Monday, May 17, 2010

தாராசுரம்

தாராசுரம். ரொம்ப பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல் அளவோடு அழகாக இருக்கும் கோவில். ஸ்பெஷல் கோவிலுக்கு, நண்பர் மகேந்திரனின் ஸ்பெஷல் வர்ணனைகளுடன் புகைப்படங்கள்.

----

அது யாரையுமே ஒரு நிமிடம் அயர வைக்குமொரு சோழனின் சுவடு... தாராசுரம்... தினம் பல வெளிநாட்டவர் வியப்புடன் வாய் திறந்து நோக்கியும், வழக்கம் போல் நம்மவர் சூடம் கொளுத்தி எண்ணெய் துடைக்க இடம் தேடுமொரு அற்புத தலம்.



கும்பகோணத்திலிருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நகரத்தின் ஜன சந்தடியிலிருந்து ஒதுங்கி நிற்கும் ஊர் தாராசுரம். இரண்டாம் ராஜராஜனால் (கி.பி 1146 -1173) பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில். தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரத்தை விட அளவில் சிறிய ஆனால், அவற்றின் நுணுக்கத்துக்கு சற்றும் குறை சொல்ல முடியாத கோயில் தற்போது UNESCOவின் உபயத்தில் மிளிர்கிறது.



வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று இன்றளவும் கருதப்படும் இந்த தலம் வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டு, இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் மூலத்தலத்தின் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், நாங்கள் சென்ற போது வந்திருந்த ஒரு அயல்நாட்டு தம்பதியிடம் உடன் வந்திருந்த வழிகாட்டி, ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பதாய் சொல்லி, அவர்கள் முகத்தை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். இதிலென்ன இருக்கு என்ற ரீதியில் அவர்கள் அடுத்த தூணுக்கு நகர்ந்து கொண்டிருந்தனர்.



கோயிலின் உட்பகுதி, சமதளத்தை விட சற்றே தாழ்ந்திருக்கிறது, நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் இசைத்தூண்கள் மற்றுமொரு சிறப்பு. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது சுரங்களை கொடுப்பது வெகு அழகு. இதே போன்ற தூண்களை மதுரை, ராமேஸ்வரம் மற்றும் சிதம்பரத்திலும் கண்டிருக்கிறேன். அவையெல்லாம் மக்கள் தட்டி தட்டி இப்போது கவுண்டமணி கேட்டு செந்தில் வாசிக்கும் "நலந்தானா?" போல ஒலிக்கிறது. மதுரையில் மட்டும் தொடமுடியாதவாறு கம்பிவலை போட்டு பாதுகாக்கிறார்கள்.



குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்திருக்கிறது. தூண்களில் நர்த்தன கணபதி உள்ளங்கை அகல சிற்பமாக நிற்கிறார். நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும் சில சென்டிமீட்டர் அளவிலேயே தெளிவாக செதுக்கப்பட்டுள்ளன. எத்தனை சிற்றுளிகள், எத்தனை விரல்கள், எத்தனை நாட்களாய் ஒரு தவமென செய்திருக்குமிதை என்று உணர முடிகிறது. கோபுரத்தை சுற்றி வருகையில் பின்புற சுவரில் மங்கிப்போன ஓவியங்கள் தென்படுகின்றன. கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரமாய் நிமிர்ந்து நிற்கிறது.



ஒருபுறத்தில் யானையாகவும், எதிர்புறத்தில் காளையாகவும் தோன்றுமொரு சிற்பம், இதை திருபுவனத்திலும் பார்த்தது போல நினைவு. ஒரு தலை இடுப்புவரை, இடம், வலம், மேலென மூன்று புறமும் கால்கள் அந்த உடலுடன் இணையும் சிற்பம், ஒரு கழைக்கூத்தாடி பெண்ணை நினைவுபடுத்துகிறது. கோயில் தூண்களில் கழைக்கூத்தாடியின் சிற்பம், கலைகளுக்கு மதிப்பளித்த ராஜராஜனின் விசாலமான மனதை காட்டுகிறது.



இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜபுரம் என்று பெயரிடப்பட்டு, இராராசுரமாகி இன்று தராசுரமென நிற்கிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் வந்து இங்கு லிங்க வழிபாடு செய்ததால் இறைவனின் பெயர் ஐராவதேஸ்வரர். யமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்கு நீராடி விமோசனம் பெற்றதால், இங்கு தீர்த்தம் "யமதீர்த்தம்".



2004 ம் வருடம் UNESCO வினால் உலக புராதான நினைவிடமாக (world heritage monument ) அறிவிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு சுற்றிலும் புல்வெளியும், பசுந்தரையுமாய் இருக்கிறது. இருந்தும் உள்ளூர் வாசிகள் கூட எட்டிப்பார்க்க மறுக்கிறார்கள்.



எப்போதும ஒன்றிரண்டு அயல் நாட்டவர் தென்படுவதும் அவரை நம்மவர் பின்தொடர்வதும் இங்கு வாடிக்கை. நாங்கள் சென்றிருந்த நாளில் வந்திருந்த அயல்நாட்டு பெண்மணி, அங்கிருந்த ஒரு இளம்பெண்ணிடம், அவள் திருமணத்திற்கு யார் மணமகனை தேர்ந்தெடுப்பார்களென்றும், தந்தை தேர்ந்தெடுக்கும் மணமகன் அவளுக்கு விருப்பமில்லை எனில் என்ன செய்வாள் என்றும் கவலையோடு விசாரிக்க, அதை வழிகாட்டி மொழி பெயர்த்துக்கொண்டிருந்தார். அந்த யுவதி இறுகப்பற்றிய கைகுட்டையால் வியர்வையை மட்டுமே துடைத்து வெட்கத்தை துடைக்க முடியாமல் விழித்தது - அந்த வெயில் நேரத்தில் குறுங்கவிதை.



ஊரில் சௌராஷ்டிர மக்கள் அதிகமிருப்பதால் விதிகளில் பளபளக்கும் பட்டு நூல் காய்கிறது. சுற்று பிரகாரங்களில் அமைக்கப்பட்ட வரிசையான சிறு நந்திகளின் தலைகளும், ரதத்தில் பிணைக்கப்பட்ட குதிரைகளின் முகமும் இறை மறுப்பாளர்களால் சிதைக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் மிகுந்த வேதனையளிப்பதாய் இருக்கிறது. இவர்கள் இறையை மறுக்கிறார்களா இல்லை கலையை மறுக்கிறார்களா என்றொரு கேள்வி வருகிறது. இதையே யோசிக்காமல் செய்திருக்கும் இவர்களின் பகுத்தறிவு மெச்ச வைக்கிறது...!!

---

நன்றி மகேந்திரன்.

.

27 comments:

எல் கே said...

நான் பார்த்து இருக்கிறேன்,.இப்பொழுது உங்கள் வரிகள் மூலம் மீண்டும் காண்கிறேன்

அன்புடன் நான் said...

கலை பற்றிய அக்கறையும்.... அதை காக்கும் எண்ணமும்.....

இன்றைய யதார்த்தமும் அடங்கிய உங்க கட்டுரை மிக அருமை.

படங்கள் மிகமிக அருமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice. romba naalaa aalakaanom nanbaaa

செ.சரவணக்குமார் said...

பதிவும் புகைப்படங்களும் மிக அருமை நண்பரே.

க.பாலாசி said...

மிக நல்ல பகிர்வுங்க... அருகிலிருந்தும் நான் இதுவரை இந்த கோவிலை பார்த்ததில்லை... கண்முன் நிறுத்திய படங்கள்.... நன்றி...

Anonymous said...

அப்படியே கங்கை கொண்ட சோழபுரத்துக்கும் ஒரு எட்டு போய் வந்துடுங்க அண்ணாச்சி. எங்களுக்கு ஒரு அற்புதமான இடுகை கிடைக்கும்,....

virutcham said...

நல்ல பகிர்வு.

நாங்கள் சற்றே தாமதமாக சென்று விட்டோம். நடை சார்த்தி விட்டிருந்தது. அங்கிருந்த ஒரு பெரியவர் மிகுந்த பெருமையுடன் கோவில் பற்றிய விவரங்களைக் கூறினார். வெளிப் பிரஹார சிலைகளில் உள்ள நகங்கள் கூட எவ்வளவு நேர்த்தியாக இருக்கு பாருங்கள் என்று எங்களை அழைத்துச் சென்று காட்டும் போது அவர் முகத்தில் எதனை பெருமை. கூடவே அவர் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார். அடுத்த சுற்றில் அந்தக் கோவிலை காணும் வாய்ப்பைப ெற்றோம்.

மறுபடி ஒருமுறை நேரத்துக்குச் சென்று முறையாக தாராசுரம் கோவிலை தரிசிக்க வேண்டும்.

கல்விக்கோயில் said...

தாராசுரம் சிறப்புப் பதிவு மிக அருமை.யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற ஒப்பற்ற வரலாற்றுப் பெட்டகமே தாராசுரம்.வண்ணப் படங்களோடு கட்டுரை அமைந்திருந்தது வெகு சிறப்பு. பாராட்டுக்கள்.

Kartheeswaran said...

அருமை உங்கள் எழுத்து நடை.... நேரில் கண்டதுபோல் ஒரு பரவசம்.... எனது அடுத்த பயணம் கும்பகோணத்தை நோக்கிதான்.. மென்மேலும் இது போன்ற நம் அரிய கலைகளைப்பற்றி எழுதுங்கள்.. நமக்கு பிந்தைய தலைமுறைக்கு அப்போதுதான் தெரிய வரும்... இது ஏன் தாழ்மையான வேண்டுகோள்...

உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

Yazhini said...

(I was not able to find how to write my commnets in tamil here
:( som writing in english )

//இவர்கள் இறையை மறுக்கிறார்களா
//இல்லை கலையை மறுக்கிறார்களா
//என்றொரு கேள்வி வருகிறது.
//இதையே யோசிக்காமல்
//செய்திருக்கும் இவர்களின்
//பகுத்தறிவு மெச்ச வைக்கிறது...!!

I completely agree with you.

Engeyo padithathu... "Kadavul illaina uruvaaki kolvathu avasiyam"...

Naan MOODA nambikkaya ethirkiren.. Kadavul nambikkayai alla...

சு.மருதா said...

நான் சொல்லனும்னு நெனச்சத செந்தழல் ரவி சொல்லிட்டாரு,சோ ஒன்ஸ் மோர் டு செந்தழல் ரவி கமென்ட் நன்றி

மாதேவி said...

தஞ்சைபார்த்திருக்கிறேன்.
தாராசுரம் பார்க்க கிடைக்கவில்லை. படங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

"இசைத்தூண்கள்" சுசீந்திரத்தில் காட்டினார்கள்.

சரவணகுமரன் said...

நன்றி LK

சரவணகுமரன் said...

நன்றி கருணாகரசு

சரவணகுமரன் said...

ஆமாம். ஊருக்கு சுத்த போயிருந்தேன், ரமேஷ்.

சரவணகுமரன் said...

நன்றி பாலாசி.

சரவணகுமரன் said...

செந்தழல் ரவி,

அங்க இன்னும் போனதில்லை. நீங்க சொல்லிட்டீங்க இல்ல? போயிடலாம்.

சரவணகுமரன் said...

விருட்சம், கண்டிப்பா போயிட்டு வாங்க.

சரவணகுமரன் said...

நன்றி கவியின் கவிகள்.

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தீஸ்வரன்

சரவணகுமரன் said...

நன்றி ரவி

சரவணகுமரன் said...

நன்றி மருதா

சரவணகுமரன் said...

நன்றி மாதேவி

Anonymous said...

********
இவர்கள் இறையை மறுக்கிறார்களா இல்லை கலையை மறுக்கிறார்களா என்றொரு கேள்வி வருகிறது. இதையே யோசிக்காமல் செய்திருக்கும் இவர்களின் பகுத்தறிவு மெச்ச வைக்கிறது...!!
*********
இறை என்று பெயர் இருந்தால் கலையையும் மறுப்பார்கள். :))

uma said...

sivan kovilkal yendral yenakku migavum pidikkum

Anonymous said...

hi iam gnanavadivel from tiruppur. dhaarasuram temple is too good

Krishnamurthi Balaji said...

அற்புதமான புகைப்படங்கள். அருமையான கட்டுரை. நன்றி.