தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற கதைகளை சிவ் கெரோ, எம்.எஸ். உதயமூர்த்தியோ, சோம. வள்ளியப்பனோ சொன்னால்தான் கேட்பீர்களோ? வைகை புயல் சொல்றதையும் கேளுங்க.
---
ஷூட்டிங் முடிச்சுட்டு் பொள்ளாச்சியிலிருந்து கார்ல மதுரைக்குப் போயிக்கிருக்கேன். நடுச்சாமம். எங்கிட்டோ வழியில ஒரு ஊரு. ஒரே ஒரு பொட்டிகடையில் மினுக்மினுக்குண்டு அரிக்கேன் வெளக்கு ஆடிட்டிருக்கு. குடிக்கத் தண்ணி கேக்கலாம்னு எறங்குறேன்.
அந்த கடக்காரரு என்னயப் பாத்ததும் ‘யெய்யா வடிவேலு’ன்னு விசுக்குன்னு எந்திருச்சு ஓடி வர்றாரு. ‘ஏடி தங்கம்’னு உள்ள ஓடிப்போயி தூங்கிக்கிருக்க அவரு புள்ளைய எழுப்புறாரு. ‘வடிவேலு மாமா வந்துருக்கார்டி’னு அந்த ரெட்ட சட குட்டிப் பொண்ண எழுப்பிக் கூட்டி வர்றாரு. வீடே முழிச்சிருச்சு. தூக்கத்தையெல்லாம் மறந்து, அந்தப் புள்ள என்னையக் கண்டுட்டு ரோசாப்பூ கெணக்கா ‘கேகே’ன்னு சிரிக்குது. ‘எங்கடி, மாமா மாதிரி நடிச்சுக் காட்டு’ன்னு அவுக அம்மா கேக்கவும், ‘வந்துட்டான்யா வந்துட்டான்யா’னு கையக் கொட்டி நடிச்சுக் காட்டுது. ‘ப்ப்ப்ப்ப்பூம்...’ என்னைய மாதிரியே அழுது காட்டுது.
கடையிலயிருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்ட எடுத்து எங் கையில திணிக்கிறாரு. கார்ல வந்து ஏறி உக்காந்தா தூக்கங் காங்கலைண்ணே. என்னென்னமோ நெனப்புங்க வருது. காரணமே இல்லாம கண்ணுல தண்ணி முட்டுது. கண்ண மூடுனா கிர்ர்ர்ருனு சினிமா கெணக்கா என் வாழ்க்கையே எனக்குள்ள ஓடுது.
கண்ணாடி வெட்டுற தெனக்கூலி நடராஜ பிள்ளையோட மவன் மதுர வேலு. மங்குடிச ஒண்ணுதேன் சொத்து. மக்குப் பய படிச்சது அஞ்சாப்புதேன். கன்னங்கரேல்னு காத்தா கருப்பா ஒரு உருவம். எங்கிட்டுப் போனாலும் ‘அப்பிடி தள்ளி நில்லுப்பா’னு ஒடனே ஓரங்கட்டி வைக்கிறதுக்கான அத்தனைத் தகுதிகளோடயும் அலைஞ்சுக்கிருந்தவன்.
பசிச்சா பாதி வயித்துக்குச் சாப்பாடு, மீதி வயித்துக்கு பீடிப் பொகனு வாழ்ந்த பய. அப்பாரு தொழில அப்பிடியே பிக்கப் பண்ணி, காலேஜு போக வேண்டிய வயசுல கண்ணாடி வெட்டப் போனவன். ஆனா, அறியாத புரியாத வயசுலேயே வெள்ள வேட்டியத் தெரையாக் கட்டி, பிலிம் சுருள்ல நெழலு காட்டி படம் ஓட்டுன விஞ்ஞானிக்குப் பொறந்த விஞ்ஞானியும் அவந்தேன்.
தங்கம், சிந்தாமணி, செண்ட்ரலு, தங்க ரீகல்னு மதுர சினிமாக் கொட்டாயிங்கதான் அவம் பள்ளிக்கொடம். வாத்தியார்னா அது எம்.ஜி.ஆருதேன். அவரு பாட்டுகளக் கேட்டு கனா கண்டு, காதலிச்சு, நரம்ப முறுக்கி கோவப்பட்டு, அழுது சிரிச்சு வளந்த பய. டப்பாக்கட்டு கட்டிட்டு கவுண்டர்ல அடிச்சுப் பிடிச்சு தொம்சம் பண்ணி டிக்கெட்டு வாங்குறதையே பெரிய சாதனையா நெனச்சுக் கொண்டாடுனவன். சினிமாவா பாத்துத் திரியத் திரிய... புரஜெட்டரு மெசினுலயிருந்து குபீர்னு பொகையா வெளிச்சங் கெளம்புற மாதிரி, அவன் மனசுலயும் நடிப்பாச வந்துருச்சு.
