Monday, June 1, 2009

இரு அணைகள் - ஆழியார் & மேட்டூர்

வாரயிறுதியில் ஆழியார் & மேட்டூர் அணைகளை காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆழியார் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். மேட்டூர் இப்பொழுது தான்.



அணைகள் எதற்கு? தன் வழியில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஓடும் தண்ணீரை, மனிதனின் தேவைக்காக, மனிதனால் கட்டபட்டவை அணைகள். சேகரிக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயன்படலாம். குடிநீருக்கு பயன்படலாம். மின் உற்பத்திக்கு பயன்படலாம். இயற்கையை மீறி கட்டப்படுவதால், பாதிப்புகளும் உண்டு. ஆற்றின் இயல்பான சூழல் மாற்றமடையும். வேகம் மட்டுப்படும். நீர் வாழ் உயிரினங்கள் நிலை பாதிக்கப்படும்.



ஆழியார் அணை கட்டப்பட்டு இருப்பது ஆழியார் ஆற்றுக்காக. பெரிய அணைகளில் ஒன்றான இது கட்டப்பட்டு நாற்பத்தியேழு வருடங்களாகிறது. மிகவும் ரம்மியமான இடம்.



இங்கு பல தமிழ்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. சின்னதம்பி, அமைதிப்படை போன்ற படங்களில் இந்த பங்களா முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.



எல்லா அணைகளிலும் இருப்பது போல் இங்கும் பூங்கா உள்ளது. குழந்தைகள் விளையாடுகிறார்கள். பக்கத்தில் மீன் பொறித்து விற்கிறார்கள். மக்கள் புளியோதரை கட்டி கொண்டு வந்து உண்கிறார்கள்.



காமராஜரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைகளில் இதுவும் ஒன்று. அதற்கு பிறகு வந்த எந்த முதல்வரும் அணைகள் கட்டப்படுவதை கண்டுக்கொள்ளவில்லை. தேவையில்லையா? அல்லது ஆர்வமில்லையா? என்று தெரியவில்லை. மற்ற மாநிலங்களில் நமக்கு வரும் தண்ணீரை தடுத்து கட்டப்படும் அணைகளை குறித்துதான் அவ்வப்போது இங்கு அரசியல் சர்ச்சைகள் ஏற்படும்.



இங்கு படகு சவாரியும் உண்டு. மாலை ஆறு மணிவரை.



பக்கத்திலேயே வேதாந்த மகாரிஷியின் மடமும் உள்ளது. முன்பெல்லாம் பார்வையாளர்கள் அனைவரையும் இந்த அறிவுக் கோவிலின் உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். தற்போது தியானத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால், தியானம் பயிலுபவர்களை மட்டுமே உள்ளே விடுகிறார்கள்.




அடுத்தது மேட்டூர் அணை. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையின் உண்மையான பெயர் ஸ்டேன்லி அணை. கட்டியவர் பெயர் - ஸ்டேன்லி. தமிழகத்தின் பெரிய அணை. கட்டப்பட்ட 1934 ஆம் ஆண்டு, இது தான் ஆசியாவின் மிக பெரிய அணை.



இது கட்டப்பட்டது ஆங்கிலேயர் காலத்தில். ஆனால், அந்த காலத்திலேயே இதை கட்டுவதற்கு மைசூர் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது. பிரச்சினையின் தொடர்ச்சி இன்றும் தமிழக-கர்நாடக மாநிலங்களிடையே நீடிக்கிறது.



இங்கும் அணையை ஒட்டி பூங்கா உள்ளது. மோசமான பராமரிப்பில். முயல், பாம்பு, லவ் பேர்ட்ஸ் எல்லாம் பார்வைக்கு வைத்துள்ளார்கள். சில கூண்டுகளில் பழைய தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைத்திருக்கிறார்கள். மக்கள் ஆவலுடன் பார்த்து, ஏமாந்து சென்று கொண்டிருந்தார்கள். இந்த பூங்காவிற்குள்ளே போட்டோ பிடிக்க கூடாதாம். இன்னும் சில கெடுபிடிகள் சொல்லியிருந்தார்கள். ஆனால், சாப்பாடு கட்டி கொண்டு வந்து சாப்பிடலாமாம். நம்மாட்கள் சாப்பிட்டு இலையை என்ன செய்வார்கள் என்று தெரியாதா? நான் சென்ற நேரம், ஒரு பெரிய குடும்பம் கறி குழம்பு சமைத்து கொண்டு வந்திருந்தார்கள். வாசனையாக தான் இருந்தது. இருந்தாலும் அந்த சூழலை கெடுத்து கொண்டிருந்தது.




