---
அதிகம் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமலோ, கிடைத்தும் கவனித்து கேட்காமலோ தவற விட்ட பாடல்கள் சில என்னை வெட்கப்பட வைக்கும். எப்படி தவற விட்டேன் என்பது எனக்கே வியப்பாக இருக்கும்.
சில வருடங்களுக்கு முன் ஆர்க்குட் வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, யாரோ ஒருவரின் புகைப்படத்தொகுப்பில் அவர் எஸ்.ஜானகியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் என்னை அவரோடு தொடர்புகொள்ள ஆவலை ஏற்படுத்தின. சிலநாட்களில் தொடர்பு கொண்டபோது ஒரு ஆச்சர்யம் அவர் வீடு, என் வீட்டிலிருந்த நடந்துபோகும் தூரம் தான்.
பழகுவதற்கு வெகு இனிமையான நபராக இருந்தார். எங்களின் பேச்சு பெரும்பாலும் ஜானகியையும் அவர் பாடல்களைப்பற்றியுமே இருந்தது. எப்போதுமே அவர் பெயரைகூட சொல்லாமல் அம்மா என்றே வாஞ்சையுடன் அழைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. வேறு பாடகர்களைப்பற்றியோ, வேறு பாடல்களைப்பற்றியோ பேசுவது கூட அவருக்கு விருப்பமில்லாததாக இருந்தது. ஜானகி தனக்கு வேண்டிய தன்னுடைய பாடல்களையே இவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் பாடல்களின் தொகுப்பு இருக்கிறது.
சில நாட்களுக்கு பின் என் தேர்வுகளின் பொருட்டு ஒரு மாதம் விடுப்பில் இருந்தபோது தினமும் அவரை சந்திப்பது வாடிக்கையானது. ஒரு கோடைக்கால மாலைப்பொழுதில் அவர் வீட்டின் மாடியில் அமர்ந்து கையில் தேநீருடன் பேசிக்கொண்டிருந்தோம். வழக்கமான பாடல்களைப் பற்றிய பேச்சு... தீராத பேச்சு...
நான் பலமுறை கேட்டிருந்த ஜானகியின் பாடல்களைக்கூட அவர் சிலாகித்து சொல்லும் போது இன்னும் இனிமையாக, உடனே மீண்டும் கேட்க வேண்டும் போல இருக்கும். நான் வெகு நாட்களாக கேட்க நினைத்த கேள்வி... ஜானகியின் அதிசிறந்த பாடலாக நீங்கள் நினைப்பது எது?
அவர் பதில் சொல்வதற்குள் என் மனதில் ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான், சின்னத்தாயவள் தந்த (இன்னும் பல) எல்லாம் யூகங்களாக விரிந்தன. சற்று நேரம், அடுத்த மாடியில் சிறுவர்கள் விடும் காற்றாடிகளை கூர்ந்து பார்த்துவிட்டு கேட்டார். நீ எப்பவாவது "பெண்மானே சங்கீதம் பாடிவா" பாட்ட கவனிச்சி கேட்டிருக்கியா?
எனக்கு ஆச்சர்யம்... நான் என்னென்னவோ பாடல்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அந்த பாடலை அவர் சொன்னது... இப்ப கேக்கலாமா? என்று கேட்டு விட்டு பதில் சொல்லுமுன் வா போலாம் என்றார். அன்று அவர் அறையில் கேட்டபோது அந்த பாடல் எனக்கு இன்னும் பிடித்துப்போனது. அதன்பின்பு என் ராஜா பாடல்களின் வரிசையில் அது ஒரு கெட்டியான இடம் பிடித்துக்கொண்டது..!!
1985 ல் வெளியான "நான் சிகப்பு மனிதன்" ஒரு வழக்கமான எஸ்.எ.சந்திரசேகரின் படம் தான் எனினும், ராபின் ஹூட் வரிசை கதையும் பாக்யராஜின் பாத்திரமும் படத்தை சிறப்பாக்கின. ராஜாவின் இசையில் எஸ்.பி.பி & ஜானகியின் குரலில் பெண்மானே சங்கீதம் பாடிவா... சற்றே வித்தியாசமான வரிகள் அது. வழக்கமான திரைக்கவிஞருடையது இல்லை என்று காட்டவே, தேடிய போது பாடலாசிரியர் திரு மேத்தா என்று தெரிந்தது.
