Sunday, December 20, 2009

வேட்டைக்காரன் - சிக்கியது யார்?

வேட்டைக்காரன் எப்ப வரும், எப்ப வரும் என்று காத்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான அனுஷ்கா ரசிகர்களில் நானும் ஒருவன். ஒருவழியாக வந்தாச்சு. பார்த்தாச்சு. அனுஷ்கா வாழ்க!

படத்திற்கு போகும்போதே, விஜய் படம் என்பதால், அதற்குண்டான எதிர்ப்பார்ப்பில் தான் சென்றேன். கொடுக்குற ஐம்பது ரூபாய்க்கு, என்ஜாய் பண்ணனும் என்று சென்றால், சொந்த காசில் சூனியம் வச்சுக்கிட்ட நிலைதான். ஆனாலும், சின்னவயசில் நான் பார்த்த ரஜினி படங்கள் தியேட்டரில் கிளப்பும் திருவிழாக்கோலத்தை, இப்ப இருக்குற நடிகர்களில் விஜய் படங்களில் தான் பார்க்கிறேன்.

டைட்டிலில் ஜுனியர் விஜய் என்று பேர் போடும்போதும், ’நான் அடிச்சா தாங்க மாட்டே’ என்று சஞ்சய் விஜயுடன் ஆடும்போதும், விசில் ஆரவாரத்தோடு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை, இந்த வயதில் இப்படி பெற்ற ஒரே வாரிசு, சஞ்சயாகத்தான் இருக்கும். பாட்டில் மகனுக்காக, விஜய் மெதுவாக ஆடுகிறார்.



முதலிலேயே சொன்னது போல், விஜய் படத்தில் நான் எதுவும் பெருசா எதிர்பார்க்கவில்லை என்று போனாலும், படத்தில் அவர் கொடுக்கும் அதிர்ச்சிகள் ஏராளம். படத்தில் விஜய் ப்ளஸ் டூ படிக்கும் பையனாம். நல்லவேளை, அனுஷ்கா எட்டாம் வகுப்பில் படிக்கவில்லை. பிறகு, காலேஜில் படிக்கிறார். பாட்ஷா போல் ஆட்டோ ஓட்டுகிறார். பிறகு, ரஜினி மாதிரியே சட்டையை விலக்கிவிட்டுக்கொண்டு நல்ல ரவுடி ஆகிறார். ரஜினி மாதிரி’ன்னு சொல்லக்கூடாது. இவரு ஒரு பக்கம் மட்டும் தான் விலக்குகிறார். படிகளில் இறங்கும்போது, ஒரு சைடாக திரும்பிக்கொண்டு ஸ்டைலாக இறங்குகிறார் பாருங்க? அப்படியே, லிவிங்ஸ்டன் மாதிரியே இருக்கிறது!

படத்தில் விஜய் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருக்கும் ரவுடிகளை ஒழிக்கிறார். ஏற்கனவே, திருப்பாச்சி படத்தில் திருப்பாச்சியில் இருந்து சென்னை வந்தார். இதில் தூக்குக்குடி. ஒண்ணும் பிரச்சனையில்லை. தமிழ்நாட்டில் நிறைய ஊர் இருக்கிறது. விஜய்க்கு படம் பண்ண, நிறைய கதைகள் இருக்கிறது. ஒரு இடத்தில் விஜய், “தூத்துக்குடி பசங்க. மோசமானவுங்க.” என்கிறார். இதை தூத்துக்குடியில் கேட்டு இருக்கணும். தியேட்டர் அலறியிருக்கும். மிஸ் பண்ணிட்டேன்.

வெற்றி விழாவில், நான் பார்த்து பயந்த ஜிந்தா - சலீம் கவுஸ் தான் இதில் மெயின் வில்லன். காமெடியாக இருந்தது. விஜய், சீரியஸாக பஞ்ச் டயலாக் எல்லாம் பேசிக்கொண்டு இருக்கும்போது, இவர் புன்சிரிப்போடு இருப்பது இன்னும் தமாசு. இன்னும் சைடுக்கு பல வில்லன்கள். இப்படி நிறைய வில்லன்களை பார்ப்பது அலர்ஜியாக இருக்கிறது. விஜய், பெரிய் ஹீரோ தான். அதற்காக, இப்படி நிறைய வில்லன்கள் வச்சு தான், அதை நிருபிக்கணுமா?

விஜய் இதில் பல புது மேக்கப்புகள் முயன்றிருக்கிறார். அதையெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது. அப்படியாச்சும், புதுசா ஏதாச்சும் பண்ணட்டும். ரசிகர்கள் அவரிடம் எதிர்ப்பார்ப்பது, ரொம்ப குறைவு. அதையும் பூர்த்தி செய்யமுடியாமல் ஏமாற்றுகிறார். தரணி கேங்கை நம்பி, தொடர்ந்து படம் கொடுத்து ஏமாறுகிறார். சார், இனி உள்ளே விடாதீங்க. பாபு சிவன், வசனம் நன்றாக எழுதுகிறார். ஒருவேளை, அரசியல் பஞ்ச் டயலாக்ஸ் இருந்திருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். வெட்டி தள்ளப்பட்டிருக்கலாம்.

