சிறுவயதில் இருந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அனைவருமே, கதைகளில் இருந்துதான் அந்த ஆர்வத்தை ஆரம்பித்து இருப்பார்கள். என்னுடையதும் அப்படித்தான். சிறுவர்மலர், அம்புலிமாமா, காமிக்ஸ் என்று தொடங்கி ராஜேஷ்குமார், சுபா, சுஜாதா என்று போனது. ஆனால், பிறகு கதை படிப்பதில் ஆர்வம் குறைந்தது. கதை படிப்பது பொழுது போக்க மட்டும் தான் என்ற எண்ணம் இதற்கு ஒரு காரணம். பொழுது போக்குவதற்கு படித்தாலும், ஏதாவது தெரியாதது தெரிந்து கொள்ளலாம் என்று அரசியல் வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்து கொண்டிருந்தேன்.
உண்மையில் கதைகள் மூலம் நாம் நிறைய மறைமுகமாக கற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து ஒரு எழுத்தாளரின் கதைகளை படிப்பதின் மூலம், அந்த எழுத்தாளரை சுற்றி இருந்த உலகத்தை, எழுதியவரின் கண்களால் நாம் காணலாம். அவரின் உள்ளே நுழைந்து அவருடைய எண்ணவோட்டத்தில் நாமும் நீந்தலாம். தொடர் வாசிப்பைப் பொறுத்து, அவராகக் கூட வாசகன் மாறலாம்.
என்னத்தான் கதைக்கென்று கரு, கதாபாத்திரம், முடிவென்று இருந்தாலும், கதை நடக்கும் சூழல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் பதிவாக இருக்கும். காலச்சூழலை தலைமுறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது கதைகள். ஒருவகை சமூக கல்வெட்டுக்கள் இவை. பக்தியே, மனிதனுக்கு கதைகள் மூலம் புகுத்தப்படுவது தானே?
கதைகள் எழுதுவதும், கதைகள் வாசிப்பதும் ஒரு தனிமனிதனின் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது அல்ல. சமூகரீதியாக தொடர்புள்ளது. கதைகளில் தான், இடங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, வழக்கங்களைப் பற்றிய குறிப்புகளுடன் எழுத்தோடு எழுத்தாக உணர்வுகளும் பின்னப்பட்டிருக்கிறது.
---
யார் எழுத்தாளன்? எழுதுபவன் எல்லோரும் எழுத்தாளன் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அது எழுத்தாளர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதையாகத்தான் இருக்கும்.
எழுத்தாளன், எழுதியதை விட அதிகம் வாசித்தவனாக இருப்பான்.
எழுத்தில் எந்த சமரசத்தை செய்து கொள்ளாதவனாக இருப்பான்.
எதிர்பார்ப்பு, எழுத்து சார்ந்தே இருக்கும்.
பேனா மையில் நேர்மை கலந்திருக்கும்.
எழுத்தும் வாழ்வும் ஒன்றாயிருக்கும்.
---
பதிவுலகத்தில் இன்னும் ஆர்வம் நீர்த்துவிடாமல் இருப்பதற்கு, தெரியாதவற்றை கற்றுக்கொடுக்கும் அமுதசுரபியாக வலையுலகம் தொடர்ந்து இருப்பதே காரணம். கோபிகிருஷ்ணன் என்றொரு முக்கியமான, அதிகம் கண்டுக்கொள்ளப்படாத எழுத்தாளரை தெரிந்து கொண்டதே ஜயோவ்ராம் சுந்தர் மற்றும் சிவராமன் பதிவுகளால் தான். இருவருக்கும் நன்றி.
---
டேபிள் டென்னிஸ், தூயோன், இடாகினிப் பேய்களும்... - இந்த மூன்று புத்தகங்களையும் வாசித்ததில் நான் உணர்ந்தவை மேலுள்ளவை. இதில் நான் செய்த தவறு, கோபிகிருஷ்ணனை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல், டேபிள் டென்னிஸ் வாசிக்க துவங்கியது. முழுவதும் முடித்தபிறகும், என்னுள் எதுவும் ஏறவில்லை. என் வாசிப்பு நிலை உணர மட்டுமே உதவியது.
இவையெல்லாம் பெயருக்குத்தான் கதைப்புத்தகங்கள். உண்மையில், இவை கோபிகிருஷ்ணனின் வாழ்க்கைப்பதிவுகள்.
---
கதை எழுதுவதற்கான ஆர்வத்தை மற்றவர்களிடம் தூண்டுவதற்கும், அதை மேம்படுத்த முயற்சி எடுப்பதற்கும், தெரியாத எழுத்தாளர்களை பற்றிய அறிமுகம் கொடுப்பதற்கும் (அட்லீஸ்ட் என் போன்றவர்களுக்கு), சிவராமன், சுந்தர் ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகள்.
.
6 comments:
கோபிகிருஷ்ணனின் கதைகளை நானும் படிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இன்னும் ஆரம்பிக்கவில்லை....
நீங்கள் என் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளீர்கள்...நிச்சயமாக சுந்தர், சிவராமன் போன்றோரது பணி பாராட்டப்பட வேண்டியதே...
நீங்கள் ர.சு. நல்லபெருமாளின் நாவல்களை வாசித்திருக்கிறீர்களா, நான் நீண்ட நாளாக அவரைப் பற்றி பதிவு போட நினைத்துகொண்டிருக்கிறேன், சீக்கிரம் போட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன்....
கதைகளைப் பற்றி நீங்கள் சொன்னது அக்மார்க் உண்மை...
when u get time visit Leka's blog, very useful blog for Tamil writtings,
http://yalisai.blogspot.com/2009/07/blog-post_30.html
//நீங்கள் ர.சு. நல்லபெருமாளின் நாவல்களை வாசித்திருக்கிறீர்களா//
இல்லையே! :-(
சீக்கிரம் சொல்லுங்க...
பஷீர் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி, ராம்ஜி
நல்ல பெருமாள் அவர்களின் கல்லுக்குள் ஈரம் மற்றும் போராட்டங்கள், ஆகிய இரு முக்கிய நாவல்களும் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியவை மட்டுமல்ல, பலரது பாராட்டுகளையும் பெற்றவை...
இப்போது மகாபாரதத்தில் நிர்வாகப் பாடங்கள் என்கிற தொடர் பதிவு போட்டுக் கொண்டிருக்கின்றேன், அது அனேகமா இந்த வாரத்தில் முடிந்து விடும், அநேகமாக அடுத்த வாரம் நல்லபெருமாளைப் பற்றிய பதிவை போட்டுவிடுவேன்...
போட்டவுடன் இணைப்பு அளிக்கிறேன்...
நரேஷ்,
கண்டிப்பாக நானே வந்து படிப்பேன். நல்லபெருமாள் பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறேன்.
Post a Comment