Monday, January 11, 2010

சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா

’சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பது கற்றுக்கொடுப்பதற்காக எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல. அது சுஜாதாவின் ஒரு சிறுகதை தொகுப்பு என்பது சுஜாதாவின் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். தொகுப்பில் உள்ள முதல் கதையின் தலைப்பே, புத்தகத்தின் தலைப்பு. முழுக்க முழுக்க நகைச்சுவை படர்ந்திருக்கும் கதை இது. குங்குமத்தில் வெளியானது. எப்போது என்று சரியாக தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக 1981க்கு முன்பு.



சுஜாதாவின் கதைகள் எல்லாவற்றிலும் முதல் வரி படிப்போரை உள்ளே இழுத்துவிடும். கதை எழுதுபவர்களுக்கு அவர் சொல்லும் அறிவுரையும் இதுதான். இந்த கதையின் முதல் பாரா...

ஒரு அரிய வாய்ப்பு! நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத்தொடர்பு கொள்ளுங்கள்: த.பெட்டி எண்: 2355.

முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக இந்த கதையை படிக்க விரும்புபவர்கள், இப்படியே கிளம்பி விடவும். நான் வாசித்து ரொம்பவும் ரசித்த கதையை இங்கே பகிர்ந்துக்கொள்ள போகிறேன்.

கதையின் நாயகன் ராஜரத்தினம், மேலே இருக்கும் விளம்பரத்தை தினமணியில் பார்ப்பதில் தொடங்குகிறது கதை. ராஜரத்தினத்துக்கு அவர் எழுதும் கதைகள் பத்திரிக்கையில் வர வேண்டுமென்பது ஆசை. ஆனால், எழுதிய கதைகள் ஒன்றும் பிரசுரமாகவில்லை. ஒருநாள் இந்த விளம்பரத்தைப் பார்த்து அவர் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், அதை ராஜரத்தினத்தின் வார்த்தைகளிலே சுஜாதா எழுதியிருக்கிறார்.

சுஜாதா பற்றி அவருடைய கதாபாத்திரமான ராஜரத்தினம் என்ன நினைக்கிறார்?

“சுஜாதாவிடம் கற்றுக்கொள்ள!” சர்தான், சுஜாதா வராறா! அந்த ஆளு சுமாரான எழுத்தாளன்தான்; ஒத்துக்கறேன், அங்க இங்க படிப்பேன். வாத்யார்கிட்டே சரக்கு இருக்கலாம். அவருதான் லாண்டரி கணக்கு எழுதினாக்கூட போடறாங்களாமே!

விளம்பரத்தை பார்த்து சுஜாதா நடத்தும் சிறுகதை பட்டறைக்கு விண்ணப்பம் எழுதிப்போடுகிறார் ராஜரத்தினம். அவர்களும் வர சொல்கிறார்கள். இவரும் அவர்கள் வர சொன்ன ஹோட்டலுக்கு சொல்கிறார். அங்கு ஒருவர் அவரை விசாரித்துவிட்டு மாடியில் இருக்கும் அறைக்கு போக சொல்கிறார்.

மெள்ள மாடிப்படில ஏறிப் போனேன், எதிர்பார்ப்பில என்னோட இருதயம் ஒரு ரெண்டு படி முன்னாலேயே ஏறுது. அந்த ரூம் கதவைத் தட்டினேன். இல்லை, ‘டக் டக் கினேன்...’ எப்படி?

என்ன குசும்பு, பாருங்க? கதை வந்த ஆண்டை நினைத்துக்கொள்ளவும்.

அப்புறம் அந்த அறையின் கதவை ராஜரத்தினம் தட்ட, கதவை திறப்பது ஒரு பெண்.

“மன்னிச்சுக்கங்க, இதானே ஒம்பது?”

“ஆமாம் உள்ளே வாங்க.”

“சுஜாதாவை சந்திக்கலாம்னுட்டு”

“நான்தான் சுஜாதா”ங்கறா அந்தப் பொண்ணு.


அடுத்த ஆறு பக்கத்துக்கு அந்த பொண்ணுக்கூட நடக்குற கசமுசா தான் கதை. முடிவு ஆஹா ஓஹோ’ன்னு சொல்லுற மாதிரி இல்லாம, யூகிக்கும்படி இருந்தாலும், அந்த எள்ளலும் நக்கலும் கலந்த நடை இருக்கே? சூப்பரு...

“ஒரு பெண்ணை வர்ணிக்கிறீங்க. சரி, நல்ல ஆரம்பம். ஆனா நீங்க ஒரு பெண்ணைக் கிட்டத்தில பார்த்திருக்கீங்களா?”

“ம்... இல்லைதான்”

“எடுங்க பேப்பரை. என்னைப் பாருங்க. வர்ணிங்க. எழுதுங்க”


இப்படியே ராஜரத்தினத்துக்கு கதை எழுத பழக்கிவிடுறாங்க.

ராஜரத்தினம், “வேண்டாங்க. கதை கொஞ்சம் வேற மாதிரி போவுது.”

“என்ன வேற மாதிரி?”

“அடுத்த பக்கத்தில அவங்க ரெண்டு பேரும் ஒரு கணத்தில் சபலத்தில் தம்மை இழந்துர்றாங்கன்னு வரது!”

“சரி, அதுக்கென்ன இழந்துட்டாப் போச்சு!”

“என்னங்க இது?”

“இலக்கியங்க! வாங்க!”


---

சிறுகதை எழுதுவது எப்படி?
சுஜாதா
விசா பப்ளிகேஷன்ஸ்
112 பக்கங்கள்
50 ரூபாய்

.

4 comments:

திருவாரூர் சரவணா said...

ரொம்ப ஆர்வமா நூலகத்துல இருந்து இந்தக் கதையை எடுத்து படிச்சுட்டு நானும் அசடு வழிஞ்சிருக்கேன்.

சரவணகுமரன் said...

ஹி ஹி...

வாங்க சரண்

Simulation said...

http://simulationpadaippugal.blogspot.com/2008/07/blog-post.html

- சிமுலேஷன்

Unknown said...

mmmmmmmmmm nice..really missing him.