அணைகள் இயற்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கும் மனித அறிவின், திறனின் சாட்சியங்களாக இருந்தாலும், அவையே தான் பக்கத்து மாநிலத்தின் விவசாயிக்கு தண்ணீர் கொடுப்பதை தடுக்க செய்யப்படும் தற்கொலைகளுக்கும் மௌன சாட்சிகளாக இருக்கின்றது.



அணைகளுக்கு பின்னே சமூகத்திற்கான ஆக்கம் மட்டும் இல்லை. இப்பொழுது அரசியலும் உள்ளது.

18 comments:

ஸ்ரீ.... said...

படமும், பதிவும் அருமை. அணைகள் சில சமயம் அரசியலுக்கும் பயன்படுகிறது.

ஸ்ரீ....

Majid Hussain said...

Kadhalikka Neramillai a classic movie of Sridhar was shot in this dam locations and the bungalow is played major role.

நரேஷ் said...

எங்க ஏரியாவுக்கு (மேட்டூர்) வந்து போயிருக்கீங்க... படங்கள் அருமை....

உண்மையில் மேட்டூர் பூங்கா பராமரிப்பில் சற்று குறைவுதான் என்றாலும், அந்தளவு ஆட்களும் கிடையாது, மிகப் பெரிய பூங்காவும் கூட...

இன்னொரு பிரச்சனை என்னன்னா, அது பலமுறை இந்த வெடிகுண்டு மிரட்டலால், சும்மாவே மூடிவைக்கப் பட்டு இருக்கும்.. இது முன்ன அடிக்கடி நடக்கும், இப்பதான் ஒழுங்கா தொடர்ந்து இருக்குது...

காவிரிப்பிரச்சனைல அரசியல் எல்லாம் சொன்னீங்க இல்லியா, உண்மையில் மேட்டூர்ல இருந்து 37 கிலோமீட்டர்ல கர்நாடகா பார்டர் வந்துரும்... அந்த காட்டுப்பகுதிதான் முன்ன வீரப்பன் ஏரியாவா இருந்தது....

சரவணகுமரன் said...

நன்றி ஸ்ரீ

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி மஜித்... இதையும் பதிவில் சேர்த்துவிடுகிறேன்...

சரவணகுமரன் said...

ஓ! நரேஷ், உங்க ஏரியாவா? நல்லா இருந்தது.

//இன்னொரு பிரச்சனை என்னன்னா, அது பலமுறை இந்த வெடிகுண்டு மிரட்டலால், சும்மாவே மூடிவைக்கப் பட்டு இருக்கும்//

இது வேறயா?

//அந்த காட்டுப்பகுதிதான் முன்ன வீரப்பன் ஏரியாவா இருந்தது....//

அப்ப முன்னாடி ரொம்ப பாதுகாப்பா இருந்திருக்கும், இல்லியா?

கிரி said...

சரவணக்குமரன் நீங்க கோவை பகுதியை சேர்ந்தவரா!

தமிழ் said...

அருமையான படங்கள்

இயற்கையின் எழில் வண்ணம்
அத்தனையும்

நன்றி நண்பரே

இதையும் பாருங்கள்

1.ஆழியாறு

2.குரங்கருவி

பிரேம்ஜி said...

சரவணகுமரன்,

பல வருடங்கள் நான் வாழ்ந்த மேட்டூரை நினைவு படுத்தியமைக்கு நன்றி.மூன்று அடுக்குகளாக இருக்கும் மேட்டூர் அணை.மூன்றாவது உச்சி பகுதியிலிருந்து அணை நூறு அடிகளுக்கு மேல் நிரம்பிய பிறகு பார்ப்பது மிகவும் ரம்மியமான காட்சி. பிரமாண்டமாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர்பரப்பு தெரியும்.தற்போது அங்கே மேலே சென்று பார்க்க அனுமதிப்பதில்லை என அறிகிறேன்.நண்பர் நரேஷ் சொன்னது போல் 37 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக எல்லை வந்து விடும் ஹொகேனக்கல் அருகே.

