Monday, February 22, 2010

ஆப்தரக்‌ஷகா (ஸ்பாய்லர்)

ஒரே கதையை பல விதங்களில் சொல்லலாம். இரண்டு கதையை ஒரே விதத்தில் சொல்லலாமா? பி.வாசு ஆப்தரக்‌ஷகாவில், அதைத்தான் செய்திருக்கிறார். ஆப்தமித்ரா பார்முலாவில் கொஞ்சம் வேறு மாதிரியான கதை.



இங்கு இதை படிக்கும் யாரும் இப்படத்தை போய் பார்க்க போவதில்லை என்ற நம்பிக்கையில் முழு கதையும் இங்கே. ரஜினி இதன் தமிழாக்கத்தில் நடிக்க போவதில்லை என்று பட்டாலும், பிற்காலத்தில் கண்டிப்பாக சந்திரமுகி-2 வரும் சாத்தியம் இருக்கிறது.

---

ஒரு நாட்டியக்காரியின் அழகான ஓவியம் ஒன்று, படபடவென அடித்துக்கொண்டு பறந்து செல்கிறது. மேலே டைட்டில். டைட்டில் முடியும் தருவாயில், பாதையில் விழுந்து ஓவியம் சருகுகளால் மறைக்கப்படுகிறது. அது அந்த வழியில் வரும் ஒரு ஓவியரின் பார்வையில் பட, அவர் அதை தனது வீட்டுக்கு எடுத்துவருகிறார். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, சத்தம் கேட்கிறது. ரா... ரா...

எழுந்து சென்று பார்க்கிறார். மறுநாள் காலையில் அவருடைய மனைவி வந்து பார்க்கும்போது, அவர் அந்த ஓவியத்திற்கு அருகில் இறந்து கிடக்கிறார். ஓவியரின் மனைவி, அந்த படத்தை யாராவது எடுத்து சென்று விடுமாறு சொல்லி அழுகிறார். பிறகு, அந்த ஓவியம் கைமாறி, ஒரு பரதநாட்டிய போட்டியில் பரிசாக அளிக்கப்படுகிறது. பரிசை வாங்குபவர் லஷ்மி கோபால்சுவாமி. இவருடைய காதலர், அந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு சாலையை கடக்கும்போது, லாரி அடிப்பட்டு இறக்கிறார்.

காட்சி இப்பொழுது ஒரு நிச்சயதார்த்தம் நடக்கும் வீட்டிற்கு மாறுகிறது. மணப்பெண் ’காதல்’ சந்தியா. சந்தியாவின் தோழி, மாடியில் ஒரு அறையில் முப்பது அடி பாம்பை கண்டு மயங்கிவிழுகிறார். அதே நேரத்தில், பால்கனியில் இருக்கும் மணமகனும் ‘எதையோ’ கண்டு, பயந்து, நிச்சயதார்த்ததை கான்சல் செய்து விட்டு ஓடிவிடுகிறார். பாம்பை பிடிக்க ஒரு பாம்பாட்டி வருகிறார். அவரும் ’எதையோ’ கண்டு, ரத்தம் கக்கி சாகிறார்.

வீட்டில் நடக்கும் அசாம்பவித சம்பவங்களை கண்டு, சந்தியாவின் அப்பா, ராமசந்திர ஆச்சார்யாவிடம் செல்கிறார். அவிநாஷ் தான். அவர் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு, அந்த ஓவியம் தான் காரணம் என்கிறார். ஓவியத்தில் இருப்பது - நாகவல்லி (சந்திரமுகி) என்றும், ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்ததையும் (ஆப்தமித்ரா) சொல்கிறார். இதை ஹேண்டில் செய்ய சரியான ஆள் என, பெரிய பெரிய பில்டப்களுடன், கேப்டன், டாக்டர் விஜய் (விஷ்ணுவர்தன்) என்கிறார். இங்க ஒரு சாங்.

இந்த பாடலில் டான்ஸ் மாஸ்டர் அசோக்குமார் போல், டைரக்டர் பி.வாசு வந்து ஆடுகிறார். அவர் மட்டுமில்லை, படத்தின் பின்னால் உழைத்திருக்கும் அனைவரும் ஆடுகிறார். மஹாதீராவில் எப்படி கடைசியில் ஆடுவார்களோ, அதுப்போல்.

