சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ புத்தகத்திலிருந்து....
---
டைரக்டர் ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் கடைசிக் காட்சியில் ஒரு வசனம் எழுதியிருந்தேன்.
காட்சி இது.
ரகுவரனை அர்ஜூன் தன் முதலமைச்சர் அலுவலகத்துக்கு வரவழைத்திருப்பார். ‘உன்னால் எனக்கு ரொம்ப தொந்தரவு. என்னைக் கடமையைச் செய்யவே விட மாட்டேன் என்கிறாய். கலவரம் பண்ணுகிறாய். பாம் வைத்து என் தாய் தந்தையைக் கொன்றுவிட்டாய். உன்னை நான் இப்பொது கொல்லப்போகிறேன்’ என்று ஒரு துப்பாக்கியை டிராயரிலிருந்து எடுக்க, அதற்கு ரகுவரன் சிரித்து, ‘என்னை உன்னால கொல்ல முடியாது. நான் இங்கு வந்ததற்கும் உன்னுடன் தனியாக இருப்பதற்கும் சாட்சிகள் உள்ளன’ என்கிறார்.
அர்ஜுன், ‘நான் சுடப்போவது உன்னையல்ல, என்னை’ என்று தன் கையில் சுட்டுக்கொண்டு அந்தத் துப்பாக்கியை அவர்பால் எறிகிறார். ரகுவரன் அதைப் பிடித்துக்கொண்ட நேரத்தில் காவலாளர்களைக் கூப்பிட்டுவிட, அவர்கள் நிலைமையைத் தவறாகப் புரிந்துகொண்டு ரகுவரனை சுட்டு வீழ்த்துகிறார்கள்.
ரகுவரன் இறந்துபோகுமுன் ஒரு வசனம் எழுதியிருந்தேன். ‘ That was a good interview' என்று.
ஷங்கர், ‘இதை எதற்காக எழுதினீர்கள்’ என்று கேட்டார்.
‘வில்லன் இறக்கும் முன் புத்திசாலித்தனமாக ஒரு வசனம் சொல்லிவிட்டுப் போவது ஹாலிவுட் வழக்கம். அது ரொம்பப் புத்திசாலித்தனமாக இருந்தால் வேண்டாம்’ என்றேன்.
ஷங்கர், ‘இருக்கட்டும். அதை நான் எப்படிக் காட்டுகிறேன் பாருங்கள்’ என்றார்.
ரகுவரன் இறக்குமுன் ஒரே ஒரு ‘இண்டர்கட்’டாக அந்த இண்டர்வியூவின் ஒரு கேள்வி பதிலை ப்ளாக் அண்ட் ஒயிட்டில் போட்டார். அர்ஜுன் நிருபராக இருந்தபோது முதலமைச்சராக இருந்த ரகுவரனை எடுத்த பேட்டி அது.
அதுதான் கதையின் முக்கியத்திருப்பம். அதை அவ்வாறு ‘இண்டர்கட்’டில் போட்டபோது பாமர மக்களுக்கும் அதைப் புரியவைத்துவிட்டார். டைரக்டரும் திரைக்கதை எழுதுபவரும் ஒத்துழைத்துச் சினிமாவின் அத்தனை சாத்தியம் பயன்படுத்தி ஒரு நல்ல காட்சியை அமைப்பதற்கு உதாரணம் ஷங்கர்.
---
திரைக்கதை எழுதுவது எப்படி?
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
ரூபாய். 80
131 பக்கங்கள்
---
இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். பலமுறை பார்த்தும் சலிக்கவில்லை. மனிஷாவை தவிர எல்லாம் சரியாக இருந்ததென நான் நினைக்கும் படம். ஆக்ஷன் படங்கள் பிடித்துக்கொண்டிந்த காலத்தில், அந்த இண்டர்வியூ காட்சி ஒரு ஆக்ஷன் காட்சியாகத்தான் தெரிந்தது.
வழக்கமாக வரும் ஒரு நீள சண்டைக்காட்சியை கிளைமாக்சில் வைக்காமல், ஒரு டயலாக் சீனை வைத்து விறுவிறுப்பு ஏற்படுத்திய படம்.
கமர்ஷியல் படம் என்றாலும், கமர்ஷியல் ஐட்டம் என்று தேவையில்லாதது எதையும் இந்த படத்தில் ஷங்கர் திணிக்கவில்லை. (பாடல்களை தவிர... அது இல்லாம எப்படி?) காரணம், ஒருவேளை ஷங்கர் தயாரிப்பு என்பதாகக்கூட இருக்கலாம்.
