Monday, August 23, 2010

நான் மகான் அல்ல

நாலைந்து கல்லூரி மாணவர்களை பார்த்து, மரண பயம் ஏற்படுமா? ஏற்படுத்தியிருக்கிறார் சுசீந்திரன். முதல் படத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், ஒரு படத்தை கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இரண்டு படத்தையும் எடுத்தது ஒரே டைரக்டர் என்றால் நம்புவோமா? இதற்கு முன்பு, இப்படி ஆச்சரியம் கொடுத்தது லிங்குசாமி. (அதற்கு பிறகு, அவர் கொடுத்தது ஏமாற்றங்களே!)



சலிப்பே இல்லாத பரபர விறுவிறு திரைக்கதை. சுப்பிரமணியபுரம் படம் பார்த்தபோது, பக்கத்தில் இருந்தவர் அடித்த கமெண்ட் - “டேய்! ஏதோ கொலைக்கார கும்பல் நடுவே உக்கார்ந்த மாதிரியே இருக்குடா!”. இதிலும் அப்படிதான் தோன்றியது. கொஞ்சம் பொல்லாதவனும், ரேனிகுண்டாவும் நினைவுக்கு வந்தது.

வயலன்ஸ் ரொம்பவே ஓவர். சரக் சரக் என்று சீவிக்கொண்டே இருக்கிறார்கள். குழந்தை மனம் படைத்த பெண்களையும்(!), நிஜ குழந்தைகளையும் பாதிக்கும் என்பதால் குடும்பத்தோடு வேண்டவே வேண்டாம்.

கார்த்தி முதலிரண்டு படங்களிலேயே, அவருடைய திறமை எல்லாவற்றையும் காட்டிவிட்டதால், அவர் என்ன செய்தாலும் பார்த்தது போலவே இருக்கிறது. தனுஷுக்கு ஏற்ற கேரக்டர். என்ன, பொல்லாதவன் போலவே இருந்திருக்கும்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வந்தவர்கள், நிறைய பேர் இதிலும் வருகிறார்கள். நகர தோற்றத்தில். காஜல் அகர்வாலுக்கு பெரிதாக வேலையில்லை. கார்த்திக்காகவே காத்திருந்து காதலித்துவிட்டு, பாதி படத்தில் காணாமல் போகிறார். விதவிதமான ட்ரஸ்களில் வந்தாலும், ட்ராக் சூட்டில் சூப்பர்!

யுவனின் பின்னணி இசை மிரட்டுகிறது. ”ஒரு மாலை நேரம்” பாட்டை காணும். யாருப்பா கட் பண்ணது? ஒரு டவுட். இப்பல்லாம் நல்ல பாடல்களை யுவன் பாடுகிறாரா, அல்லது அவர் பாடுவதெல்லாம் நல்ல பாட்டா தெரியுதா?

நாலு வெறி நாய்கள் ஒருவன் மீது பாய்ந்தால், அவனுக்கு எந்த மாதிரியான வெறித்தனமான தாக்குதல் உணர்வு ஏற்படுமோ, அதை ரசிகனுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் - இயக்குனரும், ஸ்டண்ட் மாஸ்டரும். வில்லன்களின் பலத்தை காட்ட, ரவுடிக்கும்பலுக்கு ஏற்படும் நிலையை இயக்குனர் காட்டுவதிலும், பார்க்கும் ஆடியன்ஸ்களுக்கே களைப்பை கொண்டு வருவது போன்ற இறுதி சண்டைக்காட்சியை அனல் அரசு அமைத்திருப்பதிலும் ஜெயித்திருக்கிறார்கள்.

படம் பார்த்து விட்டு வெளியே வந்தபோது, ட்ராபிக் சிக்னலில் பக்கத்தில் ஒரு மாருதி ஆம்னி நின்றது. நாலு பசங்க இருந்தார்கள். ஒருவன் சிகரட் அடித்துக்கொண்டிருந்தான். பைக்கில் பின்னால் உக்கார்ந்திருந்த நண்பனிடம் சொன்னேன்.

“அவன முறைச்சு பாரேன்”

“சும்மா இரேன்” என்று படக்கென்று தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.

திரும்ப, “வண்டிக்குள்ள என்ன இருக்கு பாரேன்”

“சும்மா இருடா. சீக்கிரம் கிளம்பு.”

இப்படி படத்தின் தாக்கம், திரையரங்கத்திற்கு வெளியேயும் நீளுவதில் இயக்குனர் வெற்றி பெற்றாலும், கதிகலங்கும் வயலன்ஸால் குடும்ப ஆடியன்ஸ், ரிபீட் ஆடியன்ஸ் போன்றவை டவுட்.

.

Thursday, August 19, 2010

கீபோர்டில் புதிய ரூபாய் குறியீடு - நீங்களும் கருத்து சொல்லலாம்

புதிய இந்திய குறியீடு வந்திருப்பது தெரிந்திருக்கும். இதை நாம் கணினியில் பயன்படுத்த ஏற்கனவே சில எழுத்துருக்களும் வந்துவிட்டது. டிவிஎஸ் நிறுவனம் தங்களது கீ-போர்டில், இந்த குறியீடை பயன்படுத்த வசதி செய்துள்ளது.



இது அனைத்துமே அவரவர் பாணியில் வடிவமைத்திருக்கும் பயன்பாடுகள். இந்திய தகவல் தொழில்நுட்ப துறையும் சில தனியார் நிறுவனங்களும், ஒரு பொதுவான வடிவமைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ரூபாய் சின்னத்தின் வடிவமைப்பில் பொதுமக்களையும் ஈடுபடுத்தியது போல், இதற்கும் பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது.

இந்த ரூபாய் சின்னம் கீ-போர்டில் எங்கு வரவேண்டும் என்று நீங்களும் உங்கள் எண்ணத்தை சொல்லலாம்.

இங்கு போய் சொல்லுங்க.

நான் Alt-R சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ரூபாயின் முதல் எழுத்தும், சின்னத்தை நினைவூட்டுவதுமாக இருக்கும்.

.

Wednesday, August 18, 2010

ஆக்ரா கோட்டையும் ஆட்டோக்காரர் சேட்டையும்

ஆக்ரா கோட்டைக்குள் செல்ல, செல்ல போய்க்கொண்டே இருந்தது. இந்த கோட்டை பல மன்னர்கள் கைமாறி இருக்கிறது. இந்தியாவையே (அப்படி ஒன்று அப்போது இல்லை) இங்கிருந்து தான் ஆண்டிருக்கிறார்கள். இன்னமும் இதன் ஒரு பகுதியை, இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது.





நான் முன்னமே சொன்ன முன்னோர் பீலிங் வந்தது. அக்பர், ஷாஜகான், அவுரங்கசீப் நடந்து சென்ற பாதையில், நானும் நடந்து சென்றேன். ஷாஜகான் ஆண்டது இங்கிருந்து தான். தனது மகனால், சிறையில் அடைக்கபட்டதும் இங்கேதான். தாஜ்மஹாலை பார்த்துக்கொண்டே இறந்ததும் இங்கேதான்.






இங்கே இருந்து தாஜ்மஹாலை பார்ப்பது அழகாக இருக்கிறது. யமுனை நதிக்கரையோரத்தில் தாஜ்மஹால் தெரிகிறது. இந்த கேப்பில் தான், ஷாஜகானும் தாஜ்மஹாலை பார்த்திருப்பாரோ என்று நினைத்துக்கொண்டேன்!





சில இடங்களில் இந்து கட்டிட கலையும், இசுலாமிய கட்டிட கலையும் கலந்திருக்கிறது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றினாலும், சிறிது நேரத்தில் வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது.





கோட்டையின் பிரமாண்டம் கம்பீர உணர்வை கொடுப்பதாக இருந்தாலும், உள்ளூர ஒரு சோக உணர்வே என்னை துரத்திக்கொண்டிருந்தது. எது, என்னவென்று தெரியவில்லை.

---

கார் டிரைவன் (சின்ன பையன் தானே!) பேசிக்கொண்டே வந்தான்.

“ஆக்ரா என்றால் தாஜ்மஹால் தானே?”

“ஆமாம் சார்”

“அப்ப உங்க ஊருக்கு முக்கிய வருமானம் - சுற்றுலா தான், இல்லையா? அதுவும் முக்கியமா தாஜ்மஹால், இல்லையா?”



“ஆமாம். ஆனா, தாஜ்மஹால் இல்லன்னா, இன்னும் நல்லா இருந்திருக்கும்.”

எனக்கு ஆச்சரியமா, அதிர்ச்சியாக இருந்தது.

“ஏன்ப்பா அப்படி சொல்ற? பக்கத்தில் தொழிற்சாலைகள் இருக்க கூடாது என்பதாலா?”

“ஆமாம்”

“அதுக்கு என்ன பண்றது? ப்ளஸ்ன்னு இருந்தா, மைனஸும் இருக்கும் தானே?”

