மகேந்திரன் என்றொரு நண்பர். நல்ல ரசனைக்காரர். கவிதைகள் எழுதுவார். இவர் வாழ்வதற்கு காற்று தேவையோ இல்லையோ, பாடல்கள் தேவை. குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள். பாடல்கள் பற்றிய தகவல் களஞ்சியம். ஒருமுறை ‘பூஜைக்கேத்த பூவிது’ பாடல் அனுப்ப சொல்லி கேட்ட போது (நான் கேட்டது எம்பி3 வடிவத்தில்), முழு பாடலையும் ஐந்து நிமிடத்தில் தமிழில் டைப் செய்து அனுப்பினார். அரண்டுவிட்டேன்.
தீவிர வாசிப்பாளர். முக்கியமாக கவிதைகள். எந்த சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற கவிதைகளை எங்கிருந்தெல்லாமோ எடுத்து கொடுப்பார். கவிதை வரலாற்றை, கவிஞர்களின் வரலாற்றுடன் சேர்ந்து தெரிந்து வைத்திருப்பவர். இவருக்குள் எப்போதும் ஏதாவது கவிதை வடிந்து கொண்டிருக்கும். கதிர் படத்தில் வரும் ஹீரோவை போல்.
இதுவரை வலைப்பதிவு ஆரம்பிக்கவில்லை. ஆரம்பிக்க சொல்லி இருக்கிறேன். ஆரம்பிப்பார் என்று நம்புகிறேன். அவர் அனுப்பிய மின்னஞ்சல் பதிவு இது. அவர் அனுமதியுடன்... ஆமா... எல்லாம் அனுமதி கேட்டா போடுறோம்?
இந்த இடுகைக்கு வரும் ஓட்டுகள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள், வசவுகள் அனைத்திலும் பத்து பர்சென்டை சர்வீஸ் சார்ஜாக எடுத்து கொண்டு மீதியை மகேந்திரனுக்கு பார்வர்ட் செய்கிறேன். :-)
இனி ஓவர் டூ மகேந்திரன்...
----
நீங்கள் செய்யாத ஒரு வேலைக்காக, உங்களுக்கே தெரியாமல் உங்களைப்பற்றி பலர் பெருமையாக நினைத்துக்கொள்வது நடந்திருக்கிறதா? அதில் உங்கள் தவறு எதுவுமில்லை, இன்னும் சொல்வதானால் ஒரு சிறப்பான, குறிப்பிடும்படியான ஒரு வேலை உங்களிடமிருந்து வெளிப்படும் என்ற உங்கள் மீதான ஒரு நம்பிக்கை அது.. உங்களுக்கான ஒரு தனித்துவம் என்பதை எல்லோரும் அறிந்திருக்கும் பட்சத்தில், அதே தரத்துடனான செயல் இன்னொருவரிடமிருந்து வருகையில் அது உங்கள் பெயரில் பதியப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம்.
இசையுலகில் இது எப்போதும் நிகழ்வது, மிகுந்த மென்மையான இனிய குரலிருந்தும் கூட ஏ.எம்.ராஜாவின் பல பாடல்கள், பி.பி,எஸ்ஸின் பெயரில் புழங்கி வந்தன. ஜேசுதாசின் குரலுடன் இருந்த ஒற்றுமையாலேயே, ஜெயச்சந்திரன் என்ற அற்புதப்பாடகரை இன்னும் பலபேருக்கு தெரியவில்லை. பல ஆயிரம் பாடல்களுக்கு பிறகும் மனோ பாடிய பாடல்கள், எஸ்.பி.பியினுடையதாக கணிக்கப்படுகின்றன.
இது யாருக்கு வெற்றி, தோல்வி என்பதை விட, இதன் பின்னணியில் மறைந்து போன பல பாடல்கள் பற்றி கேள்விப்படும் போது, நீங்களும் கூட வியப்படையக்கூடும்.
என் பால்யகாலங்களில் வானொலியில் பாடல்கள் கேட்கும் பொழுதில் , இளையராஜாவின் மிகப்பிரபலமான இனிமையான பாடல் ஒன்று, "ஆயிரம் மலர்களே மலருங்கள்.. அமுத கீதம் பாடுங்கள்.." அதே கால கட்டத்தில் வெளியான " பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம்.." கூட ராஜாவினுடையது என்று வெகு நாட்களுக்கு எண்ணிக்கொண்டிருந்தேன், அது சலீல் சவுத்ரி என்றொரு வங்காளத்தின் இசையமைப்பாளருடைய இசைக்கோர்வை என்று பின்பொரு நாளில் அறிந்தேன்.
