்கும்) மிக லாவகமாக ஒருங்கிணைப்பதுதான்.
குமுதம் இதழில் பணியாற்றியபோது அவருடைய வாழ்க்கைப் படிப்பினை மூலமாகப் புதிதாக வரும் இளம் இயக்குநர்களுக்கு நம்பிக்கை தருகிறமாதிரி ஒரு தொடர் எழுத உத்தேசித்தோம். நீண்ட யோசனைக்குப் பிறகு அந்தத் தொடருக்கு சம்மதித்தார். சங்கரூ… என்று அழைக்கப்பட்டவர் ஷங்கர் ஆன கதை அது. தலைப்பு ‘சங்கர் முதல் ஷங்கர் வரை’ என்று வைத்தோம். என்னென்னவெல்லாம் எழுதலாம், தன் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க வேண்டியவர் யார், யார்? திருப்பு முனை ஏற்படுத்தியவர் யார்? என்றெல்லாம் நிறைய சொன்னார். அதையெல்லாம் பட்டியில் இட்டுக் கொள்வதற்காகவே நான்கைந்து நாள்கள் பேசினோம். “நீங்கள் எழுதிக் காட்டுங்கள். எப்படி வந்திருக்கிறது என்று நான் ஒருமுறை பார்த்துக் கொள்கிறேன். அப்புறம் அச்சுக்குக் கொடுத்துவிடுங்கள்” என்றார். எல்லாவற்றுக்கும் சம்மதம் சொல்லியாகிவிட்டது. கதை விவாதம் போல அவ்வளவு சிரத்தையாக அதில் ஈடுபட்டார். எங்கள் சந்திப்பின் போது வேறுயாரையும் சந்திக்க மாட்டார். போன்கூடப் பேச மாட்டார். எனக்கும் சேர்த்து அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வரும். அவ்வளவு கவனத்தோடு இருந்தார். பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அந்த நேரத்தில் அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார்கள்.
அந்த வாரக் குமுதத்தில் அறிவிப்பும் வைத்தோம். அறிவிப்பைப் பார்த்துவிட்டு ஷங்கர் எனக்கு போன் செய்தார். “இந்தத் தொடரை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை, நிறுத்திவிடுங்கள்” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. குமுதம் நிர்வாகத்துக்கு என்ன பதில் சொல்வதென்றும் புரியவில்லை. அலறி அடித்துக் கொண்டு அவருடைய அலுவலகத்துக்கு ஓடினேன்.
“ஏன் ஸார்?”
“வாரா வாரம் என்னிடம் பேசிவிட்டு நீங்களாகத் தொகுத்து எழுதுவதாகத்தானே பேசினோம்.. ‘ஷங்கர் எழுதும்’ என்று அறிவிப்பு வைத்தால் என்ன அர்த்தம்?”
“சினிமா துறையினர் வாழ்க்கைத் தொடர் எல்லாமே அப்படித்தான். அவர்கள் சொல்ல சொல்ல அதைப் பத்திரிகையாளர் எழுதுவார்கள்… அவர்கள் எழுதுவதாகப் போடுவார்கள்.”
“நீங்கள் எழுதுவதாக வந்தால்தான் இதற்கு நான் சம்மதிப்பேன். அல்லது நானே எழுதித் தரவேண்டும் என்றால் இப்போது எனக்கு அதற்கு நேரமில்லை.”
“நீங்கள் எழுதுகிறீர்கள் என்று போட்டால்தான் எங்கள் விற்பனைக்கு உதவும்” என்றேன். கடைசி வரை சம்மதிக்கவே இல்லை.
ஆசிரியர் குழுவில் பேசினேன். ஒவ்வொரு வாரமும் தொடரின் இறுதியில் ‘சந்திப்பு: தமிழ்மகன்’ என்று வெளியிடுவதாகக் கூறினார்கள். அதன் பிறகே அந்தத் தொடர் வெளியானது.
அவருடைய பிடிவாதத்தில் ஒளிந்திருந்த மெல்லிய நேர்மையையும் எதிலும் எடுத்துக் கொள்ளும் கவனத்தையும் ரசித்தேன். அவருடைய முதல் படத்தின் டைட்டிலைப் போலவே அவர் இருந்தார்.
அருமையான பதிவு...
ரொம்ப அருமையான பதிவு...
Post a Comment