சாம்பார்ல பல்லி விழுந்து, தெரியாம அந்த சாப்பாட்டை சாப்பிட்டா என்ன ஆகும்?
இந்திய பள்ளி குழந்தைகள் மயங்கி விழுவார்கள். சீனா குழந்தைகள் ‘அப்படியே சாப்பிடுவேன்’ என்று சொல்லி சாப்பிடுவார்கள். ஏன் இப்படி?
உண்மையில், பல்லியில் விஷம் கிடையாது. எந்த ஊராக இருந்தாலும். நன்றாக அவிந்து சமைக்கப்பட்டிருந்தால், அதை உண்ணுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை. நம்மூரில், பயங்காட்டியே குழந்தைகளை மயங்கி விழ செய்து விடுவார்கள்.
---
ஒரு ஆக்ஸிடெண்ட். நடுரோட்டில் லாரி டிரைவர் கிடைக்கிறார். அடிபட்டதில் தொண்டையில் ரத்தம் கட்டி, மூச்சு குழாய் அடைத்துக்கொண்டது. அந்த வழியாக வந்த ஒரு டாக்டர், லாரி டிரைவரை சோதித்துப்பார்க்கிறார். தொண்டையில் ஒரு ஓட்டை போட்டால், பிழைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால், கஷ்டம் தான்.
ஆனால், டாக்டரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லை. பார்க்கிறார். வேறு வழியில்லாததால், லாரியில் இருந்த ஸ்க்ரூ ட்ரைவரை வைத்தே ஓட்டையை போட்டுவிடுகிறார். லாரி டிரைவரும் பிழைத்துவிடுகிறார்.
இந்த விஷயம் ஒரு வக்கீலுக்கு தெரிந்துபோய், டாக்டர் மேல் கேஸ் போட்டாராம். ஆனால், நீதிபதி டாக்டரை பாராட்டி வழக்கை தள்ளுபடி செய்தாராம்.
---
சிகரெட் பிடிப்பவர்களில், எழுபது சதவிகித பேருக்கு மரபணுக்கள் நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மீதி முப்பது சதவிகித பேருக்கு, பல பிரச்சினைகள் வரும். ஆனால், யாரந்த அந்த முப்பது சதவிகித பேர் என்பது தான் யாருக்கும் தெரியாத ரகசியம்.
சிகரெட் பிடிக்கும் அனைவருக்குமே பாதிப்பு வந்திருந்தால், இந்நேரம் சிகரெட் என்பதே இருந்திருக்காது.
---
அரிய ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு கொடுப்பது போல், டம்மி ஆராய்ச்சிகளுக்கு இக்நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது.
பெங்களூர் டாக்டர்கள் இருவர் இந்த பரிசை வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் செய்த ஆராய்ச்சி, பெங்களூர் பள்ளி மாணவர்களின் மூக்கு நோண்டும் பழக்கம் பற்றியது. ஆராய்ச்சி முடிவு - ‘மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நான்கு முறை மூக்கு நோண்டுகிறார்கள்’.
இதுபோல் நடந்த இன்னொரு ஆராய்ச்சியின் முடிவு - ’தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்தால், தலை, முதுகு, தோள்பட்டையில் தான் அடி படும்’. இந்த ஆராய்ச்சி நான்காண்டு காலம் நடந்திருக்கிறது!
---
சிலர் ஸ்கூலுக்கு மட்டம் போட, வெங்காயம் வைத்து காய்ச்சல் வரவழைத்திருப்பார்கள். ஆனால், டாக்டரிடம் போனால் எப்படியும் மாட்டிக்கொள்வார்கள். டாக்டரையும் ஏமாற்ற சில மொள்ளமாறித்தனங்கள் இருக்கிறது.
தெர்மாமீட்டரை லைட்டா கடிச்சா, இரண்டு மூன்று டிகிரிகள் அதிகம் காட்டும். அதிகம் கடிச்சா, அவ்வளவுதான். மெர்க்குரி வயித்துக்குள்ள போயிரும்.
இன்னொரு உட்டாலங்கடி வழி, தெர்மாமீட்டரை வாயில வைக்கிறதுக்கு முன்னாடி, வெந்நீரை குடித்துவிட்டு வாயை மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஊசி போட்டு, காய்ச்சல் வரவழைத்துக்கொள்பவர்களும் உண்டு. அந்நேரங்களில், காய்ச்சல் எப்படி வந்தது என்று டாக்டராலும் கண்டுப்பிடிக்க முடியாது.
---
அருகம்புல் ஜூஸ் நல்லதா? அருகம்புல்லை கழுவி, நல்ல தண்ணீரில் ஜூஸ் போட்டால் நல்லது. இல்லாவிட்டால்...?
அருகம்புல் ஜூஸ் குடித்த ஒருவருடைய வயிற்றில், ஆடு, மாடுகளின் வயிற்றில் இருக்கும் ஒருவகை புழு இருந்திருக்கிறது. எப்படி வந்தது? ஆடு, மாடுகளின் சாணம் இருந்த புல்லை கழுவாமல் போட்ட ஜூஸை குடித்ததால் வந்த வினை.
---
மருத்துவ உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய டாக்டர் கே.ஆர். சேதுராமனின் ‘போஸ்ட் மார்ட்டம்’ புத்தகத்திலிருந்து.
.
2 comments:
Superu! :-)
நன்றி ரோஸ்விக்
Post a Comment