நேரு முதல் நேற்று வரை
- ஒரு பார்வை
ப.ஸ்ரீ.இராகவன் தெரியுமா? செய்திகளை ரொம்ப ரொம்ப ஆழமாக படித்திருந்தால், இவரை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். குறிப்பாக தி ஹிந்து, பிஸினஸ்லைன். இவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஐ.ஏ.எஸ். படித்தது இந்தியா சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில். கல்கத்தா, டெல்லி, ஐ.நா. என்று வெயிட்டான இடங்களில், நேரு, சாஸ்திரி, ஜோதிபாசு, இந்திரா என்று வெயிட்டான மனிதர்களுடன் பணிபுரிந்து 1987 இல் ஓய்வு பெற்றவர். இவர் அவருடைய பணிக்கால அனுபவங்களை, ஒரு அலுவல் சுயசரிதையாக ”நேரு முதல் நேற்று வரை” என்கின்ற இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். என்பது கலெக்டர் என்பதோடு நிற்பதில்லை. நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது. பெரும்பாலான நேரங்களில் அரசியல்வாதிகள் என்பவர்கள், நம் உடலில் இருக்கும் கண், வாய் போல ஒரு செய்தி தொடர்பாளர் போல் இருப்பவர்கள் தான். முகம் காட்டாத அதிகாரிகள் தான், நிர்வாகத்தின் இதய துடிப்பு, மூளை எல்லாம். ஒரு அமைச்சரோ, பிரதமரோ முடிவெடுப்பது ஒரு அதிகாரி கொடுக்கும் குறிப்புகளை கொண்டுதான். குறிப்பு எவ்வாறு, விளக்கம் எவ்வாறு என்பதை பொறுத்து தான், முடிவுகள். கொள்கைகள். நாட்டின் விதி.
இப்புத்தகத்தின் ஆசிரியர் இராகவன், சீர்காழியில் பிறந்தவர். சென்னையில் படித்தவர். உத்தியோக காலத்தை முழுவதும் வடநாட்டிலும், வெளிநாட்டிலும் கழித்தவர். ஓய்வு பெற்ற பிறகே தமிழகத்திற்கு திரும்பினார். ஒய்வுக்கு பிறகும் பெரிய நிறுவனங்களில், முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.
இவர் இப்புத்தகத்தில் விவரித்துள்ள அரசியல்வாதிகளுடனான அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. சில வியப்பளிக்க கூடியவை.
----
1965. இந்தியா மேல் பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்திருந்தது. சாஸ்திரி தான் பிரதமர். எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று ஆலோசிக்க ஜெனரல் ஜே.என். சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார். சாதக பாதகங்களை கேட்டார். அதற்கு ஜெனரல், போருக்கு என்னவெல்லாம் தேவை, எவ்வளவு தேவை, எவ்வளவு இருக்கிறது என்று அடுக்கி விட்டு, “எதிரியிடம் எவ்வளவு இருக்கிறதோ, அதை விட மூன்று மடங்கு நம்மிடம் இருக்க வேண்டும். இருந்தால் தான் போர் சாத்தியம்” என்று பேசிக்கொண்டே போனார்.
முழுவதையும் கேட்டு விட்டு, சாஸ்திரி சொன்னார். “எல்லாம் பாட புத்தகத்தில் உள்ளது போல், கணக்கு தவறாமல் இருந்து விட்டால், நான் கூட போர்க்களத்தில் குதித்து வெற்றி பெற்று விடுவேனே? அப்புறம் ஜெனரல் எதற்கு?”
ஜெனரல் ஒடுங்கிப்போய், “ இப்போதே தயார் ஐயா! உத்தரவிடுங்கள்” என்றார்.
----
மத்திய அரசின் உணவு வாரியத்தின் சேமிப்பில் இருந்து தான் மாநிலங்களுக்கு மாதா மாதம் உணவு பொருட்கள் பகுத்து வழங்கப்படும். உணவு வாரியம் அளிக்கும் அளவு, மாநிலங்களின் தேவைக்கு குறைவாக இருந்தால், மாநில அரசு சிக்கலில் மாட்டும். அந்நேரம் மாநில முதலமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரை, உணவு அமைச்சரை பார்த்து பேசுவார்கள். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, தமிழகம் சார்பில் எம்.ஜி.ஆரும் பண்ருட்டி ராமசந்திரனும் சென்று வருவார்கள். அரிசி, கோதுமை தரம் சரியாக இல்லாத பட்சத்தில் அதை கொண்டு போய் காட்டி, தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க செய்வார்கள்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது, ஒருமுறை தமிழகத்திற்கான பங்கீடு சரிவர இல்லை. அதற்காக எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். மத்திய அரசு உணவுப் பொருள்கள் பங்கீட்டில் காட்டும் மெத்தனத்தை எதிர்த்து, எம்.ஜி.ஆர். காந்தி சிலைக்கு முன்னால் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். ஒரே நாள் உண்ணாவிரதத்தில் எம்.ஜி.ஆர். மத்திய அரசை அடிபணிய வைத்தார்.
