வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பிடித்த வேலை ஒன்றாக இருக்கும். செய்கிற வேலை ஒன்றாக இருக்கும். வேறு வேலை செய்பவர்களில் ஒரு சிலரே, பிடித்த வேலையை நோக்கி நகருவார்கள். எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களை பார்த்தால் ஒன்று புரிந்து கொள்ளலாம். வெற்றியடைந்தவர்கள் அனைவரும் அவர்களுக்கு பிடித்த வேலையை தான் செய்திருக்கிறார்கள்.
---
சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் வேறு பல துறைகளில் பலர் இருக்கிறார்கள். அதேப்போல், சினிமாவிலும் ஒரு துறையில் நுழைய ஆசைப்பட்டு, ஆனால் வேறு துறையில் பணிபுரிபவர்கள் என்று ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். நடிக்க வந்து இயக்குனராக பணிபுரிபவர்கள் இருக்கிறார்கள். தயாரிக்க வந்து பின்பு நடிகரானவர்கள் என சிலர் இருக்கிறார்கள். ஏன், டிக்கெட் கொடுத்தவர் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அதே திரைத்துறையில் ஸ்டாராக விருப்பப்பட்டு இன்னமும் டிக்கெட் கிழித்து கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
---
ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு செல்வது என்பது சிரமமான காரியம். அதிலும் வெற்றி பெறுவது என்பது குதிரை கொம்பு. அதைவிட மிகவும் முக்கியமானது, மாறிய பாதை, மாறியவர்களுக்கு மட்டும் சந்தோஷத்தை கொடுத்ததா? அல்லது அவர்களது ரசிகர்களுக்குமா?
---
பாக்யராஜ், பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த போது அவரது ஊரான கோயமுத்தூருக்கு செல்கிறார். அச்சமயம், அவருடைய ’கிழக்கே போகும் ரயில்’ ரிலீஸ் ஆகிறது. ஊரெங்கும் அப்படத்தின் போஸ்டர்கள். தன்னை போலவே, தன் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கும் என்ற எண்ணத்தில் சென்றவருக்கு ஏமாற்றம். அவருடைய பாட்டி அவரை திட்டுகிறார். ‘ஏண்டா இதுக்கா சினிமாவுக்கு போன?’
இவருக்கு ஒன்றும் புரியவில்லை. விஷயம் இதுதான்.
அந்த படத்தில் இவரும் ஒரு காட்சியில் வேறு வழியில்லாமல் நடித்திருந்தார். சுதாகரை கழுதை மேல் வைத்து கொண்டு வருகிற காட்சியில், கழுதையை இழுத்து கொண்டு வருபவராக. அதைத்தான் ஊரெங்கும் போஸ்டர் அடித்திருந்தார்கள்!
இவரால் அவர் வீட்டில் உள்ளவர்களை என்ன சொல்லியும் சமாளிக்க முடியவில்லை. அப்போது அவருக்கு ஏற்பட்ட எண்ணம்தான் கதாநாயகனாக நடிப்பது என்பது. எண்ணியபடியே நடித்தார். வெற்றியும் பெற்றார். ஹீரோ பாக்யராஜை இயக்குனர் பாக்யராஜ் தூக்கி நிறுத்தினார். வெற்றிக்கு இயக்குனர் பாக்யராஜின் பலமே காரணம்.
பலவீனமான விஷயம், இவர் நாயகனாக நடிப்பதால், ஹீரோ கதாபாத்திரத்தை இவரது இமேஜிற்க்கு ஏற்றாற்போல் அமைக்கவேண்டி இருந்தது. இதனால், இவரது கதாபாத்திரம் பெரும்பாலான படங்களில் ஒரே மாதிரி இருந்தாற்போல் தோற்றமளித்தது. இவர் கதாநாயகனாக நடிக்காமல், இயக்குனராக மட்டும் இருந்திருந்தால் இன்னும் வெவ்வேறு பாத்திரப்படைப்புகள் அமைந்திருக்கும். வெவ்வேறு கதைக்களங்கள் அமைந்திருக்கும். அதனால், இவரது திரையுலக மைலேஜ் இன்னும் அதிகரித்திருக்கலாம்.
