Tuesday, September 7, 2010

மார்க்கெட்டிங் யுத்தங்கள்

யாராவது சண்டை போட்டுக்கொண்டிருந்தால், அதை பார்ப்பதில் ஒரு ஆர்வம். கலைஞரும் ஜெயலலிதாவும் திட்டி கொண்டால் தலைப்பு செய்தி, அசினை த்ரிஷா வாரினால் கோலிவுட் டிட்பிட், சாரு - ஜெயமோகன் லடாயே இணைய இலக்கியம் என்று நமது பொழுதுபோகிறது. அட, ரோட்டுல போகும் போது தெரியாத யாரோ ரெண்டு பேர் சண்டைப்போட்டுக்கிட்டா கூட, நின்னு பார்த்துட்டு போக ஒரு கூட்டமே உண்டு.

அரசியல், சினிமா, இலக்கியம் என்றில்லாமல் கோட்டு சூட்டு போட்டுக்கொண்ட வணிக உலகிலும் சண்டை சச்சரவுகள் உண்டு. அவ்வப்போது விளம்பரங்கள் மூலம் இது வெளிவரும். வெளியே தெரியாத உள்ளடி பைட்களும் இவ்வுலகில் உண்டு.

இப்படியான உலகளாவிய வணிக போட்டி சண்டைகளை பற்றிய தொகுப்பு - கிழக்கு பதிப்பகத்தின் ‘மார்க்கெட்டிங் யுத்தங்கள்’.

---



கோகோ கோலா - பெப்ஸி பற்றி சொல்லாமல் மார்க்கெட்டிங் பற்றி சொல்ல முடியுமா? விளம்பரங்களால் இயங்கும் நிறுவனங்கள். விளம்பரங்களால் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ளும் நிறுவனங்கள். நூறு வருடங்களுக்கு மேலாக போட்டிப்போடும் நிறுவனங்கள். இவர்களுடைய ஒவ்வொரு விளம்பர யுக்தியும், மார்க்கெட்டிங் மாணவர்களுக்காக பாடங்கள். பெப்ஸியின் அதிரடி மார்க்கெட்டிங்கை தாங்க முடியாமல், 1985இல் கோகோ கோலா தன்னுடைய சுவையை கூட பெப்ஸி போல் மாற்றியிருக்கிறது. வெறும் 78 நாட்கள். ஆனால், இன்னமும் அமெரிக்காவில் கோகோ கோலா எப்படி நம்பர் 1 என்பது புரியவில்லை.

நிர்மாவை தயாரித்த கஸன்பாய் ஆரம்பத்தில் அதை சைக்கிளில் கடை கடையாக கொண்டு சென்று, வாங்குவதற்கு பயந்த கடைகாரர்களிடம் “விற்பது இருக்கட்டும். நீங்க வீட்டுல யூஸ் பண்ணி பாருங்க.” என்று சொல்லி சும்மா கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த முறை சென்றபோது, இவருக்காக கடைக்காரர்கள் காத்திருக்கிறார்கள். வியாபாரம் சூடு பிடிக்க, “வாஷிங் பவுடர் நிர்மா... பாலை போல வெண்மை, நிர்மாவாலே வருமே...” விளம்பரம், இங்கிலாந்தின் யூனிலீவருக்கே சிறிது காலம் ஆட்டம் காட்டியது.

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மருந்தொன்றில் ஏதோ போட்டி நிறுவனம் சயனைட் தடவி, அதில் ஏழு பேர் இறக்க, ஜே அண்ட் ஜே நிறுவனத்தின் வியாபாரத்தையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். இவர்களும் விட்டுவிடவில்லை. இவர்களது மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று இவர்களே விளம்பரம் கொடுத்து, மருந்து ஸ்டாக் எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொண்டு, வேறு பாதுகாப்பான பேக்கேஜிங் வடிவமைத்து, திரும்பவும் மருந்தை மார்க்கெட்டிங் செய்து, வியாபாரத்தில் ஜெயித்தார்கள்.

நெட்ஸ்கேப் நிறுவனம் தனது ப்ரவுசர்களை இலவசமாக கொடுத்து 85 சதவித மார்க்கெட் ஷேர் வைத்திருந்தது. பில்கேட்ஸ் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ப்ரவுசரை பொட்டலம் கட்டி கொடுக்க, நெட்ஸ்கேப் ஊத்திக்கொண்டது.

இப்படி பல துறைகளில் நடைபெற்றுள்ள மார்க்கெட்டிங் யுத்தங்கள் பற்றி ஆசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி, இந்த புத்தகத்தில் சுவைப்பட குறிப்பிட்டுள்ளார். ‘பாம்பே டையிங்’ நூடியா மேலான ரிலையன்ஸ் அதிகாரியின் கொலை முயற்சி போன்ற அதிர்ச்சி தகவல்களும் உண்டு. லேட்டஸ்ட் பன்றி காய்ச்சல் மருந்து வியாபாரம் வரை சொல்லியிருக்கிறார். சமீபத்திய ஹார்லிக்ஸ் - காம்ப்ளான், கூகிள் - மைக்ரோசாப்ட் சண்டை பற்றி ஏதும் இல்லை.

---

வெறும் சண்டைகளை பற்றி மட்டும் சொல்லாமல், ஆங்காங்கே மார்க்கெட்டிங் பாடங்களும் எடுத்திருக்கிறார் ஆசிரியர். ஆனால் குறியெல்லாம் குடுமிபிடியில் தான் இருக்கிறது. மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு தகவல் ரீதியில் தவிர்த்து, இப்புத்தகம் என்ன கற்றுக்கொடுக்கும்? உண்மையில் ஒரு சிலதை தவிர்த்து, பெரும்பாலானவை மோசமான முன்னுதாரணங்களே. இன்றைய உலகில் இதுதான் சரியென்று ஆகிவிட்டது.

சரி, தவறு என்பதை விட்டுவிட்டு ஜெயிப்பதை நோக்கி மட்டும் ஓடவேண்டும் என்பதாகிவிட்டது. நேர்மையாக தொழில் நடத்த வேண்டும் என்பவர்களுக்கு இப்புத்தகம் மார்க்கெட்டிங் நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்குமோ இல்லையோ, கொஞ்சம் பயத்தையும், எச்சரிக்கையுணர்வையும் கொடுக்கும்.

புத்தகம் வாங்க, இங்கு செல்லவும்.

தொடர்புடைய பதிவுகள்

காம்ப்ளான் - ஹார்லிக்ஸ் ஊட்டசத்து சண்டை
ஏர்டெல் - ரிலையன்ஸ் டிடிஎச் அடிதடி
கோனிகாவின் தமிழன் ஓசி ஆபர்
தமிழ்ப்பட விளம்பர தோரணம்
ரெட்பஸ் சக்ஸஸ் ஸ்டோரி

.