கடந்த ஒரே வாரத்தில், பெங்களூரில் இரு சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தங்கள் நிறுவனங்களின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். இரண்டுமே இந்திய முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் - எச்.சி.எல். & விப்ரோ. இதைப் பற்றி இரண்டு நிறுவனங்களுமே, எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எச்.சி.எல். அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலை பற்றி காவல்துறையிடம் கூட தெரிவிக்கவில்லை. மருத்துவமனை சொல்லி, காவல்துறை தெரிந்து கொண்டு இருக்கிறது. இரு நிறுவனங்களும், இது பற்றி எந்த அறிக்கையோ, விளக்கமோ வெளியிடவில்லை. தனியார் நிறுவனங்களின் பொது அம்சங்கள் இவை.
இந்த தற்கொலைகளுக்கு வேலை இழப்பு காரணமாக இருக்கலாம் என்று ஊகங்கள் வெளிவருகிறது. இந்த தற்கொலைகளுக்கான காரணம் எதுவாக இருந்தாலும், இன்னமும் நிறைய தற்கொலைகள் வேலை இழப்பினால் நடக்கிறது என்பது உண்மை.
---
முதலில் எந்த பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கோழைகள் எடுக்கும் தைரியமாக முடிவு என்று தற்கொலையைக் கூறுவார்கள். வேலை இழப்பிற்கு உயிர் இழப்பது கோழைத்தனமானது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும் கூட.
இந்த வாழ்க்கை வாழ்வதற்கானது. வேலை அதில் ஒரு அங்கம். வாழ்க்கையை வசதியாக வாழ வழி செய்து கொடுப்பது வேலை. அவ்வளவே. இந்த வேலை இல்லாவிட்டால் இன்னொன்று. தற்போது, இந்த ஐடி துறை மேலேயெழும்பி வருவதாகவே கூறுகிறார்கள். வேலை இழந்தவர்கள், ஓரிரு மாதங்களில் வேலை பெற்று விடுகிறார்கள். அப்படியே, இந்த துறை விழுந்தாலும், வேறு துறைகள் இருக்கிறது. எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது.
இதற்காக எதற்கு உயிர் விட வேண்டும்?
---
நல்ல காலத்திலேயே, வேலைக்காக பிழிந்தெடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள், இந்த நெருக்கடிக்காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பல கொடூரமானவை. இவை, ஒரு சிலரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி சித்ரவதைக்குள்ளாக்கிறது என்பது உண்மை. சரியான ஆறுதலும், துணையும் இல்லாத பட்சத்தில், தற்கொலைக்கு தூண்டப்படும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றது.
நம் நாட்டின் பொருளாரத்தை இயக்குவது பங்கு சந்தை. ஏறத்தாழ இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பங்குசந்தையில் பணம் திரட்டப்பட்டு நடத்தப்படுபவையே. ஒரு நிறுவனத்தின் ஏற்றமும் தாழ்வும் சந்தையை பாதிக்கிறது. சந்தையை பாதிக்கும் விஷயங்கள் அனைத்தும், நிறுவனங்களை பாதிக்கிறது. அதனால், நிறுவனங்கள் பங்குசந்தையை சார்ந்தே இருக்கிறது. அவரவர் நிறுவன பங்கு மதிப்பின் மேல் கவனம், நிறுவனங்களுக்கு எப்போதும் உண்டு.
ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பை, பாதிக்கும் விஷயங்களில் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாட்டை விட, சமயத்தில் நிறுவனத்தை பற்றிய செய்திகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறுவனம் புது ஆர்டர் பெற்றால், மதிப்பு உயரும். ஆர்டர் இழந்தால், மதிப்பு குறையும்.
ஊழியர்களை பணி நீக்கம் செய்தால்? நிறுவனத்தில் ஏதோ பிரச்சினை என்று சந்தையில் அது பிரதிபலிக்கும். இந்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று தான், நிறுவனங்கள் வேறு வழிகளை பயன்படுத்துகிறது.
---
உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது, வணிக வாய்ப்புகள் குறைகிறது. வேலைகள் குறைகிறது. ஆட்குறைப்பு அவசியமாகிறது. பணி நீக்கம் என்று சொல்லி, நல்ல பெயரை இழக்காமல், ஊழியர்களை அவர்களாகவே வேலையை விட்டு விலகுமாறு சொல்லி, நிறுவனத்திற்கு இருக்கும் பெயரை பாதுகாக்கிறார்கள்.
விலக மறுத்தால்?
1) நாங்களே உன்னை வேலையை விட்டு நீக்குவோம்.
2) தவிர, உனக்கு வேலைக்கான அனுபவ சான்றிதழ்களும், மற்ற சான்றிதழ்களும் ஒழுங்காக வந்து சேராது.
3) தவிர, சம்பள பைசல் ஒழுங்காக இருக்காது.
4) தவிர, வேறு வேலையில் சேர முடியாதபடி, மத்திய தகவல் மையத்தில் உன் பெயருக்கு கரும்புள்ளி வைத்து விடுவோம்.
5) நீயாகவே போனால், எல்லாம் ஒழுங்காக வந்து சேரும்.
