பா. ராகவன் எனக்கு மாயவலையில் இருந்து தான் அறிமுகம். அவர் அதற்கு முன்பு எழுதிய கதைகள், கட்டுரைகள் எதையும் படித்ததில்லை. சமீபத்தில் அவர் தனது வலைப்பூவில் மீள் பிரசுரித்த அவரின் பழைய தொடர்கதையான ‘காதல் கால் கிலோ கனவு கால் கிலோ’யையும் இப்போதுதான் வாசித்தேன். (வாசிக்கும்போது பல இடங்களில் அடக்கமுடியாமல் சிரித்தேன்.) மற்றபடி, தீவிரவாத அமைப்புகள், கிரிமினல்கள், போராளிகள் ஆகியோரைப் பற்றி எழுதியவைகளை வாசித்து வருகிறேன். இப்படி எழுதுகிறவர், சுயமுன்னேற்ற புத்தகம் எழுதினால் எப்படி இருக்கும்? என்ற ஆர்வம்தான் இப்புத்தகம் வாங்க தூண்டியது.

நாம் செய்யும் காரியங்கள் அனைத்தையும் எக்ஸலண்டாக செய்வது எப்படி? என்பதை விளக்க இப்புத்தகம் உதவும் என்று வாக்குறுதி முதலிலேயே அளித்திருக்கிறார். அதுவும், ஆங்கில சுயமுன்னேற்ற புத்தகங்களில் கொடுத்திருப்பது போல. ஏக பில்டப்களுடன். எக்ஸலண்ட் என்பதற்கான தமிழ் சொல் - உன்னதம் என்பதே இந்த புத்தகம் படித்து தான் தெரிந்து கொண்டேன்.
உன்னதமாக வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் இந்த புத்தகத்தில் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஜஸ்ட், ரயில் பயணத்தில் பொழுதை கழிக்க வேண்டும். அவ்வளவே. ஆனால், ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தை பார்த்து, ஒருவேளை என்னை உன்னதம்மிக்க உத்தமனாக்கி விடுவாரோ என்று பயந்து தான் போனேன். நல்லவேளை, அப்படி ஒன்றும் ஆகவில்லை. படித்து முடித்து, தூங்கி எழுந்தபின், வழக்கம்போல் வாய் கொப்பளித்து டீ குடித்தேன்.
இது ஒரு வகையில், பாராவின் அனுபவ கட்டுரைகள். அவர் கடந்து வந்த மனிதர்களின் (அவரையும் சேர்த்து!) குணாதிசயங்களை உன்னதத்திற்கான படிக்கட்டுகளாக வரிசைபடுத்தியிருக்கிறார். வழக்கம்போல், அவரின் சுவாரஸ்யமான எழுத்துக்கள் இடைவிடாமல் வாசிக்க வைக்கிறது. அவரது வலைப்பூவை வாசிப்பது போலத்தான் இருந்தது.
இனி புத்தகத்தில் இருந்து சில வரிகள்....
---
இதுவரை வெளிவந்த தமிழ் சினிமா பாடல்களிலேயே தலை சிறந்த பத்து என்று தரத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் அந்தப் பட்டியலில் நிச்சயம் இடம்பெறக்கூடிய தகுதி ஹேராம் - ‘இசையில் தொடங்குதம்மா’வுக்கு உண்டு. மிக மேன்மையான தரத்தில் எழுதப்பட்ட இசை அது. கேட்கும்போதெல்லாம் சிலிர்ப்பூட்டக்கூடியது.
ஒரு தவம் செய்யாமல் இளையராஜாவால் எப்படி அப்படியொரு இசையை எழுதியிருக்க முடியும்? என்ன செய்திருப்பார்?
இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கமலஹாசன் எடுத்து முடித்த படத்தில், முதலில் ‘இசையில் தொடங்குதம்மா’ பாடலே கிடையாது. படத்தை ஓடவிட்டுப் பார்த்த இளையராஜாவுக்கு அந்தக் குறிப்பிட்ட காட்சி வரும்போது அந்த இடத்துக்குள் ஒரு பாடலுக்கான தேவை ஒளிந்துகொண்டு இருப்பது ஒரு தரிசனமாகப் புலப்பட்டிருக்கிறது. கமலஹாசன் கண்ணில் படாத பாடல். எல். சுப்பிரமணியத்துக்குப் (முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர்) புலப்படாத பாடல். அந்த படத்தின் எடிட்டர்கூட அதைக் கவனித்துச் சொன்னதாகத் தெரியவில்லை. எப்படி இளையராஜாவுக்கு மட்டும் புலப்பட்டது?
இளையராஜாவின் இறைவன் இசையாக இருக்கிறபடியால் அவர் அதனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார். விளைவு, இசையின் உன்னதம்!
---
’ரெண்டு பேருதான்யா தமிழ்நாட்டுல பெஸ்டு ஆர்ட்டிஸ்டு. ஒருத்தன் கணேசன். இன்னொருத்தன் பாபு.’
