ஆபிஸ் வேலையாக வாரயிறுதியில் இரண்டு நாட்கள் பூனே போய் வர சொன்னார்கள். ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டேன். ஒன்றோ, இரண்டோ படிக்கும்போது டெல்லி சென்றிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது டூருக்கு மும்பை சென்றிருக்கிறேன். வேறெங்கும் வட இந்தியாவில் சென்றது கிடையாது. மும்பை, பூனேகாரர்களுக்கு வட இந்தியா என்பது வேறு. வாட் எ பிட்டி!
சனிக்கிழமை அதிகாலை கிங் பிஷர் ப்ளைட். கொஞ்ச நேரத்திற்கு முன்பு சென்றிருந்தால், ஜன்னல் சீட் கிடைத்திருக்கும். பயணத்தின் போது, ஜன்னல் சீட் கிடைப்பதில்லை என்றால் பயணம் முழுமையடைவதில்லை. பஸ்ஸில் இப்படி பின்னால் ஜன்னல் சீட் கிடைக்காவிட்டால், போய் டிரைவர் சீட் பக்கத்தில் உட்கார பார்ப்பேன். இங்கு அப்படி எதுவும் ட்ரை செய்யமுடியாது.
முன்பு ஊருக்கு செல்லும்போது, பஸ்ஸில் அனைத்து சீட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டால், டிரைவர் சீட்டுக்கு பின் இருக்கும் கேபினில் உட்கார்ந்து செல்லுவேன். ப்ளைட்டிலும் இப்படி விட்டால் நன்றாக இருக்கும்!
பூனேக்கு முதன்முதலாக செல்வதால், முடிந்தளவுக்கு நிறைய இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டேன். அலுவலக வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு, இருதினங்களும் சாயங்காலத்தில் இருந்து சுற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் நடந்தது வேறு.
நான் பூனேயில் இறங்கியதில் இருந்து மழை. மழை. மழை. இதை மட்டும் தான் பார்த்தேன். ஈரம் படத்தில் வந்த சென்னையை போல இருந்தது. ஈரமாக. சனிக்கிழமை சீக்கிரம் வேலை முடிந்தது. வெளியே கிளம்பினால் மழை. ஒரு குடை இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. வாங்கலாம் என்றால் பக்கத்தில் கடை எதுவுமில்லை.
நான் பூனேயில் தங்கியிருந்த இடம், நகரின் மையத்தின் இருந்து நெடும்தொலைவில் இருந்தது. பெங்களூரில் தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து சாப்ட்வேர் நிறுவனங்கள். இரண்டு வருடங்கள் ப்ராஜக்ட் மேனேஜராக இருந்துவிட்டால், கிளையண்டை கிளப்பிக்கொண்டு, வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டைப்பிடித்து தனியாக கம்பெனி தொடங்கிவிடுவார்கள். அதனால், எல்லா ஏரியாவிலும் சாப்ட்வேர் நிறுவனங்கள் இருக்கும். பூனேயில் அப்படியில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களை ஊரை விட்டு தள்ளி வைத்துவிட்டார்கள்.
பெங்களூரில் சிவப்பு மண் என்றால், பூனேயில் கருப்பு மண். ஜியாகிரபியில் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். அப்ப மனதில் நிற்காதது, இனி நிற்கும்.
புது ஊர். மெல்லிய தூறல்கள். தயார்நிலை ஏற்பாடுகள். தொந்திரவில்லாத, சுதந்திர தனிமை என மகிழ்ச்சியோடு இருந்தாலும், தொடர் தூறல் எங்கும் செல்ல விடாதது வருத்தமே. ஆரம்பத்தில் ஜில்ஜிலுவென இருந்த மழை, பிறகு நசநசவென எனக்கு தெரிந்தது.
தெரியாத பாஷை. நண்பர்கள் இல்லாத ஊர் என்றாலும் கேட்டு கேட்டு தெரிந்து சுற்றிப்பார்க்க போய்விடலாம் என்று தான் நினைத்திருந்தேன். பெங்களூரில் போனது போல் போகலாம் என்பது என் நினைப்பு. அது எவ்வளவு தவறு என்பது அங்கு போனப்பிறகு தான் தெரிந்தது. கன்னடத்திலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ பேசும்போது, நமக்கு கொஞ்சமாவது புரியும். அதேப்போல், நாம் தமிழில் பேசினாலும் அவர்களுக்கு புரியும். இங்கோ பேசுவது மராத்தியா, ஹிந்தியா என்பதே எனக்கு புரியாத நிலை.
நான் தங்கியிருந்த இடத்தின் பெயர் - wakad. இதை வாகட், வகாட், வாகாட், வகத், வாகத், வகாத் இப்படி நான் எப்படி உச்சரித்தாலும் அவர்களுக்கு புரியவில்லை. ஹோட்டல் பெயர் சொன்னதால் தப்பித்தேன். இந்த நிலையில் ஊருக்குள் சென்றுவிட்டு, தங்கியிருக்கும் இடத்தை சொல்ல தெரியாமல், திரும்ப முடியாமல் போய்விட கூடாதே என்று ஒரு தயக்கம் இருந்தது. இதற்கு மேல் மழை வேறு.