“ஆனா, தாஜ்மஹால்’னால எங்களுக்கு மைனஸ் தான் அதிகம்”

நான் அவனை உற்று நோக்க,

“டெல்லிக்கு பக்கத்தில் இருக்கிற ஊரு. எவ்ளோ முன்னேறி இருக்கணும்? மத்த எல்லா பக்கமும், நல்ல முன்னேற்றம். இங்க மட்டும் இல்லை. காரணம், தாஜ்மஹால் கறைப்படியுமாம். அதனால, எந்த தொழிற்சாலைக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. முன்னாடி, நிறைய தோல் தொழிற்சாலைகள் இருந்தது. மூடிட்டாங்க. வருஷத்துல, மூணு நாலு மாசம் தான் சீசன். வெளிநாட்டுக்காரங்க வருவாங்க. மத்த நேரம், வெயில் தாங்க முடியாது. வேற வேலையும் கிடையாது.”

எனக்கு புரிந்தது. ஒன்றும் சொல்லவில்லை.

---

டெல்லி - ஆக்ரா ரயில் பயணம் என்றால் தான் இரண்டு - மூன்று மணி நேரத்தில் சாத்தியம். சாலை வழி பயணம் என்றால் ஐந்தில் இருந்து ஏழு மணி நேரம் வரை ஆகுமாம். நான் மதியம் இரண்டு மணிக்கு கிளம்பும் ரயிலில் புக் செய்திருந்தேன். இல்லாவிட்டால், பதேப்பூர் சிக்ரியும் சென்று வந்திருக்கலாம். இதை பிடித்தால் தான், இரவு அலுவலகத்தில் புக் செய்திருந்த விமானத்தை பிடிக்க முடியும். அதனால் வேறெதையும் ப்ளான் செய்யவில்லை.

தொடர்ந்து வடமாநில தலைவர்களிடமே ரயில்வே துறை இருப்பதாலோ என்னவோ, நிறைய ரயில்களை, நிறைய அதிவேக ரயில்களை, சொகுசு ரயில்களை இந்த பக்கம் காண முடிந்தது. ஆனால், ரயில்களை வடமாநில பயணிகள் மோசமான முறையில் பயன்படுத்துவதாக தெரிகிறது. ஸ்லீப்பர் க்ளாஸ் டாய்லட் பக்கம் செல்வதே திகில் அனுபவமாக இருந்தது.

இப்படி நிறைய ரயில்கள் இருப்பதால் வரும் தொந்தரவு என்னவென்றால், கிராஸ்ஸிங்கிற்காக நிறைய இடங்களில் நிற்க வேண்டியதாக இருக்கிறது. இந்த ரயிலை பற்றி நிறைய விசாரித்திருந்தேன். சரியான நேரத்திற்கு செல்லுமா? லேட்டானால் எவ்வளவு ஆகும்? விமானத்தை பிடிப்பதில் எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதால், இவ்வளவு விசாரிப்பு. எல்லோருமே நல்லவிதமாக சொன்னார்கள்.

ஆனாலும் ரயில் சதி செய்தது. மாலை 4:30 க்கு டெல்லி வரவேண்டியது, 6 மணியளவில் வந்து சேர்ந்தது. 8 மணிக்கு விமானம். ஆட்டோ பிடிக்க ஓடினேன். ஆட்டோ ட்ராப்பிக்கில் அப்படி இப்படி புகுந்து சென்றுவிடும் என்பதால். ஆனால், அப்படியெல்லாம் செல்ல வாய்ப்பே இல்லாத நிலை. நீளமான சிக்னல் வெயிட்டிங். ஊர்ந்து சிக்னல் பக்கம் சென்றால், மீண்டும் சிகப்பு ஒளிரும். ஆட்டோ டிரைவருக்கும், வேகமாக செல்ல விருப்பம் இல்லை போலும். உருட்டிக்கொண்டிருந்தார்.

ஏதோ பிரதமர் பிரஸ் மீட்டிங்காம் அந்த பக்கம். பத்திற்கும் மேற்பட்ட சேனல்களின் வேன்கள், டிஷ்களுடன் நின்றுக்கொண்டு இருந்தது. டிரைவர் விமான நிலையம் செல்ல ஏழே முக்கால் ஆகி விடும் என்று பகீர் ஆருடம் சொன்னார். விமான நேரத்தை கேட்டு தெரிந்துக்கொண்டு, உதட்டை பிதுக்கினார். அவ்வப்போது வாட்சைப்பார்த்து, தலையை மறுப்பது போன்று ஆட்டி கடுப்பை கிளப்பினார். நான் வேறென்ன செய்ய முடியும்? ரோட்டில் இறங்கி ஓடவா முடியும்? ஆனது ஆகட்டும் என்று பொறுமையாக பார்த்துக்கொண்டு இருந்தேன்.

சிறிது நேரத்தில் சிக்னல் விலக, அதன்பிறகு பெரிதாக எங்கும் சிக்னல் இல்லை. ஆட்டோ ஏழரைக்கு முன்பே போய் சேர்ந்தது. இல்லாவிட்டால், ’ஏழரை’ ஆகிருக்கும். அங்கு சென்று பார்த்தால், விமானம் ஒரு மணி நேரம் லேட்டாம்.

---



பலநாட்களாக இப்படி வட இந்திய பக்கம், ஒரு பயணம் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தது. வெறும் பேச்சு, திட்டம் என்றளவிலே இருந்தது. திடீரென்று வேகமாக அமைந்து, மூன்றே நாட்களில் முடிந்து விட்டது. மனதிற்கு பிடித்தவர்களுடன் திரும்பவும் செல்லவேண்டும். பார்க்கலாம்.

(முற்றும்)

.

Tuesday, August 17, 2010

பயணங்களின் மைல்கல் - தாஜ்மஹால்

நான் இருபது வருடங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருக்கிறேன். ஒரு பெரும் உறவு கும்பலுடன். அப்போது டெல்லியிலிருந்து ஆக்ரா செல்ல, தலைக்கு நூறு ரூபாய் ஆகும் என்றதால், எங்கப்பா கூட்டி செல்லவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஆயிரம் ரூபாய் ஆகுமோ என்று நினைத்தேன். அப்படியெல்லாம் ஆகவில்லை.



டெல்லியில் இருந்து போபாலுக்கு ஒரு அதிவேக ரயில் ஆக்ரா வழியாக ஓடுகிறது. காலை ஆறே காலுக்கு கிளம்பி, எட்டேக்காலுக்கு போய் சேர்ந்துவிடுகிறது. 200 கிலோமீட்டர் - 2 மணி நேரத்தில். டிக்கெட் முன்னூத்தி சொச்சம் தான். இதுவே இந்தியாவின் வேகமான ரயில். இந்தியாவின் முதல் சதாப்தி. இங்கே படித்து தெரிந்துக்கொண்டேன்.



வெளிநாட்டினர் நிறைய பேர் வந்திருந்தார்கள். ஒருமுறை அலுவலகத்தில் எங்களது ப்ராஜக்ட்டுக்கான கிளையண்ட், யூ.எஸில் இருந்து வந்திருந்தார். வந்தவர் முதலில் தாஜ்மஹால் சென்று விட்டு தான், பிறகு அலுவலகத்துக்கு வந்தார். சும்மா பேசிக்கொண்டிருக்கும் போது, எங்களிடம் ”யாரெல்லாம் தாஜ்மஹால் சென்றிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ரெண்டே ரெண்டு பேர்தான் சென்றிருந்தார்கள். அவர்களும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். பக்கத்தில் இருப்பதால் பார்த்திருக்கிறார்கள்.

இப்படிதான் நாம் பார்க்காத நம்மூர் விஷயங்களை, நம்மவர்களை விட வெளிநாட்டினர் அதிகம் பார்த்திருக்கிறார்கள். இன்னொரு கிளையண்ட் சென்ற வருடம், ராஜஸ்தானில் நடக்கும் ஒட்டகக்கண்காட்சியை பார்ப்பதற்காக வந்து சென்றார். போட்டோ காட்டினார். அசத்தலாக இருந்தது. அவர்களது பயணத்திட்டங்கள் பொறாமை வரவழைக்கும்.

---

ஆக்ரா ரயில்வே ஸ்டேஷன் வெளிவந்ததும், ஆட்டோகாரர்களும், கைடுகளும் முற்றுகையிட்டார்கள். நான் ப்ரீபெய்டு கார் புக் செய்தேன். காரை ஓட்டிய டிரைவர் நன்றாக ஆங்கிலம் பேசினார். பேசினான். சின்ன பையன். பி.ஏ. முடித்திருக்கிறான். பெங்களூரில் வேலை கிடைக்க ஆசைப்பட்டான். பேசிக்கொண்டே வந்தான். பல விஷயங்கள் சொன்னான்.

நான் தாஜ்மஹால் கேட்டுக்கு சென்ற போது, ஒன்பது மணி இருக்கும். கூட்டம் இல்லை. ஓட்டக வண்டி, ரிக்‌ஷா, பேட்டரி கார் போன்றவை உள்ளே அழைத்து செல்ல இருக்கிறது. டிரைவர் நடந்தே போக சொன்னான்.