வேறு வழியில்லாமல், ஊழியர்கள் வேலையை விட வேண்டியிருக்கிறது, அவர்களாகவே விடும்படி. நிறுவனங்கள், இந்த மந்தநிலையிலும் யாரையும் வேலையை விட்டு நீக்கவில்லை என மார்தட்டி கொள்ளும் சூழலை வைத்துக்கொள்கிறார்கள்.
துறை உச்சத்தில் இருக்கும் போது, ஓங்கும் ஊழியர்களின் கைகள், இச்சமயம் மேலெழும்புவதில்லை. அடங்கி, அமைதியாக ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடுகின்றன.
---
இதனால் மனமொடிந்து செய்யப்படும் தற்கொலைகளும், நிறுவனங்கள் செய்யும் கொலைகளாகவே கருதப்பட வேண்டும். நிறுவனங்கள் மூடிய கதவினுள் செய்யும் இக்கொடுமைகளை பற்றி தெரிந்தும், ஏதும் கேள்வி கேட்காமல், எதிர்ப்பை பதிவு செய்யாமல், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற ஊழியர்களும், இதற்கு மறைமுகமாக உடந்தையாகிறார்கள். அவரவருக்கு ஏதும் நிகழாதவரை, ஏதும் தோன்றுவதில்லை.
நிறுவனத்தின் சாதனைகளை பங்கு போட்டுக்கொண்டு, லாபங்களை பங்கு போட்டுக்கொண்டு, வசதிகளைப் வசதியாக பெற்றுவரும் ஊழியர்கள், இந்த உயிர் இழப்புகளின் பாவத்தையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்.
உலகில் மற்ற நாடுகளில் போர் என்ற பெயரில், அமெரிக்கா நடத்தி வந்த வெறியாட்டத்தின் பலனை, ஏற்கனவே அந்நாடு சிறிது அனுபவித்து விட்டது. நம் அண்டை நாட்டில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்த நம் நாடும், அதற்கான பலனை பெறும். போலவே, நிறுவனங்கள் ஊழியர்களுக்கெதிராக மேற்கொள்ளூம் கொடுமைகளை, கண்டுக்கொள்ளாமல் இருப்பதின் மூலம் ஊக்கமளித்து வருவதின் பலனை, நிறுவனங்களுடன் சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியர்களான நாமும் அனுபவிப்போம்.
வேறென்ன செய்ய? தண்டனை நாளின்போது, நேர்மையுடன், நிறைவுடன் இருப்போம்.
.
7 comments:
நிஜமான உண்மை நண்பா
http://www.saravanakumaran.com/2009/03/blog-post_05.html
ennoda comment padiyunkal please
கட்டாயம் படிக்கவும்:
http://sirippupolice.blogspot.com/2009/08/blog-post_29.html
உண்மை...
மிகவும் கடினமான உண்மை.
அவர்களுக்கு தேவையான போது தூக்கிவச்சு கொண்டாடுவது. பிறகு தூக்கி போட்டு மிதிப்பதும்... இதுக்கு அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கனும். எனக்கு தெரிந்து சில பெரிய பெரிய ஜடி நிறுவனங்கள் குறைந்த நாட்களே பணியட்களை வேலைக்கு வைத்திருக்கும், பிறகு ஏதாவது காரணம் சொல்லி நீங்கி விடும்.
என்ன தான் இருந்தாலும் தற்கொலை தீர்வா? அவர்களுடைய குடும்பம்???
தற்கொலை செய்து கொண்ட சகோதர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
//தண்டனை நாளின்போது, //
I dont believe it.
இந்த தற்கொலைகளுக்கு விசாரணை நடத்தப்பட்டு, நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்று நான் நம்பவில்லை.
நான் குறிப்பிட்டது, காலம் சம்பந்தப்பட்டது.
நல்ல பதிவு....
நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயல்கள் ஒரு காரணம் என்றால், இதுதான் ஆண்மை என்று இந்த சமூகம் நிறுவியிருக்கும் சில நியதிகளும், எண்ணங்களுந்தான் என்று தோன்றுகிறது....
நண்பர்கள் சிலர் இந்தப் பொருளாதார மந்தத்தினால் மிகுந்த மனமுடைந்ததற்கும், நம்பிக்கையை இழந்ததற்கும் காரணம் வேலையை இழந்ததை விட இந்த சமூகம் வீசிய குரூரமான பார்வைகளும், வார்த்தைகளும்தான்....
தனது மகனோ, மகளோ ஐடி துறையில் நல்ல சம்பளத்தில் இருந்த போது, மற்ற துறைகளில் குறைவாக சம்பளம் வாங்கியவர்களைப் பார்த்து குரூரமாக சிரித்ததன் எதிர் விளைவோ என்னமோ, இப்போது பதிலுக்கு அவர்கள் குரூரத்தை காட்டுகிறார்கள்...
ஆண்மையின் அடையாளமே சம்பாத்தியம்தான் என்று நிறுவப்பட்டதாலோ என்னமோ, வேலையிழந்த ஒரு சிலரது ஆன்மாவையே உலுக்கும் அளவில் கூட கேலி செய்த சம்பவங்கள் நடந்தது உண்டு....
கடைசி வரிகள் செம நச்..............
Post a Comment