---
சமீபத்தில் நண்பரின் திருமணத்துக்காக விழுப்புரம் சென்றிருந்தேன். முதல் நாளே சென்றதற்கு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியும் காரணம். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, நண்பர்களுடன் பேசியபடி அரங்கில் அமர்ந்திருந்தாலும் மேடையின் வலதுபுறம் நடந்துகொண்டிருந்த இசைக்குழுவின் ஆயத்தபணிகளை ஆவலாக கவனித்துக்கொண்டே இருந்தேன்.
சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட குழுவினர். துவங்குவதற்கு முன் அவர்கள் தத்தம் கருவிகளை முடுக்கிக்கொண்டு இருக்கும்போது வாசிக்கும் சிறு கோர்வைகளை என்ன பாடலென்று கண்டுபிடிப்பது எனக்கு மிகப்பிடித்தமான விஷயம். திருமண அரங்கில் இசை நிகழ்ச்சி என்பது, வியக்க வைக்கும் வண்ணக்கலவையில் சிறகுகளிருந்தும், கவனிக்கப்படாமல் குப்பையை கிளரும் சேவலை போன்றது. யாருமே ரசிக்காமல், சவுண்ட கொஞ்சம் கம்மி பண்ணு என்ற பாராட்டுகளுக்கிடையில் நிகழும் ஒரு நிகழ்ச்சி அது. அவர்களும், எப்போதும் கேட்டு சலித்த திருமணப்பாடல்களை (நூறு வருஷம் இந்த...) ஒரு மாற்றமுமின்றி பாடியபடியே இருப்பார்கள்.
இதிலும் வழக்கம் போல ஒரே ஒரு பாடகி. எனக்கு அவர்களை பார்க்கும் போதெல்லாம் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்த குழந்தை என்ன செய்து கொண்டிருக்கும் என்று யோசிப்பேன். அவர்களோ நள்ளிரவிலும் புன்னகை மாறாமல் பாடிக்கொண்டிருப்பார்கள். இசை நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் பொறுப்பு அவர்களுடையதே. ஏதேனும் ஒரு எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்தி பாடலையோ அல்லது சரவணப்பொய்கையில் நீராடியதையோ பாடி துவக்குவார்கள். நானும் அப்படி ஒன்றை தான் எதிர்பார்த்திருந்தேன்.
சற்றே அசுவாரஸ்யத்துடன் வெளியே மழையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த எனக்கு இதமான அதிர்ச்சி. இதுவரை நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கேட்டிராத ஒரு பாடலை அந்த பாடகி பாடத்துவங்கினார். ராகவனே ரமணா ரகுநாதா... என்ற அந்த பாடல் என்னை கட்டிப்போட்டது. நாங்கள் இறுதிவரிசையில் அமர்ந்திருந்ததாலும், நண்பன் கொணர்ந்து தந்த காபியின் ருசியினாலும் நான் பாடலில் ஒன்றினேன்.
அந்த பாடல் என்னை எங்கள் வீட்டில் முதன்முதலில் வாங்கிய ஒரு பிலிப்ஸ் டேப் ரெக்கார்டருடன், எங்கள் இல்லம் கழித்த காலத்துக்கு கொண்டு சென்றது. 1983ம் ஆண்டு ராஜாவின் இசையில் வெளிவந்த படம் "இளமை காலங்கள்", மணிவண்ணன் இயக்கத்தில் மோகன், சசிகலா (அறிமுக நாயகி) நடிப்பில் இதமாக மனதை வருடும் பாடல்களுடன்
வெற்றிபெற்றது. அந்த இசை நிகழ்ச்சியில் நான் கேட்ட ராகவனே ரமணா பாடல் இந்த படத்துக்காக சுசீலா மற்றும் ஷைலஜாவால் பாடப்பட்டது. அப்போதெல்லாம் கம்பெனி கேசட் என்பது பிரபலமாதலால், படத்தின் எல்லாப்பாடல்களும் நமக்கு பரிச்சயமாகிவிடும்.
இந்த பாடலை தவிர ஜேசுதாஸ் ரசிகர்களின் தொகுப்பில் கண்டிப்பாக இருக்கும் "ஈரமான ரோஜாவே... என்னைப்பார்த்து..." மற்றும் சுசீலாவுடன் ஜேசுதாஸ் பாடிய "பாடவந்ததோர் கானம்..." எல்லாம் எங்கும் ஒலித்த பாடல்கள். ஆனால் எனக்கான பாடலொன்று... எப்போதும் சிறு புன்னகையோடு நான் ரசிக்கும் பாடலொன்று அந்த படத்திற்காக எஸ்.பி.பி & ஜானகி பாடியது. அது... "இசைமேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்..."
காதலின் ரகசிய தருணங்கள் எல்லாம் ஓய்ந்து போய், இருப்புகளும் இயக்கங்களும் மிக வெளிப்படையாக பரஸ்பரம் அறியப்படும் சர்க்கரையில் தோய்த்த நிமிஷங்களுக்கானது இந்த பாடல்.
ஜானகியின் மிக மெலிதான ஒரு ஹம்மிங் துவங்கும். அடுத்தவரியில் எங்கெங்கோ மறைந்திருந்த தோழிகள் பாடிக்கொண்டே வெளிவருவது போல சேர்ந்திசை குரல்கள் (chorus) இணைந்து கொள்ளும். அடுத்த வரியில் வயலின்களின் படையெடுப்பு... இறுதியில் ட்ரிபிள் தாளக்கட்டு... பல்லவி முடிவில் எஸ்.பி.பி இணைவார்.
முதல் சரணம் துவக்கத்தில் அதி மென்மையான ஹம்மிங் ஒன்றை ஜானகி துவக்குவார் அதை கோரஸ் பெண்கள் முடித்துவைப்பர். எப்போதும் சரணம் முடியும் போதுதானே தாளம் இடைவெளி கொடுக்கும்? ஆனால் இதில் ஜானகி கன்னிக்கரும்பு... எனும்போதே தாளம் இருவினாடி ஒடுங்கும்.இடையிலும், இறுதிப்பல்லவியிலும் ஜானகி இசைமேடையில் என்று பாடும்போதே எஸ்.பி.பியும் அதை வசனம் போல கீழஸ்தாயியில் சொல்லிக்கொண்டே வருவார்...
வழக்கமான தபேலா இசையின்றி, சற்றே துள்ளலான ஆனால் இதமான தாளத்தில் சொக்க வைக்கும் மெட்டு. பாடல் முழுவதுமே தொடரும் கோரஸ் குரல்கள். இது போதாதென்று வாலியின் வரிகள்.
"கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்க... வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க" என்று அவர் பாடும் போது உங்கள் கைகள் யார் தலையையேனும் கோதிக்கொடுக்க தேடும். பாடல் முடிவதும் ஒரு ஹம்மிங்குடன். எஸ்.பி.பி ஒரு ஹம்மிங்கை நூல் பிடித்தாற்போல பாட, ஜானகி சற்றே விலகி மேலே போய் முடிப்பார்... நீங்களும் கேட்டுப்பாருங்கள்...
.
இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்...
முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
நெஞ்சுக்குள்ளே தீயிருந்தும்
மேனியெங்கும் பூவசந்தம்...
கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்...
கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்க
வந்துதொடும் உன் கைகள் வகிடெடுக்க
போதைக்கொண்டு பூ அழைக்க
தேடிவந்து தேனெடுக்க
தங்கக்கொழுந்து தொட்டவுடன் பூவாக...
இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்...
-மகேந்திரன்.
---
பாடலைக் காண படத்தை க்ளிக்கவும்.
.