இந்த புத்தகக்கண்காட்சியில் வெளிவர இருக்கும் புத்தகங்களில் மிக முக்கியமானது, டூபாக்கூர் புத்தக நிறுவனம் வெளியிடயிருக்கும் ‘இளைய தளபதி’ விஜய் வாழ்க்கை வரலாறு. இந்த புத்தகத்தில், நடிகர் விஜய் அவர்களின் வாழ்க்கையில் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார் ஆசிரியர் விஜய்பிரியன்.
விஜய் என்று பெயர் வைத்ததில் இருந்தே, விஜய்க்கான வெற்றியை தொடங்கிவைத்துவிட்டார் அவருடைய தந்தை, புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். சிறுவன் விஜய்க்கு சிறுவயதிலேயே படிப்பதற்கு இருக்கும் நாட்டத்தை விட நடிப்பதற்கே அதிக ஆசை. இன்று விஜய் முன்னணி நடிகரானாலும், இன்னமும் அந்த ஆசை நிறைவேறாதது வேறு விஷயம். ஆனாலும் சிறுவயதிலேயே தன் ஆசையை தந்தையிடம் வெளியிட்டு, அவருடைய படங்களில் தலைக்காட்ட தொடங்கினார். ஒவ்வொரு தந்தையும் தன் மகன் ஆசையை காது கொடுத்து கேட்பதின் அவசியம் என்னவென்பதை இதில் இருந்து தெரிந்துக்கொள்ளலாம்.
நாம் எல்லோருமே சிறு வயதில் வகுப்பிற்கு கட் அடித்து விட்டு, ரஜினி படத்திற்கு சென்றிருப்போம். ஆனால், நாம் எவருக்குமே அது போல் வேஷம் கட்டும் எண்ணம் வந்திருப்பதில்லை. இந்த விஷயத்தில், விஜய் விதிவிலக்கு. நாம் யாராக ஆக விரும்புகிறோமோ, அவராகவே ஆகிறோம் என்றார் இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம். அவர் சொல்லுவதற்கு முன்பே, அதை செயல்படுத்த தொடங்கியவர் விஜய். ரஜினி போல் துண்டு கட்டுவது, நடப்பது, ஓடுவது, ஆடுவது என்று ஒன்றையும் விட்டு வைத்ததில்லை விஜய்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் பலம், பலவீனம் தெரிந்திருக்க வேண்டும். பலத்தை நன்றாக வெளிகாட்ட வேண்டும். பலவீனத்தை புரிந்துக்கொண்டு, அதை வெளிக்கொணரும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. விஜய்க்கு டான்ஸ் நன்றாக வரும். அதற்கேற்றாற் போல், அவர் படத்தில் அரை மணிக்கு ஒரு முறை ஆட்டம் போடும் பாடல்கள் வரும். அது சோக பாடலாக இருந்தாலும், மகிழ்ச்சியுடன் ஆடுவார். நகைச்சுவை நன்றாக வரும் காரணத்தால், சீரியஸாக பேசும் இடங்களில் கூட காமெடி செய்வார். அதேப்போல், படத்திற்கு படம் வேறு வேறு வேடங்களில் நடித்தாலும், எல்லாவற்றிலும் அவர் அவராகவே வருவார். தெரிவார். இருப்பார். வேண்டுமானால், அதிகபட்சம் தனது மீசையின் அடர்த்தியை ஏற்றி இறக்கி வித்தியாசம் காட்டுவார்.