சொன்னவர் வி.கே.ராமசாமி. சொன்னது, சிவாஜியையும் சந்திரபாபுவையும்.

ஒரு சமயம் கேட்டார், ‘கணேசன் மாதிரி பாபு ஏன் பாப்புலர் ஆவல சொல்லு பாக்கலாம்?’
பிறகு, அவரே சொன்னது,
‘அவன் பெரிய ஆர்ட்டிஸ்டு. அதுல சந்தேகமில்ல. எமகாதகப்பய. டைமிங் சென்ஸ் அதிகம் அவனுக்கு. ஒரு செகண்டுல பின்னிட்டுப் போயிடுவான். பக்கத்துல நடிச்சிக்கிட்டிருக்கறவங்க பேபேன்னு பேய்முழி முழிப்பாங்க. அவன் பார்ட்டை அவனே டெவலப் பண்ணிப்பான். இல்லேன்னா, எழுதிக்குடுக்கறத டெவலப் பண்ணிக்கிடுவான். என்னத்தையானா செஞ்சி சபாஷ் வாங்கிடுவான். ஆனா பாரு, நடவடிக்கைங்கள்ள அத்தன சுத்தம் இருக்காது...’
‘ஒழுக்கம்னு நாஞ்சொல்றது, நீ குடிக்கிறியா, சிகரெட்டு புடிக்கிறியா, கூத்தடிக்கிறியா - அதெல்லாம் இல்லே. வேலைல ஒழுக்கம் வேணும் தம்பி. ஒம்போது மணிக்கு ஷூட்டிங்னா கணேசன் டாண்ணு ஏழே முக்காலுகு ஸ்பாட்டுக்கு வந்து நிப்பான். நமக்கெல்லாம் அவமானமா போயிடும். நாம மேக்கப் போடறப்ப அவன் டயலாக் பாடம் பண்ணி முடிச்சிருப்பான். நாலு விதமா மனசுக்குள்ள நடிச்சிப் பாத்திருப்பான். செத்தாலும் ரீ டேக் வாங்க மாட்டான். பத்திரிகைங்கள்ள பேட்டி கீட்டின்னு வந்து கேட்டாங்கன்னா, ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லுவான். யாரைப்பத்தியும் குறையாவோ, நக்கலாவோ பேச மாட்டான். அவன் உண்டு, அவன் தொழில் உண்டுன்னு கடேசிவரைக்கும் இருந்துட்டான். செய்யறத ஒழுங்காவும் செஞ்சான். பிறவிலயே நடிப்பு அவன் ரத்தத்துல இருந்திச்சின்னு வையி. அது பெரிசில்ல. எப்பிடி டெவலப் பண்ணான்னு பாரு. அதான் முக்கியம்.’
----
இப்படி காந்தி, யானி, விஸ்வநாதன் ஆனந்த், கல்கி ராஜேந்திரன், ஜி.வி. ஐயர், பின்லேடன் என நமக்கு தெரிந்த, தெரியாத மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து உன்னதத்திற்கான வழியை எடுத்துக்காட்டியிருக்கிறார், பா.ராகவன்.
எக்ஸலண்ட்! செய்யும் எதிலும் உன்னதம்
பா. ராகவன்
152 பக்கங்கள்
ரூபாய் 70
கிழக்கு பதிப்பகம்
.
10 comments:
//இளையராஜாவின் இறைவன் இசையாக இருக்கிறபடியால் அவர் அதனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார். விளைவு, இசையின் உன்னதம்!//
உண்மை !
பாட்டினை கேட்டால் எல்லோருக்குமே புரிபடும் !
எக்ஸலண்ட் - லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டாச்சு !
ஒரு நல்ல புத்தகத்தை அடையாளம் காட்டியதற்கு மிக்க நன்றி.
அப்டியே கொஞ்சம் வாங்கி அனுப்சிவிட்டா புண்ணியமா போகும்!!
மைண்ட்ல வெச்சிக்க வேண்டிய விஷயம் இது.
// ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தை பார்த்து, ஒருவேளை என்னை உன்னதம்மிக்க உத்தமனாக்கி விடுவாரோ என்று பயந்து தான் போனேன். நல்லவேளை, அப்படி ஒன்றும் ஆகவில்லை. //
// அவரின் சுவாரஸ்யமான எழுத்துக்கள் இடைவிடாமல் வாசிக்க வைக்கிறது. //
நானும் இந்த புத்தகத்தை படித்த போது மேற்சொன்ன உணர்வை பெற்றேன். "இந்திய பிரிவினை" குறித்த புத்தகம் படித்த சமயத்தில்
இதை படித்ததாலோ என்னவோ, ஒரே மூச்சில் படித்து முடித்து விட முடிந்தது.
நன்றி !
-- Jameel
எப்ப வாங்க போறீங்க, ஆயில்யன்? சென்னை கண்காட்சியா?
நன்றி வடுவூர் குமார்
அது வேறயா, கலையரசன்?
நன்றி சரண்
நன்றி ஜமீல்
Post a Comment