அமெரிக்கா தேர்தல்களில் இருப்பது போல் வேட்பாளர்களிடையே நேரடி விவாதம் வேண்டும் என்கிறார் அத்வானி. மன்மோகன் சிங் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுகிறார் அத்வானி. காங்கிரஸோ அதெல்லாம் தேவையில்லை என்று எஸ்ஸாகிறது.
தமிழ்நாட்டில் அப்படி நடந்தால் எப்படி இருக்கும்? கலைஞரும் ஜெயலலிதாவும் நேரடியாக விவாதித்து கொண்டால் எப்படி இருக்கும்? ஒரு கற்பனை.
---
முதலில் யார் வருவது என்பதே பெரும் போட்டியாயிருக்கும். ஒண்ணு செய்யலாம். செல்வி நமீதாவின் நடனத்தை முதல் நிகழ்ச்சியா வைத்தால் சரியா இருக்குமா? அதை விட இன்னொண்ணு செய்யலாம். சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டுரை முதலில் என்று சொல்லி விடலாம். மேடையில் யாரு இருக்காங்களோ அவரைத்தான் ரஜினி புகழுவாருன்னு ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு வந்திருவாங்க. மக்களும் இப்படி ஏதாச்சும் சொன்னாத்தான் வருவாங்க.
---
கலைஞர் : வணக்கம்
ஜெயலலிதா (முகத்தை திருப்பி கொண்டு) : ம்ஹூம்...
கலைஞர் : பன்னீர், உங்கக்கிட்ட தான் வணக்கம் சொன்னேன்.
பன்னீர் செல்வம் : ம்ம்.. ஆ... ஆங்... வணக்கம்...
ஜெயலலிதா (பன்னீரை முறைத்து பார்த்துவிட்டு): தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது. ரவுடிகள் தொல்லை அதிகரித்து விட்டது. எல்லா இடங்களிலும் கொலை, கொள்ளை, திருட்டு பயம். மழை இல்லை. மந்திரிகள், அதிகாரிகள் என்று எல்லா இடங்களிலும் லஞ்ச மயம். நீங்கள் ஏன் ராஜினாமா செய்ய கூடாது?
மக்கள் : ஆஹா! என்னாமா கேள்வி கேட்குறாங்க...
கலைஞர் : ஏன்? இதெல்லாம் உங்க ஆட்சியில் இல்லையா?
மக்கள் : ஆமா... அதானே?
ஜெயலலிதா : என் ஆட்சியில் இப்படி தமிழகத்தையே குடும்பத்துக்கு தாரை வார்த்து கொடுக்க வில்லையே?
மக்கள் : சரியான கேள்வி
கலைஞர் : ஏன் இல்லை? அப்போது அம்மையாரின் தோழியின் குடும்பம் என்ன செய்து கொண்டிருந்தது?
மக்கள் : அதானே? அது மட்டும் சரியா?
கலைஞர் : கழகத்தின் ஆட்சிக்காகவும், கட்சிக்காகவும் எழுத்து பணிகளிடையே செய்திட செயல்கள் பல இருந்திடும் நிலையில் இது போன்று நேரத்தை வீணாக்கும் வெட்டி பேச்சு தேவையா? என்று நான் வினவிடும்போது, அன்பு தம்பிமார்கள், இது கட்சியின் நிலையையும், ஆட்சியின் பெருமையும், நம்முடைய கொள்கையையும் எடுத்துரைத்திட நல்லதொரு தருணம் என்றுரைத்திடவே நான் இங்கு வந்தேன். ஆனால் இப்போது நான் எண்ணியது சரியென்றே தோன்றுகிறது.
ஜெயலலிதா : கலை நிகழ்ச்சி எல்லாம் நேரத்தை வீணாக்குவதில்லையா?
கலைஞர் : நீங்களும் தானே நடிகர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள்? உதாரணத்திற்கு, (ஒரு பேப்பரை எடுக்கிறார்) 2004 ஆண்டு...
ஜெயலலிதா : போச்சுடா
கலைஞர் : உங்கள் ஆட்சியின் சிறப்பாம், லஞ்ச லாவண்யத்தை பற்றி பேசினாலே இன்றைய தினம் போதாதே? இந்த நிகழ்ச்சிக்கு சீசன் 2, சீசன் 3 எல்லாம் வைக்க வேண்டியிருக்குமே?
தம்பிமார்கள், ஆற்காடு, துரைமுருகன், வீரபாண்டி மேடை கீழிலிருந்து விசிலடிக்கிறார்கள்.
கலைஞர் : எத்தனை எத்தனை கேஸ்கள்? டான்சியாகட்டும்... ப்ளசண்ட் ஸ்டேயாகட்டும்...
கீழிலிருந்து உஸ் உஸ் என்று சத்தம் வர, கலைஞர் திரும்பி பார்த்தால், செல்வகணபதி பரிதாபத்துடன்.
கலைஞர் : சரி. அது போகட்டும். அரசு ஊழியர்களுக்கு நீங்கள் கொடுத்த துன்பங்கள் எத்தனை எத்தனை?
ஜெயலலிதா : உங்கள் ஆட்சி மட்டும் ஒழுங்கா? வக்கீல்களும் போலீஸும் கபடி ஆடி கொண்டிருக்கிறார்கள். (ராமதாஸ் அனுப்பிய மதுவிலக்கு எஸ்.எம்.எஸ். பார்த்து கொண்டு)அரசாங்கமே மது விற்று கொண்டு இருக்கிறார்கள்.
கலைஞர் : அது உங்கள் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது தானே?
ஜெயலலிதா : உங்கள் ஆட்சியில் மூட வேண்டியது தானே?
இப்போது உஸ் உஸ், வேறொரு திசையில் இருந்து வருகிறது. பார்த்தால், சசிகலா அன் கோ.
நிகழ்ச்சி தொடர தொடர, நாலா பக்கமும் உஸ் உஸ்.
எந்த கேள்விக்கும் பதில் இருக்காது. எதிர் கேள்விகள்தான். 1) ஏன் நீங்க பண்ணலையா? 2) ஏன் நீங்க பண்ணீங்க?
சிறிது நேரம் கழித்து, மேடையின் கீழே யாரும் இல்லை.
“எங்கே எல்லாரும்?”
“ஐபில் பார்க்க போயிட்டாங்க”
“ஐபிலா?”
“ஆமாம். நல்லா விறுவிறுப்பா இருக்காம், இப்படி ஜவ்வுன்னு இழுக்காம!”
5 comments:
வணக்கம் இது போன்ற பதிவுகள் மேலும் மேலும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
தலைவா விஜயகாந்த் அவர்களை விட்டு விட்டீர்களே..
அவரும் இந்த விவாதத்தில் இருந்திருந்தால் யாரும் ஐ.பி.எல் பார்க்க போயிருக்க மாட்டார்கள். விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருந்திருக்காது...
நன்றி பொதிகை தென்றல்...
ஆமாங்க ஸ்ரீராம்... விஜயகாந்த் இருந்திருந்தால் விறுவிறுப்பாக இருந்திருக்கும்... அவரு கேள்வி கேட்டா திருப்பி கேட்க முடியாதே?
"இக்கரைக்கு அக்கரை பச்சை"
Post a Comment