Monday, June 29, 2009

பள்ளிக்கூடம் போவலாமா?

என்னை போயி பதிவர் நண்பர் சுகுமார் சுவாமிநாதன், இந்த ’பள்ளிக்கூடம் போவலாமா?’ தொடர்பதிவு எழுத கூப்பிட்டு இருக்காரு. நான் ஒரு ஞாபக மறதி கேஸ். என்னத்தை எழுத? தவிர, நல்ல பையன்! அமைதியான பையன்! சொல் பேச்சு கேக்குற பையன்! சுவாரஸ்யமா சொல்ற மாதிரி, தப்பு எதுவும் பண்ணியதில்லை. :-)

---

என்னை எல்.கே.ஜி சேர்த்த போது நடந்தது எதுவும் ஞாபகமில்லை. எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை ஒரு பள்ளி. பிறகு, மூன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டு மற்றொன்றில். மொத்தம் இரண்டு பள்ளிகள்.

தொடக்க பள்ளியில் தான் போட்டிகளில், மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். பிறகு, எதுவும் இல்லை. ராமராஜன் போல் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு ”நான் சிரித்தால் தீபாவளி” பாட்டுக்கு நடனமாடியது, அந்த போட்டோவை பார்க்கும்போது தான் ஞாபகம் வரும்.

மூன்றாம் வகுப்பில் என்னை சேர்த்து விட்டது, என் அண்ணன். சேர்க்கை தேர்வுக்கு கூட்டி சென்றது அவர்தான். முதல் நாள் பள்ளியில் கொண்டு விட்டதும் அவர்தான். என்னை ஒரு நல்ல இடமாக பார்த்து இருக்க வைத்து விட்டு, பள்ளி விட்டதும் கூட்டி சென்றார். இதோ, பல வருடங்கள் கழித்து, சென்ற வருடம் என் அண்ணனின் மகளை பள்ளியில் சேர்க்கும் சமயம், அவர் வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது. நான் அவளை பள்ளிக்கு கூட்டி சென்று, வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு, வெளியே நின்ற போது, என் நினைவுக்கு நான் என் அண்ணனுடன் பள்ளி சென்ற முதல் நாள் நினைவுக்கு வந்தது.

---

என் பள்ளி வீட்டிற்கு வெகு தொலைவில் இருந்தது. முதலில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். பிறகு, ரிக்‌ஷா. அப்புறம். சைக்கிள். கடைசியில் ஹீரோ புக்.

எங்கள் பஸ் டிரைவருக்கு ரஜினி என்று நினைப்பு. தலைமுடியை m ஷேப்பில் வைத்திருப்பார். ஒரே டிரைவர். பல ட்ரிப்கள் அடிப்பார். நல்லா இருப்பார். இப்ப, இப்ப உள்ள ரஜினி மாதிரி ஹேர் ஸ்டைல் (!) வச்சிருப்பாரோ என்னமோ தெரியவில்லை. :-)

எங்க ரிக்‌ஷா மாமா பேரு, மோகன். சாயந்தரம் பள்ளி விட்டு சாவகாசமா வரும் போது, எங்களை ஓட்ட விடுவாரு. மேடான இடங்களில், அவர் இழுப்பார். மத்த நேரங்களில், நாங்க ஜாலியா ஓட்டுவோம். வீட்டுக்கு முன்னாடி, அவர்கிட்ட கொடுத்துடுவோம். இப்ப கூட, அவரை பார்க்கறதுண்டு. பேசுறதுண்டு. ட்ரை சைக்கிள் ஓட்டிட்டு இருக்காரு.

---

எங்க ஸ்கூலுக்கு போற வழியில, ரெண்டு முக்கியமான இடங்களை கடந்து போகணும். ஒண்ணு, எங்க ஊரு கூவம். இன்னொண்ணு, ரயில்வே கிராஸிங்.