விஷ்ணுவர்தன் அறிமுகமாவதில் இருந்து, அவருடன் வரும் காமெடி நடிகருடன் சேர்ந்துக்கொண்டு நிறைய காமெடிக்காட்சிகள் வருகிறது. நாகவல்லி சந்தேகம் பல பேர் மேல் வருகிறது. வரவைப்பது போல் காட்சிகள் வருகிறது. அவ்வப்போது, ரா ரா வருகிறது. பிறகு, விஷ்ணுவர்தன் மாடியில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் லஷ்மியை காண்கிறார். லஷ்மி, சந்தியாவின் அக்கா. தனது காதலரின் மரணத்தால், புத்தி பேதலித்து, ‘சந்திரமுகி’ மேக்கப்புடன் மாடியில் டான்ஸ் ஆடி கொண்டு இருக்கிறார். அவரை குணப்படுத்த, அவினாஷும், விஷ்ணுவர்தனும் முயற்சி எடுக்கிறார்கள்.



இந்த ரேஞ்சில் நான் கதை சொல்லிக்கொண்டு போனால், ஒரு பதிவு பத்தாது. ஏகப்பட்ட பாகங்கள் வெளியிட வேண்டியிருக்கும். அதனால் கொஞ்சம் வேகமாக சுருக்கி சொல்லி முடிக்கிறேன். விஷ்ணு லைப்ரரிக்கு செல்கிறார். பழைய வரலாறு புத்தகத்தை எடுத்து படிக்கிறார். அவரை போலவே இருக்கும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசர் விஜய ராஜேந்திர பஹதூரை (வேட்டையன்) பற்றி தெரிந்துக்கொள்கிறார். (இடைவேளை) இந்த அரசர் இன்னொரு மன்னனை வெல்லும்போது, அவனுடன் இருந்த வைர, வைடூயங்களுடன், நாட்டியக்காரி நாகவல்லியையும் (ராமன் தேடிய சீதையில் வரும் விமலாராமன்) தன்னுடன் அரண்மனைக்கு இழுத்து செல்கிறார். அந்த நாட்டியக்காரியின் காதலன், வழக்கம்போல், வினித். ராஜா நாகவல்லியை தனது அரசவையில் ஆடவிட்டு, ஓவியம் வரைந்து வைத்துக்கொள்கிறார்.



பிறகு, ராஜா ஒரு ஜோலியா வெளியே சென்றிருந்த சமயம், நாகவல்லியும், காதலனும், அரண்மனையில், ‘ரா ரா சரசுக்கு ரா ரா’. நடுவில் ராஜா வந்துவிடுகிறார். விரட்டி விரட்டி காதலனை தலை கொய்து கொன்று விடுகிறார். நாகவல்லியை வழக்கம்போல், எண்ணையை கொண்டுவர சொல்லி, எரித்துவிடுகிறார். பிறகு, நாட்டில் ஏற்படும் பிரச்சினை காரணமாக, அந்த ஓவியத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துவிடுகிறார். இந்த சமயத்தில் ஊருக்குள் புரட்சி ஏற்பட, ஊரை விட்டு ஓடிவிடுகிறார்.

கதையை படித்த விஷ்ணு வீட்டிற்கு வந்து அக்கா லஷ்மியை குணப்படுத்துகிறார். ஆனால், உண்மையில் நாகவல்லி அவரில்லை என்கிறார். பிறகு யார்? போய் வெள்ளித்திரையில் பாருங்கள். இல்லையென்றால், தொடர்ந்து படியுங்கள்!

ராஜா பஹதூர் ஜாதகத்தை எடுத்து வந்து விஷ்ணு, ஆச்சார்யாவிடம் கொடுக்கிறார். அவர் இந்த ஜாதகக்காரனுக்கு அழிவில்லை. நூறு வருஷம் மேல் வாழுவான் என்கிறார். அது எப்படிய்யா நூறு வருஷத்துக்கு மேல வாழமுடியும் என்று விஷ்ணு கேட்க, அவர் இமயமலையில் வாழும் முனிவர்கள் பற்றி சொல்கிறார். இப்ப, பேக்கிரவுண்ட்ல பாபா தீம் ஓடுது.

