மகேந்திரனிடமிருந்து...
எனக்கு எப்போதுமே ஒரு வியப்புண்டு. திரைக்கதையைப்பற்றி யார் பேசினாலும் கே.பாக்யராஜை பற்றி மிகவும் சிலாகித்துப்பேசுகிறார்களே என்று. தமிழ்த்திரையுலகை பொறுத்தவரை அவரை திரைக்கதையின் தந்தை (Father of Screenplay) என்றுகூட சொல்கிறார்களே என்று ஆச்சர்யம். பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்ததால் அவர் பன்முகத்திறமை வாய்ந்தவர் என்பதை நம்ப சற்று சிரமமாக இருந்தது. இயக்கம், திரைக்கதை, வசனம் மட்டுமின்றி இசையமைப்பில் அவரின் ஆர்வம் இன்னும் சிறப்பானது.
சிலவருடங்களுக்கு முன்பு, மறைந்த திரு ஜீவா 12B என்றொரு, தலை சுற்ற வைக்கும் கதையை படமாக்க முனைந்தபோது இடையில் எப்படி கொண்டு செல்வதென்று புரியாத நிலையில் பாக்யராஜின் உதவியை நாடினார். அவரும் அதை அழகாக முடித்துக்கொடுத்தார். ஜீவா நன்றி மறவாமல் திரைக்கதை உதவி என்று பாக்யராஜின் பெயரை அனுமதித்தார்.
பாக்யராஜ் எடுத்துக்கொள்ளும் கதைக்களங்கள் எப்போதுமே வித்யாசமானதாக இருக்கும். அந்த ஏழுநாட்கள், முந்தானை முடிச்சி, தாவணிக்கனவுகள், சின்ன வீடு எல்லாமே ரசிக்கும்படியானவை. கிளுகிளுப்பின் கரங்கள் விரசத்தை தொட்டுவிடாமல் ரசிக்கும் வகையில் இருக்கும். படம் முடிந்து வரும்போதும் கண்டிப்பாக எல்லோர் முகத்திலும் புன்னகை இருக்கும்.
சமீபத்தில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. பாக்யராஜின் நேர்த்தியான இயக்கத்திற்கு சிறந்த உதாரணமும், அவரை எல்லோரும் புகழ்வதற்கு காரணமும் கிடைத்தன. பாக்யராஜ் இயக்கத்தில், கங்கை அமரன் இசையமைப்பில் 1980 ஆண்டு வெளிவந்த "சுவரில்லாத சித்திரங்கள்". பாக்யராஜ், சுதாகர் மற்றும் சுமதி நடித்திருப்பார்கள். (என் அலுவலகத்தோழியின் சொந்த சித்தி சுமதி என்பதால், காட்சிகள் எனக்கு இன்னும் ரசிக்கும்படியாக இருந்தன). படத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே" கங்கை அமரன் எழுதி, மலேசியா, ஜானகி பாடிய ஒரு இனிய பாடல். இதுநாள் வரை கேட்காமல் இருந்தவர்கள் கூட சுந்தர்.சி யின் பெருமாள் பட ரீமிக்சை, (கொலை செய்யப்பட பிரதியை) சன்மியுசிக் உபயத்தில் கேட்டு சலித்திருப்பார்கள்.
கதைப்படி பள்ளியில் படிக்கும் (ஏறக்குறைய சிறுமியே தான்) சுமதியை காதலிக்கும் வசதியான வீட்டுப்பையன் சுதாகர், சுமதியை பார்க்க வேண்டி, சுமதி வீட்டின் எதிரில் தையல் கடை வைத்திருக்கும் கவுண்டமணியை சிநேகிதப்படுத்திக்கொள்வார். அடிக்கடி வந்து கடையில் அமரும் சாக்கில் சுமதியைப்பார்ப்பார். சுமதியும் கவுண்டமணியிடம் பேசும் சாக்கில் சுதாகருக்கு தகவல் பரிமாறுவார். அதே தெருவில் வசிக்கும் பாக்யராஜும் சுமதியை ஒருதலையாக காதலிப்பார். ஒருநாள் சுமதியின் பள்ளியில் செல்லவிருக்கும் சுற்றுலா பற்றி
சுதாகருக்கு தெரிவிக்க வேண்டி சுமதி தன் வீட்டு வாசலில் நின்று சத்தமாக இப்படி சொல்வார். "தெரியுமா டெய்லர்? எங்க ஸ்கூலில நாங்க எல்லாரும் நாளைக்கு கொடைக்கானல் போறோம்.." (அந்த குதூகலக்குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது). சேதி தனக்குதான் என்று புரிந்து கொண்ட சுதாகரும் மெல்ல தலையசைப்பார்.
