மகேந்திரனின் நெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல் பதிவின் பின்னூட்டங்களை பார்த்தப்போது தான், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது?, பாடலுக்கு இருக்கும் பெருமையும் அருமையும் எனக்கு தெரிந்தது. நான் அவ்வளவாக கேட்காத பாடல். தற்போது கேட்க தூண்டிய மகேந்திரனுக்கு நன்றி.
இனி பாடலைப் பற்றி மகேந்திரன்.
----
மீண்டும் வாணியைப் பற்றிய ஒரு பதிவு. எழுதவேண்டுமென்றால் அவரைப்பற்றி மட்டுமே இன்னுமொரு ஆயிரம் பதிவு எழுதலாம். நான் சில சமயம் யோசிப்பதுண்டு. இத்தனை திறமையான இனிமையான பாடகிக்கு ஏன் குறிப்பிடும்படியான அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று. என் வீட்டு வேப்பமரத்தில் மட்டுமே அமர்ந்து கூவ வேண்டுமென்று நானொரு குயிலை கட்டுக்குள் வைக்க முடியுமா? வாணியும் கூட அப்படித்தான்.
வேலூர் மாவட்டத்தில் பிறந்த வாணி, கல்லூரி முடித்தது சென்னையில். திருமணத்தின் முன்பு குடும்பத்தின் சம்பிரதாயமாக கற்ற இசை அவருக்குள் மட்டுமே இருந்தது. திருமணம் முடிந்து கணவரின் பணி நிமித்தம் காரணமாக பம்பாய்க்கு பயணம். அதன் பின் துவங்கியது வாணியின் இசையுலகப்பிரவேசம். இசையுலக விற்பன்னர்களே வியக்கும் வண்ணம் தினமும் 18 மணி நேரம் சாதகம். எல்லாமுமாக சேர்ந்து அவரை 16 இந்திய மொழிகளில் பாட வைத்தது. இனி அவரின் இன்னொரு பாடல்...
இப்போது ஒரு குறுந்தகட்டில் 140 பாடல்களை வைத்துக்கொண்டிருப்பதால் அவற்றின் மதிப்பு நமக்கு தெரிவதில்லை. சிறுவயதில் ஒலிநாடாக்கள் எளிதாக புழங்குவதற்கு முன், சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்ட பாடல் ஒன்று. ஒவ்வொரு முறையும் மீண்டும் கேட்க மாட்டோமா என்றிருக்கும். அப்படி காத்திருந்து கேட்டதால் தானோ என்னவோ, இன்னும் மனதை விட்டு இறங்காமல் அடம் பிடித்து அமர்ந்திருக்கிறது.
எப்போது இந்தப்பாடலை பற்றி நினைத்தாலும் திரு. பி.ஹச். அப்துல் ஹமீது அவர்களின் குரலும் நினைவில் வரும். ஏனென்று தெரியவில்லை. பாடல் இடம்பெற்ற படம் "நெஞ்சமெல்லாம் நீயே" (1983). பாடல் "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?.." சங்கர் கணேஷ் இசையமைப்பில் வாணி பாடிய பாடல்.
இன்னும் கூட நிறைய பேர் இது ராஜாவின் பாடல் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். இதன் இசைக்கோர்வை அப்படி. பாடல் முழுவதுமே பயன்படுத்தியிருக்கும் வயலின், சீரான நடையில் தபேலா எல்லாவற்றிலும் ராஜாவின் சாயல் இருக்கும். தமிழில் வாணிக்கு நிறைய பாடல் கொடுத்து, அவரை முழுமையாக பயன்படுத்திக்கொண்டவர்கள் சங்கர்-கணேஷ்.
வாணியின் ஹிந்துஸ்தானித் திறமை முழுவதையும் வெளிக்கொணரும் பொருட்டு அவருக்கென்றே பாடல் அமைப்பார்கள். எல்லாப்பாடல்களின் இடையிலும் ஒரு ஆலாபனை. இந்தப்பாடலின் சரணத்தின் கூட முதல் வரி முடிந்து ஒரு ஆலாபனைக்கு பின் அடுத்த வரி துவங்கும்.
எனக்கு ஒரு வழக்கமுண்டு, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை கேட்கும் போது கண்மூடி, அதை எனக்கு தெரிந்த யாராவது பாடுவது போல கற்பனை செய்து பார்ப்பேன். வாணியின் முகம் எனக்கு பரிச்சயமாவதற்கு முன்பே குரல் பரிச்சயப்பட்டு விட்டதால், நானே அதற்கொரு முகம் கொடுத்தேன்.. பின்பொரு நாளில் வாணியின் படத்தைப் பார்த்தபோது அவர் அதை விட மிகுந்த அழகாயிருந்தார்.