அந்த ஊரில் மலை மேல் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்திற்கு யாரும் செல்வதில்லையாம். விஷ்ணு அங்கு சென்று பார்க்கிறார். அரண்மனையை விட்டு ஓடிப்போன பஹதூர் ராஜா, நீண்ட முடி வளர்ந்துக்கொண்டு அங்கு இருக்கிறார். ஜெட்லி படத்தில் வருவது போல் பறந்து பறந்து சண்டை போடுகிறார். அவரிடம் இருந்து ஒருவழியாக விஷ்ணு தப்பித்து வருகிறார்.

வீட்டிற்கு வந்து ‘உங்களில் யார் நிஜ நாகவல்லி?’ என்று அறிவிக்கிறார். த அவார்ட் கோஸ் டூ....

...
...
...

சந்தியா...

ஆம். அவர்தான் இதில் நாகவல்லி. அதன்பிறகு, அவர் சந்திரமுகி மேக்கப்புடன் வந்து பயமுறுத்துகிறார். (இப்படித்தான் முதல்நாளே ‘சிநேகிதியே’ பார்த்துவிட்டு, எல்லோரிடமும் தபுதான் கொலைகாரி என்று சொல்லிவிட்டோம். ஹி... ஹி...)

முடிவில், மலைமேல் ராஜாவும், நாகவல்லியும் சண்டை போடுகிறார்கள். ராஜா, நாகவல்லியை கொல்லப்போகும்போது, இயற்கை இடியின் மூலம் ராஜாவை முடித்துவைக்கிறது. நாகவல்லி பழிவாங்கிய திருப்தியில், சந்தியா குணமாக, விஷ்ணு பை பை சொல்ல, முற்றும்.

---

கதை உங்களுக்கு எப்படி இருக்கிறது?

என்ன நடக்க போகிறது? எப்படி கதை செல்லும்? என்று தெரிந்தும் விறுவிறுப்பாக செல்கிறது. சந்திரமுகியில் வந்த மெருகேற்றிய விஷயங்கள், இதில் வருகிறது. கிராபிக்ஸில் உலகத்தரம் என்ன, நம்மூர் தரத்தை விட குறைவுதான். ராஜா காலத்து காட்சிகள், இம்சை அரசன் தரம்.

விஷ்ணுவர்தனின் இருநூறாவது படம். கடைசி படம். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஏன் கூட்டம் அதிகமாக இருக்கிறது? அவர்களது படம் மற்றவர்களை விட அதிக இடைவெளியில் வரும். வருஷத்திற்கு இரண்டு படங்கள் வருகிறது என்றால், அடுத்தது எப்ப வருமோ என அதிக ஆர்வத்தில் பார்ப்போம். இனி இவரை பார்க்கவே முடியாது என்றால்? அப்படித்தான் இங்கு இருக்கிறது ரசிகர்களின் கூட்டம்.

இவரது குரல், அந்த கன்னட மாடுலேஷனாலா என்று தெரியவில்லை, ரஜினி வாய்ஸ் போன்றே இருக்கிறது. நிறைவாக செய்திருக்கிறார். இவருக்கு ரஜினியை விட வயது கம்மிதான். ஆனால், மனிதர் ஆடவும், ஓடவும் கஷ்டப்படுகிறார். ரஜினியை பார்த்து ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் இது. ரஜினி வயது நாயகர்கள் தள்ளாடும்போது, ரஜினியோ துள்ளாட்டத்துடன் இருக்கிறார்.

விமலாராமனை பார்க்கும் போது, லைட்டா ‘அருந்ததி’ அனுஷ்கா போல் இருக்கிறார். சந்தியாவிற்கு அவரை போலவே ’வெயிட்’டான கேரக்டர்.

சந்திரமுகி கிளைமாக்ஸில் பிரபு காமெடி செய்தது போல், இதில் அவினாஷ் செய்திருக்கிறார். ஆரம்பத்தில், இவரைக்காட்டியே பயமுறுத்துகிறார்கள்.

திகில், காமெடி, செண்டிமெண்ட் என ஜெயித்த பார்முலாவிலேயே சென்று சொல்லி அடித்து, கன்னட ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் படைத்திருக்கிறார் பி.வாசு. சந்திரமுகியில் டாடா இண்டிகாமிற்கு படம் முழுக்க பேனர் கட்டியது போல், இதில் ஏர்செல்லுக்கு கட்டியிருக்கிறார்.

