"என்ன மாப்ளே? இன்னும் தூக்கமா?” தாத்தா குரல். அப்பா அவர் மேல் இருந்த என் கையை விலக்கிய படி எழுந்தார். எனக்கு எழுந்திருக்க மனமில்லை. அப்பா கூட சேர்ந்து இன்னும் கொஞ்சம் நாள் தான் படுக்க முடியும்.
தாத்தா பெரியகுளத்திலிருந்து வந்திருந்தார்.
“வாங்க, மாமா... இராத்திரியே வருறதா சொன்னா...”
“ஆமாம், மாப்ளே... நம்ம ஊருக்குள்ள இருந்த .... சிலையை எவனோ போக்கத்தவன் உடைச்சிட்டான். அதுக்கு பயபுள்ள எவனோ பஸ்சுல கல் எறிய, பஸ் சர்வீஸை நிறுத்திப்புட்டாங்க. அதான், காலையில தேனி மார்க்கட்டுக்கு வந்த சண்முகம் கூட அவன் பைக்ல வந்திட்டேன். இந்தாம்மா”
“என்னப்பா?”
“வருற வழில அல்லிநகரத்துல வாங்குனேன். ஸ்வீட் முட்டாய். புள்ளைக்கு பிடிக்குமேன்னு”
“ஏலேய், செல்வம் எந்திரிடா... யாரு வந்துருக்கா பாரு... போயி பால் வாங்கிட்டு வா...”
“பேராண்டி, எந்திரிக்க மனமுல்லையோ?”
“பரீட்சை முடிஞ்சாச்சு.. ரிசல்ட் வருற வரைக்கும் துரை இப்படித்தான் தூங்குமாம்.”
மூஞ்சை கழுவி தலை சீவினேன்.
“அடுத்து எந்த காலேஜ்ல சேர்க்க போறீக?”
“அவன் இந்த ஊருல படிக்க மாட்டானாம். வெளியூர் போறானாம்.” என்னிடம், “தேங்காயும் வாங்கிட்டு வாடா.”
”ஏனாம்?”
அலமாரி டப்பாவில் இருந்து காசு எடுத்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நடக்க நடக்க, அம்மா குரல் குறைந்தது.
எனக்கு சண்டை சச்சரவு எல்லாம் பிடிக்காது. உண்மையில எனக்கு பயம். யாராவது கத்தினாலே, எனக்கு உள்ளுக்குள் நடுங்கும். ஆனா, இந்த ஊருல எப்ப பார்த்தாலும் சண்டை. எதுக்கெடுத்தாலும் சண்டை.
பால் வாங்கி வீடு திரும்பும் போது, இருவர் கையில் அறுவாலுடன் உள்ளுக்குள் கோபத்துடன் என்னை கடந்தனர். பழிக்கு பழி கிளம்பியாச்சு.
கண்டிப்பா காலேஜ் வெளியூர் தான். இந்த சாதி வெறி மனிதர்களுடன் இருக்கவும் பிடிக்கவில்லை. படிக்கவும் பிடிக்கவில்லை.
----
கோயமுத்தூர் ஆரம்பத்துல எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எங்க ஊர விட வெயில் கம்மி. மரியாதை கொடுக்குற மனுசங்க. இப்படி மரியாதையா பேசுற பஸ் கண்டக்டர இங்க தான் பார்க்குறேன். நவீன நாகரிகத்தை தொடும் மையப் பகுதி, கிராமிய மணம் இன்னும் விட்டு போகாத சுற்றுப்புறங்கள். எனக்கு ஊரை விட்டு வந்தது, ஒன்றும் பெரிய கவலையை கொடுக்கவில்லை. சில நேரங்களில், வீட்டு ஞாபகம் வந்தால், குளிக்க போய் விடுவேன். கண்ணீர், பாத்ரூம் தண்ணீருடன் கலந்து விடும். அதுவும், சேர்ந்து புதிதில் தான்.