நம்மூரில் சில சாதாரண விஷயத்திற்கெல்லாம் நுழைவு கட்டணம் கன்னாபின்னாவென்று வைப்பார்கள். கேமரா எடுத்து சென்றால், இன்னும் கன்னாபின்னாவென்று பிடுங்குவார்கள். தாஜ்மஹாலில் பத்து ரூபாய்தான். தாஜ்மஹால் போல் செட் போட்டே, இதைவிட அதிகம் வசூலிப்பார்கள். ஆனால், ஒரிஜினல் தாஜ்மஹாலுக்கு கம்மிதான்.



---

காலை வெளிச்சத்தில் மினுமினுத்துக்கொண்டிருந்தது தாஜ்மஹால். ரொம்ப நாள் பார்க்க ஆசைப்பட்டு கொண்டிருந்ததை, பார்த்துவிட்டேன். எத்தனை வருடமாக புகைப்படங்களில், படங்களில் காணுகிறோம். இதோ நேரில். நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டிருந்தேன்.



சின்ன வயதில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஸ்டில். இதோ நானும் எடுத்துவிட்டேன். அப்படியே தான் இருக்கிறது. ஆனாலும், ரொம்ப மகிழ்வாக இருக்கிறது. அடித்து தள்ளினேன். எப்படி எடுத்தாலும், அழகாக இருந்தது. அங்கு மட்டுமே நூறு போட்டோக்கள் எடுத்திருப்பேன்.



இந்தியர்கள் அனைவருக்கும் தாஜ்மஹால் தெரிந்திருக்கும். ஷாஜகான் - மும்தாஜ் கதை தெரிந்திருக்கும். ஒரு ராஜாவின் உணர்வு, கட்டிடமாய் பிரமாண்டமாய் நிற்கிறது. ராஜாவின் காதலென்பதால், காலம் தாண்டி தெரிகிறது. மூணாவது மனைவி பதினாலாவது குழந்தையை பெற்றெடுக்கும்போது செத்து போனாலும், காதல் காதல்தான்.



என்னதான் பல வருடமாக, புகைப்படங்களில் பார்த்துவந்தாலும், எனக்கு புதிதாக இருந்தது. இஸ்லாமிய புராதன இடங்களுக்கு சென்றதில்லை. தாஜ்மஹாலுக்கு பக்கத்திலேயே மசூதியொன்று இருந்தது. ஏதும் வழக்கம் தெரியாமல் தவறு செய்து விட கூடாதென்று கவனமாய் இருந்தேன்.



மார்பிளாலேயே செதுக்கியிருக்கிறார்கள். சின்னதாய் புகைப்படங்களில் பார்த்த விஷயங்கள், பிரமாண்டமாய் முன்னால் நிற்கிறது.



நான் நம்மூர் கோவிலுக்கு போகும் போதே, கோவிலை கட்டிய ராஜா இங்கேதானே சென்றிருப்பார்? அவரும் இங்கே நின்றுதானே சாமி கும்பிட்டு இருப்பார்? கோவிலை கட்டிய நம் முன்னோர், மதிய உணவு இடைவேளையின் போது, இங்கு உட்கார்ந்து சாப்பிட்டு இருப்பார்களோ? என்றெல்லாம் எண்ணுவதுண்டு. அதையே தாஜ்மஹால் முன்பு நின்று கொண்டு நினைத்துக்கொண்டு இருந்தேன். சிலிர்க்கணும் அல்லவா? சிலிர்த்தது.

---

தாஜ்மஹால் முன்பு ஒரு மார்பிள் பெஞ்ச் உண்டு. உலகமெங்கும் இருந்து வரும் பிரமுகர்கள், அதில் ஜோடியாக உட்கார்ந்து போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அடுத்த நாள் பேப்பரில் அது வரும்.

எனக்கும் அப்படி ஒரு போஸில் எடுக்க ஆசை இருந்தது. பக்கத்தில் உட்கார ஜோடி இல்லாததால், எடுக்கவில்லை.



தவிர, மொக்கை லொக்கேஷனிலேயே, ஒரு கேங்காக சென்றால், வளைத்து வளைத்து போட்டோ எடுப்போம். சோலோ, குரூப் என்று மாற்றி மாற்றி அடித்து தள்ளுவோம். தனியாக சென்றதால், அதற்கு வாய்பில்லாமல் போனது. ஒரிரு போட்டோக்கள், அங்கு வந்திருந்தவர்களிடம் கொடுத்து எடுத்துக்கொண்டேன்.



போட்டோ எடுப்பவர்களை பார்ப்பதே, நல்ல எண்டர்டெயின்மெண்டாக இருந்தது. வந்திருந்த வெளிநாட்டினர் தாஜ்மஹாலுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட, நம்மவர்களில் சிலர் அந்த வெளிநாட்டினருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். பட்டையும், ருத்திராட்ச கொட்டையுமாக சிலரும், பெரிய நாமத்துடன் ஒரு குடும்பமும் தாஜ்மஹால் முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொண்டதை பார்த்த போது, யோசனையாக இருந்தது. இவ்வளவு அலங்காரங்களுடன் இந்த ஆச்சாரமானவர்கள், இப்படி ஒரு கல்லறை முன்பு நின்று போட்டோ எடுத்து கொள்கிறார்களே என்று.



---

வரவே மனமில்லாமல் தான் வெளியே வந்தேன். எனக்காக டிரைவர் காத்திருந்தார். நன்றாக ஆங்கிலம் பேசியதால், இந்த காரிலேயே செல்லலாம் என்று காத்திருக்க சொன்னேன். என்னுடைய ப்ளான் ஆக்ராவில் ‘தாஜ்மஹால்’ மட்டும் தான். அதனால் தான், காலையில் கிளம்பியவன் மதியமே திரும்ப திட்டமிட்டிருந்தேன். இப்ப, இன்னும் நேரமிருந்ததால் டிரைவரிடம் கேட்டேன்.

“அடுத்து எங்க?”

“ஆக்ரா கோட்டை போலாம்.”

ஓ! போலாமே...

(தொடரும்)

.

Monday, August 16, 2010

டெல்லி - மெட்ரோவில் ஒரு நகர்வலம்

பாலிகா பஜார் பக்கம், மெட்ரோ ஸ்டேசனுக்கு வழி கேட்டப்போது, பூமிக்குள் கீழிறங்கும் படிக்கட்டை நோக்கி கைக்காட்டினார்கள். நான் ஏதோ சப்வே என்று நினைத்தேன். பார்த்தால், ஸ்டேசன் பூமிக்கடியில் இருக்கிறது. மெட்ரோ ரயிலும் அப்படியே. ஜனசந்தடிமிக்க நகரத்தின் கீழே தொந்தரவில்லாமல் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது. பூமிக்கடியில் இரண்டு அடுக்குகளில் மெட்ரோ வழித்தடங்கள் இருக்கிறது.



ஒவ்வொரு வழித்தடத்தையும் ஒரு வண்ணத்தை கொண்டு குறிக்கிறார்கள். நகரத்தின் மையத்திலிருக்கும் ராஜிவ் சவுக் ஸ்டேசனில் இருந்து நொய்டா செல்ல நீல நிறம். நகரத்தை விட்டு வெளியே வரும்போது, பூமிக்கடியில் இருந்து பாலத்திற்கு தாவிவிடுகிறது. நொய்டாவில் நாங்கள் இறங்கியபோது நேரம், ஒன்பது இருக்கும். அங்கிருந்து கிரேட்டர் நொய்டா செல்லவேண்டும். பஸ் எதுவும் இல்லை.

ஆட்டோவில் செல்லலாம் என்று கேட்டால், முன்னூறு ரூபாய் என்றார் ஆட்டோக்காரர். எங்களுக்கும் எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை. உடன் வந்த நண்பர், வழக்கம்போல் பேரம் பேசினார். ”அதுலாம் கிடையாது. இங்கதானே இருக்குது. இருநூறு ரூபாய் தான்”. ஆட்டோக்காரர் ஒத்துக்கொள்ளவில்லை. அவருக்கு நாங்கள் சொன்ன ஹோட்டலும் தெரியவில்லை. வழி சொல்லவும், பேரம் பேசவும் ரிசப்ஷனுக்கு போன் போட்டு, அவரிடம் கொடுத்தோம். வழி தெரிந்துக்கொண்டு, பெரிய மனது செய்து 20 ரூபாய் குறைத்தார்!

போகிறோம். போகிறோம். போய்க்கொண்டே இருக்கிறோம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஹோட்டல் வந்து சேர்ந்தோம். நாங்கள் 300 கொடுக்க, அவர் திருப்பி 20 கொடுக்க, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று பேசிய பேரத்தை நாங்களே தூரத்தை கண்டு வாபஸ் செய்தோம்.

----

அடுத்த தினம் எனக்கு மட்டும் வேலை ரொம்ப சீக்கிரமே முடிந்தது. மற்றவர்கள் அனைவரும் ரொம்ப பிசியாக இருந்தார்கள். காத்திருந்து பார்த்து, அலுவலகத்தில் இருக்க சலித்துப்போய், ஹோட்டல் திரும்பினேன். ஒரு பத்து நிமிடம் இருந்திருப்பேன். அங்கும் போர் அடித்தது. வெளியே டெல்லிக்கு செல்லலாம் என்று தோன்றியது. ஆனால் தனியாகவா?

