Thursday, November 12, 2009

அத்வானி

என்னுடைய பள்ளிக்காலத்தில் என் வீட்டிற்கு வரும் ஒரு குடும்ப நண்பர், விளையாடலாம் என்று சொல்லி ஒருமுறை ஒரு மைதானத்திற்கு அழைத்து சென்றார். அவர் சொன்னது போலவே, நிறைய பேர் அங்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் காக்கி டவுசர் அணிந்திருந்தனர். சிலர், சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார்கள். நிறைய பேசுவார்கள். பெரும்பாலும், தேசபக்தியை சார்ந்தே இருக்கும். அந்த இடத்திற்கு பெயர் - ஷாகா. இயக்கம் - ஆர்.எஸ்.எஸ்.



நான் ரெண்டு மூன்று வாரங்கள் சென்றிருப்பேன். பிறகு, இன்னொரு கோஷ்டியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டேன். அத்வானியும் என்னைப் மாதிரித்தான் போல. கொஞ்சம் வித்தியாசம். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவரை, ஷாகாவுக்கு அவரது கல்லூரி நண்பர் அழைத்து செல்ல, அதன் பின் ஆர்.எஸ்.எஸ்., அரசியல், பாரதிய ஜனதா, பாபர் மசூதி, துணை பிரதமர், பிரதமர் வேட்பாளர் என்று எங்கெங்கோ சென்று, இன்றும் தினமும் பேப்பரில் அவர் பெயர் அடிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கர்நாடகா ஆட்சி போன்ற தீவிர பிரச்சினைக்களுக்கு அவர் உதவி, பாஜகவுக்கு இன்னமும் தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் அதை பேப்பரில் படித்து கொண்டிருக்கிறேன். அத்வானி பற்றி புத்தகங்களில் படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஆர். முத்துக்குமாரின் ’அத்வானி’ புத்தகத்தில் இருந்து அத்வானி பற்றி நிறைய தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன். இப்போதைய பாகிஸ்தானில் அப்போது பிறந்தார் என்று தெரியும். ஆர்.எஸ்.எஸ். பேக்கிரவுண்ட் தெரியும். பிறகு பாஜக கட்சியில், ஆட்சியில் அவருடைய பங்கை பற்றி அவ்வப்போது செய்திதாள்களில் படித்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் டூ பாரதிய ஜனசங்கம், பாரதிய ஜனசங்கம் டூ ஜனதா மோர்ச்சா டூ ஜனதா, ஜனதா டூ பாரதிய ஜனதா என்கிற அவரது அரசியல் பாதையை, இந்த புத்தகத்தில் தான் விளக்கமாக படித்து தெரிந்துக்கொண்டேன்.

நான் சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்ட நபர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒரளவுக்கு தொடர்ந்து கவனித்து வருகிறேன். நான் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல விஷயங்கள், பாஸிட்டிவ் சமாச்சாரங்களைத்தான் முதலில் கவனிப்பேன்.

ஆர்.எஸ்.எஸ். இல் அப்படி நான் கண்ட சில நல்ல விஷயங்கள். விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம். தேசப்பக்தி. எதிலும் ஒரு ஒழுங்கு. இதில் தேசப்பக்தி என்பது தான் பிரச்சினைக்குரியது. அதற்கு முன் ஒழுங்கைப் பற்றி நினைவுக்கு வரும் நிகழ்ச்சி. அவர்கள் நடத்திய ஒரு குரு பூஜையில் கலந்துக்கொள்ள சென்றிருந்தேன். அரங்கத்திற்கு வெளியே காலணிகளை கழற்றிவிட்டு செல்ல வேண்டும். அந்த காலணிகளை அவர்கள் வரிசையாக அடுக்கி வைத்திருந்த அழகை பார்த்து அசந்துவிட்டேன். நீள நீளமாக, நிறைய இடங்களை எடுத்துக்கொண்டு எந்த குழப்பமும் இன்றி அருமையாக இருந்தது. அவ்ளோத்தான், ஒழுங்கு பற்றி.

தேசப்பக்தி. இதில் என்ன பிரச்சினை என்றால், இந்தியா என்பது ஹிந்துக்களுக்கான தேசம் என்ற கருத்து. தேசத்தின் மீதான பக்தி என்பது முழுக்க முழுக்க ஹிந்துத்துவா மீதான பக்தியாகும்போது, பிரச்சினை கிளம்புகிறது. மற்ற மதத்தினரின் மேல் வன்மம் காட்டும்போது, அவர்களிடம் இருக்கும் பாஸிட்டிவ் எல்லாம் நெகடிவ் ஆகிவிடுகிறது.

ஹீரோ ஆகவேண்டிய அத்வானி வில்லனாகுவதும் இதனால் தான். ஸ்வயம் சேவக் என்கிற கான்செப்ட்டே அருமையானது.

”சுயமான ஊக்கத்துடன், சுயமான விருப்பத்துடன் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு தன்னலத்தைத் தியாகம் செய்கின்ற உணர்ச்சியைப் பெற்றவனே ஸ்வயம் சேவக். அவன் தேசியப்பார்வை கொண்டவன். தேச முன்னேற்றமே அவனுடைய லட்சியம். இனி என்னுடைய வாழ்க்கை தேசத்துக்குத் தொண்டு செய்வதற்காகவே எஞ்சியுள்ளது என்று நினைப்பவன்.”

