பள்ளியில் இருக்கும்போது, ஒருநாள் எங்கள் பிரின்சிபால் எல்லோரையும் நூலகத்தில் மெம்பராக சொன்னார். எங்கள் ஊரில் மூன்று நூலகங்கள் அப்போது இருந்தன. அதில் எங்கள் வீட்டில் இருந்து அருகாமையில் இருக்கும் ஒரு நூலகத்திற்கு சென்றேன். அது ஒரு கிளை நூலகம். மெயின் ரோட்டில் இருந்தாலும், சந்து பொந்து வழியாக சென்றுவிடலாம்.
நூலகர் திருநீறு பூசிக்கொண்டு வெள்ளை வேஷ்டி சட்டையுடன் இருப்பார். உறுப்பினராக வேண்டும் என்றதற்கு பச்சைக்கலரில் ரசீது போல இருந்த ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து, தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கிகொண்டு, முப்பத்தைந்து ரூபாய் கொண்டு வர சொன்னார். எல்லாம் ஆயிற்று. தொடர்ந்து போக தொடங்கினேன்.
பள்ளியில் எதற்கு திடீரென்று சேர சொன்னார்கள் என்று தெரியவில்லை. கூட்டம் சேர்க்க சொல்லி ஏதும் உத்தரவு வந்ததா? இல்லை, மாணவர்கள் மீதான உண்மையான அக்கறையா? தெரியவில்லை. எதுவோ, அவர்களது எண்ணம் நூலகம் சென்று மாணவர்கள் பொது அறிவை வளர்ப்பார்கள் என்பதாக இருந்திருக்கும். ஆனால், நான் அங்கே முழுக்க முழுக்க படித்த புத்தகங்கள் - கதை புத்தகங்கள்.
அது பழையக்கால கட்டிடம். கீழே வேறு ஏதோ அலுவலகம் இருந்தது. மேலே, நூலகம். நுழையும் முதல் அறையில் நோட்டீஸ் போர்டு இருக்கும். பிறகு, ஒரு பெரிய ஹால். அங்கே தினசரி நாளிதழ்கள், வார, மாத பத்திரிக்கைகள் அடுக்கி வைத்திருப்பார்கள். இரண்டு மூன்று பெரிய மேஜைகள் இருக்கும். அதில் உட்கார்ந்து படிக்க, வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். குமுதம், ஆனந்த விகடனுக்கு தான் அங்கு பயங்கர டிமாண்ட். இதனால், பொதுவாக அந்த புத்தகங்களை நூலகர் தன்னுடைய மேஜை டிராயரில் வைத்திருப்பார். அவருக்கு தெரிந்தவர்கள், யாராவது கேட்டால் மட்டும் கொடுப்பார்.
புத்தகம் இருக்கும் அறையில் மூன்று ரேக்குகள் உண்டு. வகை வகையாக, துறைவாரியாக அடுக்கி வைத்திருப்பார்கள். நாளடையில், எது எங்கே இருக்கும் என்று பழக்கமாகிவிட்டது. ஒரு சமயத்தில், ஒரு புத்தகம் தான் எடுக்க முடியும். படிக்கவேண்டும் என்று நினைக்கக்கூடிய இரு புத்தகங்கள் கிடைத்துவிட்டால், ஒன்றை யாரும் செல்லாத ரேக்கில் கொண்டு மேலே வைத்துவிடுவோம். அடுத்தமுறை வரும் வரை, யாரும் எடுத்திருக்க மாட்டார்கள்.
தொடர்ந்து செல்ல செல்ல, அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டது. டவுசருடன் செல்லும் சிறுவனாக இருந்ததால், வேலை வாங்க ஆரம்பித்தார். விடுமுறைக்காலங்களில் மாலை நேரத்தில், எதிரே இருக்கும் ஹோட்டலுக்கு சென்று, நான் தான் அவருக்கு தினமும் டீயும், பஜ்ஜியும் வாங்கிவர வேண்டும். நானும் ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு இந்த வேலைகளை செய்து வந்தேன்.
என்னுடன் வரும் என் நண்பன் ஒருவன், நூலகத்தில் இருந்து புத்தகங்களை ஆட்டைய போடுவதில் கில்லாடி. நான் இரண்டு வாரத்தில் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் படித்து கொண்டு இருக்கும் போது, அவன் சாவகாசமாக படித்து கொண்டிருப்பான். எனக்கு அந்தளவுக்கு விவரம் பத்தாததாலும், அதற்கு தைரியம் இல்லாததாலும் அதற்கு முயன்றதில்லை. துணையெழுத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் ஊரு விட்டு ஊரு சென்று நூலகத்தில் புத்தகம் திருட சென்றதை படித்த போது, இவனைத்தான் நினைத்தேன்.
இது எல்லாம், என் பத்தாம் வகுப்பு வரை மட்டும். அதன்பிறகு செல்லவில்லை. அந்த நூலகம் பூட்டப்பட்டுவிட்டது என்பதை மட்டும் அந்த வழியாக செல்லும்போது பார்த்து தெரிந்துக்கொண்டேன். என்னிடம் ஆயுள் சந்தா வாங்கிய நூலகத்திற்கு, ஆயுள் நீடிக்கவில்லை.
