கணையாழியின் கடைசி பக்கங்களில் அக்டோபர் 1972 இல் வந்தது.
புதுக்கவிதை பற்றி சற்றுப் பேசலாம். புதுக் கவிதை தற்போது ஒரு rash போல் நம்மிடம் பரவி இருக்கிறது. “அடிக்கடி கட்சிமாறும் அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் குரங்கைச் சின்னமாய்க் கொடுத்தால் என்ன” என்கிற வாக்கியத்தை ஐந்தாகப் பிரித்து கவிதையாகப் பதிப்பித்திருந்தார்கள்.
என்னய்யா விளையாடுகிறீர்களா?
*
நான் புதுக் கவிதையை எதிர்ப்பவனில்லை. யாப்பு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவனில்லை. ஆனால் இந்தப் புதுக் கவிஞர்கள் எல்லோருக்கும் அமிதசாகரர் இயற்றிய யாப்பருங் கலக்காரிகையில் இரண்டு மூன்று பாடங்கள் நடத்த எனக்கு விருப்பமாக இருக்கிறது. மீறுவதற்கு முன் சில தளைகளை... சந்தத்தை.
”பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறமெழ உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிவிட்டேன்
என் அப்பா...”
போன்ற அபாரமான வரிகளின் மரபை!
*
சந்தம் என்பது மனித வாழ்க்கையில் அடிப்படையான ஒரு விஷயம். அது நம் இதயத் துடிப்பில் இருக்கிறது. இயற்கையின் மாறுதல்களில் நம் சங்கீதத்தில்... யாவற்றிலும் வியாபித்திருக்கிறது.
ஞானக்கூத்தன், சி. மணி இருவருக்கும் யாப்பைப் பற்றித் தெரிந்திருக்கிறது. பல நவீன விஷயஙகளைச் சிலர் யாப்புடன் சொல்லக் கூடியவர்கள், சொல்லும் விஷயத்தை யாப்பு மறைக்க முற்படும்போது மீறுகிறார்கள். மீறலாம். காமராசனிடம் Form இருக்கிறது. அது அமையாதபோது சுதந்திரமாக உரைநடைக்குச் சென்று விடுகிறார்.
யாப்புடன் எழுதுவது மிகச் சுலபமான விஷயம். எதை வேண்டுமானாலும் யாப்புடன் சொல்லலாம். பார்க்கலாமா?
எல்லோரும் பாட்டெழுத நான் ஏன் விதிவிலக்கா?
எல்லோரும் என்பதுடன் (யோசி) எதுகைக்கு
எல்லோரா! எப்பூடி? ஈஸி, கவிஎழுத
வல்லோரில் நான்ஒருவன் என்பதைக் காட்ட
அடுத்த கவிதைக்கு வந்துவிட்டேன் மேலே
தொடுத்து அமைப்பதில் தொந்தரவு இல்லை
படுத்துக் களைத்திருக்கும் பத்மாவைப் பாச்சா
கடித்த கதைபற்றிச் சொல்ல நினைத்தவன்
பாயை விரித்துப் படுத்தவளைப் பாச்சா
வாயைத் திறந்து...’ வரைக்கும் வந்துவிட்டேன்
மாயச் சுழலிது, மேலே முடிச்சவிழ்க்க
ராயப்பேட்டை பாலு! வா!
இஃது பன்னிரண்டடியான் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பா.
---
ஒரு இடத்தில் மட்டும் நான் ’ப’வை ’பூ’வாக தவறாக டைப்படித்துள்ளேன் என்பதை சரியாக சொல்லிக்கொள்கிறேன்.
இலக்கியம், கவிதை இவையெல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று மொழியல்லாத வேறேதும் இலக்கணம் இருக்கிறதா? தெரிந்தால் சொல்லவும். அதேப்போல் வகைவகையான கவிதைகள். பலர் எழுதும் கவிதைகள் எனக்கு புரிவதே இல்லை. இவ்வித குறைக்கு என்ன பெயரென்று தெரியவில்லை. புரிந்த கவிதைகளும், சுஜாதா சொன்னது போல், உடைத்து போட்ட உரைநடை போலத்தான் இருக்கிறது. அப்படின்னா, எனக்கு புரிஞ்ச கவிதை, கவிதையே இல்லையா? தவிர, கட்டுடைத்து எழுதப்படும் கடாமுடா கவிதைகளை ரசிப்பது எப்படி? முதலில் புரிந்து கொள்வது எப்படி? குறைந்தபட்சம், புரிந்த மாதிரி காட்டிக் கொள்வது எப்படி?
இல்ல, எனக்கெல்லாம் வாரமலர் கவிதையும், டீ.ஆரின் எதுகை மோனை வசவுகளும் தான் லாயக்கா?
4 comments:
//இல்ல, எனக்கெல்லாம் வாரமலர் கவிதையும், டீ.ஆரின் எதுகை மோனை வசவுகளும் தான் லாயக்கா?//
நண்பரே, 1972ல எங்க டி ஆர் வந்தார்?
அண்ணா,
நீங்க நம்ம ஜாதி. உங்க வேவ் லெங்க்த் படிக்கிறபோதே புரிகிறது. வெளுத்துக் கட்டுங்கள். நிறைய இது மாதிரி எழுதுங்கள்.
http://kgjawarlal.wordpress.com
உலகநாதன் சார், அது நான் சொன்னது.
சுஜாதாவின் எழுத்தை வேறொரு எழுத்து வடிவில் கொடுத்துள்ளேனே? குழப்பத்திற்கு மன்னிக்கவும்...
வருகைக்கு நன்றி...
நன்றி Jawarlal
Post a Comment