போன வாரம் ஆந்திரா முதல்வர் இறந்த ஹெலிகாப்டர் விபத்திற்கான விசாரணையை சிபிஐ நடத்த போகிறது. விசாரணை முடிவில் என்ன சொல்ல போகிறார்களோ? ஆனால், ஆந்திராவில் சிலர் காரணத்தைக் இப்போதே கண்டுப்பிடித்துவிட்டார்கள். ஹெலிகாப்டர் பழுதோ, மோசமான வானிலையோ இல்லையாம் அது. திருப்பதி வெங்கடாஜலபதி தானாம்.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, மதம் மாறிய கிருஸ்துவக் குடும்பத்தை சார்ந்தவர். இவர் பதவியேற்றதில் இருந்து கிருஸ்துவ அமைப்புகளுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. திருப்பதி தேவஸ்தான விவகாரங்களிலும் தலையீடு இருந்ததாகவும், தேவஸ்தான போர்டை பலவீனமாக்கி, பெருமாளை சுற்றி இருக்கிற ஏழு மலைகளில் சிலவற்றில் தேவாலயம் கட்ட முயற்சி செய்ததாகவும் செய்திகள் வந்தது.
தற்போது, அவர் சென்ற ஹெலிகாப்டர் மலையில் முட்டி விபத்துக்குள்ளானத்திற்கு இதுதான் காரணம் என்று கடவுள் பக்தி அதிகம் உள்ள ஆந்திராவில் கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.
இது கோடி ராமகிருஷ்ணா கதை.
---
அடுத்தது ராம் கோபால் வர்மா படம்.
ராஜசேகர ரெட்டியின் தந்தை, ஒரு ரவுடி கும்பலால் கொலை செய்யப்பட்டாராம். இவர் முதல்வரானதும், அவர்களை பழி வாங்கிவிட்டாராம்.
உண்மையா,கதையா? எனக்கு தெரியாது. ஆனா, இது தான் ராம் கோபால்வர்மாவின் அடுத்த படக்கதையாம். முன்னாடியே சொன்னாரு. என்ன ஆச்சோ?
யாருய்யா சொன்னது? தெலுங்கு படத்துல யதார்த்தம் இல்லன்னு.
---
ராஜசேகர ரெட்டி இறந்த அன்று அதிர்ச்சியில் இறந்தவர்கள் என்று வந்த எண்ணிக்கை இன்னமும் அதிர்ச்சியளித்தது. நல்லவேளை, இந்த அதிர்ச்சியில் யாரும் இறக்கவில்லை.
சாவை கண்டுக்கூட பயமில்லை. யாராவது அரசியல்வாதியோ, நடிகரோ இறந்த நாளில் செத்து, அவர்களின் தொண்டராகவோ, ரசிகராகவோ ஆக்கப்பட்டு விடக் கூடாது என்று தான் பயமாக உள்ளது.
---

சாவு என்ற சொல்லே செண்டிமெண்ட்டா ஒரு நெகடிவ்வான விஷயம். ஆனா, பேயை இவ்வளவு நாளா பிராண்ட் அம்பாஸிடரா வச்சிருந்தது ஒனிடா. அதாங்க, ஒரு கொம்பு வச்ச மொட்டை வந்து “கொண்டவரின் பெருமை... பக்கத்து வீட்டுக்காரரின் பொறாமை...”ன்னு சொல்லுமே!
அந்த காலத்துல டிவி வச்சிருக்கிறது பொறாமைக்கொள்ளும் அளவுக்கு பெரிய விஷயம். இன்னிக்கு அப்படி இல்லையே? ப்ரியா கிடைக்குதே!
அதனால அந்த மொட்டை பேயை ஓடவிட்டுட்டு, வேற எதையாவது கொண்டு வர போறாங்களாம்? வேற என்ன கொண்டு வருவாங்க? ஏதாவது ஒரு கான், இல்ல கபூர் வருவாங்க. அதுக்கு பேயே பரவாயில்லைன்னு சொல்றீங்களா?
----
கடந்த இருபத்தைந்து வருடங்களில், இதுவரை இருபத்தைந்து மில்லியன் மக்கள் உலகில் எய்ட்ஸால் இறந்திருக்கிறார்கள். இப்போது, எய்ட்ஸ் மருந்து கண்டுப்பிடிப்பில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எய்ட்ஸ் கிருமிக்கு எதிராய் போரிட ரெண்டு ஆண்டி-பாடிஸ் கண்டுபிடிச்சிருக்காங்களாம். ஆண்டி-பாடிஸ்’ன்னா, நோய்களை எதிர்க்க நமது உடலில் உருவாகும் ஒரு வகையான ப்ரோட்டீன். எய்ட்ஸ்க்கு எதிரான ஆண்டி-பாடிஸ், ஆப்பிரிக்காவுல இருக்குற ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களின் உடலில் காணப்படுகின்றதாம். அவர்களுக்கு எய்ட்ஸ் தாக்கினாலும், எந்த அறிகுறியும் இல்லையாம். உடல் நலக் குறையும் இல்லையாம்.