நாம் நம்மை மட்டும் கவனிக்கக்கூடாது. நம்மை சுற்றி இருக்கும் சூழலையும் கவனிக்க வேண்டும். நமக்கென்று ஒரு மார்க்கெட் இல்லாதபோது, மார்க்கெட் இருக்கும் இடத்தில் நாமிருக்க வேண்டும். இதற்கு நல்லதொரு உதாரணம் - விஜய். சங்கவி, விஜய்காந்தை காணவரும் கூட்டத்திடம் தனது முகத்தை காட்டி, அதன் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கினார். காற்று அடிக்கும் நேரம், மாவு விற்கக்கூடாது. மழை அடிக்கும் போது, உப்பு விற்க கூடாது என்பதை உணர்த்தும் வகையில் காதல் கதை சீசனில் காதல் பாடங்களிலும், ஆக்ஷன் சீசனில் ஆக்ஷன் படங்களிலும் நடித்தார். வேறு பிஸினஸ் தெரியவில்லையென்றால், அதில் இறங்கக்கூடாது என்பதை விஜய்யிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
எதிர்பார்ப்பை குறைத்து கொண்டு, அதற்கு மேல் ரிசல்ட் காட்ட வேண்டும் என்பது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸின் தாரக மந்திரம். அதாவது இப்படித்தான், இவ்வளவுத்தான் இருக்கும் என்று குறைத்து மதிப்பிடும் வகையில் எதிர்பார்ப்பு உருவாக்கிக்கொண்டு இருக்கும்போது, கொஞ்சம் பெட்டராக இருந்தாலே ஆஹா ஓஹோவென்று புகழ்வார்கள். இதை சரியாக கணித்து, குருவி, வில்லு போன்ற தாங்க முடியாத படங்களை கொடுத்துவிட்டு, வேட்டைக்காரன் போன்ற ஒரளவுக்கு உயிரோடு விடும் படங்களை கொடுப்பதின் மூலம் ரசிகர்கள் ‘அப்பா தப்பிச்சோம்’ என்று சொல்லுவதைக்கூட ‘ஆஹா ஓஹோ’விற்கு ஈடானதாக ஆக்கியவர் விஜய்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்னும் பொன்மொழிக்கேற்ப, தன் தந்தையின் சொல்லை தட்டாமல் கேட்டு வருபவர் விஜய். தந்தை யுவராணியுடன் கபடி ஆட சொல்லினாலும் ஆடினார். தன் தலைவர் ரஜினி என்று சொல்ல சொன்னாலும் சொன்னார். எம்ஜிஆர் வழி தன் வழி என்றாலும் சொன்னார். மன்றத்திற்கு கொடி வெளியிட சொன்னாலும் வெளியிட்டார். ராகுல் காந்தியை போய் பார்க்க சொன்னாலும் பார்த்தார். கலாநிதி மாறனை பார்க்க சொன்னாலும் பார்த்தார். இப்படி ஒரு தந்தை அமைவதும் அரிது. இப்படி ஒரு பிள்ளை பிறப்பதும் அரிதோ அரிது.
இன்று இவர் அரசியலுக்கு வர முயற்சி எடுப்பதை பார்த்து ஆளாளுக்கு கருத்து சொல்கிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் விஜய் கண்டுக்கொள்ள போகிறாரா, என்ன? இந்த முகத்தை எல்லாம் காண வேண்டி இருக்கிறது என்று சொன்ன பத்திரிக்கையையே, இவர் முகத்தை அட்டையில் போட்டு, விற்பனையை ஏற்றிக்கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்தவர் விஜய். அதேப்போல், இன்று இவரை விமர்சிப்பவர்களும் ஒருநாள் இவர் முதலமைச்சர் ஆகும் போது, தங்கள் முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பார்கள் என்பதை நாளைய வரலாற்றில் நாம் காணத்தானே போகிறோம்?
பெரியதாக ஒன்றுமில்லாமலும், பெரிய இடத்திற்கு வரலாம் என்பதற்கு இவரைவிட பெரிய உதாரணம் வேறு யாருமில்லை. வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படும் அனைவரும் விஜயை எண்ணிப்பார்க்க வேண்டும். இவராலேயே இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு வர முடிந்ததென்றால், ஏன் நம்மால் முடியாது என்று ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒவ்வொரு குடும்பத்தின் அலமாரியிலும், அரசாங்க மற்றும் பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. மொத்தத்தில் இந்த புத்தகக்கண்காட்சியை கலக்க போகும் புத்தகம் இதுவென்றால், அது மிகையில்லை.
’இளைய தளபதி’ விஜய்
111 பக்கங்கள்
ரூபாய் 80
டூபாக்கூர் புத்தக நிறுவனம்.
.
6 comments:
Vikranthai patriyum oru vari ezhuthi irukkalam thalai!!
:)))) நல்லா இருக்கே !
பக்க எண்ணிக்கை சொன்னதுலேயே பட்டை நாமம் தெரியுது. ஏற்கனவே படம் பார்த்து நொந்து போய் இருக்குறவங்க ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வந்துடப் போறாங்க. கவனம் தேவை
ஆமாங்க சுவாமி,
விஜயின் ஜெராக்ஸ், மற்ற தளபதிகள் பற்றியும் சொல்லியிருக்கலாம்.
நன்றி ஆயில்யன்
பயமாத்தான் இருக்குதுங்க... சரண்...
Post a Comment