இந்த முறை புத்தகத்திருவிழாவில் கலந்துக்கொள்ள ஏகப்பட்ட தடைகள். பத்து நாட்களாக நடந்து கொண்டிருந்தாலும், கடைசி நாளில் தான் போக முடிந்தது. அன்றும் பல தடைகள்.
பைக்கில் என் நண்பனுடன் கோரமங்களா ஃபோரமை கடக்கும்போது, வண்டி லம்ப தொடங்கியது. நிறுத்தி வீலை பார்த்தால், புஸ். என்ன பண்ணலாம்? கொஞ்சம் யோசித்துவிட்டு, வண்டியை கோரமங்களாவிற்குள் உருட்ட தொடங்கினோம். ஆட்டோகாரர்களிடம் பஞ்சர் கடையை கேட்ட போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் கையை காட்டினார்கள். ஆனால், விரைவிலேயே ஒரு இன்ஸ்டண்ட் பஞ்சர் கடையை கண்டுப்பிடித்தோம்.
அடையார் ஆனந்த பவன் பக்கத்தில், ஒருவர் மரத்தடியில் ஒரு பெட்டியுடன் அமர்ந்திருந்தார். பெட்டிக்குள் பஞ்சர் பார்க்கும் உபகரணங்கள். ஆஹா! நமக்குன்னு பஞ்சர் பார்க்க, இப்படியெல்லாம் வழி செஞ்சு வச்சிருக்காங்களே’ன்னு அவர் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது. அது கொஞ்ச நேரம் தான் நிலைத்தது.
டயரை கழற்றும் முன்பே, எனக்கு இன்று கண்டிப்பாக ட்யூப் மாற்றவேண்டியிருக்கும் என்று தீர்மானமாக தெரியும். ஏனெனில், பல முறை பஞ்சர் போடப்பட்டு எச்சரிக்கைக்கு உள்ளாகியிருந்தேன். ஒவ்வொரு முறையும் வேறு எங்காவது நல்ல ட்யூப் வாங்கி மாற்றலாம் என்றிருந்தேன். டயரை கழற்றி ட்யூப்பை பார்த்தால், பேரதிர்ச்சி. எனக்கல்ல.
ஒரு ஆணி குத்தி, அதன் பிறகு வண்டியை உருட்டியதில் ட்யூப் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.
”ட்யூப் இன்னைக்கு (சண்டே) கிடைக்குமா?”
”கிடைக்கும். நான் வாங்கிட்டு வந்திருவேன்.”
“எவ்ளோ?”
“கடையில 290. நான் 260க்கு வாங்கி தாரேன்”
யம்மாடி. நான் கேள்விப்பட்டவரை 100-150 தான் இருக்கும். வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோரமங்களாவில் இருக்கும் நண்பருக்கு போன் செய்தேன். அவர் பக்கத்திலேயே ஒரு கடையை சொன்னார். அது பூட்டிக்கிடந்தது. கொஞ்சம் நடந்ததில் இன்னொரு கடையை கண்டுப்பிடித்தேன். 140க்கு வாங்கி கொடுத்து, பழையப்படி கிளம்பினோம்.
---
புத்தக கண்காட்சி நடக்கும் மைதானம் அருகே இருக்கும் சாலை எங்கும் வாகன நெரிசல். இவ்வளவு மக்களும் புத்தகம் வாங்கவா வந்தார்கள்? என்றால் இல்லை.
அதே சாலையில் கொஞ்சம் தொலைவில் இருக்கும் தியேட்டரில் இருந்து வந்த மக்கள் வெள்ளம் கொஞ்சம். அப்படி என்ன படம் என்றால், 2012. உலகம் அழியிறத பார்க்க, எவ்ளோ ஆர்வம்? அதுவும் எவ்வளவு குதூகலத்தோடு, மகிழ்ச்சியோடு பார்த்துவிட்டு வருகிறார்கள்?
அந்த மைதானத்தில் பக்கத்தில் இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒன்று, ஆட்டோ எக்ஸ்போ. இன்னொன்று, ஒரு நடன நிகழ்ச்சி.
அது ஒரு கன்னட சானலில் நடைபெற்றுக்கொண்டிருந்த நடன நிகழ்ச்சியின் இறுதி போட்டி. நடுவர் - பிரபுதேவா. என் நண்பனிடம் விளையாட்டுக்கு கேட்டேன்.
“நாமளும் பார்க்க போவோமா?”
அவன் ஆவலுடன் கேட்டது, “நயன்தாராவும் இருப்பாங்களா?”
