டிஸ்கி - நான் ஒரு பரோட்டா பிரியன்.
ஒவ்வொரு ஊர் மக்களும், அவர்கள் ஊரை விட்டு வெளியே செல்லும் போது, அவர்கள் ஊருக்கே உரிய சில விசேஷ விஷயங்களை விட்டு செல்கிறார்கள். தூத்துக்குடி மக்களுக்கு, ப்ரோட்டா. உப்பு, மீன் - இதையெல்லாம் விட ப்ரோட்டா ஒரு வகையில் வேறுபடுகிறது. அந்த மாதிரி தயார் செய்யப்படுவதையோ, பரிமாறப்படுவதையோ எங்கும் பார்த்ததில்லை. சுவைத்ததில்லை. (விருதுநகரில் சாப்பிட்டதில்லை)
இங்கு இதை பரோட்டா, புரோட்டா என்றெல்லாம் சொல்வதில்லை. ப்ரோட்டா, ரொட்டி அல்லது செட். வித்தியாசமா இருக்குல்ல? தூத்துக்குடியில் ப்ரோட்டா என்ற தலைப்பில் பிஎச்டி’யே பண்ணலாம். நான் ஒரு பதிவுவோடு நிறுத்தி கொள்கிறேன்.
தூத்துக்குடி தெருக்களில் பத்து அடி எடுத்து வைப்பதற்குள், ஒரு பேக்கரியையோ, ப்ரோட்டா கடையையோ காணலாம். பேக்கரியில் இருக்கும், தூத்துக்குடியின் இன்னொரு ஸ்பெஷலான மக்ரோனை பற்றி, இன்னொரு பதிவில் காணலாம். ப்ரோட்டா கடைக்கு ஹோட்டல் என்றோ, உணவகம் என்றோ சாதாரணமாக பெயர் வைத்துவிட மாட்டார்கள். நைட் கிளப்.
நைட் கிளப் என்றதும் மங்கிய வெளிச்சத்தில் அரைகுறை உடையில் ஆடும் பெண்கள் நினைவுக்கு வருகிறார்களா? தூத்துக்குடியில் இருப்பவர்களுக்கு அப்படி எதுவும் நினைவுக்கு வராது. ஒரு பத்துக்கு பத்து சதுர அடிக்கும் குறைவான அளவில் இருக்கும் கடைதான் நினைவுக்கு வரும். இந்த அளவு கடைக்குள்ளேயே, பத்து பதினைந்து பேருக்கு சுட சுட ப்ரோட்டா பரிமாறப்படும் வித்தையை ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்கள், இங்கு வந்து பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். ஆனா, இங்கே மெத்தடே வேற. தோசைக்கல்லில் போடுவதற்கு பதில், எண்ணெய்யில் பொறிப்பார்கள். அதற்கு முன், தோசைக்கல்லில் வாட்டுவதும் உண்டு. இதனால், ப்ரோட்டா சும்மா மொறு மொறுவென வரும். பை டிபால்ட், உங்கள் இலைக்கு பிய்த்து போட்டே வரும். தொட்டுக்க, இல்லையில்லை, குழப்பி அடிக்க சால்னா வரும். சால்னாவில் இரு வகைகள் இருக்கும். காரமானது ஒன்று. காரம் குறைவானது ஒன்று. அதற்கு மேல், சிக்கன் ப்ரை, சில்லி சிக்கன், மட்டன் சுக்கா, காடை, கௌதாரி, புறா, ஆம்லேட், ஆப்பாயில் இதையெல்லாம் வாங்கி கொள்ளலாம். பார்சலில் வாங்கி சென்றால், வேறொரு சுவை. வழக்கம் போல், தயிர் வெங்காயம் இலவசம். பெரும்பாலும் வெறும் வெங்காயம், தயிர் இல்லாமல்.
பொதுவாக, இந்த நைட் கிளப்களில், இட்லி, பூரி போன்றவற்றை எதிர்பார்க்கக்கூடாது. சில கடைகளில், தோசை, இடியாப்பம், ஆப்பம் கிடைக்கும். அதற்கும் சால்னா தான். சட்னி, சாம்பார்? ம்ஹும். சமீபத்தில் சேலம் சென்றபோது, பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் செல்வி மெஸ்ஸில் ‘இங்கு சைவம் கிடையாது’ என்ற போர்ட்டை என் நண்பர்கள் ஆச்சர்யமாக பார்த்தார்கள். போர்டு வைக்காமலேயே, தூத்துக்குடி நைட் கிளப்களில் அதுதான் பாலிஸி. அதனால், இக்கடைகள் அசைவக்காரர்களுக்கே எக்ஸ்க்ளுசிவ்வானது.
