சில நாட்களுக்கு முன்பு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது தாக்குதல் நடந்ததாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தன. அவரும் பயங்கர பில்ட்-அப்புடன் ‘என் மீது தாக்குதல் நடத்தியவனை மன்னித்து விடுகிறேன்’ என்று பெரிய மனசு பண்ணி சொன்னார். இதற்குள், பிஜேபி தலைவர்கள் குருவுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தும்படி, தங்கள் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வருக்கு சொல்ல, அவரும் பாதுகாப்பை அதிகப்படுத்தினார். அதற்கு பிறகு, சில நாட்களுக்கு பிறகு தான் உண்மை தெரிந்தது. இது ஏதும் தீவிரவாத தாக்குதல் அல்ல. தூரத்தில் ஒருவர் தொந்தரவு கொடுத்த நாயை சுட்ட குண்டு, அங்கு வந்து விழுந்துள்ளது என்று. இந்த குண்டுக்கு, ஆசிரமமும், ஊடகங்களும், கட்சிகளும் கொடுத்த பில்ட்-அப் ஓவரோ ஒவர்.
இப்ப அதுக்கும் மேல ஓவரா, இன்னொரு செய்தி. அது எப்படி தெரு நாயை சுடலாம்? என்று மிருக பாதுகாப்பு அமைப்பு ஒன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. அப்படி கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லையாம். சரி, தெருவில் நாய் துரத்தினால், கல்லெடுத்து எறியலாமா? அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? இல்லை, கடிபட்டு ஆஸ்பத்திரி சென்று ஊசி போடுவது தான் சரியான தீர்வா?
---
அகமதாபாத்தில் இருக்கும் அந்த குடும்ப தலைவிக்கு அந்த பிரச்சினை ரொம்ப பெரிதாக தெரிந்தது. முந்திய தினம், தன் கணவனுடன் போட்ட சண்டையால், தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவனுக்கு எட்டு வயது. இளையவனுக்கு ஐந்து வயது. ஐம்பது தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்க ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் சுய நினைவை இழக்க, வீட்டில் இருந்த பிள்ளைகளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. கேட்பது எதற்கும் அம்மா பதில் சொல்லாமல் இருக்க, சிறியவன் அழ ஆரம்பித்தான். பெரியவனுக்கு முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்பொழுதோ, யாரோ சொல்லி கொடுத்த 108 என்ற போன் நம்பர் நினைவுக்கு வர, அந்த நம்பருக்கு போன் செய்து விஷயத்தை ஒரளவுக்கு சொல்லி புரியவைத்தான். அவர்களும் இதை அலட்சியப்படுத்தாமல், வீடு இருக்கும் இடத்தை, அவன் சொன்ன அடையாளத்தை வைத்து கண்டுபிடித்து, அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு வர, சிறுவனின் அன்னை காப்பாற்றப்பட்டார்.
பெற்றோர்களே, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 108. மறக்காமல், உங்கள் குழந்தைக்க்கு சொல்லிக்கொடுங்கள்.
---
சமீபகாலங்களில் எல்லா விளம்பரங்களிலும் விற்கப்படும் பொருளைப் பற்றியோ, சேவையைப் பற்றியோ சொல்லாமல், பெண்ணையோ, காதலையோ, காமத்தையோ பயன்படுத்தி, அதை எப்படியாவது விற்கப்படும் பொருளுடன் இணைத்து விளம்பரம் செய்கிறார்கள். ஐஸ்க்ரிம் ஆகட்டும், குளிர்பானம் ஆகட்டும். அது ரொமான்ஸை கூட்டுவதாக விளம்பரம். பாடி ஸ்ப்ரே ஆகட்டும், ஷேவிங் க்ரிம் ஆகட்டும். அது பெண்களை ஈர்ப்பதாக விளம்பரம். இது போல், சென்ற வாரம் நான் டைம்ஸ் அசெண்ட்டில் (வேலைவாய்ப்பு இணைப்பு) கண்ட விளம்பரம் - ஒரு சர்வதேச வங்கி தனது ஐடி துறைக்காக வெளியிட்டிருந்த வேலைவாய்ப்பு விளம்பரம்.
நீங்களே பாருங்கள். எவனாவது விளம்பரத்தை தப்பா புரிஞ்சி, வேலையில சேர்ந்து, அங்க போயி ‘எங்க என் ஜோடி?’ன்னு கேட்டுடக்கூடாது. சும்மாவே, ஐடி’ன்னா ஓவர் ஆட்டம்’ங்கிறாங்க. இதுல இது வேற!
---
நம்மில் பலர், டொரண்ட்டில் (Torrent) படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறோம். தியேட்டருக்கு செல்லும் வாய்ப்பில்லாதவர்கள், தியேட்டரில் இன்னும் வராத, வர வாய்ப்பில்லாத, வந்து போன படங்களை பார்க்க விரும்புபவர்கள், இணையத்தில் படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறார்கள். இப்படி டவுன்லோட் செய்தவர்கள் மீது, ‘ஹர்ட் லாக்கர்’ பட தயாரிப்பாளர்கள் சமீபத்தில் நீதிமன்றத்தில் கேஸ் போட்டுள்ளார்கள். படத்தை டவுன்லோட் செய்தவர்களின் ஐபி அட்ரஸை நீதிமன்றத்தில் சமர்பித்து, நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறார்கள். ஐபி அட்ரஸ் எதற்கு? இணையத்தில் பலர் தரவிறக்கி செய்து பார்த்ததாகவே சொல்லி, விமர்சனம் என்ற பெயரில் சுயவாக்குமூலமே கொடுத்திருக்கிறார்களே!
ஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், இவர்கள் இனி விமர்சனம் எழுதுகிறேன் என்று சுயவாக்குமூலம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
---
பெங்களூரில் திருப்பதி தேவஸ்தானம், ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். திருப்பதியில் செய்யும் பூஜைகள் போலவே, இங்கும் செய்கிறார்கள். அதெல்லாம் முக்கியமா? அதே போல், லட்டு கொடுப்பார்களா? என்பது தான் என் சந்தேகமாக இருந்தது. கொடுப்பார்களாம். சனிக்கிழமைகளில் மட்டும். ஒன்று ரூபாய் 25.
இன்னும் இந்த கோவில் போனதில்லை. ஒரு சனிக்கிழமை போக வேண்டும்.
---
எப்பவுமே நம்மூர் ஆஸ்பத்திரிகளைப் பற்றி மோசமாகத்தானே கேள்விப்படுகிறோம். இதோ ஒரு நல்ல செய்தி.
ஏதோ வேலை விஷயமாக பெங்களூர் வந்த ஒரு அமெரிக்கருக்கு திடீரென இரவில் நெஞ்சு வலிக்க, அவரை ஜெயதேவா ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறார்கள். பணியிலிருந்த டாக்டர் பரிசோதித்து, சீரியஸாக ஒன்றுமில்லை என்று சொல்லி அவரை உடனே திருப்பி அனுப்பியிருக்கிறார். பில்லை பார்த்த அமெரிக்கருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். 92 ரூபாய்க்கு பில் போட்டிருக்கிறார்கள். உண்மையில் இது இந்தியர்களுக்கே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கும். இருந்தாலும் விஷயம் தெரியாமல், அந்த ஆள் ஊருக்கு சென்று ஒபாமாவுக்கு லெட்டர் போட்டிருக்கிறார். “ஜயா, இந்த மாதிரி இந்தியாவுல நெஞ்சு வலிக்கு ஒரு ஆஸ்பத்திரி போயிருந்தேன். ரெண்டே ரெண்டு டாலர் தான் வாங்குனாங்க. நீங்களும் இருக்கீங்களே!”ன்னு. அதிபரும் அதற்கு பதிலளித்திருக்கிறார். அமெரிக்க மக்களின் மருத்துவ சேவைக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று. கூடவே, பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்.
ஏதோ அவர் நேரம் இந்த ஆஸ்பத்திரி போனாரு. ‘புகழ்பெற்ற’ மற்ற மருத்துவமனைகளுக்கு சென்றிருந்தால் அவ்வளவுதான். பீஸ் மட்டுமில்ல, ப்யூஸும் புடுங்கிருப்பாங்க.
.
11 comments:
இன்றைய ஐட்டம்ஸ் எல்லாமே சூப்பர்.
சென்னை திருப்பதி தேவஸ்தான ஆஃபீஸில் இருக்கும் கோவிலில் ( இப்போ இங்கே அசல் கோவில் போல அஞ்சுகால பூஜை நடக்குது!) திருப்பதி லட்டு மாசத்தின் முதல் சனிக்கிழமைகளில் மட்டும் விற்க ஆரம்பிச்சு சமீபகாலமா எல்லா சனிக்கிழமைகளிலும் விக்கறாங்க.
திருப்பதியில் இருந்தே வருதாம்.
ஆமாம்..... நாயைச் சுடணுமுன்னு துப்பாக்கி லைசன்ஸ் வாங்கலாமா??
ஐயா எனக்கு ஒரு வேலை கிடைக்குமா அந்த அட்வர்டைஸ்மெண்ட் கொடுத்திருக்கிற கம்பெனியில ? :)
ஆர்வமுடன்....
ஆயில்யன்
அனைத்து தகவல்களும் அருமை. நன்றி சரவணா.
அருமையான தகவல்கள் சரவணன்.
டோரண்ட் டவுன்லோடுக்கு எல்லா ப்ரொட்யூஸரும் கேஸ் போட ஆரம்பிச்சுட்டா நம்ம நிலைமை?
நன்றி துளசிம்மா... சென்னையில் இருப்பது நீங்க சொல்லித்தான் தெரியும்.
ஆயில்யன்,
அப்ளை பண்ணிப்பாருங்க. டான்ஸ் ஆட தெரியுமா?
நன்றி ரமேஷ்
அவ்ளோத்தான் சரவணக்குமார் :-)
வெங்கடநாராயணா ரோடு, தி.நகர்லே இருக்குதுங்க.
இதுக்குக் கொஞ்சம் தள்ளித்தான் அந்த புகழ்பெற்ற நடேசன் பார்க் இருக்கு.
என்ன புகழ்? பதிவர் சந்திப்புப் புகழ்:-)))))
சரக்கு நல்லாயிருக்குங்க!!! சும்மா குப்புனு ஏறுது!
நன்றி நரேஷ்
Post a Comment