நல்லாவே படிச்சேன். எந்த சிக்கலிலும் மாட்டவில்லை.அலுங்காத தண்ணீராய் இருந்த என் கல்லூரி நாட்களில், கல்லாய் விழுந்தது அந்நாள். ப்ராஜக்ட் ஓர்க் விஷயமாய் ஜெராக்ஸ் எடுக்க காந்திபுரம் சென்றிருந்தேன். எடுத்து கொண்டிருக்கும் போது, படீரென சத்தம். கடையை விட்டு வெளியே வர, மக்கள் கூட்டம் தாறுமாறாய் ஓட ஆரம்பித்தது. கூட்டத்துடன் சேர்ந்து நானும் ஓடினேன். எல்லோருடைய முகத்திலும் கலக்கம். குழப்பம். ஊர் முழுக்க வெடிகுண்டுகள்.
எங்கெங்கோ சென்று பத்து கிலோமீட்டர் நடந்தே, ஹாஸ்டல் வந்து சேர்ந்தேன். அன்று முழுக்க தூங்கவே இல்லை. கனவிலும், ரத்தத்துடன் தள்ளுவண்டி பழங்கள். எரிந்த கட்டிடங்களின் வெப்பம்.
எனக்கு மேல்படிப்பு படிக்க வெளிநாடு செல்ல ஆசை. கூட படிக்கும் நண்பர்களால் புரிந்த கொண்ட ஆசை அது. என் தகுதிக்கு கண்டிப்பாக செல்லலாம் என்றார்கள். ஆனால், என் குடும்பத்தின் பொருளாதார நிலைதான் அதற்கு தகுதி இல்லாமல் இருந்தது. அதனால், படித்து முடித்து வேலை பார்க்கும் எண்ணத்திலேயே இருந்தேன். அதுவரை கோவையில் தான் வேலை பார்க்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால், அந்த நாள் எல்லாவற்றையும் மாற்றியது.
அதை தொடர்ந்த நாட்களிலும், நான் அதுவரை கண்ட அமைதியை அந்த ஊரில் காணவில்லை. அமைதியும் இருந்தது. ஆனால், வேறு விதமானது. பயம் கலந்தது. யாரை கண்டாலும் சந்தேகம். சோதனை. எங்க ஊர் சாதி சண்டையை விட இதோட வீரியம் அதிகமாயிருந்தது.
ஏற்கனவே, என் கல்லூரி சீனியர்கள் பெங்களூரில் இருக்க, வேலைக்கு அங்கே செல்ல முடிவெடுத்தேன். தமிழ்நாடே வேண்டாம்.
----
”செல்வம் கிளம்பு, மீட்டிங் ஆறு மணிக்கு”
”இதோ, ஒரு மெயில் மட்டும் தான். பைக்ல தானே போறோம். இன்னர் ரிங் ரோட்ல போனா, பத்தே நிமிஷத்துல லீலாவுக்கு போயிடலாம்.”
“சீக்கிரம் சீக்கிரம்”
“ஏன் இவ்ளோ அவசரப்படுறே? அவுங்க பேசுறதைய கேட்க போற? டின்னர்தானே முக்கியம். செவன் தர்ட்டிக்கு போனா போதும்”
”உனக்கென்னடா மச்சி! பேப்பர போட்டுட்ட... இன்னும் ரெண்டு மாசம்தான். கிளம்பிடுவே...”
பெங்களூர் வந்து ரெண்டு வருஷமாச்சு. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், சீனியர்ஸ், நண்பர்கள் கொடுத்த சப்போர்ட்ல இன்னைக்கு நல்ல கம்பெனியில இருக்கேன். அப்புறம் ஏன் வேலையை விட்டேனா?
நான் தான் சொன்னேன் இல்லையா? மேல் படிப்பு படிக்கணும்ன்னு இருந்தேன். குடும்ப பொருளாதாரத்தால போகலைன்னு. இந்த ரெண்டு வருஷத்துல, அதை ஒரளவுக்கு சரி பண்ணிட்டேன். அனிமேஷன் மேல இருந்த ஆர்வம், மெல்போர்ன் யூனிவர்சிடிக்கு அப்ளை பண்ண வச்சது. இடமும் கிடைச்சது. வேலையை விட்டுட்டேன்.
அது மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருக்குது.