அவனவன் எந்த நாட்டிலோ இருந்து வந்து, இங்கு தனியாக சுற்றிக்கொண்டிருக்கிறான். அமெரிக்கர்களே தைரியமாக ஈராக், ஆப்கானிஸ்தான் என்று சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். நமது நாட்டில் வேறொரு பகுதியில் சுற்ற நாம் ஏன் யோசிக்க வேண்டும்? முந்திய தினம், சீக்கிரம் ஹோட்டல் திரும்ப வேண்டும் என்று ஒரு நண்பர் சொல்ல, இன்னொருவர் இப்படி பதிலளித்தார்.

“ஏங்க பயப்படுறீங்க? எவ்வளவு நேரமானாலும் ஹோட்டலுக்கு போய்டலாம். ஆம்பளப்பசங்க தானே? (ஆணாதிக்கவாதியோ!) மோசமான சூழல் என்றானாலும், காசு செலவாகும். அவ்வளவுதானே?”

நேரத்தை வீணாக்க கூடாது என்று கிளம்பிவிட்டேன்.

---

பக்கமிருக்கும் மெட்ரோ ஸ்டேசனுக்கு போய், அங்கிருந்து டெல்லிக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றதால், ஒரு பஸ் பிடித்து நொய்டா செக்டர் 36க்கு சென்றேன். ஒவ்வொரு ஏரியாவுக்கும் பேர் வைக்காமல், நம்பர் கொடுத்துவிட்டார்கள். பஸ் முதல் எல்லாமுமே, கேஸில் தான் ஓடுகிறது. தேங்காயை கீறி ஒரு தட்டில் போட்டு, ஒரு சிறுவன் ஓடும் பஸ்ஸில் விற்றுக்கொண்டிருந்தான். 20 ரூபாய்க்கு முக்கால் மணி நேரம் பஸ் ஓடியது.



வயல்வெளிகளை அழித்து, கட்டிடமாக கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பெரிய பெரிய சாலைகள். ஆங்காங்கே பெரிய பெரிய கட்டிடங்கள். நடுவே எங்கும் வயல்வெளிகள். எல்லாம் நல்ல விவசாயநிலமாக தெரிந்தது. பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவோம் என்றும் தெரிந்தது.

இரவு திரும்பும்போது, இந்த பிரமாண்ட சாலைகளின் ஓரத்தில் தான் சில மக்கள் படுத்துறங்கிக்கொண்டிருந்தார்கள்.

---

மெட்ரோ ஸ்டேசன் போய்விட்டேன். அங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியவில்லை. ரெட் போர்ட், குதுப் மினார். எது எங்கிருக்கிறது என்று தெரியாததால், ரெட் போர்ட் எங்கிருக்கிறது என்று ஒருவரிடம் கேட்டேன். முழித்தார். ஒகே என்று நேற்று சென்ற ராஜீவ் சவுக் சென்றேன். பிறகு, பக்கத்தில் என்ன இருக்கிறது என்று மெட்ரோ வழித்தடத்தை பார்த்துக்கொண்டிருந்த போது, சாந்தினி சவுக் என்ற பெயர் கவர்ந்தது, ஏற்கனவே கேட்ட பெயராக இருந்ததால். ரொம்ப பழையகாலத்து மார்க்கெட்.



பொதுவாக சீக்கியர்கள் என்றால் வாட்டசாட்டமான உருவத்துடன், தாடி, கொண்டையுடன் பார்த்திருப்போம். இங்கு விதவிதமான சீக்கியர்களை பார்த்தேன். குட்டி குழந்தை சிங்கில் இருந்து பழம்பெரும் வயதான சிங் வரை. சில நோஞ்சான் சிங்குகளையும் பார்த்தேன். சீக்கிய சாமியார்களின் உடை, காவி நிற பாவாடையுடன் வித்தியாசமாக இருந்தது.



ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தது. இங்கு ரிக்‌ஷாவில் இன்னமும் மக்கள் பயணிக்கிறார்கள். அப்படியே பார்த்துக்கொண்டு, நடந்துக்கொண்டிருந்த போது தூரத்தில் சிகப்பாக ஏதோ தெரிந்தது. அட, ரெட் போர்ட்.



சும்மா பார்க்க நினைத்தது அருகில், ஏதேச்சையாகவே வந்து விட்டேனே என்று ஆச்சரியம். பார்த்தேன். எங்க ஏரியா (!) கடைசி பஸ்ஸை பிடிக்க வேண்டுமானால், சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டேன்.

---

டெல்லியை சுற்றிப்பார்க்க மெட்ரோ ரயில் ரொம்பவும் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். 8 ரூபாயில் இருந்து 23 ரூபாய் வரை தான் டிக்கெட் விலை. ஒரு டோக்கன் கொடுக்கிறார்கள். ஸ்வைப் செய்து விட்டு, போய்க்கொண்டே இருக்கலாம். தினம் செல்பவர்கள், ஸ்மார்ட் கார்டு வைத்து ஸ்வைப்புகிறார்கள்.



அதிக நேரம் காத்திருக்க வேவையில்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒன்று என வந்துக்கொண்டே இருக்கிறது. அடுத்து வரும் ரயில் எத்தனை நிமிடத்தில் வரும் என்று டிஜிட்டலில் கவுண்ட்டவுன் பக்கத்திலேயே ஒளிர்கிறது.

மற்ற ரயில் நிலையத்திற்கும், இதற்கும் பெருத்த வித்தியாசம். கொஞ்சமே கொஞ்சம் தான் துப்பிவைத்திருக்கிறார்கள். இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் இருக்கும் தண்டவாளத்தை பார்க்கும் தைரியம் எனக்கு அவ்வளவு இல்லை. இங்கு தைரியமாக பார்க்க முடிந்தது.

பகல் வேளைகளில் வெளியே அடிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கவே, இந்த ஏசி மெட்ரோ கோச்களில் தஞ்சம் அடையலாம். ஆனால், ஏறி இறங்கும் கூட்டம் இருக்கிறதே! கொஞ்ச நஞ்சமாக இருக்காது. நான் விடுமுறை தினங்களில் தான் பயணித்தேன். மற்ற நாட்களில், கஷ்டமாகத்தான் இருக்கும்.

மற்றபடி, ஒரு மேப்பும் நிறைய நேரமும் இருந்தால், ஜாலியாக குறைந்த செலவில் டெல்லியை சுற்றி சுற்றி வரலாம்.

---



ஹிந்தி தெரியாதது ஒன்றும் எனக்கு பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை. ஆங்கிலத்தை வைத்து சமாளித்தேன். எல்லாரிடமும் போய் ஆங்கிலத்தில் பேச முடியாது. அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.

உலகமயமாக்கம் உருவத்தில், தோற்றத்தில் தெரிந்தால் தாராளமாக போய் ஆங்கிலத்தில் பேசலாம். இதற்கு அவர்களிடம் சில விஷயங்கள் கவனிக்க வேண்டும். ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்திருக்க வேண்டும். அழுக்கில்லாமல் இருக்க வேண்டும். ஜீன்ஸ் விஷயம் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்றால் கூடுதலாக கொஞ்சம் தொப்பை இருக்கிறதா என்றும் கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இரவு பஸ்ஸில் ஹோட்டல் திரும்பும் போது, எந்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்று தெரியவில்லை. இப்படி தெரிந்தவர்களிடம் கேட்டு தான், கண்டக்டரிடம் சொன்னேன்.

---

இரவு ரூமுக்கு சென்றபோது, ரூம் மேட் அடுத்த நாள் ஊர் திரும்ப தயாராகிக்கொண்டிருந்தார். நான் டிவி போட, கலர் டிவியில் (டிவி பேருங்க!) ராவண் கிளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்க நினைத்தது. படத்தை கவனித்த ரூம்மேட், “இப்ப நீ இதை மாத்தலைன்னா, இப்பவே ஊருக்கு போயிருவேன்” என்று சொல்ல, டிவியை அணைத்து விட்டு படுத்தேன். இவனை மணிரத்னம் எவ்வளவு பாதிச்சிருக்காரு?!

அடுத்த நாள் அதிகாலையிலேயே ஆக்ராவுக்கு கிளம்ப வேண்டும் என்பதால், மொபைலிலும், மூளையிலும் அலாரம் வைத்துவிட்டு படுத்தேன். பெரும்பாலும், மூளை சீக்கிரமே முழித்திருந்து மொபைல் ஆலாரத்திற்காக காத்திருக்கும். அன்றும் அப்படியே.

(தொடரும்)

.

Sunday, August 15, 2010

பெங்களூரில் சோழர் கோவில் - சுதந்திர தின ஸ்பெஷல்

”சுதந்திர தினத்திற்கு என்னப்பா ப்ளான்?”