---
படங்களை மட்டும் உணர்வுபூர்வமாக கொடுக்காமல், சொந்த வாழ்க்கையிலும் உணர்ச்சிமயமாக வாழ்ந்து கொண்டிருப்பவர், சேரன். ஒரு படைப்பாளி தன் படத்தை காண வரும் ரசிகனுக்கு நல்ல கருத்தை கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உழைத்து கொண்டிருப்பவர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடிக்கட்டு என உணர்ச்சிமயமான களத்தில் சமூக கருத்துக்களுடான படங்களை கொடுத்தவர்.
நடிகர்கள் மேலான இவரது குற்றசாட்டு, நல்ல படங்களில் இவர்கள் நடிக்க தயங்குகிறார்கள் என்பது. இதற்கு தீர்வாக இவரே நடிக்க தொடங்கிவிட்டார். நல்ல விஷயம் தான். ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படைப்புகள் இதனால் தான் உருவாகி இருக்கலாம். ஆனால் ஒன்று நிச்சயம். நடிகர் சேரனின் திறமைக்கும் இயக்குனர் சேரனின் திறமைக்கும் இடைவெளி அதிகம். இயக்குனர் சேரன் அவரது படங்களை வேறு ஒரு நடிகரை வைத்து இயக்கியிருந்தால் அவரால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்க முடியும். கொஞ்சம் பிரபலமான நடிகரென்றால், படம் சென்றடையும் தூரமும் அதிகமாக இருந்திருக்கும். தவிர, இயக்குனர் சேரன் வேறு இயக்குனர் படங்களில் நடிகராக நடிப்பது தவிர்க்கப்பட்டு, மேலும் அதிகமான படைப்புகள் அவரின் முழுமையான கைவண்ணத்தில் மெத்த மெருகோடு படைக்கப்பட்டிருக்கும்.
---
வாலி படம் வந்திருந்தபோது, அப்படம் ஆபாச படம் என்று விமர்சிக்க படவில்லை. கத்தி மேல் கவனமாக நடந்திருக்கிறார் இயக்குனர் என்று பாராட்டப்பட்டது. சைக்காலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் தந்த இயக்குனர் என்று எஸ்.ஜே. சூர்யாவை உயரத்தில் வைத்தார்கள். அதன் பின் வந்த குஷியிலும் கதையை முதல் ரீலிலேயே சொல்லிவிட்டும் ரசிகனை கடைசி ஃப்லிம் வரை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்திருந்தார்.
அதற்கு பிறகு, தான் சினிமாவுக்கு வந்ததே நடிகனாகத்தான் என்று சொல்லி ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அப்படங்களில், இயக்குனர் சூர்யாவிடம், அவர் ஸ்பெஷல் க்ரியேட்டிவ் திங்க்கிங்கை விட அதிகம் எதிர்ப்பார்த்தது, இரட்டை அர்த்த வசனங்களை. எனக்கு தெரிந்து படங்களில் வெற்றியடைந்த பின்பு, தடை செய்யப்பட்ட படம் நியூ.
பாரதிராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இந்த தலைமுறையில் தன்னை அதிகம் கவர்ந்த இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா என்று. அப்பேட்டியிலேயே அவர் சொல்லி இருந்தது, ‘அந்த பையன் ஏன் இரட்டை அர்த்த காட்சிக்களை நம்புறானோ?”ன்னு. இன்று தமிழ்நாட்டில் எந்தவொரு தமிழ் வார்த்தையையும் கவனமாக உபயோகிக்கவேண்டி இருக்கிறது. கொஞ்சம் கேப் விட்டால், நரசமாகி விடும் அபாயம் உள்ளது. அபாயம் உபயம் எஸ்.ஜே. சூர்யா. அந்த விஷயத்தை விட்டு விட்டால், ஹாலிவுட்டிற்கு இணையானது அவரது க்ரியேட்டிவிட்டி.
