Sunday, December 13, 2009

ரேனிகுண்டா

கலை, கமர்ஷியல் இரண்டும் கலந்த பாலா, அமீர், சசிக்குமார் வரிசை இயக்குனர்களின் பட வகையை சேர்ந்தது ரேனிகுண்டா. எப்பொழுதும் போல் இல்லாமல் இருப்பதற்காக, மதுரையை விட்டுவிட்டு, புத்திசாலித்தனமாக ரேனிகுண்டாவை களமாக எடுத்திருக்கிறார்கள்.



படத்தில் எல்லோருமே புதிது. அதனாலேயே, பல விஷயங்கள் ப்ரெஷாக இருக்கிறது. படத்தின் கலர், கேமரா கோணங்கள், நடிகர்கள் தேர்வு, புதியவர்களின் நடிப்பு, சண்டைக்காட்சிகளின் விறுவிறுப்பு, இசை என எல்லாமுமே படத்தோடு ஒன்ற வைக்கிறது.

படத்தின் ப்ளஸ் - மைனஸாக கொலைக்காட்சிகளை சொல்லலாம். ஒவ்வொரு கொலைக்காட்சியையும், பிரமிக்க வைக்கும் விதத்தில் எடுத்திருக்கிறார்கள். அந்த நால்வர் எதிராளிக்கு போடும் கிடுக்கிப்பிடியாகட்டும், விரட்டிக்கொண்டு ஓடும் கேமராவாகட்டும், மிரட்டும் இசையாகட்டும், சீட் நுனிக்கு தள்ளிவிடுகிறது. இதேப்போல், ஹீரோவின் அப்பா, அம்மாவை கொல்லும் காட்சியும் பதற வைக்கிறது. இப்படி பாராட்டும் வகையில் இருந்தாலும், குழந்தைகளுடன், குடும்பத்துடன் பார்க்க முடியாது.

ஹீரோ, ஹீரோயின் என்று இவர்களை சொல்ல முடியாது. அந்த பையன், அந்த பசங்க, அந்த பொண்ணு என்று தான் சொல்ல வருகிறது. படத்தில் எல்லோருமே புதியவர்கள் என்றாலும், மற்றவர்கள் அளவுக்கு ஹீரோவாக நடித்திருக்கும் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் பையன் ஜானிக்கு நடிக்க வரவில்லை. அது பெரிதாக தெரியாத அளவுக்கு, அந்த கேரக்டரை வடிவமைத்திருப்பது, இயக்குனரின் சாமர்த்தியம். படத்தின் கருவாக்கத்திற்கும், உருவாக்கத்திற்கும் உதவியதாக சொல்லி சக்ரவர்த்திக்கு பெரிதாக நன்றி சொல்கிறார்கள், டைட்டில் கார்டில் இயக்குனர் பெயருக்கு முன்பாக. என்னவெல்லாம் உதவினாரோ?

ஷார்ப்பான வசனங்களை எழுதியிருப்பவர் - சிங்கம்புலி. இவர் ’நான் கடவுள்’ படத்தில் விக் சாமியாராக வருபவரும், மாயாவி படத்தின் இயக்குனருமான சிங்கம் புலி தானே? லவ் பீலிங் வந்த டப்பா, அவன் கோணத்திலேயே அதை “அந்த பீலிங் இருக்குதே, நாலு பேர் சேர்ந்து வெட்டின மாதிரி இருக்குடா” என்று சொல்வது கலக்கல். படம் முழுக்க, இவன் பேசும் வசனங்கள் - நல்ல கலகலப்பு.

இம்மாதிரி படங்களின் முடிவு, இப்படித்தான் இருக்கும் என ஏற்கனவே சில படங்கள் எடுத்து பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால், நடக்க போவது தெரிந்தும், படத்தின் முடிவில், அந்த பையனையும், பொண்ணையும் மட்டும் சந்தோஷமாக விட்டிருக்கலாமே? என்றொரு எண்ணம் வருகிறது. வம்புக்கு கொலை செய்தவர்களிடம் சேர்ந்ததற்காகவே, அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் அதே சோக முடிவை கொடுத்திருப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

படம் முடிந்த பிறகு, நண்பர்கள் சிலர் அவர்கள் தோஸ்த் ஒருவரை, படத்தில் வருவதை போல கிடுக்கிப்பிடி போட்டு விளையாடிக்கொண்டிருந்தது - படத்தின் வெற்றி. பயமுறுத்தும் வெற்றி.

.

8 comments:

ஜெட்லி... said...

நல்ல அலசல் நண்பரே...
படம் எங்கே பார்த்திங்க??

சரவணகுமரன் said...

நன்றி ஜெட்லி...

நான் இங்கு பெங்களூரில் பார்த்தேன். இங்கு இந்த வாரம் தான் ரிலீஸ்.

கணேஷ் said...

ஹீரோயின் அக்காவைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே?

சரவணகுமரன் said...

ஹீரோயின் அக்கா, ஒரு நல்ல...... அக்கா.

கணேஷ், போதுமா? :-)

மகா said...

nice review....

sampath said...

சரவணன் சார். ஏன் இந்த விபரீத ஆசை. சிம்பு திடீர்னு ஒரு வேளை ரீமேக் பண்ணணும் என்று ஆரம்பிபிச்சுடா. அய்யோ..

சரவணகுமரன் said...

நன்றி மகா

சரவணகுமரன் said...

சம்பத், எனக்கெதுக்கு இந்த ஆசை. சும்மா தோணிச்சு...