தற்செயலாக வெளியே வரும் பாக்யராஜ் சேதி தனக்குத்தான் என்று தவறாக புரிந்துகொண்டு கொடைக்கானலுக்கு பின்தொடர தயாராவார். நல்ல உடைகள் எதுவும் தன்னிடம் இல்லாததால் சுதாகரிடமே சென்று இரவல் உடைகளை வாங்கிப்போட்டுக்கொண்டு கொடைக்கானலுக்கு பயணப்படுவார். அந்த மலைப்பாதைப்பயணத்தில் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலைசாய்த்து கண்மூடி பாக்யராஜ் காணும் கனவுப்பாடல் இது..
அந்தப்பாடலை அவர் படமாக்கியிருக்கும் விதம் முதல்முறையில் யாருக்குமே புரியாது. சுதாகர், சுமதியின் காதலைப்பற்றி அறிந்திராத பாக்யராஜின் கனவில் வரும் சுமதி பள்ளிச்சீருடை அணிந்திருப்பார்.(பள்ளியிலிருந்து அழைத்து சென்றதாக அவர் நம்பிக்கொண்டிருப்பதால்). இது மலேசியா (பாக்யராஜுக்காக) மற்றும் ஜானகியின் (சுமதிக்காக) சேர்ந்திசைப்பாடல். எனவே மலேசியா குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம், சுதாகரிடம் வாங்கி அணிந்த உடைகளுடன் பாக்யராஜும், பள்ளிச்சீருடையில் சுமதியும் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஜானகி குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் சுதாகரும் சுமதியும் தம் சொந்த உடைகளில் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஒரு கனவும், நிஜமும் அற்புதமாக கலக்கப்பட்டிருக்கும்.
புரியாதவர்கள் மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.. இல்லையேல் படத்தைப்பாருங்கள். இது ஒரு சாதாரணமான பாடல்காட்சி. இதற்கு இவ்வளவு மெனக்கெடவில்லை எனினும் பாக்யராஜை யாரும் கேள்விகேட்கப்போவதில்லை. இருந்தும் சினிமாவை ஒரு தவம் போல செய்தவர்கள் நிறைந்திருந்த நாட்களது.
இப்போது போல ஆண்டிப்பட்டியில் மாடுமேய்க்கும் நாயகன், ஒரு பாடலுக்காக ஆஸ்திரேலியா சென்று ஆடும் கேலிக்கூத்து எல்லாம் அப்போது இல்லை. நிஜமான உழைப்பு அது. புரிந்துகொள்ள அடுத்தமுறை பாடல் வரும் பொது கவனித்துப்பாருங்கள்.
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுதே..
கோடைகாலத்து தென்றல், குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைகாலத்தில் ஆடல் விளையாடல் கூடல்..
வானம் தாலாட்டுபாட மலைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட சுகம் தேட கூட
பூவில் மேடையமைத்து பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு, துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு..
எண்ணம் என்னென்ன வண்ணம், இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்தராகம் , சுகபோகம், தாபம்
மேகலை பாடிடும் ராகம் , ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம், சுகபோகம், யோகம்
வாழ்ந்தால் உந்தன் மடியில் , வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் , தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜன்மம் எடுப்பேன்..
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுதே...
-மகேந்திரன்.
.
19 comments:
காதல் வைபோகமே பாடலை நன்று கவனித்து விளக்கி உள்ளீர்கள்.
மிகவும் அருமை.
அதே சமயம், re-mix பாடல்களை ஒரு பிடி பிடித்து எங்களை போன்றவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைத்து உள்ளீர்கள்.
நேரம் இருந்தால் நல்ல பாடல்களை கொலை பண்ணும் re-mix பாடல்களை பற்றி தனியாக ஒரு பதிவு எழுதவும்.
நன்றி.
- பவன்
காதல் வைபோகமே பாடலை நன்று கவனித்து விளக்கி உள்ளீர்கள்.
மிகவும் அருமை.
அதே சமயம், re-mix பாடல்களை ஒரு பிடி பிடித்து எங்களை போன்றவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைத்து உள்ளீர்கள்.
நேரம் இருந்தால் நல்ல பாடல்களை கொலை பண்ணும் re-mix பாடல்களை பற்றி தனியாக ஒரு பதிவு எழுதவும்.
நன்றி.
- பவன்
//காதல் வைபோகமே காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுதே.. //
அருமையான பாடல் உண்மையிலேயே கேக்கும்போது ஒரு இனம்புரியா ஆனந்த பண்பாடும் :)))
உங்களுக்கு நல்ல இரசனை.
இந்த பாடல் என்ன படம் என்று தெரியாமல் தேடிகொண்டிருந்தேன். நன்றி.