ஆனால் இப்போது கவனம் அதில்லில்லாமல், தன்னை கதாநாயகனாக நிலை நிறுத்துவதிலேயே உள்ளது. இதில் இழப்பு ரசிகர்களுக்குதான்.
---
எனக்கு கலையுணர்ச்சியும் வேண்டாம், கருத்து குத்தும் வேண்டாம்... படம் பார்க்க குடும்பத்தோடு வந்தால் சந்தோஷமாக சிரிக்க வச்சி அனுப்பினா போதும் என்கிற மெஜாரிட்டியான தமிழ் ரசிகர்களுக்கு விருந்து வைத்து கொண்டிருப்பவர், ஸாரி, கொண்டிருந்தவர், சுந்தர் சி. கவுண்டமணியின் கடைசி ரவுண்டை, படத்தின் ஹீரோக்களுக்கு இணையான ரவுண்டை, ‘உள்ளத்தை அள்ளித் தா’ மூலம் கலக்கலாக ஆரம்பித்து வைத்தவர் சுந்தர் சி. இவர்தான் வடிவேலுவின் தற்போதைய ஹிட் ரேட்டை ‘வின்னர்’ கைப்புள்ள மூலம் அமர்க்களமாக தொடங்கி வைத்தவரும்.
கமலின் ‘அன்பே சிவம்’ படத்திலும் மறைந்திருந்து ஆங்காங்கே சிரிப்பு பொட்டு வெடியை வைத்து, வெயிட்டான சப்ஜெக்ட்டை இலகுவாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள செய்தவர்.
இவருடைய இப்போதைய நிலை? சன் டிவி பார்த்தால், ‘ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்குல முஸ்லீமுக்கு பெட்ரோல் போடுறது இல்லையா?’ என்று மொக்கை வசனம் பேசிக் கொண்டும், அம்மணமாக மெயின் ரோட்டில் நடந்து கொண்டிருக்கிறார்.
பாஸ், நாங்க உங்கக்கிட்ட எதிர்ப்பார்க்கிறது வேற...
---
முதல் பத்தியில் சொன்னது படி பார்த்தால், நடிப்பது தான் இவர்களுக்கு விருப்பமானதாக இருந்தால், இதில் இப்படைப்பாளிகள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். ஆனால், இவர்கள் இதுவரை பெற்றிருக்கிற வெற்றியை பார்த்தால், இவர்களது முழு ஈடுபாடும் இருப்பது திரைக்கு பின்னால்தான். இவர்களுக்கு உள்ள படைப்பாற்றல் தனிச்சிறப்பானது. அதை தங்களது சொந்த ஆர்வத்திற்காக மட்டுப்படுத்தாமல், ரசிகர்களுக்கு தொடர்ந்து படைப்பது இவர்களது கடமை.
4 comments:
Director nadigara varappo kurigiya vattathula sikkiranga..Ketta Periya nadigargal nadukka thayara illai nu saaku vera...Yen Pudhu muhangalukku vaippu kodukka koodathu?...Krish
கருத்திற்கு நன்றி கிரிஷ்
அருமை நண்பரே,
சூப்பரா எழுதியிருக்கீங்க நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் பாதைமாறாமல் இருந்திருந்தால் இன்னும் சிறந்த படைப்புகள் தமிழ்சினிமாவிற்கு கிடைத்திற்கும் என்ன செய்வது சமீப காலமாக தமிழ்சினிமாவில் ஹீரோ மோகம் அதிகரித்துவருகிறது காலத்தின் கட்டாயம் அதுபோல வேறொன்றும் சொல்வதற்கில்லை...
நன்றி நண்பரே
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களுடன்.மாணவன்
மிக நல்ல அலசல்!.....
Post a Comment