மழை சிறிது விட்டவுடன், ஒரு ஆட்டோவில் கடைகள் இருக்கும் பகுதிக்கு சென்று ஒரு குடை வாங்கினேன். உடனே மழை பெய்தது. ஹய்யா! கொஞ்சம் வாக்கிங் போனேன். சமோசாவுக்கு பக்கத்தில் இருந்த, ’ஓமப்பொடியில் உருட்டிய ஒரு ப்ரவுன் கலர் பலகாரம்’ ஒரு பார்வையை கவர்ந்தது. வாங்கி சாப்பிட்டு பார்த்தேன். உள்ளே மாவு போல இருந்தது. அப்புறம், பாசந்தி போல ஒரு ஐட்டம் சாப்பிட்டேன்.
நம்மூரில் சாயங்காலத்திற்கு பிறகுதான், பேல் பூரி, பாவ் பாஜி கடைகள் உதயமாகும். இங்கு காலையிலேயே சிற்றுண்டியாக, இவைகளை சாப்பிடுகிறார்கள். சாம்பார் வடை கிடைத்தது. vada இங்கு wada. அப்புறம் மிச்சரில் சாம்பார் போன்ற ஒரு திரவத்தை ஊற்றி சாப்பிட்டார்கள்.
---
ஒரு ஜார்கண்ட் பெண் கேட்டாள்.
“தமிழ்நாட்டுல நிறைய சரவணன்கள் இருப்பாங்க தானே?”
“ஆமாம்”
“அப்படின்னா என்ன?”
“சாமி பேரு”
“சாமியா? யாரு அவரு?”
“பிள்ளையாரு தெரியும்ல”
“ஆமாம்”
“அவரோட யங்கர் ப்ரதர்”
---
வெளியில் எல்லா இடங்களிலும் சைகையிலையும், ஒரு சொல் ஆங்கிலத்திலும் தகவல் பரிமாற்றம் செய்துக்கொண்டிருந்தேன். ஒரு ரெஸ்டாரெண்டில் ’எக் ப்ரைட் ரைஸ்’ கேட்டேன். “அண்டா ப்ரைட் ரைஸ்?” என வெயிட்டர் கன்பர்ம் பண்ணி கேட்டார். நல்லவேளை, ’முட்டை’யை ஹிந்தியில் ’அண்டா’ என்று சொல்லுவார்கள் என தெரிந்திருந்ததால், “ஒரு ப்ளேட் போதும்” என்று நான் சொல்லவில்லை.
பெங்களூருக்கு திரும்பி வரும் போது, ஜன்னல் சீட் கிடைத்தது. உள்ளூக்குள் சென்று பார்க்க முடியாத பூனேயை, பறவை பார்வையில் பார்க்க முடிந்தது. ஊருக்குள் ஏதோ ஒரு ஆறு ஓடுகிறது. மேலிருந்து ஆற்றையும், அதை கடக்கும் பாலங்களையும், அதில் செல்லும் வாகனங்களையும் காண நன்றாக இருநதது.
அடுத்த முறை, இதுபோல் செல்லும்போது ஒருநாள் எக்ஸ்ட்ரா இருந்துவிட்டு வருவதுபோல் திட்டமிட வேண்டும்.
திங்கள்கிழமை காலை கிளம்பி பெங்களூர் திரும்பினேன். பூனேயில் இருந்து பெங்களூர் வர ஒரு மணி நேரமும், ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு வர இரண்டு மணி நேரமும் ஆனது.
.
16 comments:
Wav... Super Place...
நல்ல பதிவு... உங்களின் எழுத்து நடை நேரில் சென்று பார்த்தது போல் ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது!
எனக்கும் ஊர் ஊராக சுற்ற பிடிக்கும்... (உண்மையில் அது ஒரு பரவசமான அனுபவம்)ஆனால் அலுவலக வேலையை செல்லும் போது அதற்க்கான நேரம் அமைவதில்லை...
வாழ்த்துக்கள் நண்பா...
சுவையான பதிவு.
வாழ்த்துக்கள்...
koduthu vachavunga sir neenga evlo jaliya suthitu vanthurkenga . mm
s.
tamil-le 3/4 peruku saravanan than peru.
but good and likely name.
//பூனேயில் இருந்து பெங்களூர் வர ஒரு மணி நேரமும், ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு வர இரண்டு மணி நேரமும் ஆனது//
:-)
வாழ்த்துக்கள்
கலக்கல் படங்கள் நண்பா
/***
திங்கள்கிழமை காலை கிளம்பி பெங்களூர் திரும்பினேன். பூனேயில் இருந்து பெங்களூர் வர ஒரு மணி நேரமும், ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு வர இரண்டு மணி நேரமும் ஆனது.
***/
நச்.
இதில் சுஜாதாவின் டச் தெரிகிறது.
நன்றி
- விமல்
ஆமாம் Sangkavi
நன்றி கார்த்தீஸ்வரன்
நன்றி ஸ்ரீனிவாசன்
நன்றி சக்திப்ரியா
நன்றி மோகன்
நன்றி ரமேஷ்
நன்றி சசிகுமார்
நன்றி விமல்
Post a Comment