தமிழில் தென் மாவட்டங்களை கதைக்களமாக கொண்டு படமெடுப்பவர்கள் ரொம்ப குறைவு. ஹரி மட்டும் தான் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தார். ஆனால், அவரும் கமர்ஷியல் படங்களையே எடுப்பதால், தென்மாவட்ட மக்களின் உணர்வுகள் சரியாக படங்களில் பதிவு செய்யப்படுவதில்லை எனும் வருத்தம் உண்டு.
வெயில் பார்த்தப்பிறகு நம்பிக்கை வந்தது. விருதுநகர் புழுதியையும், வெக்கையையும் திரைக்கு கொண்டு வந்தவர், இம்முறை சென்னை ரங்கநாதன் சாலைக்கு சென்று விட்டாரே என்று படம் பார்க்கும் முன்பு, ஒரு ஏமாற்றம் இருந்தது. ஆனால், படம் பார்த்தப்பிறகு ஏமாறவிடவில்லை என புரிந்தது.
அதேப்போல், ஜெயமோகன் வசனம் என்றதும், சென்னையில் நடக்கும் கதைக்கு இவருடைய வசனம் எந்த அளவுக்கு உதவும் என்றும் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து நரக வேதனை அனுபவிக்கும் கதாபாத்திரங்களுக்கு இவருடைய வசனங்கள் பொருத்தமானது என படம் தொடங்கியவுடன் தெரிந்து கொண்டேன்.
அங்காடித்தெரு - அழகான பொருத்தமான பெயர்.
படத்தில் நடிக்க வைக்காமலேயே, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை மெகா வில்லனாக்கிவிட்டார்கள். இல்லை. காட்டியிருக்கிறார்கள். படத்தில் வரும் கடையின் பெயர் - செந்தில் முருகன் ஸ்டோர்ஸ். சரவணா ஸ்டோர்ஸின் எதிரில் இருப்பதால், அண்ணாச்சியின் முகத்தைத்தான் படமெங்கும் காட்டுகிறார்கள். தனியாக ஒரு ட்யூன் வைத்திருந்தாலும், அவ்வப்போது சரவணா ஸ்டோர்ஸின் ‘எடுத்துக்கோ எடுத்துக்கோ, அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ’ போன்ற விளம்பர பாடல்கள் தான் ஒலிக்கிறது. இதில், சினேகா அக்கா வேறு. இவர்கள் படத்தின் மீது மானநஷ்ட வழக்கு போட்டால், படத்திற்கு இன்னும் விளம்பரம் கிடைக்கும். எதுக்கு வேலியில் போற...?
எல்லோருமே நன்றாக நடித்திருந்தாலும், இயக்குனர் வெங்கடேஷின் அறிமுக நடிப்பு சர்ப்ரைஸ். பணியாளர்களிடம் பல்லை கடித்துக்கொண்டு முறைப்பதாகட்டும், வாடிக்கையாளர்களிடம் பல்லைக்காட்டி இளிப்பதாகட்டும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அவர் அடிவாங்கும்போதெல்லாம் மனம் சந்தோஷப்படும் அளவுக்கு சிறப்பான நடிப்பு.
பாடல்கள் பல நாட்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன். ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பல நாள் பேவரைட். காதல் பாடலை தெய்வீக உணர்வோடு, அதாவது சாமிப்பாட்டு மாதிரி விஜய் ஆண்டனி இசையமைத்திருப்பார். படமாக்கத்தில் முழு திருப்தியில்லை. காமெடியை சேர்த்து ஃபீலை குறைத்தது போல் இருந்தது. படத்திலும் இந்த குறை ஆங்காங்கே இருந்தது.
வசனங்கள் சில இடங்களில் சரியாக கேட்கவில்லை. கதாபாத்திரங்கள் கொடுத்த பாவனைகளை பார்த்து, ஏதோ முக்கியமான வசனம் பேசியிருக்கிறார் போல என்று நினைத்துக்கொண்டேன்.
படத்தில் வரும் காதல் சமாச்சாரங்கள் எல்லாம் இருக்கட்டும். நாம் ஒரு பொருளை மலிவாக வாங்குவதற்கு பின்னால், எத்தனை பேருடைய சோகங்கள் இருக்கிறது என்பது இந்த படம் காட்டும் சுடும் நிஜம்.
சில வாரங்கள் முன்னால் வந்த விண்ணைத்தாண்டி வருவாயாவில், சென்னையின் அழகான முகத்தை காட்டி ஒரு காதல் கதையை சொல்லியிருந்தார்கள். இதில் சென்னையின் இன்னொரு முகமான, கோர கொடூர பக்கத்தை காட்டி ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார் வசந்தபாலன். அது பிடித்தவர்களுக்கு, இது பிடிக்குமா என்பது சந்தேகம். வெயில் போலவே, சில காட்சிகளில் பார்வையாளர்களை கீறிவிட்டு கலங்க வைத்திருக்கிறார். களம் தான் புதுமையே தவிர, கதையில் பெரிதாக புதுமையோ திருப்பமோ இருப்பதாக சொல்ல முடியாது.