---
இந்தமுறை ஊருக்கு சென்றிருந்தபோது, மழை தொடர்ந்து பெய்துக்கொண்டிருந்தால் வெளியே சுற்றவும் செல்லவில்லை. பார்க்க தைரியம் இல்லாத படங்கள் தான் ஓடிக்கொண்டிருந்தால், படத்திற்கும் செல்லவில்லை. ரொம்ப நாளாக செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த நூலகத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால், இப்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.
ஒரு நண்பனிடம் கேட்டேன். அவன் கல்லூரி படிக்கும் அவனுடைய இன்னொரு நண்பனின் நம்பரை கொடுத்து பேச சொன்னான். அவன் குத்துமதிப்பாக ஒரு இடத்தை சொன்னான். பிறகு, அவன் சொன்ன இடத்திற்கு சென்று, அங்கு இருந்தவர்களிடம் விசாரித்து, ஒரு வழியாக கண்டுப்பிடித்தேன். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்குமாம். இரண்டாம் சனியும், எல்லா ஞாயிறுகளும் விடுமுறையாம். முகப்பிலேயே எழுதி வைத்திருந்தார்கள்.
கண்டிப்பாக தமிழில் பெயரை எழுத சொல்லி ஒரு பதிவேடு வைத்திருந்தார்கள். அருகில் உள்ள மேஜையில் ஒரு அம்மணி உட்கார்ந்திருந்தார். அவருக்கு பின்னால் இருந்த சுவரில் கலைஞர் சிரித்துக்கொண்டிருந்தார். பல வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அதே கேள்வியை கேட்டேன். இந்தமுறை கொஞ்சம் வேறு மாதிரியான படிவத்தை கொடுத்து, கெஸட் ஆபிசர் கையெழுத்து, ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர் கையெழுத்து, ரேசன் கார்டு ஜெராக்ஸ், அறுபது ரூபாய் கொண்டுவர சொன்னார். தமிழில் தான் நிரப்ப வேண்டும் என்பதை திருப்பி திருப்பி கூறினார். எத்தனை கையெழுத்து வாங்குவது என்றெண்ணி, அப்படியே திரும்பி போகலாமா என்று நினைத்துக்கொண்டேன். இந்த நூலகத்தில், தினசரி, வார பத்திரிக்கைகள் இருக்கும் மேஜையும் மற்ற புத்தகங்கள் இருக்கும் ரேக்குகளும் ஒரே அறையில் நான் பார்க்கும்படி இருந்தது.
இங்கு உள்ள புத்தகங்களை இங்கேயே படிக்கலாமா? அதற்கும் உறுப்பினராக வேண்டுமா? என்று கேட்டேன். இல்லை. படிக்கலாம் என்றார். அவர் கொடுத்த விண்ணப்பத்தை அப்படியே மடித்து பாக்கெட்டில் வைத்து உள்ளே நுழைந்தேன்.
(தொடரும்)
12 comments:
//இரண்டாம் சனியும், எல்லா ஞாயிறுகளும் விடுமுறையாம்.//
வழக்கமாக இரண்டாம் சனி கிழமையும், எல்லா வெள்ளி கிழமையும் தானே விடுமுறை. இப்ப மாத்திடாங்களா ???
"என்னிடம் ஆயுள் சந்தா வாங்கிய நூலகத்திற்கு, ஆயுள் நீடிக்கவில்லை"
மிக அழகான வார்த்தைகள்.
இன்றைய மாணவர்கள் யாரும் நூலகம் செல்வார்களா என்பது கேள்விதான். வீட்டிலெயே கணினி இருக்கும் போது வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் புத்தகம் படிப்பதால் பொறுமையும் அமைதியும் கிடைக்கும் என்பது என் கருத்து.
library-i padithen.noolakam patriya oru nalla anubavam unkaludaiyathu.athu sari,kataip putthakangal paditthaal pothu arivu valaraathu endru yaar sonnaarkal?kathaip puthakangalil irunthu pothu arivu,varalaaru,man santha nutpangal,manitha vazvin etthanaiyo amsankal patriellaam ariya mudiyume?nandri....kamalalayan http://blogspot.com
நானும் நூலகம் போன
நினைவெல்லாம் வருது...நன்றி
ஓ! MSK... அதுதான் வழக்கமோ?
நன்றி சம்பத்....
என்னத்தான் கணினியில் ஏகப்பட்ட தகவல்கள் இருந்தாலும், புத்தகம் வாசிப்பதுபோல் வருவதில்லை.
//ஆனால் புத்தகம் படிப்பதால் பொறுமையும் அமைதியும் கிடைக்கும் என்பது என் கருத்து.//
அதான் நான் பொறுமையா, அமைதியா இருக்கேனோ? :-))
நன்றி ஜெயந்தி.
கதைகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் முழுக்க சரியே.
நானும் அது பற்றி எழுதியிருக்கிறேன்.
http://www.saravanakumaran.com/2009/08/blog-post_12.html
ஆனால் பள்ளியில் கதைகள் படிக்க நூலகம் சேர சொல்லியிருக்கமாட்டார்கள். அதுவும் நான் படித்த கதைகள்...
ஜெட்லி,
இப்ப போறதுண்டா?
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
இந்த பதிவு எங்கள் ஊர் அரசாங்க நூலகத்தை ஞாபக படுத்துது
நன்றி தமிழ்நெஞ்சம்
வருகைக்கு நன்றி அரவிந்த்
Post a Comment