மக்களின் உணவுக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
----
நேரு பாராளுமன்றத்துக்குள் துள்ளி குதித்து கொண்டு செல்வாராம். எதிரில் வரும் அமைச்சர்களையும், மற்ற உறுப்பினர்களையும் தோளில் தட்டி கொண்டும், கையில் கிள்ளி கொண்டும் செல்வாராம். எல்லாம் சீனா படையெடுப்பு வரை. எழுபது வயதில் படிகளில் ஒரு சிறுவன் போல் தாண்டி ஓடி ஏறியவர், சீனாவின் துரோக தாக்குதலுக்கு பிறகு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பத்திரிக்கையாளர்களிடன் அது பற்றி பேசும் போது, “நாம் நமக்கென்றே ஒரு மாய உலகைப் புனைந்து கொண்டு மோசம் போனோம் என்பதை உணர்கிறேன்” என்று கண் கலங்க கூறினார்.
தேஹ்ராதுனில் நேரு ஓய்வெடுத்து கொண்டிருந்த சமயம், ஒரு பத்திரிக்கையாளர் அவரை சந்தித்து,
“காஷ்மீர் பிரச்சினை உங்கள் வாழ்நாளுக்குள் தீர்ந்துவிடும் என்று நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு நேரு, “நான் அவ்வளவு சீக்கிரம் சாவதாக இல்லை” என்றார்.
அடுத்த நாள் டெல்லி திரும்பினார். அதற்கடுத்த நாள் அவர் மறைந்தார்.
----
அரசியலில் ஈடுபடும் அதிகாரிகளைப் பற்றி இப்படி சொல்கிறார் இராகவன்.
இந்திரா காந்தி காலத்திலிருந்தே, ஓய்வு பெற்ற, ஏன், பணியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக்கூட கட்சியில் சேர்த்து, மக்கள் மன்றப் பிரதிநிதிகளாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. இப்போது பல கட்சிகளில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமின்றி, மற்ற பணிகளில் உயர் நிலையிலிருந்தவர்களும், முப்படைத் தளபதிகளாகப் பொறுப்பு வகித்தவர்களும், மாஜி நீதிபதிகளும் கூட இருப்பதைக் காண்கின்றோம்.
ஜக்மோஹன், மன்மோகன் சிங், மணி ஷங்கர் ஐயர், டி.என்.சதுர்வேதி, யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், நித்தீஷ் சென்குப்தா, விக்ரம் சர்க்கார் போன்றவர்கள் சேர்ந்துள்ள கட்சிகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அவர்களுடைய சகவாசத்தினால் அந்தக் கட்சிகள் மக்களுக்குப் பழக்கமாகிவிட்ட தில்லுமுல்லுகளிலிருந்து விடுபட்டு விட்டனவா, சீரிய பண்புகளுடன் இயங்குகின்றனவா என்றால் அதுதானில்லை. அதற்கு முற்றிலும் மாறாக, நிர்வாகத்தின் தூண்களாக திண்மைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக விளங்கிய இவர்கள் அரசியல் கட்சிகளின் அத்தனை அவலக் குணங்களுக்கும் அடையாளச் சின்னங்களாக மாறிவிட்டார்கள்.
----
ஆசிரியர் ஐ.ஏ.எஸ். இல் சேர்ந்ததில் இருந்து ஒய்வு பெற்றது வரை இப்புத்தகத்தில் பதிவு செய்திருப்பதால், அந்த பணியை பற்றிய 360 டிகிரி பார்வை நமக்கு கிடைக்கிறது. ஒரு தனி மனிதனின் அலுவல்கள் என்றில்லாமல், நாட்டின் முக்கிய நிகழ்வுகள், ஆட்சி மாற்றங்கள், தலைவர்களின் சுபாவங்கள், கால மாற்றம் எல்லாம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கால ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை, மன மாற்றங்களை ஆசிரியர் வேறுபடுத்தி காட்டியுள்ளார். அதுவே, “எங்க காலத்துல நாங்கெல்லாம்...” என்பது போன்ற ஆசிரியரின் வாதங்கள் சலிப்பை கொடுத்தாலும், உண்மை என்பதால் ஒத்துக்கொள்ள வேண்டியது தான்.
இந்த புத்தகத்தில் சம்பவங்களை மட்டும் அடுக்கி கொண்டு போகவில்லை. பல விஷயங்களில் தனது பார்வையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பெரும்பாலான ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் காணப்படும் குறைகளையும், அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவது எப்படி? பேச்சுவார்த்தைகளை நடத்துவது எப்படி? உட்பூசல்களை சரிப்படுத்துவது எப்படி? பத்திரிக்கை, தொலைக்காட்சி நிருபர்களுடன் பழகுவது எப்படி? அரசியல்வாதிகளுடம் பழகுவது எப்படி? ஆளுமைத் தரத்தை உயர்த்துவது எப்படி? என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் பல வழிகளை சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஐ.ஏ.எஸ். படிப்பின் மேல் வரும் ஆர்வத்தை தவிர்க்க முடியவில்லை. ஐ.ஏ.எஸ். படிக்க நினைப்பவர்களுக்கு இந்த புத்தகம் நிறைய ஊக்கத்தை கொடுக்கும். யாரையாவது ஐ.ஏ.எஸ். படிக்க வைக்க நினைத்தால், முதலில் இந்த புத்தகத்தை படிக்க சொல்லலாம்.
கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு. புத்தகம் வாங்க இங்கு கிளிக்கவும்.
6 comments:
நூலைப் பற்றிய சிறப்பான அறிமுகம்
சரவண குமரன். நன்றி
நன்றி முரளிகண்ணன்
பல தகவல்கள் புதியவை..,
இடுகைக்கு நன்றி.
நன்றி சுரேஷ்
நன்றி ராஜ நடராஜன்
Post a Comment