ராஜா மட்டுமே இசையமைப்பாளர் என்ற நிலை இருந்த பொழுதுகளில் வந்த இன்ன பிற நிஜமாகவே நல்ல பல பாடல்கள் இன்னும் ராஜாவினுடையதே என்று நம்பப்படுகின்றன.
"கண்ணுக்குள் நூறு நிலவா? இது ஒரு கனவா?.." "மந்திரம் சொன்னேன் வந்துவிடு.." "புத்தம் புது ஓலை வரும், இந்த பூவுக்கொரு மாலை வரும்" போன்ற வேதம் புதிது படத்திலிடம் பெற்ற மிக இனிய பாடல்கள் இன்றும் ராஜா ஹிட்ஸ் பகுதிகளில் இடம் பெற்றிருப்பதை காணலாம். அதெல்லாம் தேவேந்திரன் என்ற மிகவும் மென்மையான ஒரு மலையாளியினுடையது. சிறுவயதில் நான் எப்போதும் முணுமுணுத்த "ஆவாரம்பூவு ஆறேழு நாளா.." , "ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்த.." போன்றவை வி.எஸ்.நரசிம்மன் என்றொரு இசையமைப்பாளர் அளித்தது, இன்றைய தலைமுறையால் ராஜா கணக்கில் வரவுவைக்கப்பட்டது.
என்ன இருந்தாலும் அண்ணன் தானே.. கொஞ்சம் சாயல் இருந்தால் என்ன கெட்டுவிடும்? அதனாலேயே கங்கை அமரன் போட்ட "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே.." "வந்தனம் என் வந்தனம்.." "மழைக்கால மேகம் ஒன்று" எல்லாம் இளையராஜா ஹிட்சில் இடம் பெற்றன. என் பதின்மவயதுகளில் எனைக்கவர்ந்த "தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே", "புத்தம்புது மலரே என்னாசை சொல்லவா", " உன்னைத்தொட்ட தென்றல் இன்று என்னை தொட்டு சொன்னதொரு சேதி" எல்லாம் பாலபாரதியால் போடப்பட்டவை. ஹம்சலேகா என்றொரு கன்னடத்தவரால் இசையமைக்கப்பட்ட கொடிப்பறக்குது "சேலை கட்டும் பெண்ணுக்கொரு", "ஹோ காதல் என்னை காதலிக்கவில்லை" எல்லாமும் கூட ராஜாவினுடையதாக சத்தியம் செய்யப்படும்.
ராஜாவுடனான ஊடலுக்குப்பிறகு கே.பாலசந்தர் கைகோர்த்துக்கொண்ட மரகதமணி என்றொரு இசையமைப்பாளர் தந்த பாட்டுகளும் இதே போல. அவை "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா.." "ஜாதிமல்லி பூச்சரமே.." ஆகியவையாகும். இளையராஜா பாடல் தொகுப்புகளில் முதல் பத்து பாடல்களில் கண்டிப்பாக இடம் பெரும் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" அண்ணா நகர் முதல் தெருவுக்காக சந்திர போஸ் என்பவரின் படைப்பு.
இதெல்லாம் நிஜமாகவே ராஜாவுக்கான அங்கீகாரத்தின் மறுவடிவம். "இதெல்லாம் எனக்கு முன்னையே தெரியுமே" என்ற இசையின் நுட்பமான பகுதிகளில் புகுந்து கொள்பவரெனில், உங்களுக்கான பதிவு இல்லை இது. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் என்னைப்போன்ற பாமரர்களின் எண்ணத்தொகுப்பு. ஏனெனில் ராஜா பாமரர்களுக்கான இசைக்கலைஞன்.
----
சூப்பர்'ஆ சொல்லியிருக்காருல்ல?
இனி நம்ம கச்சேரி...
இது மட்டும் இல்லை. இன்னமும் இருக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதனின் ”எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்”, "சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது”, எஸ்.ஏ.ராஜ்குமாரின் ”சின்ன பூவே... மெல்ல பேசு...”, எஸ்.பி.பி.யின் ”சந்தனம் பூசும் மஞ்சள் நிலவும்”, “அகரம் இப்ப சிகரம் ஆச்சு”, சங்கர் கணேஷின் “ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்”, டி.ராஜேந்தரின் “மூங்கில் காற்றோரம்”, "வசந்தம் பாடி வர”, பாக்யராஜின்...