மழை சமயம், எங்க ஊரு கூவத்துல, தண்ணி (சாக்கடை தண்ணி) முழங்காலுக்கு மேல வரை ஓடும். அந்த நிலையில கூட, படிப்பு மேல எனக்கு இருக்குற ஆர்வத்துல, ஓவரா இருக்குல்ல? சரி, வேற வழியில்லாம, ஸ்கூலுக்கு போவேன். போவேன்ன்னு சொல்றத விட, கூட்டி செல்லப்படுவேன்ன்னு சொல்றது தான் சரி. எங்க அண்ணன், அவரோட சைக்கிள்ல கூட்டிட்டி போவாரு. என் மேல தண்ணி படாம, அவர் தண்ணில இறங்கி கூட்டிட்டு போவாரு. இத எழுதும் போது, ’வானத்தை போல’ பேக்ரவுண்ட் மியூசிக் எனக்குள்ள ஓடுது. :-)



தினமும் ரயிலை பார்த்துட்டு தான், ஸ்கூலுக்கு போகணும். கேட் பூட்டிக் கிடக்கும். ஆனா, பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுனர்கள் எல்லாரும் போயிட்டு தான் இருப்பாங்க. சைக்கிள்கள் கேட்டை தாண்டி போய்க்கிட்டு இருக்கும். யாருன்னே தெரியாது. ஆனா, பரஸ்பரம் சைக்கிளை தூக்கி கொடுத்து மாற்றி கொள்வார்கள். எனக்கு சைக்கிளை தூக்கும் தெம்பில்லாததால், ரயில் வரும்வரை பார்த்து விட்டு, சைக்கிளை உருட்டி கொண்டு செல்வேன். இப்ப, அந்த ரயிலில் நான் செல்லும்போது, மறக்காமல் வெளியே பார்ப்பேன். என்னை போல் சிலர் இருப்பார்கள்.



---

நான் பிறந்ததற்கு முன்னால் வந்த ரஜினி படங்கள், நினைவு தெரிவதற்கு முன்னால் வந்த படங்கள், எங்கள் ஊரில் உள்ள தியேட்டர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டு கொண்டே இருக்கும். நானும் பார்த்துக்கொண்டே இருந்தேன். உபயம் : மறுபடியும் என் அண்ணன். லா... லா. லா... லா.

இப்படி பார்த்த படத்தின் கதை, அதாவது எனக்கு புரிந்த கதை, மறுநாள் வகுப்பில், இரண்டு பெஞ்ச்களுக்கு வாரியார் பாணியில் சொல்லப்படும். நாளடைவில், புது படங்களின் கதையும் மறுநாள் வகுப்பில் சொல்லப்பட்டது. எப்ப ஆரம்பித்தது என்று தெரியவில்லை. இன்று வரை, ரஜினி படங்களை முதல் நாள் பார்த்து வருகிறேன். பார்க்காமல் இருக்கலாம். இருந்தாலும், ’பாரம்பரியம்’ தொலைந்துவிட கூடாது என்று கட்டி காத்து வருகிறேன்.

---

நான் படித்தது கிருஸ்துவ பள்ளி என்பதால், ’டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ போன்ற படங்கள் வந்தால் கூட்டி சென்று விடுவார்கள். தவிர, ஜுராஸிக் பார்க், அனகோண்டா போன்ற ஹாலிவுட் ராமநாராயணன் படங்களுக்கும் கூட்டி செல்வார்கள். இந்த படங்கள் ஓடும் தியேட்டரில் தான், சில நாட்களுக்கு முன்னால் பிட்டு படங்கள் ஓடி இருக்கும். அது குறித்து, சில ரகசிய பேச்சுவார்த்தைகளும் பசங்களுக்குள் நடக்கும். எல்லாம் படம் தொடங்கும் வரை. படம் தொடங்கிய பிறகு, எதற்கெடுத்தாலும் கத்துவார்கள். பல்லியா இருந்தாலும் சரி. டினோசரா இருந்தாலும் சரி.

இரண்டு மாதங்களுக்கு முன்னால், திருநெல்வேலியில் ஒரு பள்ளியில் +2 தேர்வு முடிந்த கடைசி நாளன்று, அயன் படத்திற்கு கூட்டி சென்றார்களாம். நல்ல முன்னேற்றம் என்று நினைத்து கொண்டேன்.