“காலையில் எந்திரிச்சு, குளிச்சு, கோவிலுக்கு போய் இந்தியா நல்லா இருக்கணும்’ன்னு வேண்டிக்க போறேன்!”

“என்னது?!!!”

---

அவன்கிட்ட காமெடியாக சொன்னாலும், கோவிலுக்கு போவது தான் ப்ளான். இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது, இது கண்ணில் பட்டது. இன்னும் தேடி பிடித்து வாசித்ததில், சோழர் காலத்து ஊர் என்றும், முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவில்களில் ஒன்று என்றும் தெரிய வந்தது. இந்த பக்கங்களின் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை. இங்கே சில புகைப்படங்களைப் பார்த்த போது, ரொம்ப பழைய காலத்து கோவில் என்பது மட்டும் புரிந்தது.

கண்டிப்பாக பார்க்க வேண்டும் என கிளம்பிவிட்டேன்.

---

பெங்களூர் ஓசூர் ரோட்டில், பொம்மன்னஹள்ளி சிக்னலில் பேகூர் ரோட்டில் சென்றால், சிறிது தூரத்தில் பேகூர் என்ற கிராமம் வருகிறது. கிராமம் என்பதை விட, பெங்களூரின் ஒரு ஏரியா என்று சொல்லிவிடலாம். ஊரோடு ஊராக கலந்துவிட்டது.

ஒரு ஏரி இருக்கிறது. ஏரியின் பக்கத்தில் இந்த கோவில். ஏரியின் மறுபக்கம் ப்ளாட் போட்டு விற்று, வீடுகள் பெருகி விட்டது. இங்கே இடத்தின் மதிப்பு சதுர அடிக்கு 1500 மேல்.



பழைய கோவிலுக்கு முன்பு, ஒரு புதிய கோவில் கட்டும் பணி நடந்துக்கொண்டிருந்தது. கோவில் சின்னது தான். வரிசையாக நிறைய லிங்கங்கள் இருந்தது. கோவிலுக்குள் ரொம்ப தாழ்வாரமாக இருந்தது. குனிந்துக்கொண்டே செல்ல வேண்டியிருந்தது. நிறைய சிற்பங்கள் பார்த்தேன். கூரையின் மேல்பக்கமும் சிற்பங்கள் இருந்தது.

பழைய கோவிலுக்கு என்றே ஒரு மணம் இருக்கிறது. அப்படி ஒரு மணத்தை சுவாசித்துக்கொண்டே சாமி கும்பிடும் அனுபவம், நவீன கோவில்களில் கிடைக்காது. பக்கத்தில் பழைய காலத்து கிணறு ஒன்றும் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஒரு பேமிலி புளியோதரை கட்டி கொண்டு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இந்த கோவில் எனக்கு பிடித்து போய்விட்டது.

---

ஒரு நடுத்தர வயது தம்பதி கோவில் பூசாரியிடம் வந்து கோவிலைப் பற்றி கன்னடத்தில் ஏதோ கேட்டார்கள். ’வைப்ரேஷன்’ என்று நடுவே சில வார்த்தைகள் வந்து விழுந்தது. இப்படி ஒட்டுக்கேட்டதில் புரிந்தது. ‘இங்கே எங்கோ அமர்ந்து பூஜித்தால், உள்ளுக்குள் அதிர்வு ஏற்படுமாமே?’ என்பது அவர்கள் கேள்வி. அதற்கு பூசாரி சில இடங்களை சொல்லி அனுப்பினார்.

நான் கிளம்பி, கோவிலை ஒரு ரவுண்ட் வந்தேன். பின்பக்கத்தில் கோபுரத்தை பார்க்க நன்றாக இருக்க, கேமராவை எடுத்தேன். பொசிஷன் செய்து, க்ளிக் செய்ய, சுவிச் ஆப் ஆகிவிட்டது. திரும்ப, திரும்ப முயற்சி செய்ய, வெளிவந்த லென்ஸ் உள்ளே செல்லாமல், அப்படியே அணைந்தது. ”என்னடா இது! வைப்ரேஷனா இருக்குமோ?” என்று நினைத்துக்கொண்டே கிளம்பினேன்.

வீட்டுக்கு வந்து சோதித்துப்பார்த்தால், பேட்டரி ப்ராப்ளம்.

---

ஒரு சுதந்திர தின தகவல்.

நாம் விசேஷமாக கொண்டாடும் சுதந்திர தினத்தை, எந்த விசேஷமும் இல்லாமல், திட்டமும் இல்லாமல், சட்டென்று நினைவுக்கு தோன்ற, ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சொன்னது மவுண்ட்பேட்டன். மதராஸப்பட்டினத்தில் பார்த்திருப்பீகளே?

“அதிகார மாற்றம் எப்போது நடைபெறவுள்ளது?”

“கூடிய விரைவில்”

”முக்கியமான இந்த நிகழ்வுக்கு ஒரு தேதி குறித்திருப்பீர்களே?”

“ஆமாம்” உண்மையில் இல்லை!

“எந்த தேதி?”

ஐப்பானை வெற்றிக்கொண்ட 15ஆம் தேதி மவுண்ட் பேட்டனுக்கு நினைவுக்கு வந்தது.

“ஆகஸ்ட் 15”

அவ்வளவு தான். நாம் வருடா வருடம் கொடியேற்றி மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

நன்றி : மருதனின் “இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு”.

---

ஒரு சுதந்திர தின கருத்து.

இந்தியா என்ற அமைப்பின் மேல் நம்பிக்கை இல்லாமல், ஏன் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என எழுப்பப்படும் கேள்வி பார்வையில் பட்டது.

வாழ்க்கையில் கொண்டாடப்படும் நிகழ்வுகள் எதுவும் மறுக்கப்படக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவை இவர்கள் வெறுப்பதற்கான காரணங்கள் எதற்கும் இந்தியா என்ற அமைப்பு அடிப்படையாக இருப்பது கிடையாது. காரணம் - சில அரசியல்வாதிகள். அதிகாரிகள். அவர்களை மாற்றுவதற்கான வழியை தான் காணவேண்டுமே ஒழிய, இந்தியாவை எதிர்ப்பதற்கான வழியை அல்ல.

அன்பு, வெறுப்பு - இதில் அன்பு வழியை தேர்ந்தெடுத்தால், எல்லைக்கோடுகள் மறையும். வெறுப்பு வழி, மேலும் பிரிவினையை வளர்க்கும். சிறு சிறு துன்பங்கள் நேர்ந்தாலும், நம்பிக்கையுடன் அன்பு வழியை தேர்ந்தெடுப்போம். வேறுபாடுகளை குறைப்போம். களைவோம்.

துண்டு, துண்டாக சிதறாமல், ஓர் மனித இனமாக மாற கனவு காண்போம்.

.

Saturday, August 14, 2010

வம்சம்

ஒரு பீல் குட் கதையை முதல் படமாக கொடுத்த பாண்டிராஜ், வன்முறை தெரிக்கும் ஒரு கிராமத்து கதையை இரண்டாவது படமாக கொடுத்துள்ளார்.



நாயகனாக முதல்வர் குடும்பத்தில் இருந்து இன்னொரு கலை வாரிசு. அருள்நிதி. இந்த படத்துக்காக தான் பைக் ஓட்டவே கற்றுக்கொண்டாராம். இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இந்த கதையின் நாயகனுக்கு அமைதியான முகமும் வேண்டும். ஆக்ரோஷமான முகமும் வேண்டும். இவருக்கு அதிரடி பத்தவில்லை.

ஆகா! நீண்ட இடைவெளிக்கு பிறகு சுனைனா. கிராமத்து பெண்ணாக வருகிறார். சாணி தண்ணி வாளியை தூக்கிக்கொண்டும், சைக்கிள் செயினை தாவணி கட்டிய இடுப்பில் சொருகி கொண்டும் பட்டையை கிளப்புகிறார்.

படத்தில் வெயிட்டான கேரக்டர்கள் நிறைய. வில்லனாக வருபவர். அம்மாவாக வருபவர். மாமாவாக வருபவர். ப்ளாஷ்பேக்கில் சண்டியராக வரும் கிஷோர். இவர்கள் எல்லாம் இளமை - முதுமை வித்தியாசம் காட்டி, நன்றாக நடித்திருக்கிறார்கள். ஹீரோவுக்கு மட்டும் பில்-டப் கொடுக்காமல், அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. படத்திற்கு அதுவும் ஒரு பலம்.

கிராமத்தில் மொபைல் சிக்னல் கிடைக்காமல், மரத்தின் மேல் மொபைலை கட்டிப்போடுவதும், போன் வரும்போதெல்லாம் கஞ்சா கருப்பு மரத்தின் மீது ஏறி பேசுவதும் சிரிக்க வைக்கும் காமெடி.

வித வித வம்ச வெரைட்டிகள், திருவிழா மரியாதை, திருவிழா கொலை, கத்தாழை கத்தி, பிண போதை என பார்க்காத விஷயங்கள் பலவற்றை காட்டுகிறார் இயக்குனர். தவிர பார்த்த கிடா வெட்டு, பொங்கல், கச்சேரி போன்றவைகளையும் நினைவுக்கு கொண்டு வருகிறார்.

