பொதுவா சினிமாவில் நாயகியை பற்றிய பாட்டுனா, அவ ரொம்ப அழகு, ஆஹா, ஒஹோ அப்படின்னு தான் நம்ம கவிஞர்கள் எழுதுவாங்க. அதனால் தான் என்னவோ, அங்காடி தெருவில் வரும் இந்த பாட்டு கவனத்தை இழுத்தது.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
பாடல் முழுக்க இப்படியே. ரஹ்மான் குடும்பத்தில் இருந்து வரும் இசையமைப்பாளர் என்றபோது எனக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் மேலான எதிர்ப்பார்ப்பு வேறு மாதிரி இருந்தது. வெயில், கீரிடம் என்று அவரிடம் இருந்து வந்த பாடல்களில் மின்னியது மெலடி மெல்லிசை பாடல்கள். அதனாலேயே, அவர் படப்பாடல்கள் என்றால் ஒரு கவனம் இருக்கும். ஆனால், குசேலன், காளை, சேவல் என்று அதன்பிறகு தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருந்தார்.
வெயிலை தொடர்ந்து இப்போது அங்காடி தெருவில் வசந்தபாலனும் பிரகாஷும் சந்தித்துயிருக்கிறார்கள். இதிலும், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கதைகளை பேசும் விழி அருகே, உன் பேரை சொல்லும்போதே, எங்கே போவேனோ? என்று நான்கு மெலடி மெட்டுக்களில் தாலாட்டியிருக்கிறார்.
இசை சிறப்பாக அமைய, இயக்குனரின் பங்கு எவ்ளோ முக்கியம்?!
----
மதியம் ஏதாவது ஈடுபாடில்லாத வேலையை செய்து கொண்டிருந்தால், ஒரு அசதி வந்து தூக்கத்தில் கவிழ்க்க பார்க்கும். அதில் சிக்காமல் தப்பிப்பதற்கு சில நிவாரணிகள் இருக்கின்றது. இன்றைய காலக்கட்டத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் அப்படி ஒன்று. கொஞ்ச நாள் முன்பு, இப்படித்தான் வில்லு உபயோகித்து வந்தேன். டாடி மம்மி பாட்டின் பீட்டிற்கு, மேஜையை தட்ட போய், பக்கத்து இருந்தவர் எட்டிப்பார்த்தார். இப்ப அப்படி சிக்கி இருப்பது, கந்தசாமி.
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி, மியாவ் மியாவ், என் பேரு மீனாக்குமாரி, அலைக்ரா-இந்திய பொண்ணுதாங்கோ பாடல்களில் அதிர அதிர இசையமைத்திருக்கிறார். எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி, மம்போ மாமியா, சொல்லாமல் சொல்லுவான் பாடல்களில் ஏதும் விசேஷத்தை நான் காணவில்லை. இதெல்லாம் டூப்பு - தேவியின் பேட்டா ராப்பு. விக்ரம் பாடாத பாடல்கள், ஏனோ சிறப்பாக இருக்கிறது.
ஒன் - நம் முத்தம் ஒண்ணு
டூ - அதில் எச்சில் ரெண்டு
த்ரீ - அந்த போதையில் மறக்கும் காலம் மூணு
ஒன் - உன் மேனி ஒண்ணு
டூ - ....
இப்படி, இதுக்கு மேல எழுதியதற்கு கவிஞர் விவேகாவிற்கு, மதுரையின் அரசர் சத்யராஜிடம் ஆயிரம் பொற்காசுகள் வாங்கி கொடுக்கலாம்.
----
ரொம்ப எதிர்பார்த்து ஒருவழியாக பாடல்கள் வந்துவிட்டது. பாடல்கள் எதிர்பார்ப்பை இன்னமும் எகிற வைத்துவிட்டது. ஆயிரத்தில் ஒருவன். இதற்கு, யுவன் இல்லை, ஜி.வி. பிரகாஷ் என்றபோது ஒரு வருத்தம் இருந்தது. இதற்கு முன்னால், அன்னியன் படத்தின் போது இது போல் இருந்தது. பிரகாஷ் குறுகிய காலத்தில் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றவர். உண்மையிலேயே அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது இந்த படம். அவர் இசைவாழ்வில் மைல் கல்லாக இருக்க போவது - ஆயிரத்தில் ஒருவன்.
ஒவ்வொரு பாட்டின் தலைப்புமே, பயங்கர பில்-டப்பாக இருக்கிறது. Celebration of Life, Composer's Mix, Govinda - Club mix, The King Arrives. நாங்க படம் மட்டுமா, ஹாலிவுட் மாதிரி எடுப்போம்? பாட்டே அப்படித்தான் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். The King Arrives இசையை கேட்டு மிரண்டு, பக்கத்தில் இருந்தவனையும் மிரள வைக்கலாம் என்று கேட்க வைக்க, அவன் இது ஒரு ஆங்கில பாட்டில் இருந்து உருவியது என்று எனக்கு ஆப்பு வைத்தான். யாராவது உண்மையை சொல்லுங்க. இருந்தாலும் கேட்காமல் இருக்க போவதில்லை. இதில் இசையின் இடையில் நமது தலையில் ஆணி அடிப்பது போல உணர வைப்பது - டெக்னாலஜி மிரட்டல்.
உன் மேல ஆசைத்தான் பாடலை தனுஷ், மனைவி ஐஸ்வர்யா, நாயகி ஆண்ட்ரியா ஆகியோருடன் பாடியிருக்கிறார். இந்த பாட்டுக்கும், சர்வத்தில் இளையராஜா பாடிய அடடா வா அசத்தலாம் பாட்டுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுப்பிடிப்பது, குமுதத்தில் ஆறு வித்தியாசங்கள் கண்டுப்பிடிப்பதை விட கஷ்டம். அதிலும் ஆண்ட்ரியா. இந்த படத்தில் இதற்கு முன்னால் யுவன் இசையமைத்தற்கும், இந்த ஒற்றுமைக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா?
இந்த படத்தின் பெரும்பாலான பாடல்களை எழுதியது செல்வராகவன். அவருடைய அனைத்து படங்களிலும் பாடல்களை நிறைய திருத்தங்கள் செயவது அவர்தானாம். இதிலும் அப்படி செய்ய, கேசட்டில் அவர் பெயரை போட்டு விட்டாராம் பிரகாஷ். நம்புற மாதிரி இல்லனாலும், எங்கோ படித்தது. பாடல் வரிகள் மட்டுமில்லை. இசையும் அப்படித்தான் இருக்கிறது. ஆங்காங்கே, செல்வராகவனை காணலாம். அடுத்த படத்தில் அவர் பெயரைப் போட்டுவிடலாம்.
6 comments:
ரொம்பஜாலியா இருக்கு தல..,
சுவையான பதிவு!
அவள் அப்படி ஒன்றும் இல்லை பாடலுக்கு இசை விஜய் அந்தோணி என்று அறிகிறேன். அந்த படத்துக்கு இருவர் இசையமைத்திருக்கிறார்கள்.
நன்கு ரசித்தேன்..நன்றி..
நன்றி சுரேஷ்
தகவலுக்கு நன்றி அனானி.
ஆமாம். அந்த பாடலுக்கும், எங்கே போவேனோ பாடலுக்கும் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.
நன்றி இங்கிலீஷ்காரன்
Post a Comment