---
நான் போன நேரத்திற்கு புத்தகக்கண்காட்சியில் நல்ல கூட்டம். நுழைவு கட்டணம் - 20 ரூபாய். ஓவர் தான். இருந்தாலும், பார்க்கிங்கிற்கே சில இடங்களில் அவ்வளவு கொடுக்கவேண்டி இருப்பதால், ஒகே. ஒருமுறை எல்லாக்கடையையும் பார்த்துவிட்டு பிறகு வாங்க துவங்கலாம் என்று முடிவு செய்தோம்.
நிறைய சாமியார்கள் கடை போட்டிருந்தார்கள். எல்லா மொழிகளிலும் சாமியார்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். கொஞ்சம் புத்தகங்களை வைத்துக்கொண்டு, மற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தது.
ஒருமுறை நான் எழுதிய கதைக்கு முரளிகண்ணன் பின்னூட்டத்தில் ஓ. ஹென்றியின் கதை போலுள்ளது என்று பாராட்டியிருந்தார். யார்ரா அது? நம்மள மாதிரி (டேய்...) சரி, நாம யாரு மாதிரியோ எழுதுறோமாமே, அவரு யாரு? அவரு கதை எப்படி இருக்கும்’ன்னு படிக்க ஒரு ஆர்வம் இருந்தது. அவருடைய அனைத்து கதைகளும் கொண்ட புத்தகம் ஒன்று மலிவு விலையில் ரூ. 150க்கு வைத்திருந்தார்கள். கவனித்துக்கொண்டேன்.
குழந்தைகளை கவரும் வகையில் தான் நிறைய புத்தகக்கடைகள் இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட, நிறைய கன்னடப்புத்தகக் கடைகளும் இருந்தன. ஒரு ரவுண்ட் வருவதற்குள்ளேயே, கால் வலிக்க ஆரம்பித்தது. நேரமும் நிறைய போயிருந்தது. அதனால், புத்தகங்கள் வாங்க துவங்கினேன். வாங்க நினைத்திருந்த பல புத்தகங்கள் மறந்து போய்விட்டது.
கிரடிட் கார்டு வசதி இல்லாத கடைகளுக்காக, ஒவ்வொரு கடைவரிசையின் ஆரம்பத்திலும் ஒரு டேபிளில் கிரடிட் கார்ட் மெஷினுடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். ஸ்வைப் பண்ணியபிறகு, கடை பெயருக்கு பணத்தை வரவு வைத்துக்கொண்டார். கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் மெஷின் இருந்தும், நான் போன நேரம் அது வேலை செய்யவில்லை.
லேட்டாக சென்று, மெதுவாக எல்லாக்கடையையும் சுற்றி பார்த்து, பிறகு வாங்கி வெளியே வந்ததால், நேர நெருக்கடியின் காரணமாக இரண்டே இரண்டு மிளகாய் பஜ்ஜியுடன் முடித்து கொண்டு கிளம்பினோம்.
வீட்டிற்கு செல்ல செல்ல, வாங்க மறந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. சரி, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.
.
4 comments:
என்ன books வாங்குணீங்க
கார்த்திக்,
சொல்றேன்... சொல்றேன்...
எப்போழுதும் சென்னையில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு போகும் முன்னரே எந்த ரேஞ்சுக்கு வாங்க வேண்டும், எந்த மாதிரி புத்தகங்கள் என்று மனதிற்குள் சின்ன கணக்குகள் போட்டுக்கொள்வோம் நானும் என் உடன் பிறப்பூம்!!!
உள்நுழைந்ததும் நீங்கள் சொன்ன மாதிரி முதலில் வெறும் ரவுண்டிங் மட்டும்தான்...ஆனால் அப்போதே ஒரு பேப்பரில், வாங்கக் கூடிய புத்தகத்தின் பெயர், விலை விபரம் கடை எண் எல்லாம் எழுதி வைத்துக் கொள்வோம்....
ரவுண்டு முடிந்ததும், ஒரு ஜூஸ் குடித்துக் கொண்டே அவன் லிஸ்ட், என் லிஸ்ட் எல்லாம் சரி பார்த்துக் கொண்டு, எதெது என்று முடிவு செய்துவிட்டு நேராக அங்கு சென்று வாங்கிவிடுவோம்...
எப்போதும் புத்தகத் திருவிழாவில் கொஞ்சம் அதிக விலைக்கும், அதிகமான புத்தகங்களும் வாங்குவதால் இந்த ஏற்பாடு எங்களுக்கு அதிக உபயோகமாக இருக்கிறது...ஒண்ணு ரெண்டு புக்கு வாங்குறதுக்கு இப்பிடி பண்ணா, அப்புறம் எல்லாரும் “ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாது’ன்னு சொல்லிடுவாங்க....
நல்ல பதிவு!!!
நரேஷ்,
பயங்கர ஸ்ட்ரடஜியா இருக்கிறதே?
Post a Comment