விழாக்கால குதூகலம், அன்றைய தினம் வெளியாகும் ஒரு சினிமா பார்ப்பதில் தான் முழுமையடைகிறது என்றொரு நம்பிக்கை எனக்கு. சரி, எவ்வளவு நாள் இப்படி பார்ப்போம்? என்று நினைத்துக்கொண்டு அப்படியே தொடர்கிறது. எந்த படத்தையும் எவ்வித விமர்சனம் வருவதற்கு முன்பு, வந்தாலும் கண்ணில் காட்டாமல், படத்தை முந்தி பார்ப்பது பழக்கமாகிவிட்டது. விமர்சனம் படிக்காமல் சிக்கியதும் உண்டு. விமர்சனம் படித்து தப்பியதும் உண்டு. இருந்தும் எந்த வித தாக்கமும் இல்லாமல் படம் பார்ப்பதே வழக்கம்.
முதல் நாள் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தது, இப்படி ஒரு விசேஷ தின மகிழ்ச்சி மனநிலையில். பார்வையாளர்களை பதறவைக்கும் இயக்குனர் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், படத்தின் ஆரம்பமும் முதல் பாதியும், கொஞ்சம் வேறொரு செல்வராகவனை காட்டியது. டிஷ்... டிஷ்... பீட்டுடன் கூடிய "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" ரீ-மிக்ஸ் பாடல், கார்த்திக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்த புது ரசிகர்களை ஆடத் வைத்தது. இப்படி மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களை கொண்டாட்டத்துடனே வைத்தது முதல் பாதி முழுவதும்.

நிறைய காட்சிகளில் செல்வராகவனுக்கு கைத்தட்டல்கள் போய் சேர்ந்தது. குறிப்பாக, ஆண்ட்ரியாவை ரூட்டு விட்டுக்கொண்டு, ரீமாவை திட்டிக்கொண்டு கார்த்தி திரியும் காட்சிகள். நடராஜர் உருவத்தில் நிழல் விழும் காட்சியில், கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா ஓடி மணல் குழிகளில் இருந்து தப்பிக்கும் சீன்.
கதாபாத்திரங்கள் சிரித்தால் பார்ப்பவர்களும் சிரிக்கணும். அழுதால் பார்ப்பவர்களும் அழ வேண்டும். கதாபாத்திரங்களுக்கு பைத்தியம் பிடித்தால்? அதே உணர்வை பார்வையாளர்களுக்கும் கொண்டு வர செல்வராகவன் யோசித்திருப்பார் போல! இடைவேளையின் போது எல்லோருமே ஒரு குழப்பமான நிலையில் தான் இருந்தார்கள். அந்த காட்சியில் அமைதிக்கிடையே படீர் என்று ஒரு சத்தம். நன்றாக சவுண்ட் வைக்கும் தியேட்டரில் நடுவே உட்கார்ந்து பாருங்கள். உங்கள் காதிலும் ரத்தம் வரலாம்.
இதே பேண்டஸி எதிர்ப்பார்ப்பில் பாப்கார்ன் வாங்கி கொண்டு வந்து உட்கார்ந்தால், ஏமாற்றம் நிச்சயம். ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணியது போதும். இனி பீல் பண்ணனும் என்று செல்வராகவன் நினைத்திருப்பார் போலும். வேறொரு பாணியில் படம் பயணிக்க தொடங்கிறது.
அவ்வளவு நேரம் பேண்டஸியால் விறுவிறுவென ஓடிய படம், எதார்த்தமான முடிவை நோக்கி சென்றது. மகாதீரா போல ஹீரோ ஜெயித்திருந்தால், கொண்டாடியிருப்பார்கள். அதிரடிப்படைக்கும் பஞ்சத்தில் கிடந்த சோழப்படைக்கும் நடக்கும் போரில், ஏதாவது புத்திசாலித்தனமாகவோ அல்லது காட்டு விலங்குகளின் தயவாலோ (அவதார்) சோழப்படை ஜெயித்திருந்தால், ஆஹாவென்றிருப்பார்கள். பாதிவரை மேஜிக்கலாக யோசித்த இயக்குனர், இறுதியில் லாஜிக்கலாக யோசித்ததின் விளைவு - எல்லோருக்குமே ஏமாற்றம்.
---
ஐந்தாறு நாட்கள் கழித்து, வேறு சில நண்பர்கள் அழைத்ததால் திரும்பவும் சென்றேன். ஏதோ ரவீந்திரனுக்கு நம்மாலான உதவி.