எப்பமும் பாட்டுப் பாட்டிட்டு டான்ஸப் போட்டுட்டு கனாலயே சுத்திக்கிருந்தப்ப, ‘இந்த நடராஜன் புள்ள வெளங்காது. உருப்படாம போறதுக்கான அம்புட்டையும் பண்ணுது’ன்னு தெறிச்சவய்ங்கதேன் அதிகம். இன்னிக்கு அவுக அம்புட்டு வீடுகள்லயும் எங் காமெடிய டி.வி-ல பாத்து ரசிக்கிறாக.
பொசுக்குனு அப்பா போயிச் சேந்த பொறவு... அம்மா, தம்பி - தங்கச்சிகளோட தனியா நிக்கேன். ஒரு நா பே மழண்ணே, எங்க வீடு மங்குடிச, சுத்துக்கட்டு சொவரு அப்பிடியே ஒடஞ்சு விழுந்திருச்சு. அம்புட்டு பேரும் நடுத்தெருவுல நிக்கிறோம். எங்கிட்டுப் போறதுன்னு தெரியல. மழையோட மழையா எங்காத்தா சந்தடியில்லாம அழறது எங்காதுக்கு மட்டுங் கேக்குது. அக்கம் பக்கம் போயி தங்க வெக்கப்பட்டுக்கிட்டு, ஒரு நா முச்சூடும் ரோட்ல கெடக்குறோம். மக்கா நா வேற ஏரியால வீடு பாத்துப் புடிச்சு அவுகள கொண்டுபோயிவிட்டேன். அந்த மழதேன் எனக்குள்ள திகீர்னு ஒரு தீய பத்தவெச்சுச்சுண்ணே!
அப்பத்தேன் மனசுல வைராக்கியம் வந்துச்சு! பொசுக்குனு ஒரு மழையில தெருவுக்கு வந்துச்சே எங்க குடும்பம்! எங்க ஆத்தாவுக்குப் பெரிய பங்களா கட்டி உக்காரவெச்சு அழகுபாக்கணும். ‘சினிமாதேன் ஒனக்குன்னா எங்கிட்டாவது ஓடு, சுத்திச்சுத்தி தேடு, உங்காம கொள்ளாம அல, பேத்தனமா ஒழ!’னு வைராக்கியம் வந்துபோச்சு. அப்பறந்தேன் மதுரையில ராஜ்கிரண்ணணப் பாத்ததும் அவரு காட்டுன வழியப் புடிச்சு சினிமாவுக்கு வந்ததும்..! உழைப்பும் தொழில் மேல அக்கறையும் இருந்தா எந்தப் பயலும் முன்னுக்கு வந்துரலாம்ணே, என் வாழ்க்க அதுக்கு இன்னொரு உதாரணம்ணே!
காசு பணம் வேணாம், அழகு வேணாம். ஆன்னு வாயப் பொளக்கிற தெறமயும் வேணாம். எது இருக்கோ, இல்லையோ... உள்ளுக்குள்ள ஒரு வெறி வேணும்ணே. ரயிலு எஞ்சினுல அள்ளிப்போட்ட கரி கெணக்கா கங்கா உள்ள ஒரு நெருப்பு எரிஞ்சுக்கே இருக்கணும். அம்புட்டுதேன்!
எண்ணே, என்னைய மாதிரி வேலுப்பயலே ஜெயிக்கிற ஒலகம்ணே இது, விட்றாத, வெரட்டிப் புடிச்சிரு, ஆமா, சொல்லிப்புட்டேன்!
வடி வடி வேலு... வெடிவேலு!
விகடன் பிரசுரம்.
---
ஒரு கொசுறு வடிவேலு வீடியோ. ’எல்லாம் அவன் செயல்’ படத்திலிருந்து.
காமெடி காட்சி தானே என்று நினைக்காமல், ஒளிப்பதிவாளர் பண்ணியிருக்கும் கேமரா சேட்டைகளை பாருங்க.
.
7 comments:
நல்ல பதிவு.
வீடீயோ காமெடியில் சேட்டை பண்ணியிருப்பது கேமராமேன் அல்ல, எடிட்டர்!
விகடனில் தொடராக வந்த போது ரசிக்கப் பட்ட ஒன்று. வடிவேலுவின் அனுபவங்கள் அவர்களின் ரைட்டப்பில் (ரா கண்ணன் பாணி) மெருகு கூடி ரசிக்க வைத்தது.
Have been reading your blog for sometime. This is my first comment.
What you say is true. We run to hear those who come from outside, without valuing what is within our own crowd.
Keep it up
நல்ல பதிவு நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்
who is vadivelu?
Excellent one. Apt for the time and Thanks for your efforts.
Post a Comment