Wednesday, July 29, 2009

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...

மகேந்திரனிடமிருந்து...

எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படங்கள் சிலவுண்டு. அவற்றை தொகுத்துப்பார்க்கும்போது பல படங்கள் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியதாக இருக்கும். எந்த தொழில்நுட்ப பயமுறுத்தல்களும், ஆடம்பரங்களுமில்லாத எளிமையான படங்கள் அவருடையது.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களும் எளிமையாக, ரசிக்கும்படியாக இருக்கும். அவரே ஒரு நல்ல இசை ரசிகராக இருந்ததால் அவர் படங்களின் பாடல்களும் குறிப்பிடும்படியானவை. அவரின் இன்னொரு சாதனை ராஜாவையும் எம்.எஸ்.வியையும் இணைத்து இசையமைக்க வைத்தது. இவர்கள் இணைந்து இசையமைத்த ’மெல்லத்திறந்தது கதவு’ பாடல்கள் இனிமையின் உச்சம்.

என்னைக்கவர்ந்த அவரின் படங்களில் ஒன்று 1984 ல் வெளியாகி வெள்ளி விழா கண்ட "வைதேகி காத்திருந்தாள்". கதை, இசை, நகைச்சுவை அனைத்துமே தேர்ந்தெடுத்து செய்தவையாக இருக்கும். இன்றும் தமிழ் நாட்டில் ஆல் இன் ஆல் அழகுராஜனை அறியாதவர்கள் இருக்க முடியாது. "இந்த பெட்ரோமாக்ஸ் லைட் எப்படிண்ணே எரியுது?" வரலாறு படைத்த நகைச்சுவை. கவுண்டமணியின் ஆகப்பொருத்தமான ஜோடியாக கோவை சரளா (கோயம்புத்தூரில் வசித்த, கொங்கு தமிழில் கலக்கும் இவர் ஒரு மலையாளி). அவரைவிட கவுண்டமணிக்கு மிகப்பொருத்தமான ஜோடியாக செந்தில். (அண்ணே அந்த வ்விலாசம்.. வ்விலாசம்..)



நாயகன் விஜயகாத்தின் ஜோடியாக வந்து பாதியில் இறந்து போவது பிரேமின் தோஷி என்றொரு வங்காள நடிகை. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. (அதற்கு நேர்மாறான அவர் மகள் இப்போது "கிருஷ்ணலீலை" என்றொரு படத்தில் நடிகர் ஜீவனுடன் நடித்து வருகிறார்). "வெள்ளிக்கிழமை ராமசாமி" போன்ற கிளிஷேக்களை தவிர மிகவும் இயல்பான அழகான படம் இது. இனி பாடல்களைப்பற்றி..

ராஜாவின் படம் என்றால் எஸ்.பி.பி & ஜானகியே தான் பாட வேண்டுமா?. யாருக்கு மாற்றம் தேவைப்பட்டதோ தெரியவில்லை. தமிழில் வெகு நாட்களாக உரிய அங்கீகாரமின்றி, கவனிக்கப்படாமலே இருந்த ஜெயச்சந்திரனை ராஜா முழுமையாக பயன்படுத்திக்கொண்டார். விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் வெவ்வேறு குரல்களில் இடம்பெற்றன.

யாரையுமே தாளம் போட வைக்கும் "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.." (அரை கிலோமீட்டருக்கு அந்தாண்ட வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டான்.. இனி புள்ள தூங்கிடும்..!!). இதே பாடலின் பெண்குரல் பதிவு "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.

கேட்ட நிமிஷத்தில் மனதை கனப்படுத்தும் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி.." இடையில் வரும் ஒரு "ஆரிராரோ..ஆரிராரோ..", விஜயகாந்த்தின் பிரமையில் வரும் பிரேமின் தோஷி கேட்கும் "காலெல்லாம் வலிக்குதா மாமா?" எல்லாம் கேட்கையில் எனக்கு கண்ணோரம் துளிர்க்கும். இதே பாடலின் இடையில் வரும் "வாடா கருப்பா இறங்கி வாடா.." ஒரு அற்புதமான குறியீடு. இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி ரணப்பட்டு நிற்கும் நாயகன் பாடுகையில், யாருக்கோ பேயோட்டும் பாடலை இடையில் திணித்திருப்பது மிகுந்த அர்த்தம் பொதிந்ததாயிருக்கும். இயக்குனர் நினைப்பதையெல்லாம் இசையில் வெளிப்படுத்த ராஜாவை விட்டால் வேறு யார்?