அதனால, கூடிய சீக்கிரம் எய்ட்ஸ்க்கு மருந்து வருது. மேட் இன் ஆப்பிரிக்கா.
---
நாட்டில் ஸ்வைன் ப்ளுவால் இறந்தவர்கள் பெங்களூரில் தான்... இன்னொரு மரண செய்தியா? வேண்டாம். அதுக்கு பதில் இன்னொரு பரிதாப நியூஸ்.
பெங்களூர்ல இருக்குற சிஎம்எஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், நாகராஜ். இந்த நிறுவனம் தான், ஏடிஎம்களுக்கு பாதுகாப்புடன் பணம் பட்டுவாடா செய்யும் நிறுவனம். இவர் போன மாசம், கிட்டத்தட்ட 26 லட்ச ரூபாய் பணம் எடுத்துக்கிட்டு, ஏடிஎம் மெஷின்களை நிரப்ப சென்றிருக்கிறார்.
இப்படி நம்ம கையில, தற்காலிகமாத்தான் பணம் புரளுதே! நிரந்தரமா இருந்தா எப்படி இருக்கும்?’ன்னு நினைச்சுக்கிட்டு, 15 லட்சத்தை மட்டும் மெஷினுக்குள்ள இறக்கிட்டு, மிச்சத்தை இவரு இறக்கிக்கிட்டாரு.
கூட வந்தவங்களை, ஆபிஸ் போக சொல்லிட்டு இவரு அவரோட சொந்த ஊருக்கு எஸ்ஸாயிட்டாரு. அப்புறம்தான் ஆபிஸ்ல தெரிஞ்சிருக்கு இவரோட திருவிளையாடல். போலீஸ் வந்து விசாரிச்சிட்டு, அவரோட ஊருக்கு போயி பதினைஞ்சு நாள்ல அவரை பிடிச்சிட்டாங்க. அப்பவும், அவரு கையில பதினொரு லட்சம் வைச்சிருக்காரு. 15 நாள்ல அவரு செலவழிச்ச பணம், 30 ஆயிரம் தான். அதுவும், 5000க்கு ஒரு மொபைலும், மிச்ச பணத்தை ஓட்டல்ல தங்கியும், சாப்பிட்டும் செலவிட்டு இருக்காரு.
பாருங்க, எவ்ளோ வெகுளியா இருக்காரு? நாகராஜ், நீங்க நல்லவரா? கெட்டவரா?
---
மனிதர்களுக்கு வர வர சோம்பேறித்தனம் அதிகமாகிக்கிட்டே வருது. விஞ்ஞானம் இதுக்கு ரொம்ப உதவிக்கிட்டு இருக்குது.
நடக்குறதுக்கு தேவையே இல்லாம, பக்கத்துல இருந்தாலும் சரி.. தூரத்துல இருந்தாலும் சரி.. பைக், இல்ல கார் எடுத்துட்டு போறோம். சரி. பில்டிங் உள்ளயாவது நடக்குறோமான்னு பார்த்தா, அதுவும் இல்ல. லிப்ட்ல போறோம். இல்ல, எஸ்கலேட்டர்ல போறோம். சரி, ஹோட்டல்ல சாப்டுட்டு கை கழுவவாவது நடந்து வாஷ்பேஷின் போறோமா? இல்ல, அதுக்கு டேபிள்லயே பிங்கர் பவுல் கொண்டு வந்து வச்சிடுறாங்க.
வீட்டுக்கு வந்து டிவி போட்டாக்கூட வசதிக்கேற்ப நூத்துக்கணக்குல சேனல்கள். அதையும் மாத்த கையில் ரிமோட். இனி ரிமோட்ட அழுத்தவும், நாம சோம்பல் பட தேவையில்லை. நாம நினைச்சாலே போதும், சேனல் மாறிடும்.
இங்கிலாந்து விஞ்ஞானி ஜான் ஸ்ப்ராட்லி, இப்படி ஒரு டெலிபதி மைக்ரோ சிப்ப கண்டுப்பிடிச்சிருக்காரு. மூளையில் எண்ணங்களால் உதிக்கும் சிக்னல்களை இந்த சிப், எலக்ட்ரானிக் சிக்னலாக மாற்றி, வயர்லெஸ் சிக்னலாக அனுப்புமாம். அதற்கேற்றப்படி, டிவியோ, கம்யூட்டரோ எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியுமாம்.
இது உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவ கண்டுப்பிடித்ததாக அவர் கூறியுள்ளார். பார்ப்போம், யாருக்கு உதவுகிறது என்று?
.