Tuesday, March 24, 2009

லட்ச ரூபாய் கார் பிறந்த கதை

ரத்தன் டாடாவுக்கு ஒரு ஆசை. ஸ்கூட்டரில் போய் கொண்டிருக்கும் இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு குறைந்த விலையில் கார் கிடைக்க வேண்டும். சின்னதாக இருந்தாலும் குடும்பத்துடன் செல்லும் வகையில் இருக்க வேண்டும்.

ஒரு ஸ்கூட்டரில் இருக்கும் பாகங்களை வைத்து ஒரு கார் தயாரித்தால் எப்படி? சாத்தியமே இல்லை என்று தோன்றினாலும் முயற்சி செய்தால் ஏதோ ஒரு வழி பிறக்கும் அல்லவா? ’ஸ்கூட்டர் கார்’ முயற்சியை பெரிதாக யாரும் எடுத்து கொள்ளவில்லை. ஆர்வம் உள்ள சிலர் முயற்சி செய்து பார்த்ததில், ஸ்கூட்டர் பார்ட்ஸ் காருக்கு பத்தாது, பொருந்தாது என்று முடிவு செய்து அந்த முயற்சியை மூட்டை கட்டினார்கள்.

இரும்புக்கு பதில் பிளாஸ்டிக் உபயோகித்தால் விலையை கட்டுப்படுத்தலாம் இல்லையா? அப்படி செய்து பார்த்தால், பெரிய பொம்மை கார் போல அல்லவா இருக்கிறது?

சரி. அதை விடுவோம். சின்னதா ஒரு கார் பண்ணுவோம். எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனம் பண்ணி விலையை குறைக்க முடியுமோ, அவ்வளவு முயலுவோம் என்று திட்டமிட்டிருந்தார் டாடா. ஒரு லட்ச ரூபாய் என்றெல்லாம் டார்க்கெட் வைக்கவில்லை, ஜெனிவாவில் நடந்த கார் கண்காட்சியில் பேசும் வரை.

அங்கு தன்னுடைய சின்ன கார் கனவை பற்றி சொல்லி கொண்டிருந்த போது, ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். “மிஸ்டர். டாடா, உங்கள் காரின் விலை என்னவாக இருக்கும்?”

ஒரு நொடி யோசித்த டாடா குத்துமதிப்பாக சொன்னார்.

“ஒரு லட்சம் இருக்கலாம்”

அடுத்த நாள் பேப்பரில் செய்தி. ஒரு லட்ச ரூபாய்க்கு கார் தயாரிக்கிறது டாடா.

பேப்பர் படித்த மக்கள் மட்டும் திகைக்கவில்லை. டாடாவும் தான்.

மறுப்பு சொல்லலாமா? ஏன் மறுக்க வேண்டும்? ஒரு லட்ச ரூபாய்க்கு கார் தயாரித்தால் என்ன? ஏன் முடியாது? முயன்று தான் பார்ப்போமே?

முயற்சியின் முடிவுதான் நமக்கு தெரியுமே? நானோ.

என். சொக்கனின் ரத்தன் டாடா புத்தகத்தின் பதினான்காம் அத்தியாயத்தில் (ஒரு லட்ச(சிய)ம்) இருந்து.

6 comments:

ஷங்கர் Shankar said...

அருமை! முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை

கிரி said...

நல்லா இருக்கு..(இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்)

Anonymous said...

நல்ல கட்டுரை!

நானோ கடந்து வந்த தடைகள் பல, ஒரு வேளை விற்பனை ரீதியாக நானோ வெற்றி பெறாமல் கூட போகலாம், ஆனால், இந்த பயணத்தில் இவர்கள் சந்தித்த சவால்கள் பல விஷயங்களில் துணையாக இருக்கும்....

நானோவின் சாதனையால் ஈர்க்கப்பட்டதனாலேயே, அதைப்பற்றிய நீண்ட பதிவு போட்டிருக்கிறேன்...

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி ஷங்கர்

சரவணகுமரன் said...

உண்மை என்று நம்பிதான் எழுதியுள்ளேன், கிரி :-)

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்... உங்கள் கட்டுரை படித்தேன்... அருமை