இதைத்தான் லட்சியமாகக் கொண்டு செழிப்பான குடும்பத்தில் பிறந்த அத்வானி, கரடுமுரடான பாதையை தேர்ந்தெடுத்தார். இயக்கத்திற்கு உறுதுணையாக அரசியல் பாதையை எடுக்கும்போதும் பிரச்சினையில்லை. இந்திராவின் அராஜகத்திற்கு எதிராக போராடியபோதும் பிரச்சினையில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற, ஹிந்து ஓட்டுக்களை ஒரு சேர கவர, அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் தான் பிரச்சினைகள். அது அவருக்கு வெற்றிகளை கொண்டுவந்தாலும், மனிதாபிமானத்தை வெகுதூரம் விரட்டிவிட்டது.

ஹிந்து ஓட்டுக்களைக் அப்படி சிந்தாமல் சிதறாமல் எடுக்க, அவர் போட்ட கணக்குத்தான் பாபர் மசூதி பிரச்சினை. புத்தகத்தின் ஆரம்பத்திலேயே, அயோத்தி சம்பவத்தை லைவ்வாக எழுத்தில் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இதற்காக அத்வானி நடத்திய ரதயாத்திரை, கரசேவை போன்றவை அடுத்த வந்த தேர்தல்களில், பிரமாதமான ஓட்டு சதவிகிதத்தை பெற்று தந்தது. இங்கு குற்றவாளி ஒருவர் மட்டுமில்லை. மத ரீதீயாக அத்தனை சதவிகித மக்கள் ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார்கள். மதவாதிகளுக்கு இவர் முகத்தையும், மிதவாதிகளுக்கு வாஜ்பாய் முகத்தையும் காட்டி ஆட்சியை பிடித்தது தான் உச்சம். அதற்கு பிறகு இறங்கு முகம் தான்.

அதிகாரத்திற்கு வருவதற்கு முன்புவரை இரும்பு மனிதராக காணப்பட்டவர், ஆட்சிக்கு பிறகு பலவீனமானவராகவே காட்சியளிக்கிறார். இதற்கு காரணம், பல விஷயங்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததே. முக்கியமாக, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள். கந்தஹார் விமான கடத்தல், நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதல்... எக்ஸ்ட்ரா... எக்ஸ்ட்ரா... ஆட்சியில் இல்லாதபோது, தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு சலனப்பட கூடாது என்றவர் அத்வானி. ஆனால், அவரே உள்துறை அமைச்சராக இருந்தபோது, தாலிபான் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து சிறையில் இருந்த தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டி வந்தது.

இப்படி ஸ்வயம் சேவக் முதல் உள்துறை அமைச்சர், துணை பிரதமர், பிரதமர் வேட்பாளர் என அத்வானியின் பலமுகங்களை எடுத்து காட்டியிருக்கிறார் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார். இவர் ஏற்கனவே இந்திரா பற்றிய புத்தகம் எழுதியிருப்பதாலோ என்னவோ, இந்திரா பற்றிய அத்தியாயங்களை மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். இதனால், படத்தின் நடுவே சில ரீல்களில் காணாமல் போகும் ஹீரோவை போலாகிறார் அத்வானி. அத்வானி திருமணம் செய்துக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக ஒரு அத்தியாயம் முடிந்திருந்தது. ஆனால், அதற்கு பிறகு அவர் திருமணம் செய்துகொண்டது பற்றி எதுவும் சொல்லவில்லை. அத்வானியுடன் பிரச்சாரங்களில் பங்குபெறும் அவர் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் எதுவும் சொல்லப்படவில்லை.

இந்த புத்தகம் எனக்கு அத்வானி என்கிற அரசியல் தலைவரின் வரலாறு என்பதாக மட்டுமில்லாமல், ஜனநாயக இந்தியாவின் முக்கிய அத்தியாயங்களை புரட்டிப்பார்க்கும் வாய்ப்பை அளிக்கும் புத்தகமாகவும் இருந்தது. குறிப்பாக, எமர்ஜென்சி, மதவெறி அரசியல். தவிர, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, வி.பி.சிங், சரண் சிங் என வேறு பல அரசியல்வாதிகளின் குணாதிசயங்கள் (அப்படி குறிப்பிடத்தக்க வகையில் கவர்ந்தது - அத்வானியை துணிச்சலாக கைது செய்த லாலுவின் ஹீரோயிசம்). சுதந்திர இந்தியாவின் முக்கிய கட்சியும், காங்கிரஸை தவிர நிலையான ஆட்சியை கொடுத்த ஒரே கட்சியுமான பாரதிய ஜனதாவின் வளர்ச்சியை புரிந்துக்கொள்ளவும் உதவும் புத்தகம் இது.

அத்வானி
ஆர்.முத்துக்குமார்
கிழக்கு பதிப்பகம்
184 பக்கங்கள்
ரூபாய் 80

புத்தகம் வாங்க இங்கு க்ளிக்கவும்.


.

6 comments:

மகேந்திரன் said...

நல்ல பதிவு சரவணா..
சுயசரிதைகளை நீங்கள் அலசும் விதம் எப்போதுமே அருமை..
#இங்கு குற்றவாளி ஒருவர் மட்டுமில்லை.
மத ரீதீயாக அத்தனை சதவிகித மக்கள் ஆதரவு
கரம் நீட்டியிருக்கிறார்கள்.#
நிதர்சனம்..!!

Karthick said...

ம்ம்ம்ம்... nice topic to argue...

நரேஷ் said...

நல்லதொரு அறிமுகம்!!!

புத்தகத்தைக் கூடிய விரைவில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் படிவு!!!

சரவணகுமரன் said...

நன்றி மகேந்திரன்

சரவணகுமரன் said...

கார்த்திக், இன்னும் விவாதிக்கலாம்

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்