1990 ஆம் ஆண்டு வரை விசேஷ நாட்களிலும், பொங்கல் விடுமுறையின் போதும் கட்டுக்கடங்காத கூட்டத்தை அணையின் பூங்காவில் பார்க்கலாம். 90 களின் மத்தியில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பகுதிகள் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டன.பராமரிப்பு கொஞ்சமும் இல்லாமல் போனது.

நரேஷ் said...

//அப்ப முன்னாடி ரொம்ப பாதுகாப்பா இருந்திருக்கும், இல்லியா?//

வீரப்பன் இருந்ததை விட, அந்த அதிரடிப்படை இருந்தப்பதான் தொந்தரவு அதிகமா இருந்தது...

நண்பர் பிரேம்ஜி சொன்ன மாதிரி இந்த ஆடி 18 பாத்தீங்கனா பயங்கர விசேஷமா இருக்கும். நான் ஸ்கூல் படிக்கறப்ப அதுக்கு லீவ்லாம் கூட உட்டிருக்காங்க...

மேட்டூரிலிருந்து தர்மபுரி வழியா ஒகேனக்கல் அடைய ரொம்ப நேரம் ஆகலாம். ஆனால், அந்த காட்டுப்பகுதி வழியா செங்கப்பாடி என்கிற ஊர் வழியே ஒகேனக்கலை அடைய ஒரு மணிநேரம் மட்டுமே ஆகும் (ஆனால் பஸ் கிடையாது).

அங்கே இன்னொரு புகழ் பெற்ற இடம், மாதேஷ்வரன் கோவில் (கர்நாடகாவில் சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது)

சரவணகுமரன் said...

//சரவணக்குமரன் நீங்க கோவை பகுதியை சேர்ந்தவரா!//

இல்லைங்க... இருந்தா நான் முன்னமே போயிருப்பேனே?

சரவணகுமரன் said...

நன்றி திகழ்மிளிர்...

உங்கள் பதிவு படங்களும் அருமையாக இருந்தது.

சரவணகுமரன் said...

பிரேம்ஜி, நிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க... நன்றி...

//தற்போது அங்கே மேலே சென்று பார்க்க அனுமதிப்பதில்லை என அறிகிறேன்.//

அணைக்கு கிட்டவே விடலீங்க...

சரவணகுமரன் said...

//ஆனால், அந்த காட்டுப்பகுதி வழியா செங்கப்பாடி என்கிற ஊர் வழியே ஒகேனக்கலை அடைய ஒரு மணிநேரம் மட்டுமே ஆகும் //

நரேஷ், நடந்தே போயிடலாமா?

நான் கொஞ்சம் நாள் முன்னாடி ஒகேனக்கல் போயிருந்தேன்.

நரேஷ் said...

//நரேஷ், நடந்தே போயிடலாமா?//

நடந்து போறது ரொம்ப கஷ்டங்க, வண்டில போனாலே ஒரு மணி நேரம் ஆகும்...

வேணும்னா இந்த ட்ரக்கிங் போற மாதிரி ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு வேணா ட்ரை பண்ணி பாக்கலாம்...

ராஜ நடராஜன் said...

நானும் ரொம்ப நாளாப் பார்க்கிறேன்.சுற்றுலான்னு வந்தா ஊட்டி எகிரிகிட்டு நின்னுகிட்டு இந்த ஆழியாறு,அட்டகட்டி,வால்பாறைய ஓரங் கட்டிடும்:)

இங்க மேட்டூர் அணையும்,வீரப்பனும் சேர்ந்து ஆழியாறு அணைய ஓரங்கட்டிட்டாங்க:)

படங்கள்,இடுகைக்கு நன்றி.

சரவணகுமரன் said...

//வேணும்னா இந்த ட்ரக்கிங் போற மாதிரி ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு வேணா ட்ரை பண்ணி பாக்கலாம்...//

ஒஹோ!

சரவணகுமரன் said...

ராஜ நடராஜன்,

ஊட்டி போல் சுற்றுலா தளம் என்கிற அளவில் இங்கு சில வசதிகள் இல்லை என்றே நினைக்கிறேன்.

நல்ல பிக்னிக் ஸ்பாட்...