இப்படி போய்கிட்டே இருக்கும்.
எம்.எஸ்.விஸ்வநாதனுடன் சேர்ந்து இளையராஜா இசையமைத்த “மெல்ல திறந்தது கதவு”ம், இளையராஜாவுக்கு மட்டுமே நன்றாக திறந்திருக்கிறது.
அதாவது மற்றவர்கள் இசையமைத்த பாடல்களுக்கு கிடைக்கும் பாராட்டுகளும் இளையராஜாவுக்கு போய் சேருகிறது. இதற்கு இளையராஜாவையோ, இல்லை மற்ற இசையமைப்பாளர்களையோ குறை கூற முடியாது. யாருடைய திறமையிலும் குறை கிடையாது.
----
குறை சொல்றதுன்னா, யாரு இசையமைச்சதுன்னு தெரியாம பாட்டு கேட்குற நம்மளைத் தான் சொல்லணும். தெரியாம இருக்குறது, குத்தம் இல்ல. தெரியாம, வேற ஒருத்தர் இசையமைச்சத, இளையராஜா இசையமைச்சதுன்னு சொல்றது, உண்மையான இசையமைப்பாளருக்கு நாம் செய்யும் மோசடி.
இப்ப பெரும்பாலோர் பாட்டு கேட்குறது, சிடியில், எம்பி3 பிளேயரில், ஐ-பாடில். ஒவ்வொருவரிடமும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் இருக்கும். இதில் அதிகம் கேட்கப்படுவது எண்பது தொண்ணூறில் வந்த இளையராஜாவின் பாடல்களை தான் என்பதை மறுப்பதற்கில்லை.
அம்மாதிரியான கலக்ஷனை லேபிள் பண்ணும் போது, 80-90 ஹிட் கலக்ஷன்ஸ்ன்னு போட்டு வைக்கலாம். அதைவிட்டு, அப்ப வேற யாரு இசையமைச்சா என்று சொல்லி, இளையராஜா ஹிட்ஸ் என்று போடும் போது தான், மற்ற இசையமைப்பாளர்கள் மறைகிறார்கள். அதேப்போல், எம்பி3 பாடல் இன்பர்மேஷனில் ஆர்டிஸ்ட் பெயர் போடும் போது, தெரிந்தால் மட்டும் இளையராஜா என்று போடலாம். தெரியாமல் இளையராஜா என்று போடுவது, சின்ன மிஸ்டேக் தான். ஆனா...
----
மற்றவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அவ்வளவு ஹிட் பாடல்கள் கொடுத்ததால் வேண்டுமானால், இதற்கு இளையராஜா காரணமாகலாம்.
இன்றைக்கு சொல்கிறோம். இப்பொழுது ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் என்று. பார்த்தால் அன்றும் ஒரளவுக்கு இருந்திருக்கிறார்கள். இளையராஜாவின் பல ஆண்டு கால அலையில் அடியிலேயே தங்கி விட்டார்கள். அவர்களின் படைப்புகள் இருக்கிறது. அவர்களைத்தான் காணவில்லை.
இளையராஜாவின் ஹிட் பாடல்கள் என்னும் கடலில் மறைந்து போன முத்துகள் அவை. அவ்வளவு எண்ணிக்கையில் கவனம் பெறுவது சிரமம். பகலில் அடிக்குற சூரிய ஒளியில், மெழுகுவர்த்தி ஏற்றினாலோ இல்லை டார்ச் அடித்தாலோ எங்கே தெரிய போகிறது?
இதுக்கு தான் எங்காளு மாதிரி ராத்திரி அடிக்கணும். :-)
30 comments:
///இதுக்கு தான் எங்காளு மாதிரி ராத்திரி அடிக்கணும். :-)///
இது டூ மச், டூ டூ மச் :)))
நல்லாருக்கு!
மன்மத லீலையை வெல்வார் உண்டோ?தியாகராஜா பாகவதர் பாடிய பாடல்.படம் ஹரிதாஸ்.இது கூட ராஜான்னு நினைச்சேன்.
அண்ணே ரொம்ப ஓவர் அண்ணே.