---

வேட்டையன் கேரக்டர் பலவீனமாக இறுதியில் இறப்பதால், ரஜினி இதில் நடிக்க வாய்ப்பு குறைவு. அது மட்டுமில்லை, நாகவல்லியில் தோஷத்தால் தான் சௌந்தர்யாவும் (முதல் பாக முடிவில்), விஷ்ணுவர்தனும் (இரண்டாம் பாக முடிவில்) இறந்ததாக யாரோ கொளுத்துப்போட, ரஜினி சென்ற வாரம் மைசூர் பக்கம் இருக்கும் கோவில்களுக்கு சென்று ஹோமம் வளர்த்திருக்கிறார். இது இரண்டு நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி. அதனால் தான், சென்னையில் ப்ரிவ்யூ பார்த்தப்பிறகு, நன்றாக இருப்பதாக பி.வாசுவை பாராட்டிய பின்பும், தமிழில் இரண்டாம் பாகத்திற்கு பிடிக்கொடுத்து பேசவில்லையாம்.

சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லையென்றாலும், யாராச்சும் சுப்ரீம் ஸ்டார்கள் பி.வாசுவிற்கு கிடைக்காமலா போய்விடுவார்கள்? அப்படி எடுக்கும்பட்சத்தில், இந்த படத்தின் கதையை கூகிளில் தேடப்போகும் தமிழ் ரசிகர்களுக்கும், படம் பார்த்து கதை சொன்ன கன்னட நண்பனுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

.

11 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

அருமைங்க.. கூகிளில் தேடினால் இந்தப் பதிவு முதலில் வருவதற்கு வாழ்த்துகள்

//..தமிழ் ரசிகர்களுக்கும், படம் பார்த்து கதை சொன்ன கன்னட நண்பனுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

மெஜஸ்டிக் போகும் வழியில் பிரமாண்டமான கட்டவுட் - அப்போ அது இந்தப் படம் தானா?
உங்கள் பதிவைப் படித்துத் தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

//இனி இவரை பார்க்கவே முடியாது என்றால்? அப்படித்தான் இங்கு இருக்கிறது ரசிகர்களின் கூட்டம்.

சரவணகுமரன் said...

//கூகிளில் தேடினால் இந்தப் பதிவு முதலில் வருவதற்கு வாழ்த்துகள்//

இன்றைய தேதிக்கு வருகிறது, டெக்‌ஷங்கர். பின்னாடி வருமான்னு தெரியலை.

//மெஜஸ்டிக் போகும் வழியில் பிரமாண்டமான கட்டவுட் - அப்போ அது இந்தப் படம் தானா?//

ஆமாங்க... இதையும் ஒரு வருஷம் ஓட்டிடுவாங்க...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப சக்தி வாய்ந்த சாமிங்க அது,,

பதிவர்களே பயந்து போய்தான் இதைப் பற்றி பதிவிடாமல் இருக்கிறார்கள்..,


உங்கள் பதிவை, தளத்தை காப்பாற்றிக் கொள்ள ஏதாவது யாகம் ஏற்பாடு செய்யுங்கள்..,

ஆராய்வு said...

அநியாயத்திற்கு நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்

Naresh said...

இவ்ளோ பெரிய பதிவு கூட போடுவீங்களா???

நீங்க சின்னதா, நச்சுன்னுதான் வழக்கமா போடுவீங்கன்னு நினைச்சேன்...

நல்லாயிருக்கு!!! பி. வாசு படத்துல கதைங்கற ரேஞ்சுக்கு ஒன்னு இருக்கறதே ஆச்சரியம்னா, இவ்ளோ பெரிய கதைங்கிறது பெரிய ஆச்சரியந்தான்....

சரவணகுமரன் said...

கிலிய கிளப்பாதீங்க, சுரேஷ்... :-)

சரவணகுமரன் said...

நன்றி ஆராய்வு

சரவணகுமரன் said...

நரேஷ்,

எப்பவும் சோம்பல் பட்டுக்கிட்டு ரொம்ப பெருசா எழுத மாட்டேன். எனக்கும் சின்னதா இருந்தாத்தான் படிக்க பிடிக்கும்.

முழு கதையும் சொல்ல நினைச்சேன். பெருசா போச்சு!

Unknown said...

சூப்பர்.., ரஜினி பண்ணலன்னா சரத் இருக்காருல்ல

சரவணகுமரன் said...

ஆமாம் பேநா மூடி