ட்ராபிக், ஜனநெரிசல், வாகன புகை, கட்டிட மரங்கள் இவையெல்லாம் மறந்து கொஞ்சம் நேரம் ஊர் பக்கம் கூட்டிசெல்கிறார் இயக்குனர். அப்படியே ஒரு கிராமத்துக்குள் கால்நடையாய் போய் வந்தது போல் இருக்கிறது.

புது இசையமைப்பாளர் தாஜ்நூர் சமயங்களில் பின்னணி இசை மூலம் கவனம் ஈர்க்கிறார். அட போட வைக்கும் காட்சிகள் படம் முழுக்க நிறைய இருந்தாலும், கடைசியில் முதல் நாள், இரண்டாம் நாள் என்று இழுத்து, இரவு முழுக்க சண்டைக்கு காத்திருப்பது என ஏக பில்-டப் கூட்டி இறுதியில் சப்பென்று முடித்துவிட்டார்கள்.

கதைப்படி அருள்நிதி அவருடைய வம்சத்தை காப்பாற்றுகிறார். அவர் வம்சத்தை காப்பாற்றுகிறாரோ, இல்லையோ, ’வம்சம்’ அவரை காப்பாற்றும். நல்ல டைரக்டர் கிடைத்தால் போதும், நாமும் ஒரு ரவுண்ட் வரலாம் என மேலும் பல வாரிசுகளுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

.

Thursday, August 12, 2010

எந்திரன் - துணுக்ஸ்

எந்திரன். நானும் ஜோதியில் ஐக்கியமாகிறேன்.



---

பொதுவாக ரஹ்மானின் பாடல்கள் மேல் வைக்கப்படும் விமர்சனம் - ஒரே இயந்திர சத்தம், மனித உணர்வே இல்லை என்பது தான். 'ரோபோவில் அப்படி சொல்ல முடியாதே’ என்று நினைத்தேன். வேறென்னலாமோ சொல்கிறார்கள்.

---

மலேசியா பாடல் வெளியிட்டு விழாவில் கலாநிதி மாறனும், ரஜினியும் நடந்து வந்த போது, மக்கள் ஆரவாரத்துடன் கையசைத்தது கலாநிதியை பார்த்து தானே? - சன் டிவி பார்வையில்.

---

ரஜினி படமோ, ரஹ்மான் படமோ பாடல் வெளிவந்த உடன் கேட்க நினைத்து கேட்டுவிடுவேன். (ஷங்கர் படங்களும் தான். அது ரஹ்மான் படங்களில் அடக்கம்.) இந்த முறை தான் ரொம்ப லேட். இதில் மறக்க முடியாத அனுபவம் - பாபா தான்.

ஹாஸ்டலில் ஒரு டேப் ரிக்கார்டரை சுற்றி அமர்ந்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஏமாற்ற, அடுத்தது அடுத்தது என்று போய்க்கொண்டு இருந்தோம். முடிவில் ”‘மாயா மாயா’ பாடல், நல்லாதானே இருக்கிறது?” என்று எங்களை நாங்களே சமாதானப்படுத்திக்கொண்டு அதை மட்டும் பிறகு கேட்டுக்கொண்டிருந்தோம்.

---

சிவாஜியில் ‘ஏழையாகி பணக்காரனாவது’, ‘கொள்ளையடித்து மக்களுக்கு நல்லது செய்வது’ என்று ரஜினி, ஷங்கர் இருவரது பார்மூலாவும் இருந்தது. இது ஷங்கரின் படம். அதில் ரஜினி நடித்திருக்கிறார் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக புது அனுபவம் தான்.

---

தமிழ்படத்திற்கு இவ்வளவு பட்ஜெட்டில் படமெடுக்கும் அளவுக்கு மார்க்கெட் இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்னும்போது தேவையில்லாத விஷயமாகிறது. சன் டிவி, சூரியன் ஃஎப்எம், தினகரன், குங்குமம், டிடிஎச் என்று சம்பாதிக்க எத்தனை வழிகள்?

ஒரு படம் உருவான விதம் என்று சொல்லுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு படத்தின் பாடல்கள் உருவான விதம் என்று சொல்லுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா உருவான விதம் என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

---

புதிய மனிதா - எஸ்.பி.பி. பாடியிருந்தாலும் வழக்கமான தொடக்க பாடல் இல்லை. நல்ல விஷயம் தான்.
அரிமா அரிமா - ஏனோ இந்த பாடல் கேட்கும்போது, சொர்ணலதா ஞாபகம் வந்தார். அவர் பாடியிருக்கலாமோ?
இரும்பிலே ஒரு இதயம் - சிவாஜி ரஜினிக்கு ரஹ்மான் குரலில் டூயட்டா? என்ற சந்தேகமே ஒன்றுமில்லாமல் போனபோது, ரோபோவுக்கு ரஹ்மான் குரல் என்றால் என்ன? நச் தான்.
கிளிமாஞ்சரோ - காட்டுவாசிகளோடு ஆடுவது போல் ஸ்டில்ஸ் வந்ததே? அந்த பாட்டுதான். என்ன வகை படமெடுத்தாலும், ஷங்கர் இப்படி ஒரு பாட்ட விட மாட்டாரே?
காதல் அணுக்கள் - ரஜினி & ஐஸ்வர்யா ராய் லவ் சாங்!!! ட்ரெய்லரில் பார்க்க ஜாலியா இருந்தது.
பூம் பூம் ரோபோடா - கணேஷ் மொபைலில் இதுதான் ரிங் டோன்.
சிட்டி டான்ஸ் தீம் - ரங்கீலா, தால் காலத்திற்கு பிறகு, ரஹ்மானிடமிருந்து ஒரு நீண்ட அதிரடி இசை கலவை.

---

பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்னது,

“நான் ஒண்ணும் பண்ணல. ஒரு குழந்தை மாதிரி என்னை எல்லாம் பண்ண வச்சு, எனக்கு பேரு வாங்கி கொடுக்க கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க.”

அதுதான் ரஜினி.

தொழில்நுட்ப கலைஞர்கள் பேசும் ட்ரெய்லரில், கடைசியில் ஒரு டான்ஸ் ஸ்டெப் போட்டுவிட்டு, ஒரு குழந்தையை போல குதூகலிக்கிறார் பாருங்கள்!

மில்லியன் டாலர் பேபி.

.

Wednesday, August 11, 2010

ரெண்டு படம் - ரெண்டு பாட்டு - ரெண்டு ஹீரோ

கடந்த இரண்டு வாரங்களில் பார்த்த இரண்டு படங்களில், இரண்டு பாடல்கள் மட்டும் தான் பிடித்திருந்தது. மற்றபடி சொதப்பலான அம்சங்களே அதிகம்.

இரண்டுமே பெண் குரல் பாடல்கள். ஒன்றில் இரண்டு பெண்கள். முன்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும், பெண் குரல் பாடல்கள் எனக்கு ஏனோ பிடித்ததில்லை. இப்ப மாறி வருகிறது.

---

தில்லாலங்கடி ‘சொல் பேச்சு’ பாடலின் படமாக்கம் - இண்ட்ரஸ்டிங். கேமரா அப்படியே சுழன்றுக்கொண்டு இருக்க, ரவிக்களும் தமன்னாக்களும் சேர்ந்து ஆடுவது போன்ற கான்செப்ட், ரொம்பவும் பிடித்தது. அடிச்சான் காப்பி என்பதால் கிரியேட்டிவிட்டிக்கு கிரடிட் கொடுக்காவிட்டாலும், உழைப்புக்கு கொடுக்கலாம்.



வடிவேலு - சந்தானம் காம்பினேஷனில் முதல் படம் என்று நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. ஜெயம் ராஜா படம் பார்க்கும்போது, ஒரு ஹிட் படம் பார்க்கும் உணர்வு இருக்கும். இதில் நேரெதிர். அடுத்து விஜய்யுடனாமே? காற்று வீச ஆரம்பித்துவிட்டதோ!

---

பாணா காத்தாடி ‘என் நெஞ்சில்’, படத்தில் கதைக்கேற்ப வரிகளுடன் அமைந்த பாடல். கதையின் தொடர்ச்சியாக அழகான நாயகியின் தவிப்பான நடிப்பில், அருமையான லொக்கேஷனில் எடுத்த பாடல். சம்பந்தமில்லாமல் வந்து போஸ் கொடுக்கும் நாயகன் தான், பாடலில் குறை.



இந்த படம் எல்லாவிதத்திலும் ஆவரேஜ். சூப்பர் என்றும் சொல்லமுடியாது. ப்ளேடு என்றும் சொல்லமுடியாது. நாயகன் ஆதர்வாவும் ஆவரேஜ். இவருக்கு நல்ல மெச்சுர்டான, உருவத்துக்கு சம்பந்தமில்லாத குரல். இவரை ஆஹா ஓஹோ என்றும் சொல்லமுடியாது. மோசம் என்றும் சொல்லமுடியாது. படத்தின் டாப் - சமந்தா மட்டுமே. டாப் டக்கர்.

