1983இல் முதல் படத்தை எடுத்த ஒரு இயக்குனர், இன்னமும் மவுசோடு இருக்கிறார் என்றால் அது மணிரத்னமாகத் தான் இருக்கும். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும், எதை கொடுக்க வேண்டும் என்று கூட்டம் யோசித்துக்கொண்டிருக்கும் போது, தனது பிடித்ததை மட்டும் தொடர்ந்து எடுத்து, கொடுத்துக் கொண்டிருப்பவர் மணிரத்னம். போன படத்தின் ரிசல்ட் என்னவாக இருந்தாலும், அடுத்த படத்தின் மேல் எதிர்ப்பார்ப்பு எப்போதுமே எகிறி அடிக்கத்தான் செய்கிறது.
என்ன காரணமாக இருக்கும்?
ஆரம்பத்தில் இருந்து கொடுத்த தரமான படைப்புகளால் உருவான ப்ராண்ட் நேமை சரிந்துவிடாமல் தக்க வைத்துக்கொண்டிருப்பது. ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என வியாபார வழியில் இருப்பவர்களை விட, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என படைப்பின் உருவாக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த ப்ராண்ட் நேமை செல்வாக்காக வைத்திருப்பது. இதனால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும், இவர் கூப்பிட்டால் வந்து தலையைக் காட்டிவிடுவார்கள். சில நேரங்களில் படத்தின் வியாபாரத்திற்கு இவர்கள் உதவி விடுவார்கள்.
பட்ஜெட் அதிகமாக இல்லாவிட்டாலும், பிரமாண்ட படங்கள் விற்கும் விலைக்கு விற்பனையாகும் திறன் கொண்டவை இவர் படங்கள். நடிகர்களுக்கு பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே சம்பளம் கொடுப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதிகம் பேசாதவர். ஆனால், படங்களை பார்ப்பவர்கள் அதிகம் பேசும்படி எடுப்பவர். சர்ச்சைக்குள்ளான விஷயங்களை படமாக்குபவர். வரதராஜ முதலியார், மகாபாரத கர்ணன், காஷ்மீர் தீவிரவாதம், பம்பாய் குண்டுவெடிப்பு, கலைஞர்-எம்ஜிஆர் நட்பு, இலங்கை போர், அம்பானி என படத்தை பிரபலமாக்கும் காரணிகளைக் கொண்டு களம் அமைப்பவர்.
எப்போதுமே நடைமுறையில் இருக்கும் சராசரி படமாக்கம் இவரிடம் இருக்காது. பார்ப்பவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ, வேறொரு நிலையில் இருக்கும். தயாரிப்புக்காக யாரையும் சார்ந்து இல்லாமல் இருப்பதால், இவருக்கு இது சாத்தியமாகிறது. கதையை ரொம்ப ரகசியமாக வைத்திருக்கும் இயக்குனர். இதனாலேயே, மற்ற இயக்குனர்களின் படக்கதைகளை விட, இவர் படக்கதைகள் சீக்கிரம் வெளியே வந்துவிடும்! சினிமா ரசனையில் மேல்மட்டம் என்றால், இவருடைய படங்கள் எனக்கு பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்திருக்கிறார். (அதற்கும் மேல்மட்டம் போக வேண்டுமென்றால், இவரையே பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும்!)
இவருடைய பலவீனங்கள் என்றால், ஏ மற்றும் கொஞ்சம் பி ஆடியன்ஸ்களை மட்டுமே இவருடைய படங்கள் கவரும் (புரியும்). அதனாலேயே, இவர் உள்ளூர் மார்கெட்டுக்காக படம் எடுப்பதில்லை. எப்படி மசாலா இயக்குனர்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறதோ, அதேப்போல் இவருக்கும் ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. ஒரே பாணியில் எடுத்தாலும், அதை இவருடைய ஸ்டைல் என்று சொல்லிவிடுவார்கள். கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருக்கும். பெரும்பாலும், ஒரே மாதிரி பேசுவார்கள். சினிமா காட்சி ஊடகம்; காட்சிகளின் மூலம் எல்லாவற்றையும் உணர வைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் வசனம் குறைவாக இருக்கும். இவருடைய படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகே வருவதால், இவை எதுவும் படத்தை பாதிப்பதில்லை. ஒரே மாதிரி இருக்கிறது என்று புகார் எழுவதில்லை. (விஜய் கவனிக்க)
உயர்தரம் என்று சொல்லும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது. ’அலைபாயுதே’யில் ஒரு காட்சியில், சரியாக கவனிக்கப்படாமல் கீழே வைத்திருக்கும் மைக் ஒன்று காட்சிக்குள் வந்திருக்கும். இதை ஒரு பேட்டியில், சுட்டிக்காட்டியது - சிம்பு. அதனால், நத்திங் இஸ் பெர்ஃபெக்ட்.