//(கொலை செய்யப்பட பிரதியை) சன்மியுசிக் உபயத்தில் கேட்டு சலித்திருப்பார்கள்//
என்ன கொடுமை சரவணன் இது?
Very Nice Saravanakumaran
Ilike the song
it is my all time fav
Thanks
♠புதுவை சிவா♠
//எனவே மலேசியா குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம், சுதாகரிடம் வாங்கி அணிந்த உடைகளுடன் பாக்யராஜும், பள்ளிச்சீருடையில் சுமதியும் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஜானகி குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் சுதாகரும் சுமதியும் தம் சொந்த உடைகளில் ஆடிக்கொண்டிருப்பார்கள்.//
அந்தப் பாடலை பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த கோணம் இப்போதுதான் தெரிய வருகிறது. தொடரட்டும் உங்கள் பணி..,
பாக்யராஜ் முன்பு பாக்கிய(ம்)ராஜ் இப்போது பாக்கிராஜ்...
வழக்கமான பாடல்களைப் பற்றிய வர்ணிப்பு இல்லை என்றாலும், எப்போதும் வித்தியாசமான செய்திகளைத் தருவதை மட்டும் நிறுத்துவதே இல்லை மகேந்திரன்!!!
இந்த பாட்டை ஏற்கனவே பிடித்திருந்த எனக்கு, சுந்தர் சி படத்துல கேட்டதுல இருந்து கொலை வெறி வருது (அதுவும் நீங்க சொன்ன பழைய படத்துல படமாக்கியிருந்த விதமும், இந்த படத்துல படமாக்கியிருந்த விதமும் ஒப்பிட்டா எல்லாருக்குமே வரும்!!!)
அருமையான அலசல்....நன்றி
நீங்கள் குறிப்பிட்டிருக்கிற காட்சியில் பாக்கியராஜின் திறமை மட்டுமில்லை, உங்களின் நுண்ணிய கவனிப்புத் திறனும் தெரிகிறது. பாராட்டுக்கள்.
பாக்யராஜின் திரைக்கதைச் சிறப்புக்கு ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் என் சிபாரிசு-'இது நம்ம ஆளு'. நிரடலான சப்ஜெக்ட்டை யார் மனமும் நோகாமலும் சுவாரஸ்யமாகவும்,எல்லாப் பக்க ஞாயங்களும் புரிகிற மாதிரியும் சொல்வது சாதாரண விஷயமில்லை.
http://kgjawarlal.wordpress.com
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பவன், ஆயில்யன், பாலகுமாரன், சிவா, சுரேஷ், ஞானசேகர், நரேஷ், ராஜ் மற்றும் ஜவஹர்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பவன், ஆயில்யன், பாலகுமாரன், சிவா, சுரேஷ், ஞானசேகர், நரேஷ், ராஜ் மற்றும் ஜவஹர்.
இந்த பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன், கங்கை அமரன் அல்ல.
- ஸ்ரீதர்
ஆம் ஸ்ரீதர், இது கண்ணதாசனின் பாடல் தான்.
அமரன் என்று சொல்லியதற்கு மன்னிக்கவும்.
சுட்டியதற்கு நன்றி..
பாக்யராஜ் பத்தி எழுதியதுக்கு மொதல்ல நன்றிங்க..
பல வித விதமான கதைகள அற்புதமான திரைக்கதையோட தந்தவருங்க.. எனக்கு அவரோட படங்கள்ல ரொம்ப புடிச்சது ‘ஒரு கை ஓசை' ஊமையான அவ்வளவு தத்ரூபமா நடிச்சிருப்பாருங்க.. அப்புறம் ‘தூறல் நின்னு போச்சு', ‘சின்னவீடு', ‘நேற்று இன்று நாளை' ‘தாவணிக்கனவுகள்' இப்படி சொல்லிக்கிட்டே போலாம்.
இப்ப நல்ல படங்களன்னு சொல்லப் படற எந்தப் படத்துலயும் திரைக்கதைங்கறது சுத்தமா அமெச்சூர்த்தனமா இருக்கு.. 12B பட இயக்குனர் மாதிரியே ‘பூ', ‘பசங்க' பட இயக்குனர்களும் இவர்க்கிட்ட கொஞ்சம் ஆலோசனை கேட்டிருந்தாங்கன்ன இன்னும் படம் நல்லா வந்திருக்கும்..
திரை'கதா'நாயகன்....
ஆகாயமனிதன்,
பொருத்தமான அடைமொழி
சூர்யா..
அது "நேற்று இன்று நாளை" இல்லைங்க..(அது எம்.ஜி.ஆர் படம்),
நீங்க சொல்ல வந்தது " இன்றுபோய் நாளை வா" னு நினைக்கிறேன்..
சரிங்களா?
eagerly waiting for ur next post on another IR song..
Post a Comment