யெய்யய்யே! படம் பாக்க வுடுறாங்களா? எப்ப பாரு கத்திக்கிட்டே! படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை, குரூப் குரூப்பாக வந்திருந்த இளைஞர் கூட்டம் கத்திக்கொண்டே இருந்தது. அதிலும் சிலர் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள்.
இயக்குனராகும் ஆசையில் இருப்பவர்கள், ஏகப்பட்ட ஐடியாக்களை சேர்த்து வைப்பார்கள். தங்களுடைய முதல் படத்தில் அவ்வளவையும் அள்ளி வைப்பார்கள். பந்தியில் முதல் வரிசையில் உட்கார்ந்தால், எல்லா ஐட்டங்களும், சூடாக கிடைக்குமே? அப்படி ஒரு உணர்வை ரசிகர்களுக்கு கொடுக்கிறது இப்படம்.
தமிழ் சினிமா பலமுறை பார்த்த ‘ஒரு உருப்படாதவனின் காதல் கதை’ தான். ஒரத்தநாடு, ராணிமங்களம் போன்ற ஊர்களை களமாக வைத்து, ஜாலியாக சொல்லிருக்கிறார்கள்.
இயக்குனர் விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்தவரா? கிராமத்து கதை, விவசாய பின்னணி என்பதால் விவசாய குறிச்சொற்களை படத்துடன் கலந்திருக்கிறார். படம் முழுக்க ரசிக்கும் வகையில் நிறைய டைரக்டர் டச்கள் இருக்கிறது. அடிவாங்கிய சொம்பு, செங்கல் டிவி ஸ்டாண்ட், பொரளி பேசும் டிஷ் என கவனிக்கத்தக்க காட்சிகள். யதார்த்ததை மீறாத கிராமத்துக்காட்சிகள். பெரிய ஐடியா மணியாக இருப்பார் போல!
’பசங்க மீனாட்சி’ விமல், ‘பருத்தி வீரன் முத்தழகி அம்மா’, ’வெண்ணிலா கபடிக்குழு பரோட்டா சாம்பியன்’, ‘பருத்தி வீரன், நாடோடிகள் டைப் கிச்சு கிச்சு’ கஞ்சா கருப்பு, ’பசங்க புஜ்ஜிமா அம்மா’, ‘சுப்பிரமணியபுரம் பாணி’ பொண்ணு கடத்தல் போன்றவற்றை பார்த்தபோது, முடிவு ட்ராஜெடியாக இருக்குமோ? என்று பயந்தேன். நல்லவேளை, எங்குமே ட்ராக் மாறாமல், ஜாலியாகவே முடித்தார்கள்.
பாடல்களை கேட்டதே இல்லையென்பதால் ஒரு பாடலை தவிர மற்ற எதுவும் கவரவில்லை. சாதா காதல் கதையை இரண்டரை மணி நேரம் காட்டுவதால் சில இடங்களில் போர் அடிக்கிறது. மற்றபடி நடிகர்கள் தேர்வு, கதாபாத்திரங்களின் ஸ்கெட்ச், புதுமுகங்களின் நடிப்பு, கிராமத்து சுவாரஸ்யங்கள், காமெடி ரவுசுகள் என படத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
விமல், ஒரு காட்சியை தவிர படம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டையுடன் காலரை இழுத்துவிட்டுக்கொண்டு சுற்றுகிறார். ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்க தயாராக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிடிக்கும் வகையில் உள்ள கதாபாத்திரத்தில், கவரும்படி நடித்திருக்கும் விமலுக்கு இந்நேரம் மன்றங்கள் திறக்கப்பட்டிருக்கும். பெயருக்கு முன்னால் என்ன போடலாம் என்று உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
இயக்குனர் சற்குணம் - சசிக்குமாரிடமோ, பாண்டிராஜிடமோ அல்லது சுசீந்திரனிடமோ தொழில் கற்றிருப்பார் என படம் பார்க்கும் போது தோன்றியது. ஆனால் ஆச்சரியம். அவர் பணியாற்றியது ‘பொய் சொல்ல போறோம்’ இயக்குனர் விஜய்யிடம்.
ஒரு ஜாலியான கதையை கிராமத்து பின்னணியில் பார்க்க விரும்பினால், களவாணியை பிடிங்க.
.
3 comments:
paaththudalaam
பார்க்கலாம்.
கண்டிப்பா எல்லாரும் பாக்கணும் அதுவும் குடும்பத்தோட , அந்த அளவுக்கு நல்ல எடுத்திருக்காங்க
அதுவும் நம்ம பஞ்சாயத்து (கஞ்சா கருப்பு ) சூப்பர்.
இவன்
உங்கள் பிரபு
Post a Comment