படம் வருவதற்கு முன், சன் டிவியிடம் விஜய் சிக்கியது போல் இருந்தது. படம் பார்த்த பிறகு, விஜயிடம் தான் சன் டிவி சிக்கியது மாதிரி இருக்கிறது. அந்த வகையில், விஜய் உண்மையில் வேட்டைக்காரன் தான். :-)

.

12 comments:

நாடோடி இலக்கியன் said...

//தமிழ்நாட்டில் நிறைய ஊர் இருக்கிறது. விஜய்க்கு படம் பண்ண, நிறைய கதைகள் இருக்கிறது//


//படம் வருவதற்கு முன், சன் டிவியிடம் விஜய் சிக்கியது போல் இருந்தது. படம் பார்த்த பிறகு, விஜயிடம் தான் சன் டிவி சிக்கியது மாதிரி இருக்கிறது. அந்த வகையில், விஜய் உண்மையில் வேட்டைக்காரன் தான்.//


:)))))))))))))))))))

ஆ! இதழ்கள் said...

நெட்ல தேறாதுன்றாங்க... ஆனா சில பசங்க சும்மா அதிருதுலன்றாங்க, ஒண்ணும் பிரில, பாத்தா தான் தெரியும்.

சரவணகுமரன் said...

வாங்க நாடோடி இலக்கியன்

சரவணகுமரன் said...

ஆனந்த்,

வலையுலகில் இதற்கு ஆதரவு விமர்சனங்களும் இருக்கிறது. படம் பார்த்த பிறகு, இது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை, ரொம்ப கேவலமா இருக்கும்’ன்னு நினைச்சு போயிருப்பாங்க போல!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இந்த வயதில் இப்படி பெற்ற ஒரே வாரிசு, சஞ்சயாகத்தான் இருக்கும்.//

ஏற்கனவே சிலம்பரசனுக்கு டி.ஆர் வாங்க்கிக் கொடுத்திருக்கிறார்

Raja said...

வேட்டைக்காரன் firsthalf கூட ஓகே ஆனா secondhalf பார்க்குறதுக்கு மூளைய வீட்டுலேயே கழட்டி வச்சுட்டுதான் போகணும். கிளைமாக்ஸ் சீன்ல என் பின்னாடி உட்கார்ந்திருந்தவங்க சிரிக்க அரம்பிசிட்டங்க. என்னத்த சொல்ல 70 ரூபாய சாக்கடைல போட்ட மாதிரி நெனச்சுக்க வேண்டியது தான் . இன்னொரு கொடும என்னன்னா விஜய் பண்றது மட்டும் இல்லாம இவன பார்த்து "சின்ன தளபதி", புரட்சி தளபதி, அப்புறம் நேத்து வந்த நகுல் கூட நம்மள சாவடிக்குரணுக

மகேந்திரன் said...

#படிகளில் இறங்கும்போது, ஒரு சைடாக திரும்பிக்கொண்டு
ஸ்டைலாக இறங்குகிறார் பாருங்க...
அப்படியே, லிவிங்க்ஸ்டன் மாதிரியே இருக்கிறது!!#

முடியல சரவணா.. சத்தமா சிரிச்சிட்டேன்..
ஒரு விஜய் ரசிகனையே சிரிப்பா சிரிக்க வெச்சிட்டிங்க...

நரேஷ் said...

என்னங்க நீங்க!!!

நீங்க எதுக்காக படம் பாக்கப் போனிங்களோ அதே மாதிரி, உங்க விமர்சனத்தைப் படிசதுக்கு காரணமும், அனுஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்காவைப் பத்தி என்ன சொல்லப் போறீங்கன்னுதான்...

கடைசியில ஒண்ணுமே சொல்லலியே!!! ஃபோட்டோனாச்சும் சிலது போட்டிருக்கலாம்....

காமெடி படம்னா உங்க விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு!!!!

சரவணகுமரன் said...

சுரேஷ், சிம்புவா? அவரு பக்க பக்கமா வசனம் பேசி, பிரமாண்ட செட்களில் ஆட்டம் ஆடி கைத்தட்டல் பெற்றிருப்பார். இந்த பொடியன் சும்மா பத்து செகண்ட் நடந்து வருறதுக்கே, தியேட்டரில் ஆட்டம் தாங்க முடியவில்லை.

சரவணகுமரன் said...

ராஜா, எவ்வளவோ பார்த்திட்டோம். இதயும் பார்த்திட்டோம். இனியும் பார்ப்போம்... :-)

சரவணகுமரன் said...

மகேந்திரன், நீங்க விஜய் ரசிகரா? சொல்லவே இல்லை?

சரவணகுமரன் said...

அச்சச்சோ, ஏமாத்திட்டேனா நரேஷ்? :-)

காமெடி படம்’ன்னே முடிவு பண்ணிட்டீங்களா? :-)