---
ராவணன். இப்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் கதை தெரிந்திருக்கும். இருந்தாலும், படத்தை பார்க்கும் ஆர்வம் யாருக்கும் இல்லாமல் இல்லை.
அபிஷேக், ஐஸ்வர்யாவுக்காக ஹிந்தி மார்க்கெட்டும், விக்ரமுக்காக தமிழ் மார்க்கெட்டும், ரஹ்மானுக்காக சர்வதேச மார்க்கெட்டும் (ஹி... ஹி...) காத்திருக்கும் படம். இது எல்லாம் படம் பார்த்து ரசிக்க காத்திருப்பவர்கள் பற்றி சொன்னது. இன்னொரு கூட்டம் இருக்கிறது. படத்தைப் பார்த்து நோண்டி நொங்கெடுக்க.
அவர்களுக்கு தோதாக, இயக்குனரும் ஒரு களத்தை எடுத்திருக்கிறார். ரஹ்மான் பாடல் வெளியீட்டின் போது, ஒரு பாடலை பாடி படத்தின் முடிவை சொல்லிவிட்டார். மணிரத்னம் ஏதும் குதர்க்கமாக யோசித்து படமெடுத்திருக்கிறாரோ இல்லையோ, படத்தை பார்த்து அப்படி கருத்துக்கள் வரும். ஜூன் 18க்கு பிறகு, இணையத்தில் சில பக்கங்கள் நாறப்போகிறது.
---
கருவிகள் தவிர்த்து, பாடல்களின் இசை அமைப்பில் ரஹ்மான் ஏதும் புதிதாக இதில் முயற்சி செய்யவில்லை எனக் கருதுகிறேன். பாடல்கள் பெரும்பாலோருக்கு உடனே பிடித்துவிட்டதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். எனக்கும் தான். முந்தைய படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாடல்களை, படம் வருவதற்கு முன்பு கேட்டதை விட, பிறகு கேட்டது தான் அதிகம். ஆனால், ராவணன் அப்படியில்லாமல், இப்பொழுதே அதிகம் கேட்கும் பாடல்களாகி விட்டது. வெளியேயும் ஊருக்குள், அதிகம் கேட்கப்படுவதை பார்க்கிறேன்.
அனைத்து தரப்பு உசிரையும் போக வைத்திருக்கிறது - கார்த்திக் பாடியிருக்கும் ‘உசிரே போகுதே’ பாடல். வேகமாக நிறைய பேர் மொபைலில் காலர் ட்யூனாகி இருக்கிறது. பாடல் வரிகளை விவாதிக்கும் வழக்கம், நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பிருக்கிறது. மணிரத்னம் - வைரமுத்து - ரஹ்மான் கூட்டணியிலேயே இது அதிகம் நிகழுகிறது. மணிரத்னம் முழு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை வழங்க, ரஹ்மான் இசை நல்ல ரீச் கொடுக்க, வைரமுத்துவின் வரிகள் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கரும் தேக்குமர காடு வெடிக்குதடி!
அடுத்ததாக, என்னை கவர்ந்த பாடல் - ‘காட்டு சிறுக்கி’. பாடல் வரிகள் அனுராதா ஸ்ரீராமின் குரலில் வழிந்தோட, சங்கர் மகாதேவர் எஸ்.பி.பி ஸ்டையில் கணீரென்று பாட, ரஹ்மானின் இசையை நீங்கள் நல்ல சுற்று அமைப்புடன் இருக்கும் ஸ்பீக்கர்களில் கேட்க வேண்டும். திரும்ப, திரும்ப கேட்க தூண்டும்.
ஏர்கிழிச்ச தடத்துவழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு
ஸ்ரேயா கோஷலின் ‘கள்வரே’ பாடல், தமிழ் படம் என்பதற்கு சம்பந்தமில்லாமல் தூய தமிழில் இருக்கிறது!!! இதனால் தான் என்னவோ, டப்பிங் பட பாடல் போல இருக்கிறது. இசையும் அதற்கேற்ப ஹிந்தி ஸ்டைலிலேயே இருக்கிறது. ஆனாலும், ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பாடல்.
வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே...
வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா?...
வைரமுத்து இப்படி அவ்வப்போது சினிமா பாடல்கள் மூலம் தமிழ் இலக்கணம் சொல்லித்தருவார். ஜீன்ஸ் பாட்டு கேட்டுத்தான், சிலருக்கு ‘இரட்டைக் கிளவி’ புரிந்தது.
ரஹ்மான் இசையில், நிறைய பீட்ஸ்களுடன் உடைய பாடல்கள் கொண்ட ஆல்பம் வந்து நாளாகிவிட்டது. இதில் ‘கள்வரே’ பாடலைத் தவிர, மற்ற அனைத்துமே அதிரடி பாடல்கள். ‘கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு’, ‘கோடு போட்டா’, ‘வீரா’ என அனைத்துமே ‘காட்டுத்தனமான’ பாடல்கள். அதாவது, காடு என்ற உணர்வை எங்காவது தெளிக்கும் பாடல்கள்.
வைரமுத்து ஸ்பெஷலாக தந்த பாடல் வரிகளுக்கு, ரஹ்மானும் ஸ்பெஷல் இசையை கொடுத்திருக்கிறார். மணிரத்னம் அதை எப்படி திரையில் சிறப்பாக தருகிறார் என்று இன்னமும் இரு வாரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். வசனகர்த்தாவை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.
.
13 comments:
நீங்க நல்லவரா கெட்டவரா?
:-) ரொம்ப டீட்டெயில் அனாலிஸிஸ். அருமையோ அருமை! ரசிச்சு படிச்சேன். முக்கியமா பாடல்கள் ரிவ்யூ எனக்கு ரொம்ப பிடிச்சது. நன்றி!
நல்ல அலசல். உசுரே போகுதேவும், காட்டுச் சிறுக்கியும் படம் எப்படா வரும் என்ற ஆவலை எழுப்பியுள்ளது. பகிர்வுக்கு நன்றி.
ஏன் ரமேஷ்?
நன்றி அநன்யா மஹாதேவன்
நன்றி சரவணக்குமார்
நல்ல விமர்சனம்!!!!!
//
எப்படி மசாலா இயக்குனர்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறதோ, அதேப்போல் இவருக்கும் ஒருடெம் ப்ளேட் இருக்கிறது//
//இவருடைய படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகே வருவதால், இவை எதுவும் படத்தை பாதிப்பதில்லை. ஒரே மாதிரி இருக்கிறது என்று புகார் எழுவதில்லை//
உங்களால் பதிவு அருமை நான் மேலே கோடிட்ட வார்த்தை களை திரு மணி ரத்னம் திரை படங்களில் பர்த்திருகிரனே ...மௌன ராகம் , அலைபய்தே , ஆயுத எழுத்து இந்த முன்று திரை திரை படங்களிலும் கத நாயகன் ,நாயகி பஸ் அமர்ந்து பேசுவது ( மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும் ) இது போன்ற சில டெம் ப்ளேட் கல்யாணம் என்பது நம் இருவரின் சம்மதம் மட்டுமே பெற்றோர்களிடம் ஒரு மரியாதை சொல்லி விட வேண்டும் (சம் மதம் தேவை இல்லை ) மௌன ராகம் ,அலைபாயதே ...அனாலும் நான் ரசிப்பவை ....சட்டம் என்பது மக்கள் நலம் காக்கவே தேவை பட்டாள் நாம் மீறலாம் (குரு,தளபதி,நாயகன் ) என்று சொல்பவர் ஒரு விஷயத்தை எத்தனை முறை சொன்னாலும் அதை ரசிக்கும் படியும் சொல்பவர் ......
இந்தப் படத்தின் வசனகர்த்தா யார்?
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
உடை களைவீரோ
உடல் அணிவீரோ
கள்வரேவில் இதுவும் அழகு, ஸ்ரேயா கோஷல் குரல் போல.
not only a flaw in Alaipayuthey...even in Bombay...during the riot scene, SPIC board will be visible (it was a set in campa cola campus):-)
the flaws were there even earlier :-))
நன்றி ரோமியோ
யோசிப்பவரே,
வசனம் - சுஹாசினி
Post a Comment