பொதுவா, எனக்கு பயணங்கள் ரொம்ப பிடிக்கும். நண்பர்கள் எங்காவது ரவுண்ட் அடிக்க கூப்பிடும்போது மறுக்காமல் போவேன். டிரிப், கல்யாணம், கோவில் என்று சரியான இடைவெளியில் எங்கே என்றாலும். இப்ப நண்பர்களுடன் செல்லும்போது, நாமே எந்த கட்டுப்பாடும் இல்லாம சுதந்திரமாக திட்டமிட்டு செல்லலாம். சிறு வயதில் கசந்த பயணங்கள், இப்போது பிடிப்பதற்கு காரணம், இதுவாக இருக்கலாம். தனியாக பயணிக்கும் போது உதவும், mp3 பிளேயர், புத்தகங்கள், நண்பர்களுடன் செல்லும்போது தேவைப்படாது. பேசி கொண்டே செல்லும் போது, நேரம் போவது தெரியாது. ஒத்த கருத்தென்றால் மனம் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கும். அதுவே, எதிர் கருத்தென்றாலும் வாக்குவாதம் என்று சுவாரஸ்யமாக செல்லும். வெயில், மழை பெரியதாக தெரியாது. கொஞ்சம் சகிப்பு தன்மையும், மற்றவர் மனநிலையை புரிந்துகொள்ளும் ஆர்வமும் இருந்தால் போதும்.
சொல்ல வருவது வேறு விஷயம். என் நண்பர்களில் ஒருவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என்று மாநிலங்கள் தாண்டி வார வாரம் கோவில்களுக்கு செல்லுவான். ஆன்மீகம் பற்றியும், கோவில்களை பற்றியும் ஏகப்பட்ட விஷயம் தெரியும். நம்ம இதிகாசங்கள் முதல் Sigmund Freud வரை எல்லா விஷயங்களையும் நல்லா பேசுவான். பேசிக்கிட்டே இருப்பான். அவனுடன் ஒருமுறை திருவண்ணாமலை சென்றிருந்தப்போது, இரவு கிரிவலத்தின் போது ஏகப்பட்ட கதைகள் சொன்னான். தல புராணம், ரமணர் என்று ஏகப்பட்ட விஷயங்கள். கேட்டுக்கொண்டே நடந்தது நல்லா இருந்தது. ஒரு இடத்தை பற்றி தெரிந்துக்கொண்டு அந்த இடத்திற்கு செல்லும் அனுபவம் விசேஷமானது.
அது போல், மற்ற கோவில்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று வாசித்த புத்தகம், வரம் வெளியீடான கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் எழுதிய அற்புதக் கோயில்கள். சிதம்பரம், திருநாகேஸ்வரம், திருமங்கலக்குடி, திருக்கருகாவூர், திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கடவூர், திருவானைக்கா, திருப்புறம்பியம், சிக்கல், ஸ்ரீவாஞ்சியம், திருச்சேறை, நாச்சியார் கோயில், திருமணஞ்சேரி என மொத்தம் பதினான்கு கோவில்களை பற்றிய தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளது. இதில் நான் ஏற்கனவே அறிந்தது மூன்றை மட்டும் தான். இதில் இதுவரை போயுள்ளது திருச்சி பக்கமுள்ள திருவானைக்காவல் கோவிலுக்கு மட்டும்தான்.
நான் திருவானைக்காவல் கோவில் சென்றிருந்த போது, ஒரு யானைக்கு உணவு கொடுத்து கொண்டிருந்தார்கள். எல்லா கோவிலிலும் யானை இருக்கும். அப்படித்தானே என்றிருந்தப்போது இல்லை, இங்கு இந்த யானை விசேஷமானது என்றார்கள். அப்போது எனக்கு தெரியவில்லை. இப்புத்தகம் படித்தபோது அந்த புராணம் தெரிந்தது.
ஆலயங்களை பற்றி புத்தகத்தின் ஆரம்பத்தில் ராகவன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
துளசி போன்ற செடிகள்; முல்லை போன்ற கொடிகள்; பனை போன்ற மரங்கள் என பலவிதமான தலவிருட்சங்களை கொண்டு விளங்குகின்றன ஆலயங்கள். இதைக் காணும் போது, பசுமை இயக்கத்தின் வேர் இவைதான் என்பது தெளிவாகிறது.
புனிதத் தீர்த்தம் என்றும் புஷ்கரிணி என்றும் ஆலயந்தோறும் நீர்நிலைகள். இதை காணும்போது, நீர் சேமிப்பையும், நீர் பயன்பாட்டையும் பற்றிய அக்கறையும் தெளிவும் இங்குதான் பிறந்திருக்கிறது என்பது புலனாகிறது.
வானம் பொய்த்து பூமி வறண்ட சமயங்களில், ஆலயத்தின் களஞ்சியத்தில் இருந்து மக்களுக்கு தானியங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதை அறியும்போது, ஆலயம் ஒரு சமுதாயக்கூடம் என்பதும் புரிகின்றது.
மன்னர்களின் வெற்றிகள், அரசின் நிர்வாகம், தண்டனைகள், சமூக வழக்கங்கள் போன்றவற்றை விவரிக்கும் கல்வெட்டுகளோடு தொடங்குகின்றன ஆலயங்கள். இப்படிப் பார்த்தால், வரலாறின் வெளிச்ச சாட்சி இவை என்று தோன்றுகிறது.