ஒவ்வொரு புது ஹீரோ வரும்போதும், அடுத்த சூப்பர் ஸ்டாரோ என்று எதிர்ப்பார்ப்பில் ஒரு குரூப் உடனே மன்றம் தொடங்கும். அதுவும் நடிகர், இயக்குனர் மகனென்றால் நம்பிக்கை லெவல் இவர்களுக்கு இன்னும் அதிகமாகிவிடும். முதல் படத்திற்க்கே மாலை, போஸ்டர் என்று கைக்காசை செலவழிப்பார்கள். எல்லாம் வருங்காலத்தில் ஆரம்பிக்கப்படும் என்று நினைக்கப்படும் கட்சியின் ‘மாவட்ட செயலாளர்’ பதவி கிடைக்கும் என்ற நப்+பேராசையில் தான். இப்படி மனோஜ், அம்சவர்தன் போன்றவர்களை நம்பி ஏமாந்தவர்களை பார்த்திருக்கிறேன். போன வாரம் கூட, சாந்தனுவின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடித்தவர்களை பார்த்தேன்.

இப்படி இந்த வாரம் ஆதர்வாவை நம்பி விசில் அடித்த கும்பலை காணும் வாய்ப்பு ‘பாணா காத்தாடி’ படத்தின் போது காணக்கிடைத்தது. அடுத்தது கௌதம் படமாமே? என்ற செய்தி இவர்களுக்கு இன்னமும் பூஸ்ட் கொடுத்திருக்கும்.

---

இந்த இரண்டு படங்களிலும் இரண்டு ஹீரோக்களை பரிதாபகரமான வேடங்களில் காண வேண்டியதாக இருந்தது. தில்லாலங்கடியில் ஷாமும், பாணாவில் பிரசன்னாவும். இருவருக்குமே பொருத்தமில்லாத வேடங்கள்.

தில்லாலங்கடி போஸ்டரில் சின்னதாக ஷாமை பார்க்க பாவமாக இருந்தது. ம்ம்ம். என்ன செய்ய? பத்து வருசம் பீல்டில் இல்லாவிட்டாலும், ஹீரோவாகவே நடிக்க அவரென்ன ராமராஜனா?

பிரசன்னாவுக்கு ஏன் இந்த நிலை? நல்லாதானே போயிட்டிருந்தது. அவரிடம் இந்த காரெக்டருக்கு இயக்குனர் என்ன பில்ட்-அப் கொடுத்தாரோ? ப்ரசன்னாவின் அந்த மென் சோக முகம், ரவுடி கேரக்டருக்கு சுத்தமாக பொருந்தவில்லை.

’பின்புலமற்ற நடிகர்’களின் மேலான ’வாரிசு நடிகர்’களின் ஆதிக்கமாக இந்த இரண்டு படங்களை காண முடியும். பாருங்க, எங்கெல்லாம் குறியீடு தேடுகிறேன்!

.

Tuesday, August 10, 2010

டெல்லி - இந்தியா கேட்

இந்தியா கேட். என்னுடன் வந்திருந்த நண்பர் பார்க்க ரொம்பவும் ஆசைப்பட்ட இடம். இந்தியா கேட்டுக்கு முன்னாடியே, டெல்லி போலீஸ் போட்டிருந்த ஒரு இரும்பு கேட் முன்னாடி ஆட்டோ விட்டு செல்ல, அங்கிருந்து நடந்தோம்.



இதன் பக்கமிருக்கும் பூங்காவில், காதலர்கள் அமைத்திருந்த கூட்டணிகள் எக்கச்சக்கம்.



பின்னால் தூரத்தில், சாயங்கால நேரத்தில் மங்கலான வெளிச்சத்தில் ராஷ்ட்ரபதி பவன் செல்லும் சாலையும், ராஷ்ட்ரபதி பவனும் தெரிந்தது.



“மௌன ராகம் காலத்தில் இருந்து, இது இப்படிதாம்பா இருக்குது!”

---



இது இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவு சின்னம். இதை வடிவமைத்தது - எட்வின் என்ற ஆங்கிலேயர். இது முதலாம் உலகப்போரில் உயிரிழந்த ‘பிரிட்டிஷ் இந்திய’ ராணுவ வீரர்களை நினைவு கூறும் விதமாக வடிவமைக்கப்பட்டது.



அந்த ராணுவ வீரர்களின் பெயர்கள், இதில் இருக்கும் கற்களில் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது. நான் நிறைய சிங் பெயர்களைப் பார்த்தேன்.

---

அதற்கு பிறகு நண்பர் எங்காவது ஷாப்பிங் செல்லலாம் என்று சொல்லி, ‘பாலிகா பஜார்’ என்ற இடத்தை சொன்னார். அண்டர்கிரவுண்டில் வட்டவடிவில், சிறு சிறு கடைகளாக அமைந்திருக்கும் இடம் தான் - பாலிகா பஜார். ட்ரஸ், எலக்ட்ரானிக் ஐட்டங்கள், விளையாட்டு சாமான்கள் போன்றவற்றை கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு கடையில் ஒருவர் அவராக எங்களை உள்ளே கூப்பிட்டு, ’சும்மா’ பார்த்துவிட்டு செல்லுமாறு சொன்னார். நாங்களும் பார்த்தோம். மூன்று சட்டைகளை எடுத்து, எங்கள் கைகளில் கொடுத்து, அவர் ஒரு கால்குலேட்டரை எடுத்து 300, 400, 500 என்று கணக்கு போட்டார். முடிவில் 1200 என்று சொல்லி, அதற்கு அவராகவே ஒரு டிஸ்கவுண்ட் போட்டு, 1000 என்று பெரிய மனதுடன் சொன்னார். நாங்கள் சிம்பிளாக ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

1000 பிறகு 800 ஆனது. நாங்கள் நடக்க, நடக்க, அவர் குரல் சத்தம் குறைய, கூடவே விலையும் குறைந்தது. கடைசியாக 300 என்று கேட்டது!

---

நான் ஆட்டோவில் செல்லும்போதே, வழியில் மெட்ரோ ரயிலை பார்த்தேன். தூரத்தில் சென்றதை புகைப்படம் எடுக்க, எங்கோ பார்த்துக்கொண்டிருந்த நண்பர் கேட்டார்.



“ஏங்க! உங்க ஊர்ல மேம்பாலம் கூடவா கிடையாது?”

பிறகு அவரிடம் மெட்ரோவை காட்ட, அவரும் அதை பார்த்துவிட்டு, அதில் ஒரு ரவுண்ட் போகலாம் என்றார்.

இப்போது பஜாரில் ’ஒன்றுமே வாங்காத எங்கள் ஷாப்பிங்கை’ முடித்துவிட்டு, பக்கமிருந்த மெட்ரோ ஸ்டேசனில் இருந்து நொய்டா திரும்பலாம் என்று முடிவு செய்தோம். ஸ்டேசன் பூமிக்கு கீழே இருந்தது. அங்கு ஒரு போட்டோ எடுக்க முயல, ஒருவர் இங்கு புகைப்படங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்தார். ஓகே என்று மூடி உள்ளே வைத்தோம்.



மெட்ரோ அனுபவம் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. அடுத்த நாள் அதில் தான் சுற்றினேன். அடுத்த பதிவில் அது.

(தொடரும்)

.

Thursday, August 5, 2010

டெல்லி - அக்ஷர்தம்

நொய்டாவில் இருந்து டெல்லி செல்லும் வழியில் அக்ஷர்தம் இருக்கிறது. உலகின் பிரமாண்டமான இந்து கோவில் என்ற வர்ணனைகளுடன் வந்த மெயில் புகைப்படங்களை பார்த்து அசந்து போயிருந்தேன். அதற்காகவே போயிருந்தேன்.

அங்கே சென்றதும் முதல் ஏமாற்றம் - கேமரா உள்ளே எடுத்து செல்ல கூடாதாம். அது மட்டுமல்ல, பாதுகாப்பு காரணம் என்று சொல்லி பர்ஸை தவிர எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். உடல் முழுவதையும் தடவி பார்த்து, உள்ளே அனுப்புகிறார்கள்.



பொருட்களை கொடுக்கும் இடத்தில் அங்கிருந்தவர் ‘நாம்?’ என்று கேட்க, நண்பர் அவருடைய பெயரை சொன்னார்.

“எப்படி பாஸு, உங்களுக்கு ஹிந்திலாம் தெரியுது?”

“யோவ்! ஹிந்தி கத்துக்க ஆரம்பிக்கிற எல்லோருக்கும் தெரியுறது இதுதான்யா - ‘துமாரா நாம் க்யா ஹே?’”

---

செதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு சிலையையும் நின்று பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது. பக்தி, ஆன்மிகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கலாரசனை இருந்தால் கண்டிப்பாக சென்று வரலாம்.