வாணி, 80 களின் துவக்கத்தில் கச்சேரிகளுக்காக எங்கள் ஊர் வருகையில், கர்நாடக சங்கீதம் சற்றும் அறிந்திராத கூட்டம் (என் தந்தை உட்பட) இறுதியாக அவர் பாடப்போகும் ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், மல்லிகை என் மன்னன் மயங்கும், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது? போன்ற பாடல்களுக்காக இறுதிவரை அசையாமல் இருக்குமாம்.
இந்தப்பாடல் எப்போதுமே அந்திப்பொழுதில் கேட்டதாலோ, இல்லை பாடலின் இயல்பே அப்படியோ தெரியவில்லை. கேட்கும் பொழுதெல்லாம் அதை சாயங்காலமாகவே மனம் உணரும். கோரஸ் வயலின்களுடன் துவங்கும் பாடல் நம் கையைப்பிடித்து இழுப்பது போல ஒரு பிரமை அளிக்கும். யாரது என்பதை மட்டுமே வெவ்வேறு விதங்களில் பாடியிருப்பார்..
திறமையான பாடகியை (ராதா) மனைவியாக அடையப்பெற்ற ஒரு ஈகோ நிறைந்த கணவனைப் பற்றிய (மோகன்) கதை. எத்தனை கஷ்டப்படுத்தினாலும் அவள் கணவன் மேல் மாறாத நிறைந்த அன்புடையவள். அவளின் அன்பு ஒரு நீரூற்றைப்போல பாடலில் வெளிப்படும்.
சில சமயம், அம்மாக்கள் கண்முன்னே பிள்ளையை வைத்துக்கொண்டு, எங்க பாப்பா?.. எங்க போயிருப்பா? காணலியே.. என்று விளையாட்டாக தேடுவது போல, நீதான் என்னை முழுவதுமாக அள்ளிச்சென்றாய்.. உன்னைத்தவிர ஒருபோதும் யாரும் என்னை தீண்டிவிட முடியாது.. இருந்தாலும் கேட்டு வைப்பேன் என்ற ரீதியில் பாடல் துவங்கும்..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது??..!!
நீ திருப்பித்தரவேண்டாம்.. தந்தாலும் வாங்க மாட்டேன் என்பது உனக்கும் தெரியும்..
இருந்தாலும் அடுத்த வரியில் இப்படிச்சொல்வேன்..
தாளாத பெண்மை வாடுமே.. நாளுமே..!!
வேறு யாருமே பழக்கமில்லாத முற்றிலும் புதிதான ஒரு ஊரில், உங்கள் துணையுடன் நீங்கள் கைகோர்த்து நடக்கும் ஒரு அந்திப்பொழுதில், பிறர் கேட்காவண்ணம் மிக மெலிதாக, நீங்களே எதிர்பாராத பொழுதில் அவள் பாடத்துவங்கினால் எப்படி இருக்கும்?? இப்படித்தான் இருக்கும்..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது?
தாளாத பெண்மை வாடுமே.. நாளுமே..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது??
மார்கழிப்பூக்கள் என்னைத்தீண்டும்...
மார்கழிப்பூக்கள் என்னைத்தீண்டும் நேரமே..
தேன்தரும் மேகம் வந்து போகும்,
சிந்து பாடும் இன்பமே..
ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல்வரும்
கார்காலம் போதை தரும்..
தாமரை ஓடை இன்ப வாடை..
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே..
செவ்விதழ் ஓரம் இந்தநேரம்
இன்பசாரம் ஊறுதே..
ஆளானதால் வந்த தொல்லை.. காதல் முல்லை
கண்ணோடு தூக்கம் இல்லை..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது?
தாளாத பெண்மை வாடுமே.. நாளுமே..
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது??
-மகேந்திரன்.
பாடலை ரசிக்க படத்தை க்ளிக் செய்யவும்.
19 comments:
அருமை அருமை அருமை...
இதை தவிர வேறு என்னங்க சொல்ல முடியும்?
நன்றி இங்கிலீஷ்காரன்..
என் விருப்பத்தை நிறைவேற்றியதுற்கு மிக்க நன்றி.
வேற எதுவும் சொல்ல வார்த்தை இல்லை.
என் பெயர் பவன்
----
Anonymous said...
another song is like that ..
யாரது sollamal நெஞ்சள்ளி போவது
pls write about this super song.
July 9, 2009 10:54 AM
----
மிக அழகான பாடலைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எனக்கு மிகப் பிடித்த பாடல். இந்த முறை ஊருக்கு சென்றிருக்கும்போதுதான், எதேச்சையாக ஏதோ ஒரு டீவியில் இந்தப் பாடல் வந்த போது, நீண்ட நாட்களுக்குப் பின் கேட்டதற்கு மகிழ்ந்து, அம்மாவிடம் என்ன படமென்று கேட்டு வந்தேன்!
