கணேஷ் என்றொரு நண்பன். அவனிடம் இருக்கும் பெரிய சொத்தே, அவன் மொபைல் தான். மொபைல் இல்லாவிட்டால், எங்கே இதயம் நின்றுவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு மொபைலுடன் அவ்வளவு நெருக்கம். எல்லா மொபைல் மேலும் தீரா ஆசையிருந்தாலும், நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட ஒரு மொபைலை சமீபத்தில் வாங்கியிருக்கிறான்.
“அப்படி என்ன இந்த மொபைல் மேல உனக்கு ஆசை? இதுல என்ன ஸ்பெஷல்?”
“இதுல எல்லாம் இருக்கும்.”
“ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்?”
இல்லையாம். முறைக்கிறான். சரி, விடுங்க.
ஒருநாள் அந்த மொபைலில் ப்ரவுசரை ஓபன் செய்து, நான் ‘குமரன் குடிலை’க் காட்ட, அவன் இப்பொழுது அடிக்கடி திறந்து பார்த்துக்கொள்கிறான். எனக்கு மிஸ்ட் கால் கொடுப்பவன், இப்பொழுது காசு செலவழித்து இந்த தளத்தைப் பார்க்கிறான். தெரிந்தவர்கள் அதிகம் பார்க்க, பார்க்க, எனது எழுத்தில் கண்ட்ரோல் கூடிக்கொண்டே போகிறது.
நான் எழுதியவை சிலவற்றை படித்துவிட்டு கேட்டான்.
“நான் கூட எழுதலாமா?”
ம்ஹும். நீ வேறயா?!!!
சரி. இப்படி வாசிப்பவர்களை எல்லாம் எழுத தூண்டும் எழுத்தா என்னுடையது? (புரியுது... இருந்தாலும் நான் எவ்வளவு பாஸிட்டிவ்’வா எடுத்திருக்கேன், பாருங்க!)
பரவாயில்லை.
ஏற்கனவே, மொபைலில் தமிழில் டைப் செய்து பழகியிருக்கிறான். எண்களுக்கான நபர்களின் பெயர்களைக் கூட தமிழில் தான் அடித்து சேகரித்து வைத்திருக்கிறான். அவ்வளவு தமிழார்வமா? ஏனெனில்,... இப்ப, எனக்கு ‘தேவதையை கண்டேனில்’ இருந்து ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது.
படத்தில் நாயகி ஸ்ரீதேவி கல்லூரிக்கு வராமல் லீவு எடுத்திருப்பார். அவருடைய தோழிகள், தனுஷிடம் வந்து ஒரு லெட்டரைக் கொடுப்பார்கள். லெட்டரை பிரித்து பார்த்த தனுஷ்,திருப்பி அதை தோழிகளிடமே கொடுத்து வாசிக்க சொல்வார்.
“ஏன்?”
“ஏன்னா, அது தமிழ்’ல எழுதியிருக்கு.”
“உங்களுக்கு தமிழ் தெரியாதா?”
“கொஞ்சும்... கொஞ்சும்... தெரியும்.”
“அப்ப, இங்கிலிஷ்?”
“சுத்தம்.” (வசனம் - பூபதி பாண்டியன்)
அப்படிப்பட்ட ’சுத்தமான’ நண்பன் அவன். அவனும் என்னை போல் தமிழை வளர்த்தால் நல்லது தான்!
வா கணேஷ்... வருகைக்கு ரொம்ப நன்றி!!! :-)
.
3 comments:
வரவேற்கிறேன் கணேஷ்
nice nanpa
என்ன மாடல் மொபைல் வாங்கியிருக்காருன்னு சொல்லலியே!.....கணேஷுக்கு நல்வரவு!...
Post a Comment