நாம் பழங்காலத்து சிற்பங்களை பார்த்து அதிசயித்திருப்போம். முன்னோர்களின் திறமைகளை கண்டு ஆச்சர்யப்பட்டிருப்போம். ஆனால், தற்காலத்தில் உள்ள சிற்பக்கலைஞர்களுக்கு அவ்வாறு தங்கள் திறமையை காட்ட வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அக்ஷர்தம் - அப்படி திறமையை காட்ட அமைந்த வாய்ப்பு என்று சொல்லலாம்.

நடுவே அமைந்திருக்கும் கூடத்தில் நடுநாயகமாக இருப்பவர் சுவாமி நாராயண் என்பவர். இவர் சாமி அல்ல. சாமியார். இவரை சுற்றி இன்னும் சில சாமியார்களும், அவர்களை சுற்றி ராமர், கிருஷ்ணர் போன்ற சாமிகளும் இருக்கிறார்கள். பாருங்க, சாமிகளோட நிலைமை அவ்வளவுதான்!

இந்த கூடத்தின் மேலே இருக்கும் டிசைன்களை பார்த்தால், வாயை பிளக்காமல் இருக்க முடியாது. அழகாக வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் என்று முடித்துவிடாமல் அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணங்கள், பாய்ச்சப்பட்டிருக்கும் விளக்குக்கள் என மேலும், மேலும் மெருக்கேற்றியிருக்கிறார்கள்.

குறிப்பாக யானை சிற்பங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். யானை நிற்கும் கோணத்திற்கேற்ப, அதன் உடல் பாகங்களின் அசைவுகள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு இடத்தில் யானை அதன் ஒரு காலை தூக்கி நிற்பது போன்ற சிற்பத்தில், காலுக்கு மேலே உள்ளிருக்கும் எலும்பு சிறிதளவு தோலைத்தள்ளியபடி இருக்குமாறு காட்டியிருந்தார்கள். அபாரம்.

---

கோயிலைப் பற்றி சின்ன கையேடு, புகைப்பட ஆல்பம் போன்றவற்றை ஒரு பெண் விற்றுக்கொண்டிருந்தார். நான் ஒன்று கேட்க, என் முகத்தை பார்த்து விட்டு,

”பிராந்திய மொழிகளிலும் இருக்கிறது, வேண்டுமா?” என்றார்.

சரியென்று சொல்லி, செம்மொழியில் வாங்கி வந்தேன்.

---

முப்பரிமாண படம், படகு பயணம், தோட்டம், உணவகம் என ஒரு தீம் பார்க்கிற்கு உரிய அனைத்து சங்கதிகளும் இருக்கிறது. நேர நெருக்கடியால் எல்லாவற்றுக்கும் செல்ல முடியவில்லை.

இவையனைத்தும் இங்கு இருப்பதால் தான், இது ‘உலகின் மிக பெரிய கோவில்’ என்று கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருக்கிறது. இவைகளை கணக்கில் சேர்க்காவிட்டால், நம்மூர் மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆகியவை தான், இந்த சிறப்புக்கு தகுதியாக இருக்கும் என ஒரு பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இவை பற்றி மேலும் விவரங்களுக்கு,

ஆங்கில விக்கி
தமிழ் விக்கி
கோவிலின் அதிகாரபூர்வ தளம்

---

இங்கிருக்கும் டாய்லெட்டில் ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தார்கள். எதற்கு? பக்திமணம் கமழவேண்டும் என்பதற்கா? அது அங்கிருக்கும் வாடையுடன் கலந்து, ஒரு புதுவித நறுமணத்தை தந்துக்கொண்டிருந்தது.

என்னுடன் வந்த நண்பர், கோவிலைக் கண்டு ஆச்சரியப்பட்டதை விட வேறெதையோ கண்டு ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தார். அடிக்கடி எதையோ பார்த்து, “என்ன தான் சாப்பிடுவாங்களோ?” என்று சொல்லிக்கொண்டிருந்தார். என்னவென்று கேட்டால் தலையை குனிந்துக்கொள்வார்.

கோவில் எங்கும் சுத்தம்
என் மனதில் மட்டும் அசுத்தம்


என்று கவிதை மாதிரி எதையோ சொல்லி, ’புரிகிறதா?’ என்று வேறு கேட்டுக்கொண்டார்.

---

அடுத்ததாக ‘இந்தியா கேட்’ போகலாம் என்று ஒரு நண்பர் ஐடியா கொடுக்க, வெளியே வந்து ஒரு போலிஸ்காரர் துணையோடு ஆட்டோ பிடித்தோம்.



எவ்ளோ தூரம், எவ்வளவு ஆகும் என்பதெல்லாம் தெரியாமலேயே சும்மானாச்சுக்கும் பேரம் பேசினோம். அறுபது ரூபாய் என்று முடிவாகி, இந்தியா கேட்டுக்கு படையெடுத்தோம்.

(தொடரும்)

.

Tuesday, August 3, 2010

டெல்லி



”போன வாரம் பூனே போனது போல், இந்த வாரம் டெல்லி...” என்று கேட்பதற்குள் தலையாட்டிவிட்டேன். டெல்லி, ஒண்ணும் புரியாத வயசில் போனது. அவ்வப்போது நண்பர்களுடன் கேட்பேன். ’அந்த பக்கம் ஒரு ட்ரிப் போடுவோம்’ என்று. அதுவா வாய்க்கும்போது விட முடியுமா? பூனேயில் சொதப்பியதுபோல் டெல்லியில் ஆகிவிடக்கூடாது என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொண்டேன்.

ஆபிஸ் வேலைக்கு ரெண்டுநாள். நமக்கு ஒருநாள் என்பது ப்ளான். எதையும் ’ப்ளான்’ பண்ணி செய்யணும் இல்லையா?

இம்முறை இண்டியன் ஏர்லைன்ஸில் அனுப்பிவைத்தார்கள். அதில் பணிபுரியும் பாட்டிமார்களை காண ஆர்வமுடன் இருந்தேன். கிங்பிஷர் இளஞ்சிட்டுக்கள் பயணிகள் பெட்டிகளை தூக்கிப்போட்டு பந்தாடுவார்கள். பாட்டிகள் ஐடியாக்கள் மட்டும் கொடுத்தார்கள். பயணிகளும் அவர்களை துன்புறுத்தவில்லை. முதியோர் வன்கொடுமை சட்டம் பாய்ந்துவிட்டால் என்ன செய்ய? இந்த பாட்டிகள் இளம் வயதிலேயே பணியில் சேர்ந்து இப்போது வயதாகிவிட்டதா, இல்லை இந்த வயதில் தான் பணியில் சேர்கிறார்களா?

இம்முறை இரவு பயணம். மேலிருந்து பார்க்கையில், சோடியம் விளக்குகளால் நகரங்கள் தங்க துணுக்குகளாய் மினுமினுத்தது.

உடன் வந்திருந்த சிங் என்னை டாக்ஸியேத்தி ஹோட்டல் அனுப்பிவிட்டு பிறகு சென்றான்.

கிரேட்டர் நொய்டா செல்ல வேண்டியிருந்தது. உண்மையில் டெல்லி என்று சொல்லியிருக்கக் கூடாது. டெல்லிக்கு பக்கத்து ஊர். உபி மாநில ஹைடெக் நகரம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணம். வழியில் டிரைவர் ஹிந்தியில் ஏதேதோ கேட்டார். பெப்பப்பே என்ற எனது தொடர் பதில்களால், அதற்கு பிறகு எதுவும் கேட்கவில்லை. ஒருகட்டத்திற்கு மேல் அவருக்கும் வழி தெரியவில்லை. ஹோட்டலுக்கு போன் போட்டு, மொபைலை டிரைவருக்கு கொடுக்க, அவராகவே ஒரு முடிவுக்கு வந்தார்.

போகும் வழியில் CNG ஸ்டேஷனில் கேஸ் அடைத்துக்கொண்டார். இந்திரப்ரஸ்தா என்று பல இடங்களில் கடை திறந்து வைத்திருந்தார்கள். க்ரேட்டர் நொய்டாவில் அதில் தான் வண்டி ஓட்ட வேண்டுமாம்.

இரவு குளிர்ச்சியாக இல்லாமல், கதகதப்பாகவே இருந்தது. பெங்களூரில் போட்ட ஜெர்கின், வெக்கையை கூட்டியது. மழைக்கு பயந்து இதை சுமந்து சென்றேன். நல்லவேளை அடுத்த தினம் காலை, நான் எடுத்துசென்ற குடை, ஜெர்கின் போன்றவற்றுக்காகவே மழை பெய்தது.

மதியத்திற்கு மேல் மழை நிற்க, வேலையும் சீக்கிரம் முடிய, வெளியே செல்வது என்று முடிவானது. சென்னையில் இருந்து வந்த இரண்டு பேர் அங்கு நண்பர்களாக, ஒன்றாக எல்லோரும் வெளியே கிளம்பினோம். உடன் வந்த சிங், ஒரு சிங் தோழனை பிடித்துக்கொண்டு அவன் வழியில் சென்றான். இனம் அதனதன் இனங்களோடு சேர்ந்துக்கொண்டது.

எங்கெங்கு சென்றோம் என்பதை வரும் நாட்களில் சொல்கிறேன்.

.