//அதே தரத்துடனான செயல் இன்னொருவரிடமிருந்து வருகையில் அது உங்கள் பெயரில் பதியப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம்//
Imitation is the best of form praise.ஒருவரை பிட் அடிப்பது அவரை புகழ்வதற்குச் சமானம்.
//"கண்ணுக்குள் நூறு நிலவா? இது ஒரு கனவா?.." "மந்திரம் சொன்னேன் வந்துவிடு.." "புத்தம் புது ஓலை வரும், இந்த பூவுக்கொரு மாலை வரும்" போன்ற வேதம் புதிது படத்திலிடம் பெற்ற மிக இனிய பாடல்கள்//
உண்மையான ராஜா ரசிகன் அன்னபறவை. தண்ணீர் பால்னு தனியா பிரிச்சுடுவான்.joining pieces
வைச்சு கண்டுபிடிக்கலாம்.
மகேந்திரன் அண்ணே நல்ல ராஜா பாட்ல ட்ரெயினிங் எடுங்க.
வாழ்த்துக்கள்.
வித்தியாசமாக இருக்கிறது :)
nalla pathivu.. if possible pl tell the exact reson for ilayaraja and Vairamuthu's clash..
நன்றி பாசகி
//தியாகராஜா பாகவதர் பாடிய பாடல்.படம் ஹரிதாஸ்.இது கூட ராஜான்னு நினைச்சேன்.//
இது தான் ஒவரா இருக்கு :-)
வாங்க கானா பிரபா
கலக்கல் பதிவு
வாழ்த்துக்கள் மகேந்திரனுக்கும் உங்களுக்கும்
நன்றி முரளிகண்ணன்... மகேந்திரன் சார்பாகவும், என் சார்பாகவும்... :-)
அம்ச லேகா வின் இன்னொரு பாட்டும் இப்படி தான் இளையராஜா கோப்பில் சேர்ந்து விட்டது . ( கேப்டன் மகள் படத்தில் வரும் " எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ) . அதே போல மனோஜ் கயன் இசைஅமைத்த ஊமை விழிகள் பாடல்களும் . என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த பாடல்களில் எல்லாம் இசைகோர்ப்பு இளையராஜா அவர்களின் சாயல் இருக்கும் .. orchestration விசயத்தில் இளையராஜா அவர்களுடையதை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் குறிப்பாக ஆரம்ப இசை மற்றும் பாடல் இடையே வரும் இசை கோர்ப்பு ( prelude and interlude ) விசயத்தில் இளையராஜா அவர்களின் ஆளுமை அதிகமாக தெரியும் ..
Heam,
சரியாச் சொன்னீங்க... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
மகேந்திரனின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.
அந்த லிஸ்டில் இன்னொன்றும் சேர்துக்கொளுங்கள். " வாடாத ரோசாப்பூ நா ஒண்ணு பாத்தேன்"
இதற்காக ஒரு ஹாப் பாட்டில் பந்தயம் கட்டி தோற்றுள்ளேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்நாட்டுத்தமிழன்
நீங்க சொன்னதுல நிறையப் பாட்டு நான் ராஜானு தான் நினைச்சிட்டு இருந்தேன்...
மகேந்திரனுக்கும், பதிவிற்கும் நன்றி...
You recorded a nice post.
And i like the final nice comment :-)
"பகலில் அடிக்குற சூரிய ஒளியில், மெழுகுவர்த்தி ஏற்றினாலோ இல்லை டார்ச் அடித்தாலோ எங்கே தெரிய போகிறது?
இதுக்கு தான் எங்காளு மாதிரி ராத்திரி அடிக்கணும். "
வாங்க வெட்டிப்பயல்...
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, Muruganantham Durairaj
நல்ல பதிவு!!!
இது போன்றதொரு விஷயம் இருப்பது உண்மைதான்...
ரவிஷங்கர் ஏன் ஃபீல் பண்றாருன்னு புரியலை....
நன்றி நரேஷ்...
//ரவிஷங்கர் ஏன் ஃபீல் பண்றாருன்னு புரியலை....//
அதாங்க, எனக்கும் புரியலை....
எண்பது, தொண்ணூறுகளில் இளையராஜா காலத்தில் வந்த பாடல்களை பற்றி குறிப்பிட்டால், அவர் பாகவதர் கால பாடலை சொல்கிறார்.
நல்ல பதிவு... நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் நினைத்தேன்...
பின் தொடர் கேட்புகளில் ராஜாவின் பாடல் மட்டும் வசப்பட்டு விட்டது.