.
12 comments:
நல்ல பதிவு... வழக்கமாய் தமிழ் இயக்குனர்களை திட்டே பதிவுகள் வரும் மாறாக பாராட்டி உள்ளீர்கள்..
படித்தேன், பார்த்தேன், ரசித்தேன் !
நன்றி :)
ம்ம் நானும் இந்தப் படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். என்ன நீங்கள் சொல்வது போல மனிஷா ஏதோ டீன் ஏஜ் பெண் போல செய்யும் முகச் சுழிப்புகள்தான் பார்க்கச் சகிக்காது. ஒவ்வொரு முறை பார்க்கையிலும் புதிதாய் ஏதோ தெரியும். சுஜாதா வசனங்களும் இந்தப் படத்தில் ரொம்பவேஷார்ப்
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஷங்கர் போன்றவர்கள் தமிழ் ரசிகர்களை ரொம்பவும் பாமரத்தனமாய் கருதி வலிந்து காட்சிகளை விளக்குகிறார்களோ?
நன்றி பேநா மூடி...
படித்து, பார்த்து, ரசித்து, பின்னூட்டமிட்டதற்கு நன்றி, டாக்டர்... :-)
நன்றி தர்ஷன்...
சில படங்கள் ஓடாவிட்டால், சிலருக்கு புரியவில்லை என்று அதைத்தான் காரணம் சொல்லுவார்கள். அதுதான் தமிழ்ப்பட இயக்குனரின் சிரமம். எல்லோருக்கும் புரிய வேண்டும். பிடிக்க வேண்டும்.
இந்தக் காட்சியில இருக்கிற ஓட்டை தெரியலைங்களா? முதல்வரைப் பார்க்க வரும் யாரும் துப்பாக்கி எடுத்துட்டு வர முடியாது. விசாரணை வந்தா அர்ஜீன் எப்படி சமாளிப்பாரு? ஆனாலும் நான் ஷங்கரின் தீவிர ரசிகன். சொல்லப்படுற விதத்துலதான் இயக்குனரின் திறமை இருக்கு. அதுல ஷங்கர் King of the King
//விசாரணை வந்தா அர்ஜீன் எப்படி சமாளிப்பாரு?//
இளா, இப்படி ஒரு காட்சியமைப்பு படத்தில் இருந்திருந்தால், அதையும் நாம் நம்பும்படி ஷங்கர் காட்டியிருப்பார்.
//இந்தக் காட்சியில இருக்கிற ஓட்டை தெரியலைங்களா? முதல்வரைப் பார்க்க வரும் யாரும் துப்பாக்கி எடுத்துட்டு வர முடியாது. விசாரணை வந்தா அர்ஜீன் எப்படி சமாளிப்பாரு? //
அது அர்ஜூனின் துப்பாக்கிதானே. அதை ரகுவரன் எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்று அவசியம் இல்லையே.
அர்ஜூன் மேசையில் இருந்ததை எடுத்து சுட்டு விட்டதாக கூற வேண்டியது தான்
இயக்குனருக்கு பதிலாக டாக்டரே சொல்லிவிட்டார்....
T V channel officer, இன்டர்வியு சமயத்தில் ரகுவரன் தடுமாறுவதை பார்த்து what happening என்று கேட்பார். உடனே மணிவண்ணன், "ம்...அரங்கநாதனை கோரங்கனாதனா ஆக்கிட்டான் " அப்படின்னு சொல்லுவார். இப்படி சின்ன சின்ன வசனங்களும் கூர்மையாகத்தான் இருக்கும்.
//தர்ஷன் said...
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஷங்கர் போன்றவர்கள் தமிழ் ரசிகர்களை ரொம்பவும் பாமரத்தனமாய் கருதி வலிந்து காட்சிகளை விளக்குகிறார்களோ?//
அப்படி குறை சொல்ல முடியாது. நம்ம ஊர் திரையரங்கங்களில் உள்ள இரைச்சல் தவிர ரசிகர்களின் சத்தத்தால் வசனம் புரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆங்கிலம் தெரியாத எவ்வளவோ பேர் படம் பார்க்க வருவார்கள். இன்டர் கட்டில் அந்த காட்சியை போட்டது சரியே.
இது என் கருத்து.
Post a Comment