ஆக, ஆலயங்கள் வழிபாட்டுத்தலமாக மட்டுமின்றி கூடவே, மக்களின் நலனுக்காகவும், சமுதாய வளர்ச்சிக்காகவும் மகத்தான பங்கு கொண்டுள்ளன என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
கோயிலை பற்றிய மாற்று கருத்துக்கள் இருந்தாலும், இதெல்லாம் உண்மைதானே?
பொதுவா, ஒரு கோயிலை கட்டும் அரசரை பற்றிய வரலாற்று கல்வெட்டு சான்றுகள் இருக்கும். அதேப்போல், ஒரு கோவிலுடன் தொடர்புடைய கடவுள் பற்றிய புராணம் உண்டு. இரண்டையும் இணைத்து கோவிலின் சிறப்பை விளக்குகிறார் ராகவன். கோவிலுக்கு செல்லும் வழியையும், வழிப்பாட்டு நேரங்களையும், ஆலய தொடர்பு தகவல்களையும் இத்துடன் இப்புத்தகத்தில் கூறிப்பிட்டுள்ளார்.
ஒரு கோவிலை பற்றி சொல்லும்போது அது சம்பந்தப்பட்ட இன்னும் பல கோவில்களை பற்றியும் நாம் அறிந்திராத விஷயங்களை சொல்கிறார்.
இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு, என் எதிர்ப்பார்ப்பு வேறு மாதிரியாக இருந்தது. நிறைய கோவில்களை பற்றிய விஷயங்கள் இருக்கும் என்று நினைத்திருந்தேன். நான் சென்று வந்த, செல்ல நினைக்கிற சில கோவில்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தேன். அதை இப்புத்தகம் பூர்த்தி செய்யாதது எனக்கு ஏமாற்றம் தான்.
மற்றப்படி, ஆன்மீக ஆர்வம் உள்ளவர்கள், கோவில்களுக்கு வாடிக்கையாக செல்கிறவர்கள் ஆகியோரை இப்புத்தகம் கவரும். நம்பிக்கையில்லாதவர்கள், தலைப்பை பார்த்தே அல்லது முதல் இரண்டு பத்தி படித்தே ஓடியிருப்பார்கள்.
7 comments:
கும்பகோணத்தைச் சுற்றி 100 கிமீ வட்டம் போட்டீர்கள் என்றால் பெரிய அளவிலான கோயில்களே 100க்கு மேல் கிடைக்கும்.
ஓவ்வொரு கோயிலும் நீங்க சொல்லிய மாதிரி எல்லாம் அடங்கியதாக இருக்கும்.
கும்பகோணத்தை திருக்குடந்தை என்று சொல்வோரும் உண்டு.
ஒருவன் பிரார்த்தித்துகொண்டு இருந்தான்.
நான் கேட்டேன், யாரை பிரர்த்திக்கின்றாய்?
அவன் சொன்னான், இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
அப்படியென்றால் நீ கோவிலுக்கு அல்லவா போக வேண்டும்.
அவன் வயிறு குலுங்க சிரித்தான்.
ஏன் சிரிக்கிறாய்?
இறைவனை கோவிலில் சிறை வைக்கும் உன் அறியாமையை எண்ணி சிரித்தேன்.
கோவிலில்தானே தெய்வம் இருக்க வேண்டும். அது தானே நீதி.
உங்கள் கோவில்கள் வழிபாட்டு ஸ்தலங்கள் ஆவதற்கு முன் அரண்மனை களாக இருந்தது உனக்கு தெரியுமா? கோவிலை சரியாய் உச்சரித்துப்பார். கோ என்றால் அரசன். இல் என்றால் வீடு. கோவில் என்றால் அரசனின் வீடு. வழிபாட்டு ஸ்தலம் அல்ல. அரண்மனை. அரசனை வணங்கினர்கள் உன் முன்னோர்கள். அரண்மனையை வணங்குகின்றாய் நீ. மொத்தத்தில் உங்களுடைய தெய்வங்கள் கல்லாய் இருப்பதற்கும், கற்பகிரகம் காரிருளாய் இருப்பதற்கும் காரணம் புரிகிறதா. கோட்டை சுவரை ஒத்த கோவில் சுவரும், அரண்மனைக்கே உரித்தான அகழிகளும், வழிபாட்டு ஸ்தலம் ஆக உருவெடுத்தது உன் தெய்வங்கள் வாழ்வதற் கல்ல. உன் தெய்வங்களால் வாழ்வதற்கு.
அருமையான பதிவு.
நானும் அந்த புத்தகம் படிக்க வேண்டும்.
சிதம்பரம் சென்றது இல்லையா.
அழகான கோவில்.
நானும் என் நண்பனும் ஒரு முறை ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசி கொண்டு கிரிவலம் சென்றோம்.
உங்கள் பதிவு அதை நியாபக படுத்தியது..
நன்றி இராகவன்... நல்ல தகவல்
கோவில் அரண்மனை மாதிரியா இருக்கிறது?
//உன் தெய்வங்கள் வாழ்வதற் கல்ல. உன் தெய்வங்களால் வாழ்வதற்கு.//
!?!
நன்றி வினோத் கௌதம்
கடவுளை கடந்து கோவில்கள் நிறைய சொல்லித் தருகின்றன. தளபுராணத்தின் மூலம் பண்டைய நிகழ்வுகள், சிற்பங்கள் மூலம் கலையின் நேர்த்தி, தளவிருட்சம் மூலம் இயற்கையின் தேவை என பல பல புரிந்தவர்களுக்கு இன்பம் தரும். புரியாதவர்களுக்கு...
Post a Comment