இப்ப, இரண்டாம் பாதி வேறு மாதிரி இருந்தது. சில காட்சிகளை கட் செய்திருந்தார்கள். அதை சொல்லவில்லை. (தற்போது சேட்டிலைட் ப்ரோஜக்ஷன் என்பதால், ஆபரேட்டர் இஷ்டத்திற்கு கட் செய்யாமல், கட் செய்தாலும் பாதிப்பு இல்லாத காட்சிகளை கட் செய்திருந்தார்கள். குறிப்பாக, பயணத்திற்கு முன்பு தற்கொலை செய்துக்கொள்ளும் கிழவனாரின் காட்சி)
தொடரும் என்று முடித்தாலே, இயக்குனர் முடிக்கத்தெரியாமல் முடித்திருக்கிறார் என்றொரு எண்ணம் வந்துவிடுகிறது. இயக்குனர் நினைத்தப்படி கன்னாபின்னாவென்று எடுத்து, முடிக்க தெரியாமல் முடிக்கவில்லை. இப்படித்தான் முதலிலேயே யோசித்து, ஸ்கிரிப்ட் எழுதி, அதைத்தான் எடுத்திருக்கிறார் என்ற நம்பிக்கையோடு பார்க்கும்போது, படம் கண்டிப்பாக கவரும். அது என்னவோ தெரியவில்லை. செல்வராகவன் படத்தை இரண்டாம் முறை பார்க்கும் போது, இன்னமும் பிடிக்கிறது. புதுப்பேட்டையும் இப்படித்தான்.
நெகட்டிங் ரிவ்யூவில் மூழ்கிவந்த நண்பர்கள், படத்தை பார்த்துவிட்டு, நல்லாதானே இருக்கிறது என்றார்கள். கடைசியில் கார்த்தி காப்பாற்றும் சிறுவன், சோழ மன்னரின் வாரிசு என்பது தெரியாமலேயே பலர் வெளியேறினார்கள். குழந்தைகளும், தாய்மார்களும் பார்க்க முடியாமல் சில காட்சிகள் இருப்பது, படத்திற்கு வரும் கூட்டத்தை தடுக்கும் விஷயங்கள்.
---
நல்ல திறமையான இயக்குனர்களிடம், நிர்வாகத்திறமை இல்லாதது பெரிய குறை. சரியாக திட்டமிடாததால், அதிக செலவு இழுத்துவைப்பதால், கால தாமதம் ஆக்குவதால், படத்தின் வெற்றிக்கு சிக்கல் இழுத்துவைப்பார்கள். இந்த படத்திலும் அப்படி நிறைய.
ஆனால், செலவு என்று பார்க்கும்போது, 30 - 35 கோடி என்கிறார்கள். அந்த செலவுக்கு படம் படு பிரமாண்டமாகத்தான் தெரிகிறது. இதைவிட அதிகம் செலவழித்து வந்த தமிழ்ப்படங்களை பார்க்கும்போது, இது ஒன்றும் மோசமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
---
’யாரடி நீ மோகினி’ படத்தில் ஒரு காட்சியில் தனுஷ் தன்னுடைய சாப்ட்வேர் ப்ரோகிராமை, ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொடுப்பார். அதற்கு பல மென்பொருட்நிபுண விமர்சகர்கள், ‘எந்த கம்பெனிலய்யா, பிரிண்ட் அவுட் எடுக்கிறாங்க?’ என்று கேள்வி எழுப்பினார்கள். கோட் ரிவ்யூ பண்ண ப்ரிண்ட் அவுட் எடுக்கும் நிறுவனங்கள் இருந்தாலும், ஒரு காட்சியை எப்படி எடுத்தாலும் வெளுத்துக்கட்ட ஆட்கள் இருக்கிறார்கள். சாப்ட்வேர் ஹீரோ பற்றிய படமென்றால், படம் பார்க்க சாப்ட்வேரில் வேலைப்பார்ப்பவர்கள் மட்டுமா வருவார்கள்?
எல்லோருக்கும் புரியணுமே’ன்னு எளிமையா எடுத்தாலும் திட்டு. அதான் புரியுமேன்னு நவீனமா எடுத்தாலும் திட்டு.
சோனியா டைவர்ஸின் போது வந்த பேட்டியில், வாரிசு பற்றிய ஒரு கேள்விக்கு, ”என் படங்கள் தான் என்னுடைய வாரிசுகள்” என்றார் செல்வராகவன். அதற்காகவாவது, திட்டுவதை விட்டு வைக்கலாம்.
அப்படி இல்லாமல், திட்டில் இருந்து தப்பிக்க ஒரே வழி - இயக்கம் ’ஜேம்ஸ் ஸ்பீல்பெர்க்’ அப்படின்னு ஏதாச்சும் போட வேண்டியதுதான்.
.