---

எனக்கு காலையிலேயே, எங்க அம்மா டிபன் பாக்ஸ்ல, மதியத்துக்கு சாப்பாடு வச்சி கொடுத்து விடுவாங்க.

எனக்கு பிடிச்ச பேவரைட்ஸ். இட்லி வித் எண்ணை கலந்த பொடி. எலுமிச்சம் சாதம் வித் துவையல் & பிரட்டி போட்ட ஆப்பாயில்.



இட்லி, பொடில தொட்டு தொட்டு சாப்டுட்டு வருவேன். முடியிற நேரத்துல, அப்படியே பொடியில போட்டு பிணைஞ்சி சாப்பிட்டா... ஆஹ்ஹா... அதே போல, ஆப்பாயில் வெள்ளை பாகத்தை சாப்பிட்டு கொண்டே வருவேன். கடைசில, மஞ்ச கருவ சாதத்துல பிணைஞ்சி, ஒரு புது டிஷ் உருவாக்கி சாப்பிடுவேன்.

ஸ்கூல் முடிஞ்சதும், வெளியே இருக்குற தள்ளுவண்டி கடையில, ஐஸ்ஸை தேய்ச்சி, சீவலாக்கி, ஒரு கண்ணாடி டம்ளர்ல போட்டு, எழுமிச்சம் பழ சாறு சேர்த்து, எசன்ஸ் ரெண்டு டைப் ஊத்தி, ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் போட்டு தருவாங்க. ஓ! வாட் ஏ ஐட்டம். சூப்பரா இருக்கும். என்ன, தொண்டை வலி, டான்சில்ஸ் எல்லாம் வரும்.

அப்புறம், மிளகா பொடி போட்ட மாங்கா. ஒரு பாட்டி வித்துட்டு இருப்பாங்க. இப்ப, ரெண்டு வாரம் முன்னாடி, பிரண்ட் உடன், ஒரு ஸ்கூலை கடந்து போனப்ப, ஒருத்தர் இதே மாதிரி மாங்காயை வெட்டி கவர் போட்டு வச்சிருந்தாரு. பார்க்கவே நல்லா இருந்ததால வாங்குனோம். அதே இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவை. பாட்டி, கண் முன்னாடி வந்துட்டு போனாங்க.

இதெல்லாம் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போனத்துக்கப்புறம், சாயந்தரம் ஒரு வேளை, நைட் ஒரு வேளைன்னு ஒரு நாளைக்கு நாலு வேளை ஸ்கூல் படிச்சப்ப சாப்பிடுவேன்.

---

அது ஒரு தீபாவளி சமயம். பொட்டு வெடி போட்டுட்டு இருப்போம்ல? அதுல ஒரு வெடி என் பையில விழுந்திருக்கு. தீபாவளி முடிஞ்சப்புறம், ஏதோ ஒரு தேர்வுக்கு அந்த பையை எடுத்து சென்றிருக்கேன். அந்த பொட்டு வெடி, இப்ப என் பரீட்சை பேடுல.

பரீட்சை ஆரம்பித்து கொஞ்ச நேரத்துல, நான் பரீட்சை அட்டை கிளிப்பை சரி செய்ய, டம் என்று சத்தம். பொட்டு வெடி என்றாலும், தேர்வு அறை அமைதியில், எல்லோரையும் அதிர செய்தது. வாத்தியார் என்னை பிடித்து கொண்டார். நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. பளார் என்று ஒரு அறை வாங்கினேன். அழுதுக்கொண்டே பரீட்சை எழுதுனேன்.

தேர்வு அறையில் வெடி போட்டேன் என்றொரு அபாண்ட குற்றச்சாட்டை சாத்தி, அன்று என்னையும் ‘ரவுடி’ ஆக்கிவிட்டார்கள். :-)

---

இப்ப, நான் படித்த பள்ளியில் ஏகப்பட்ட மாற்றங்கள். ஒன்றை கேட்டப்போது, நல்லவேளை நாம இருந்தபோது, இது இல்லை என்று நினைத்தேன். இன்னொன்றை கேட்டப்போது, ஐயைய்யோ! நாம இருந்தபோது, இது இல்லையே என்று நினைத்து கொண்டேன்.