---
இந்த படத்தை பற்றி எழுத்தாளர், படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் அவருடைய வலைத்தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.
நாகர்கோயில் போன்ற ஊர்களில் என்ன பிரச்சினை என்றால் முதல்நாள் படம் பார்க்க வருபவர்கள் எல்லா படங்களையும் பார்க்கும் ஒரு கும்பல். படம் முழுக்க கத்திக்கொண்டே இருப்பார்கள். அதாவது இந்தப்படம் எப்படிப்போகும் என எனக்கு தெரியும் என்ற அளவில். கொஞ்சம் படம் உணர்வுரீதியாக கனம் கொண்டால்கூட பொறுமை இழப்பார்கள். சில தினங்கள் கழித்து இது இன்னமாதிரியான படம் என்று ஆனபின்னர்தான் அதற்கான ரசிகர்கள் வருவார்கள்.
அப்போது மீண்டும் போய் படத்தைப் பார்க்கவேண்டும்.
தியேட்டருக்குள் இருந்த கும்பலை(!) பார்த்தப்பிறகு, அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. சிரித்துக்கொண்டேன்.
நான் பார்த்த தியேட்டரில் இரண்டே இடங்களில் தான் கொஞ்சம் சலசலப்பு எழுந்தது. ஒன்று, அஸ்வினி உடனான ஹீரோவின் முதல் காதல் முறிவின் போது. மற்றொன்று, ஊனமான குழந்தையை பெற்ற தாய் பேசும் வசனத்தின் போது.
---
’மச்சான்! பரவாயில்லைடா... ’வெயில்’ டைரக்டர் இந்த படத்தை பாஸிட்டீவா முடிச்சிட்டாரு!’
’எது? ஹீரோவை நடு ரோட்டுல நிக்க வைச்சதும், ஹீரோயினை ரோட்டோரம் உக்கார வைச்சதும் பாஸிட்டீவ் முடிவா?’
’அடே! மாற்று சினிமா எடுக்குற டைரக்டரு, ரெண்டு பேரையும் உயிரோட உட்டு வைச்சதே பெருசுடா...’
.
18 comments:
அதானே உசுரோட வுட்டு வைச்சதே பெருசு :))
படம் ரொம்ப சிக்கல் கடந்து ரீலிசாகியிருக்கோ ஏன்னா அஞ்சலி போட்டோஸ் சுமார் ஒரு 6 மாசத்துக்கு முன்னாடியே ரீலிசு ஆகி அந்த போட்டோவை புரொபைல்ல வைச்சுக்கிட்டிருந்த பய நானு :))
நிசமாவே அஞ்சலி ரொம்ப அழகு பாஸ் :))))
நடுநிலையான விமர்சனம் நன்று.
உழைப்பான விமர்சனம்!
நல்லாயிருக்கு :)
பார்க்கலாம்ங்குறீங்க?
Superbbbbbb
செந்தில்குமாரின்
வணக்கம் தோழரே....
யாரையும் புன்படுத்தாத விமர்சனம் வாழ்த்துகள்
மனதில் பட்டது
முதல் நாள் காட்சிக்கு வரும் கும்பல்
அருமை
செந்தில்குமாரின்
வணக்கம் தோழரே....
அருமையான விமர்சனம் யாரையிம் புன்படுத்தமல்
நான் ரசித்து கேட்டேன் அவள் அப்படி ஒன்றும் அழகில்ளை பாடல் வரிகளை.....
படம் ரொம்ப சிக்கல் கடந்து ரீலிசாகியிருக்கோ ஏன்னா அஞ்சலி போட்டோஸ் சுமார் ஒரு 6 மாசத்துக்கு முன்னாடியே ரீலிசு ஆகி அந்த போட்டோவை புரொபைல்ல வைச்சுக்கிட்டிருந்த பய நானு :))
நிசமாவே அஞ்சலி ரொம்ப அழகு பாஸ் :)
நல்ல விமர்சனம் சரவணகுமரன்...
என்னளவில் எனக்கு மிகப் பிடித்தமானதும், பாதித்ததும் கூட!!!
வாங்க ஆயில்யன்
நன்றி துபாய் ராஜா
நன்றி ஜெகநாதன்
ஆமாம் விக்னேஷ்வரி
நன்றி சில்க் சதீஷ்
நன்றி செந்தில்குமார்
செழியன், பின்னூட்டம் மேல பார்த்த மாதிரி இருக்கு...
நன்றி நரேஷ்... உங்கள் பதிவை படித்ததிலேயே தெரிந்தது, படம் ஏற்படுத்திய பாதிப்பு...
//உங்கள் பதிவை படித்ததிலேயே தெரிந்தது, படம் ஏற்படுத்திய பாதிப்பு...//
வேட்டைக்காரன் அளவிற்கு வேறெந்த படமும் பாதிக்க வில்லை, பாதிக்கவும் பாதிக்காது!!!
Post a Comment