கதையின் இன்னொரு பகுதியில் வரும் ரேவதியின் திருமணப்பாடலை ராஜாவே பாடியிருப்பார். உமா ரமணனுடன் அவர் பாடிய "மேகங்கருக்கையில புள்ள தேகங்குளிருதடி.. ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசைய என்ன செய்ய?.." ஒரு வியக்கவைக்கும் நாட்டுப்புற மெட்டு. இடையில் சேர்ந்திசைக்குரல்களில் வரும் "ஹொய்யா ஹோ.. ஹொய்யா ஹோ.." கேட்கையில் நிஜமாக நாமே பரிசலில் போவது போல இருக்கும்.

"ஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான்?
ஆளுக்கோர் ஆசைய ஏன் கொடுத்தான்?..
இல்லன்ன உலகமே இல்ல புள்ள, இதுகூட தெரியல என்ன புள்ள?"
என ராஜா கேட்கையில் சிலிர்ப்பாயிருக்கும்.

எம்.எஸ்.வியின் தீவிர ரசிகரான ராஜாவுக்கு, அவர் இசையமைத்த பாடல்களில் மிகவும் பிடித்தது "பாக்யலட்சுமி" படத்திலிடம் பெற்ற "மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்..". பல மேடைகளில் இதை ராஜா பலமுறை சிலாகித்து சொல்லியிருக்கிறார். ஒரு விதவையின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்த இந்த பாடல் "சந்திரகவுன்ஸ்" என்ற ஹிந்துஸ்தானி ராகத்திலமைந்தது.



இதே போன்று ஒரு பாடலை அமைக்க ராஜா தகுந்த வாய்ப்பை எதிபார்த்து காத்திருந்தார். எனவே இப்படத்தில் விதவையாக வரும் ரேவதி பாடுவதான ஒரு சூழலுக்கு, அதே ராகத்தில் ராஜா அமைத்த பாடல் ஜானகியின் குரலில் ஒலித்த "அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட.. சிலம்பொலியும் புலம்புவதை கேள்". என் பள்ளி நாட்களில், கலை நிகழ்ச்சிகளில் பெண்வேடமிட்டு சிறுவர்கள் நாட்டியம் என்ற பெயரில் ஆட தேர்ந்தெடுக்கும் முதல் பாடலாக இது இருந்தது. பாடலின் இறுதியில் ரேவதியின் தந்தையாக வந்து உக்கிரதொணியில் ஜதி சொல்லும் ட்டி.எஸ்.ராகவேந்தர், நிஜமாகவே ஒரு பாடகர். தற்போது அவர் மகள் கல்பனா நிறைய பாடி வருகிறார் ( கடவுள் தந்த அழகிய வாழ்வு, இன்னும் நிறைய).

இப்போது எனக்கான பாடல்...



என் விருப்ப எண்களில் ஒன்றாக இருக்கும் இந்த பாடல் ஜெயச்சந்திரன், வாணிஜெயராம் பாடிய "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..இன்பத்திலாடுது என் மனமே.." ஆபோகி என்ற ராகத்தில் ராஜா அமைத்த இந்த பாடல் அப்பட்டமாக மன குதூகலத்தை பிரதிபலிக்கும் ஒன்று. கங்கை அமரன் எழுதிய பாடல்களில் இது குறிப்பிட்டு சொல்லும்படியான ஒன்று. பாடல் இசை துவங்குவதற்கு முன்பாக ஒரு நீண்ட ஆலாபனையுடன் தொடங்கும். பாடல் முழுக்க வீணை அற்புதமாக கையாளப்பட்டிருக்கும். வாணிக்காகவே அமைத்தது போன்ற வேகமான ஸ்வரவரிசைகள் வேறு பாடலை பிரமாதப்படுத்தியிருக்கும்.

என்றேனும் நீங்கள், வெகுநாட்கள் எதிர்நோக்கியிருந்த விஷயம் கைகூடப்பெற்று ஆனால் உடனடியாக பகிர்ந்துகொள்ள அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறதா? அப்போது தவிப்பு கலந்த குதூகலத்தின் உச்சமாய் உங்களுக்குள் ஒரு இசை நிகழுமே.. அதுதான் இது..

"ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ" என்ற வரிகள் நிஜமாகவே கங்கை அமரனே எதிர்பாராமல் வந்து விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கேட்கும் போதெல்லாம் வாணி எங்கே போனார் என்று ஆதங்கமாயிருக்கும். இதை எழுதும்போதே எனக்கு இப்பாடலை மீண்டும் கேட்க மிகுந்த ஆவலாயிருக்கிறது.. நீங்களும் கேளுங்கள்..

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..
இன்பத்திலாடுது என் மனமே..
கனவுகளின் சுயம்வரமோ.. கண்திறந்தால் சுகம் வருமோ?..

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத்தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே..
நாயகன் கைதொடவும் கொண்ட நாணத்தை பென்விடவும்..
மஞ்சத்திலே கொஞ்சக்கொஞ்ச மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச..
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்..

மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ?
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ?
காதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..
மஞ்சத்திலே எழுச்வரம்.. இன்பத்திலே நூறுவரம்..
இணைந்து மகிழ்ந்து மிதந்த நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..
இன்பத்திலாடுது என் மனமே..
கனவுகளின் சுயம்வரமோ.. கண்திறந்தால் சுகம் வருமோ?..


-மகேந்திரன்

8 comments:

பிரபாகர் said...

மனதினை நெகிழ்த்தும் எல்லோருக்கும் பிடித்த படத்தையும் பாடல்களையும் அலசி, படிப்போருக்கு ஆனந்தத்தை விதைத்திருக்கிறீர்கள்...

நன்றி தலைவா...

பிரபாகர்.

நரேஷ் said...

பொறாமையா இருக்குங்க, மகேந்திரனோட வர்ணனைகளை படிக்கும் போது.... பாடல்களை அனுபவிக்க வைக்கிறார்....

ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடல் ஜெயச்சந்திரன் பாடியதுதானே? இன்னும் பலர் அதை யேசுதாஸ் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை.

இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாடல் ஜனரஞ்சக வகையைச் சார்ந்த்தாக இல்லாவிட்டாலும் இசைப் பிரியர்களுக்கு அது மிகப் பிடித்தமாக இருப்பது திண்ணம்.

//என்றேனும் நீங்கள், வெகுநாட்கள் எதிர்நோக்கியிருந்த விஷயம் கைகூடப்பெற்று ஆனால் உடனடியாக பகிர்ந்துகொள்ள அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறதா? அப்போது தவிப்பு கலந்த குதூகலத்தின் உச்சமாய் உங்களுக்குள் ஒரு இசை நிகழுமே.. அதுதான் இது//

மிக உண்மை, எப்படி உணர்ந்து சொன்னார் என்று ஆச்சரியமாக இருக்கிறது...நெஞ்சில் ஒரு கருவறை என்று ஒரு நாவல், சின்ன வயதில் படித்த்து. அதில் வரும் நாயகி மிகுந்த மனக் குழப்பங்களைத் தாண்டி தன் அன்பையெல்லாம் கொட்டிவிட எண்ணி அவனது வருகைக்கு காத்திருக்கும் போது, உற்சாகத்தில் திளைக்கும் போது அந்த சூழ்நிலைக்கு ஏற்ற பாடலாக அவள் பாடியது இதே இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாடல்தான்....

அற்புதமான வரிகளும், குரல்கள் எழுப்பும் உணர்வுகளும், அதை நீங்கள் வர்ணித்திருப்பதும் மிக அருமை....

ஒன்று மட்டும் நிச்சயம், மகேந்திரனின் வர்ணனைகளை ஒவ்வொரு முறை படித்தவுடன், அந்தந்த பாடல்களை திரும்ப ஒரு முறை கேட்க வேண்டும் என்கிற உணர்வு எப்பொழுதுமே எழுகிறது....

மகேந்திரன் said...

மிக்க நன்றி நரேஷ்..

மகேந்திரன் said...

நன்றி பிரபாகர்..

செ. நாகராஜ் - C. Nagaraj said...

ரொம்ப பிரமாதம், ராஜா ராஜா தான். இந்த படம் 1985ல் வந்ததா?, இப்ப கூட பாடல் கேட்டால் கொண்டாட்டம் தான். அதிலும் ராசாத்தி உன்னை காணாத நெஞ்சி, உடனேயே ஒரு வயலின் இசை வருமே எப்ப கேட்டாலும் ஜிவ்வுனு பறக்கிற மாதிரி தோணும், நமக்கு மட்டும் தானா இப்படினு நினைச்சிப்பேன், இப்ப தான் தெரியுது நிறைய பேருக்கும் அப்படியே தான் போலிருக்கு.
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ராஜா பாட்டை கேட்கையில் எப்போதுமே

மகேந்திரன் said...

நன்றி நாகராஜ்

Prathap Kumar S. said...

அருமையான பதிவு. வாழ்க்கையில் மறக்கமுடியாத படம். என் தந்தைக்கு மிகவும் பிடித்த படம். தந்தை தற்போது இவ்வுலகில் இல்லை. பதிவை படிக்கும்போதே கண்களில் நீர் வந்தது.

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே அற்புதமான ஒரு பாடல். இந்தபாட்டை ஒருதடவை கேட்டுப்பாருங்கள். எந்த சோகமான மனதும் உற்சாகமடையும். தேக்ஸ் டு ராஜசா சார்.

நன்றி மகேந்திரன்

முரளிகண்ணன் said...

முன்னரே படித்து நான் பலரிடம் சிலாகித்ததுதான். மீண்டும் உங்கள் பதிவுகளை எல்லாம் வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். இதுவும் இளையராஜா பாடல்களைப் போலத்தான். சலிக்காது.