வாணியின் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. நன்றாகவேதான் ரசிக்கிறீர்கள். நானும் இந்தபாடல் ராஜாவின் இசை தான் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சங்கர் கணேஷின் பாடல்கள் இப்படி அபூர்வமாக பிரமாதமாக அமைவது உண்மைதான் .அதுவும் வாணியின் பாடல் களாகவே இருப்பது சிறப்பு,
ராஜாவின் "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட " பாடல் போன்று மிக மிக மென்மையாக பூ குவியல் மீது கிடப்பதைப்போன்ற அவ்வளவு மென்மையுடன் வேறு ஒரு பாடல் இதுவரையில் வரவில்லை என்பது என் கருத்து. ஜானகியின் சந்தத்துடன் துவங்கி ராஜாவின் குரலில், வயலின், பியானோ, குழல், தபேலா என்று மயக்க வைக்கும.
கேட்டுத்தான் பாருங்களேன்.
வாணியின் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. நன்றாகவேதான் ரசிக்கிறீர்கள். நானும் இந்தபாடல் ராஜாவின் இசை தான் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சங்கர் கணேஷின் பாடல்கள் இப்படி அபூர்வமாக பிரமாதமாக அமைவது உண்மைதான் .அதுவும் வாணியின் பாடல் களாகவே இருப்பது சிறப்பு,
ராஜாவின் "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட " பாடல் போன்று மிக மிக மென்மையாக பூ குவியல் மீது கிடப்பதைப்போன்ற அவ்வளவு மென்மையுடன் வேறு ஒரு பாடல் இதுவரையில் வரவில்லை என்பது என் கருத்து. ஜானகியின் சந்தத்துடன் துவங்கி ராஜாவின் குரலில், வயலின், பியானோ, குழல், தபேலா என்று மயக்க வைக்கும.
கேட்டுத்தான் பாருங்களேன்.
நன்றி பவன், நன்றி மதன்..
நிறைய முறை கேட்டிருக்கிறேன் மாணிக்கம்.
என்னைக்கவர்ந்த ராஜா பாடல்களில் அதுவும் ஒன்று.. நன்றி..
இங்கிலிஷ்காரன், இன்னைக்கு ஆடி ஒண்ணு..
தேங்காய் சுட்டுட்டிங்களா?
அருமையான பாடல் சரவணா.. முன்பு வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்படும் பாடலில் இதுவும் ஒன்று.
மீள் நினைவிற்கும் மகேந்திரனின் பகிர்தல் பற்றிய செய்திகளுக்கும் நன்றி!
நல்ல பதிவு மகேந்திரன்.
மேகமே மேகமேன்னு ஒரு அற்புதமான பாடல் பாடியிருப்பார். என்னுடைய ஆல் டைம் பேவரைட் அந்தப் பாட்டு.
என்னைப்போல பலருக்கும் இந்த பாடல் பல நேரங்களில் அமைதி தந்துள்ளது நிஜம்.
பதிவுக்கு நன்றிகள் குமரா.
வாணியின் குரலில் சாகா வரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. சங்கர் - கணேஷ் கூட்டணியில் இது மிக முக்கியமான பாடல்.
ஞாபகப்படுத்தியதற்கு நன்றி! இந்தப் பாடலின் ஆடியோ இணையத்தில் எங்காவது கிடைத்தால் அதையும் கொடுங்கள்.
இன்றைய தலைமுறை கேட்கட்டும்.
நன்றி சென்ஷி, வடகரை வேலன், கண்ணன், செல்வகுமார்
செல்வக்குமார், கூகிளில் தேடினேன். இது கிடைத்தது.
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4944/
”மேகமே மேகமே வான்நிலா தேடுதே”
இந்தப் பாடலை பின்னிரவுகளில் கேட்டுப்பருங்கள்..சொர்கம் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும். அவருக்கு என்னைத் தெரியும் என்பது என் முன்னோர் செய்த பலன்.
இப்படிக்கு,
பாடகனாய் ஊரை ஏமாற்றும்,
எம்.எம்.அப்துல்லா
my favorite song,saw this movie in madurai during a trip,Iused to sing this all the time then,brought back lovely memories
உங்களைப்போன்றவர்கள் இருப்பதால் தான் இன்னமும் இது போன்ற இசைப்பொக்கிஷங்கள் அழியாமல் இருக்கின்றன. உங்களை போன்ற ரசிகர்கள் உள்ளதால் தான் 60 வருடத்திற்கு முந்தைய எம் கே தியாகராஜ பாகவதர் பாடல்கள் கூட இன்றைக்கும் நமக்கு கிடைக்கின்றன. நல்ல ரசிகர்கள் உள்ளவரை தமிழ் சினிமாவிலுள்ள நல்ல விஷயங்கள் அழியாமல் இருக்கும்
இப்பல்லாம் டிவி ல 3 - 4 மாசத்துக்குள்ள வந்தபாட்டையே திரும்ப திரும்ப போட்டு கொல்றாங்க... அதுலயும் மூணு நிதியும் படம் எடுக்க ஆரம்பிச்சதும் புடிச்ச சனி எப்ப விடும்னே தெரில...
-Arivu
Post a Comment