தேவேந்திரன் பாடலைக்கூட ஒத்துக்கொள்ளலாம். ஹம்சலேகாவின் பாடல்களில் ஒரு வித ஹிந்திநெடி தாராளமாக அடிக்கும்.
‘ஒரு ரசிகன் ஒரு ரசிகை’ ரவீந்திரன் பாடல்களையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம்.
மற்றபடி மகேந்திரனின் பாடல் ரசனைகளைப் படித்து நானும் ரசித்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் அவர் சேவை...
நன்றி தமிழ்ப்பறவை
<<<
இதில் அதிகம் கேட்கப்படுவது எண்பது தொண்ணூறில் வந்த இளையராஜாவின் பாடல்களை தான் என்பதை மறுப்பதற்கில்லை.
>>>
இதில் கொஞ்சம்தான் உண்மை.. ஏன் இப்போது வரும் பாடல்களை யாரும் கேட்பதில்லையா?
Mãstän,
இப்ப, அவ்ளோ கேட்குறதில்லையே? முக்கியமான இயக்குனர்கள், நடிகர்கள் படங்கள் என்றால் கேட்கிறோம். வால்மிகி, அழகர்மலை, ஏன் மிஷ்கினின் நந்தாலாலா... எத்தனை பேர் கேட்டு இருப்பார்கள்? நானும் இளையராஜா என்பதற்காக கேட்க ஆரம்பிப்பேன். ஆனா, முடியல... ஏதோ, நந்தலாலா பரவாயில்லை...
priya said
unmailyagave spb and janaki voice supero super. i like very very very very very etc.,, like both are voice. and illayaraja music.
priya said
unmailyagave spb and janaki voice supero super. i like very very very very very etc.,, like both are voice. and illayaraja music.
சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்ட பாட்டு கூட இளையராஜா என்று நிறைய பேரு நினச்சுட்டு இருகாங்க...அந்த பாட்டுக்கு இசை அமைத்தவர் சந்திர போஸ்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசை ஞானி அவர்களே!
நிச்சயமாகவே நீங்கள் கூறியுள்ளபடி பலமுறை ராஜாவின் பாடல் தான் என குழம்பியிருக்கிறேன். mp3 ல் artist என்ற இடத்தை வெற்றிடமாக வைக்க விரும்பாதவன் நான். இன்னும் கவனமாக இருக்க வேண்டும் போலிருக்கிறது உங்கள் பதிவைப் பார்த்த பின்பு.
பழைய பாடல்களை இசையமைப்பாளர்களின் பெயர்களோடு யாரேனும் இணையத்தில் தொகுத்து வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை. அறிந்தவர்கள் பின்னூட்டுங்கள். நன்றி
நல்ல பதிவு. ஒரு இசை மேதையுடன் சமகாலத்தில் வாழ்வதினால் ஏற்படும் குழப்பங்கள் தான் இது. அவர் வாழும் அதே காலத்தில் நல்ல திறமையுள்ள பல இசையமைப்பாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சமீப காலமாக ஜெயா தொலைகாட்சியில் வரும் மனதோடு மனோ நிகழ்சியில் இதே போன்ற நிறைய விஷயங்கள் வெளிபடுகிறது. அந்த நிகழ்ச்சியில் பல இசை கலைஞர்களை மனோ பேட்டி காண்கிறார். அந்த பேட்டியில் தெரிவிக்கும் தகவல்களை வைத்து பார்க்கும் போது தான் தெரிகிறது பல பாடல்களை நாம் நினைத்தவர் பாடவில்லை என்று.அதே போல் சிறந்த பல பாடல்களை இசை அமைத்தவர் நாம் நினைத்திருக்கும் நபர் அல்ல ,மற்றொருவர் என்பதும் தெரிகிறது. புகழின் உச்சியில் இருந்த ஒருவருக்கு எல்லா பெருமையும் போய் சேர்ந்து விடுகிறது.இது அவர் தவறல்ல என்றாலும் கூட நீங்கள் சொன்னது போல இசைத்தட்டு வெளியிடுபவர்கள் சரியான தகவல்களை மட்டும் வெளியிடவேண்டும்.இன்னொன்று எது எவ்வாறு இருந்தாலும் இவர்கள் அனைவரிடமும் அந்த இசை மேதையின் பாதிப்பு இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும்.
nallaa irukkuu nanpaa.
Post a Comment