முன்பு ஒருமுறை மேத்தா அவர்களை பல்கலைகழக தமிழ்த்துறை விழாவில் சந்தித்திருக்கிறேன்.அவரின் தோற்றத்தை மீண்டும் யோசித்தபோது அது பாடல் வரிகளுடன் இணங்கிப்போக மறுத்தது. அப்படி ஒரு எளிமையான மனிதர் மேத்தா. காதல் ததும்பும் வரிகள், பாடகர்களின் திறம், ராஜாவின் தவிக்கவிடும் மெட்டு உங்களைக்கூட நொடியில் அடிமையாக்கிடும்.
ராஜாவின் பல பாடல்களை கவனித்தால், பாடலின் துவக்கம் அதிநவீன மேலை பாணியிலும், சரணம் எளிமையான தபேலா பின்னணியிலும் இருக்கும். முடிவு, மீண்டும் மேற்கத்திய கருவிகளின் பிடியில் சிக்கும். அந்த வரிசையில் இதுவும் ஒன்று. ஜானகியின் ஹம்மிங்குடன் துவங்கும் பாடலின் பலம் கிதார். சரணத்தின் இறுதி வரிகளை வயலின் விடாமல் தொடரும்.
ஜானகியின் லாலல்லா இல்லாவிட்டால் ராஜாவுக்கு திருப்தியே வராதோ? இசைக்குழுவின் வாத்தியங்கள் அனைத்தும் தராத நிறைவு ஜானகியின் லாலல்லா அவருக்கு தந்துவிடும் போல. இரண்டாம் சரணம் துவக்கத்தில் லாலல்லா பாடிவிட்டு யாத்திரை ஏன்? என்று துவங்குவார், அதுபோதாமல் அவர் சொல்லும் "ஹோய்"... கேட்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புன்னகை வரும்.
"தேகமழை நானாகும் தேதியை தேடுவேன்... மேகவயல் நீயாக மேனியை மூடுவேன்..." என்பதை எஸ்.பி.பி பாடியிருப்பது ஒவ்வொரு முறையும் என்னை பித்துபிடிக்க வைக்கும். இன்னும் என்ன சொல்வது... கேட்டு பாருங்களேன்...
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்...
தேன்மழை நீ ஹோய்... மார்பிலே தூவவோ?
தேவதை நீ ஹோய்... நான் தினம் தேடவோ?
கையருகில் பூமாலை காதலின் கோபுரம்
மைவிழியில் நீதானே வாழ்கிறாய் ஓர்புறம்...
என்காதல் வானிலே பெண்மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் உலாவில்...
யாத்திரை ஏன் ஹோய்... ராத்திரி நேரமே?
போர்க்களம் தான் ஹோய்... பூக்களின் தேகமே...
தேகமழை நானாகும் தேதியை தேடுவேன்...
மேகவயல் நீயாக மேனியை மூடுவேன்...
கண்ணோரம் காவியம் கைசேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வாராதோ?
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்...
-மகேந்திரன்.
பாடலைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.
.
8 comments:
சூப்பர் பாட்டுங்க இது. ஒரு காலத்துல ரேடியோல எப்பவும் ஒலிச்சுகிட்டே இருக்கும்.
ஜானகியோட லலல்லா மாதிரி பாட இன்னைக்கு எந்த பாடகர்களுமே இல்லைன்னு நினைக்கிறேன்.
Long Live Janakima...still she have that mesmarizing voice - good post Mahendran and saravana kumaran. He deserve to publish all the post as a book.....why dont you try contacting kizhakku pathipagam...hope to see these in a book shape....
சின்னக்குழந்தை மாதிரி பாடுவதில் ஜானகிம்மாவுக்கு நிகர் அவங்கதான்.
அருமையா இருக்கு பதிவு
hello Mahen..,
After I saw this movie , from that day It became my most favourite song for ever
நன்றி சின்ன அம்மிணி, நன்றி கார்த்திக், நன்றி புதுகை தென்றல், நன்றி கனி.
வழக்கம் போல் மிக அருமை....
பாடலை மீண்டும் கேட்க வைத்தது இந்த பதிவு....
ஜானகி ஜானகிதான்....
நன்றி நரேஷ்..
பதிவு அருமை....
Post a Comment