அப்ப, இட்லி, தோசைக்கு எங்கு செல்வது? அதற்கு வேறு ஓட்டல்கள் உண்டு. அவை சாதாரணமாக மற்ற ஊர்களில் இருப்பது போல் காலை முதல் இரவு வரை இருக்கும். நைட் கிளப்கள் நைட் மட்டுமே. காலையில் மூடி கிடக்கும். மதியத்திற்கு பிறகு, சாயந்தரம் வாக்கில் திறப்பார்கள். ஒருவர் அடுப்பு, பாத்திரங்களை எடுத்து வெளியே வைப்பார். இன்னொருவர் வெங்காயம் வெட்ட ஆரம்பிப்பார். அந்த நேரத்தில், அடுப்பை வைத்தவர், எண்ணெயை ஊற்றி சால்னா, கிரேவிக்கான வேலையை ஆரம்பிப்பார். இன்னொருவரோ, ப்ரோட்டாவுக்கான மாவை பிசைய ஆரம்பித்து விடுவார். இந்நேரத்திற்கு, ஊரே சால்னா வாசனையில் மூழ்கி இருக்கும்.
ஒரு கடையில் அதிகபட்சம் நாலு பேர்தான் வேலைக்கு இருப்பார்கள். பெரிய கடை என்றால், இன்னும் இரண்டு மூன்று பேர்கள் இருப்பார்கள். அவ்வளவு தான். நீங்கள் தான் நீங்கள் சாப்பிட்ட இலையை எடுத்து வெளியே போட்டுவிட்டு, கை கழுவ வேண்டும். ஒருவர் ப்ரோட்டா சுட சுட பொறித்து கொண்டே இருப்பார். இன்னொருவர் அதை சுக்கு நூறாய் பிய்த்து நமக்கு பரிமாறிக்கொண்டே இருப்பார். இன்னொருவர், பார்சலுக்கு வந்தவர்களை ஹேண்டில் செய்து கொண்டு இருப்பார். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில், ப்ரோட்டாவை பிய்க்க ஒரு மெஷின் வைத்திருந்தார்கள். டெக்னாலஜி. சமீபத்தில் பார்த்து ஷாக்காயிட்டேன்.
கடைக்கு கடை ப்ரோட்டா மாறுப்படும். அளவுகளில் மட்டுமில்லாமல், சுவையிலும். சில கடைகளில், பொறிக்காத மெது மெது பரோட்டா கிடைக்கும். ஒரு முறை பார்த்து, ஒரு கடையின் சுவை பிடித்து விட்டால், சந்தா கொடுக்காமலேயே அந்த கடையின் ஆயுள்கால மெம்பர் ஆகிவிடுவீர்கள். அளவுக்கு ஏற்றது போல், ப்ரோட்டா விலை இருக்கும். தற்போதைய நிலையில், ரூபாய் மூன்றில் இருந்து பத்து வரை.
எண்ணெய்யில் பொறிப்பதால், கொலட்ஸ்ரால் அபாயம் இருக்கிறது. காரமா எங்க சாப்பிட்டாலும், அல்சர் வரும். மற்றபடி, சூடாக இருப்பதால், வேறு எந்த உபாதைகளும் வருவதில்லை. சால்னாவில் இருக்கும் இஞ்சி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவற்றால், ஏதேனும் மருத்துவ நன்மை இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்துதான் கண்டுப்பிடிக்க வேண்டும். ஊருக்குள், இதைத்தான் தினமும் சாப்பிட்டுக்கொண்டு நிறைய பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், ஒருமுறை சாப்பிடுபவர்கள், தயங்காமல் இறங்கி பட்டைய கிளப்பலாம். தண்ணீர், கையோடு கொண்டு செல்வது உசிதம். இல்லாவிட்டால், வீடு வந்து குடிக்கலாம்.
சொந்த ஊர் கதையை பேசுனா, கண்ணீர் வருவது வழக்கம். தூத்துக்குடிக்காரங்களுக்கு, உமிழ் நீரும்.
.