----
ரெண்டு மாசம் முன்னாடி, வழக்கம் போல் மதியம் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பிக்கும் போது, என் டீமில் இருந்தவர்கள் கிளம்ப ஆரம்பித்தார்கள்.
“என்ன, அரை நாள் லீவா?”
“முண்டம். மெயில் செக் பண்ணு.”
ஹச்.ஆரிடம் இருந்து மெயில் வந்திருந்தது. காவிரி விஷயமா, தமிழ் நாட்டு தலைவர் ஒருவர் ஏதோ சொல்ல, இங்கே கலவரமாம். டி.என். ரெஜிஸ்ரெஷன் வண்டின்னா, ஆபிஸ்லேயே விட்டுட்டு போக சொல்லியிருக்காங்க.
பஸ்ஸில் ரூமுக்கு கிளம்பினேன். கண்டக்டரிடம், “மடிவாளா ஒண்ணு கொடுங்க”, கண்டக்டர் நிமிர்ந்து பார்க்க, மற்றவர்களும் என்னையே பார்த்தது போல் ஒரு உணர்வு.
“மடிவாளா ஒந்து கொடி”
----
ஏன் இந்த ஊர் இப்படி இருக்குது? இந்த ஊருன்னு இல்ல. எந்த ஊருனாலும் வெளியூர்காரன்னா வெறுப்புதான்.
இது எல்லாத்தையும் மறந்து வாழணும்ன்னா, எனக்கு பிடிச்ச துறையில மூழ்கணும். அதுக்காக தான் முக்கியமா அனிமேஷன் படிக்க போறேன். நல்ல எதிர்காலம் இருக்காம். எனக்கு பிடிச்சதும் கூட. இப்போதைக்கு வெளிநாட்டுல வேலை பார்க்க தான் முடிவு பண்ணியிருக்கேன்.
----
ஒரு வழியா இங்க மெல்போர்ன்ல செட்டில் ஆகியாச்சு. காலேஜ்ல இருந்து அபார்ட்மெண்ட்டுக்கு ட்ரெயின் தான். கிளாஸ் முடிஞ்சதும், கொஞ்சம் நேரம் டிஸ்கஸ் பண்ணுவோம். அப்புறம், வீடுதான். டின்னர் அங்க நாங்களே பண்றோம்.
இதோ, அபார்ட்மெண்ட்டுக்கு கிளம்பிட்டேன். ரயில்வே ஸ்டேஷனில், ஒரு கோக் வாங்கிவிட்டு, ரயிலில் ஜன்னலோரம் உட்கார்ந்தேன்.
இந்த நேரம் எப்பவும் கூட்டம் இருக்காது. இன்று சுத்தமாக.
ரயில் ஓட ஆரம்பித்து, பத்து நிமிடம் இருந்திருக்கும். என்னை கடந்து நாலு பேர் சென்றார்கள். அதில் என்னை கண்ட ஒருவன், மற்றவர்களிடம் ஏதோ கூற, நாலு பேரும் என்னை நோக்கி வந்தார்கள். என்னை சுற்றி உட்கார்ந்தார்கள்.
7 comments:
ஜாதி வெறி, மத வெறி, இன வெறி, இன்னும் பல...
ஒன்று மட்டும் உண்மை, எதை கண்டும் நாம் அஞ்சி ஒடக்கூடாது.
அருமையான கதை.
மிக அருமை. நம்மை சுற்றியுள்ள எந்த இடமும் நமக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
முடிவை முன் கூட்டியே யூகிக்க முடிந்தாலும் உங்களின் நடையால் முழுதும் படிக்கத் தூண்டியது.
நன்றி சரவண வடிவேல்
நன்றி விக்னேஷ்வரி
//முடிவை முன் கூட்டியே யூகிக்க முடிந்தாலும் //
நான் எதிர்பார்த்தது தான்.
//உங்களின் நடையால் முழுதும் படிக்கத் தூண்டியது//
நன்றி நேசன்
அன்பின் சரவண குமர
எதிர்பார்த்த முடிவு தான் - கதை எழுதும் திறமை பளிச்சிடுகிறது.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment