Friday, February 12, 2010

தீராத விளையாட்டுப்பிள்ளை

ஆக்‌ஷன் படங்களால் வில்லனைவிட தானே அதிகம் அடிவாங்கியதால், விஷால் ரூட் மாறியிருக்கிறார். காதல் மெயின் கரு என்றாலும், ஆக்‌ஷன் பார்முலாவிலேயே சென்றிருக்கிறார்கள். “நான் நிறைய தோல்விகளை சந்திச்சிருக்கேன். இதுவும் ட்ரை பண்றேன். தோல்வியடைஞ்சா கத்துக்கிறேன். ஜெயிச்சா...” என்று பஞ்ச் பேசியிருக்கிறார்.

ஹீரோ எழுதுவதற்கு பென் வாங்கினாலேயே நாலைந்து பார்த்துத்தான் ஒன்று செலக்ட் செய்வார். கல்யாணத்திற்கும் மூன்று பெண்களை காதலித்து ஒரு பெண்ணை செலக்ட் செய்ய கிளம்ப, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் மீதி கதை. கொஞ்சம் கூட கதை தெரியாமல் போனததால் தான், ரசித்துப்பார்க்க முடிந்தது. அதனால் இதற்கு மேல் கதை வேண்டாம்.



முதல் பாதி முழுக்க விஷால், சந்தானம், மயில்சாமி, சத்யன் காமெடி காட்சிகளால் கலகலப்பாக செல்கிறது படம். இரண்டாம் பாதியில் கதாநாயகிகளுடன் விஷால் ஆடும் சடுகுடு ஆட்டத்தால் கலகலப்புடன் விறுவிறுப்பாக செல்கிறது. இயக்குனர் அமைத்துள்ள புத்திசாலித்தனமான திரைக்கதை, யூகிக்க முடியாத படி இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் மட்டும் பொறுமையை சோதிக்கும்படி செல்கிறது. ஆனாலும், இறுதியில் ஜாலியாகவே முடிக்கிறார்கள். ‘நான் அவன் இல்லை’ சீரிஸ் எதுவும் பார்க்காமல் இருந்ததால், புதுசாக இருந்தது.

வழக்கமாக அமைந்திருக்கும் காட்சிகளில் எல்லாம், நாம் பேச நினைப்பதை எல்லாம் சந்தானம் பேசுகிறார். விஷாலும் நகைச்சுவைக்காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். டான்ஸும் நன்றாக செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் சொல்ல தேவையில்லை. வேஷ்டியை மடித்து கட்டுவதற்கே, தெருவில் இருக்கும் குப்பைகள் முழுக்க பறக்கிறது.

புரட்சி தளபதி ஆனாலும் ஆனார்... “ஆயிரத்து ஐநூறு கோடி இருந்தாலும் நீ பொம்பளை. ஒண்ணுமே இல்லனாலும் நான் ஆம்பிளை” போன்ற புரட்சி கருத்துகளை கூறி கைத்தட்டல் பெறுகிறார். வேலைக்கு பல நிறுவனங்களில் விண்ணப்பிப்பதையும், வீடு கட்டுவதற்கு பல பேங்குகளுக்கு செல்வதையும், கல்யாணத்திற்கு பெண் பார்ப்பதுடன் ஒப்பிட்டு லாஜிக் பேசி வேறு கைத்தட்டல் பெறுகிறார்.

யுவன் கவலைப்பட வேண்டியதே இல்லை. நச்சென்று ஒரு பின்னணி வேண்டுமென்றால், உடனே எடுத்துப்போடுவதற்கு, இளையராஜா நிறைய சொத்து சேர்த்துவைத்திருக்கிறார். இதில் அப்படி உதவியிருப்பது, ‘நெற்றிக்கண்’ படத்தின் வயலின் தீம். நன்றாக இருக்கிறது. ரிங் டோனில் ஒரு ரவுண்ட் வரும்.

என்னதான் ”கறுப்பான பசங்களை பொண்ணுங்க லவ் பண்ண மாட்டாங்கன்னு யாருடா சொன்னா?”ன்னு வசனம் வச்சாலும், மன்மதன் (சிம்பு அல்ல!) லெவலுக்கு விஷால் கொடுக்கும் பில்டப்புகள் ஓவராத்தான் தெரிகிறது. எல்லாக்காட்சிகளிலும் ஏதாவது ஒரு நாயகி வருவது, படத்திற்கு கலர்புல்லாக இருக்கிறது. பிரகாஷ்ராஜுக்கு பெரிய ரோல் இல்லை.

வேலண்டைன் டே வாரத்தில் வந்திருக்கும் இந்த படத்தின் முதல் பாதியில், விஷால் காதலை பற்றி சொல்லும் விஷயங்கள் எதுவும் காதலை போற்றும்படி இல்லாவிட்டாலும், இன்றைய இளைஞர்கள் காதல் மீது கொண்டிருக்கும் எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருப்பதாகத்தான் நினைக்கிறேன். இயக்குனர் திருவின் முதல் முயற்சி நன்றாக வந்திருக்கிறது. ரசிகர்களின் நாடித்துடிப்பு தெரிந்திருப்பதால், அபத்தமாக, அராஜகமாக இருந்தாலும், வசனங்கள் மூலம் கைத்தட்டல் வாங்க தெரிந்திருக்கிறது. முக்கியமாக, தினகரனுக்கு விளம்பரம் செய்யும் வசனங்கள் இல்லாதது இன்னும் சிறப்பு.

தீராத விளையாட்டுப்பிள்ளை - நன்றாகவே விளையாடி இருக்கிறான்.

.

5 comments:

ஜெட்லி... said...

சந்தானம் தான் முதல் பாதி ஹீரோ பாஸ்....

nirmal said...

Padam sari illaye? 3 heroine paathathum thadumaaritingalo?

சரவணகுமரன் said...

ஆமாம் ஜெட்லி... அவருடைய காட்சிகள் இன்னமும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.

சரவணகுமரன் said...

ஹி ஹி... நிர்மல், அப்படியும் இருக்கலாம். மூணு ஹீரோயின் இருந்தாலும், நிற்பது என்னவோ நீதுதான்.

ArasiSekar said...

ithu telugu remake... Chukkallo Chandrudu is the original movie.... ennamo puthu scriptunnu kelappi vidaranga... ayya.... copy adichennu kooda sollidunga paravayille