ஒன்று, பள்ளி கோ-எட்டா மாறியது. இன்னொன்று, ஸ்கூல்லுக்கு நேரத்துக்கு போகாட்டி, வீட்டுக்கு எஸ்.எம்.எஸ். வருதாம். டெக்னாலஜி.

---

மூணு பேரை அழைக்கணுமா? நான் அழைப்பது,

1) முகில்
2) கணேஷ்
3) நரேஷ்

கோத்துவிட்டதுக்கு மன்னிச்சுக்கோங்க. முடிஞ்சா எழுதுங்க. :-)

14 comments:

ச.பிரேம்குமார் said...

சுவாரசியமாக சொல்ல எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு மிக அருமையாகவே எழுதியிருக்கிறீர்கள் சரவணகுமரன். உங்க ஊரு சென்னை தானா?

ச.பிரேம்குமார் said...

உங்க 'வானத்தை போல' பகுதிகள் நெகிழ்ச்சியா இருந்துச்சு. அண்ணன் உங்க வலைப்பூவ படிப்பாங்களா?

ஆயில்யன் said...

//இட்லி, பொடில தொட்டு தொட்டு சாப்டுட்டு வருவேன். முடியிற நேரத்துல, அப்படியே பொடியில போட்டு பிணைஞ்சி சாப்பிட்டா... ஆஹ்ஹா..//

ஸேம் ஃபீலிங்க் :))

சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம் :))

சரவணகுமரன் said...

//சுவாரசியமாக சொல்ல எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு மிக அருமையாகவே எழுதியிருக்கிறீர்கள் //

நன்றி பிரேம்குமார்

//உங்க ஊரு சென்னை தானா?//

இல்லங்க... தூத்துக்குடி

//அண்ணன் உங்க வலைப்பூவ படிப்பாங்களா?//

தெரியாதுங்க... சொல்லும்போது காமிச்சிக்கலாம்.... :-)

சரவணகுமரன் said...

வாங்க ஆயில்யன்

Sukumar said...

சார்... நல்ல விரிவா ஒவ்வொன்னா சின்ன சின்ன விஷயங்களையும் ஞாபகம் வச்சி எழுதி இருக்கீங்க....
அபாரமா இருந்தது....

mugil said...

ரெண்டாங்கேட்டு போட்டோவெல்லாம் போட்டு ஊரை எக்கச்சக்கமா நியாபகத்திட்டீங்க நண்பரே..

சரவணகுமரன் said...

//நல்ல விரிவா ஒவ்வொன்னா சின்ன சின்ன விஷயங்களையும் ஞாபகம் வச்சி எழுதி இருக்கீங்க.... //

எழுத வச்சிட்டீங்க... :-)

நன்றி சுகுமார் சுவாமிநாதன்

சரவணகுமரன் said...

//ரெண்டாங்கேட்டு போட்டோவெல்லாம் போட்டு ஊரை எக்கச்சக்கமா நியாபகத்திட்டீங்க நண்பரே..
//

மறக்கற மாதிரி இடமா? :-)

எத்தனை வருஷம் ஆனாலும், அதே மாதிரி... ட்ராபிக்கோட... :-(

நரேஷ் said...

அழைப்புக்கு நன்றி சரவணகுமரன்...

வாழ்க்கையில நானும் கதை எழுதலாம்னு தோணுச்சா, இந்த உரையாடல் போட்டிக்காக்க ஒரு கதையை எழுதறதுக்கு முயற்சி பண்ணிகிட்டிருந்தேன், அதான் ....

ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க, எழுதிடுறேன்...

சரவணகுமரன் said...

நரேஷ், ஒண்ணும் பிரச்சினை இல்ல... மெதுவாவே போடுங்க...

Anonymous said...

Great site. A lot of useful information here. I’m sending it to some friends!

Anonymous said...

Beneficial info and excellent design you got here! I want to thank you for sharing your ideas and putting the time into the stuff you publish! Great work!

Anonymous said...

My cousin recommended this blog and she was totally right keep up the fantastic work!