Sunday, March 29, 2009

கலைஞர் - ஜெயலலிதா நேரடி விவாதம்

அமெரிக்கா தேர்தல்களில் இருப்பது போல் வேட்பாளர்களிடையே நேரடி விவாதம் வேண்டும் என்கிறார் அத்வானி. மன்மோகன் சிங் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுகிறார் அத்வானி. காங்கிரஸோ அதெல்லாம் தேவையில்லை என்று எஸ்ஸாகிறது.

தமிழ்நாட்டில் அப்படி நடந்தால் எப்படி இருக்கும்? கலைஞரும் ஜெயலலிதாவும் நேரடியாக விவாதித்து கொண்டால் எப்படி இருக்கும்? ஒரு கற்பனை.

---

முதலில் யார் வருவது என்பதே பெரும் போட்டியாயிருக்கும். ஒண்ணு செய்யலாம். செல்வி நமீதாவின் நடனத்தை முதல் நிகழ்ச்சியா வைத்தால் சரியா இருக்குமா? அதை விட இன்னொண்ணு செய்யலாம். சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டுரை முதலில் என்று சொல்லி விடலாம். மேடையில் யாரு இருக்காங்களோ அவரைத்தான் ரஜினி புகழுவாருன்னு ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு வந்திருவாங்க. மக்களும் இப்படி ஏதாச்சும் சொன்னாத்தான் வருவாங்க.

---

கலைஞர் : வணக்கம்

ஜெயலலிதா (முகத்தை திருப்பி கொண்டு) : ம்ஹூம்...

கலைஞர் : பன்னீர், உங்கக்கிட்ட தான் வணக்கம் சொன்னேன்.

பன்னீர் செல்வம் : ம்ம்.. ஆ... ஆங்... வணக்கம்...

ஜெயலலிதா (பன்னீரை முறைத்து பார்த்துவிட்டு): தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது. ரவுடிகள் தொல்லை அதிகரித்து விட்டது. எல்லா இடங்களிலும் கொலை, கொள்ளை, திருட்டு பயம். மழை இல்லை. மந்திரிகள், அதிகாரிகள் என்று எல்லா இடங்களிலும் லஞ்ச மயம். நீங்கள் ஏன் ராஜினாமா செய்ய கூடாது?

மக்கள் : ஆஹா! என்னாமா கேள்வி கேட்குறாங்க...

கலைஞர் : ஏன்? இதெல்லாம் உங்க ஆட்சியில் இல்லையா?

மக்கள் : ஆமா... அதானே?

ஜெயலலிதா : என் ஆட்சியில் இப்படி தமிழகத்தையே குடும்பத்துக்கு தாரை வார்த்து கொடுக்க வில்லையே?

மக்கள் : சரியான கேள்வி

கலைஞர் : ஏன் இல்லை? அப்போது அம்மையாரின் தோழியின் குடும்பம் என்ன செய்து கொண்டிருந்தது?

மக்கள் : அதானே? அது மட்டும் சரியா?

கலைஞர் : கழகத்தின் ஆட்சிக்காகவும், கட்சிக்காகவும் எழுத்து பணிகளிடையே செய்திட செயல்கள் பல இருந்திடும் நிலையில் இது போன்று நேரத்தை வீணாக்கும் வெட்டி பேச்சு தேவையா? என்று நான் வினவிடும்போது, அன்பு தம்பிமார்கள், இது கட்சியின் நிலையையும், ஆட்சியின் பெருமையும், நம்முடைய கொள்கையையும் எடுத்துரைத்திட நல்லதொரு தருணம் என்றுரைத்திடவே நான் இங்கு வந்தேன். ஆனால் இப்போது நான் எண்ணியது சரியென்றே தோன்றுகிறது.

ஜெயலலிதா : கலை நிகழ்ச்சி எல்லாம் நேரத்தை வீணாக்குவதில்லையா?

கலைஞர் : நீங்களும் தானே நடிகர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள்? உதாரணத்திற்கு, (ஒரு பேப்பரை எடுக்கிறார்) 2004 ஆண்டு...

ஜெயலலிதா : போச்சுடா

கலைஞர் : உங்கள் ஆட்சியின் சிறப்பாம், லஞ்ச லாவண்யத்தை பற்றி பேசினாலே இன்றைய தினம் போதாதே? இந்த நிகழ்ச்சிக்கு சீசன் 2, சீசன் 3 எல்லாம் வைக்க வேண்டியிருக்குமே?

தம்பிமார்கள், ஆற்காடு, துரைமுருகன், வீரபாண்டி மேடை கீழிலிருந்து விசிலடிக்கிறார்கள்.

கலைஞர் : எத்தனை எத்தனை கேஸ்கள்? டான்சியாகட்டும்... ப்ளசண்ட் ஸ்டேயாகட்டும்...

கீழிலிருந்து உஸ் உஸ் என்று சத்தம் வர, கலைஞர் திரும்பி பார்த்தால், செல்வகணபதி பரிதாபத்துடன்.

கலைஞர் : சரி. அது போகட்டும். அரசு ஊழியர்களுக்கு நீங்கள் கொடுத்த துன்பங்கள் எத்தனை எத்தனை?

ஜெயலலிதா : உங்கள் ஆட்சி மட்டும் ஒழுங்கா? வக்கீல்களும் போலீஸும் கபடி ஆடி கொண்டிருக்கிறார்கள். (ராமதாஸ் அனுப்பிய மதுவிலக்கு எஸ்.எம்.எஸ். பார்த்து கொண்டு)அரசாங்கமே மது விற்று கொண்டு இருக்கிறார்கள்.

கலைஞர் : அது உங்கள் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது தானே?

ஜெயலலிதா : உங்கள் ஆட்சியில் மூட வேண்டியது தானே?

இப்போது உஸ் உஸ், வேறொரு திசையில் இருந்து வருகிறது. பார்த்தால், சசிகலா அன் கோ.

நிகழ்ச்சி தொடர தொடர, நாலா பக்கமும் உஸ் உஸ்.

எந்த கேள்விக்கும் பதில் இருக்காது. எதிர் கேள்விகள்தான். 1) ஏன் நீங்க பண்ணலையா? 2) ஏன் நீங்க பண்ணீங்க?

சிறிது நேரம் கழித்து, மேடையின் கீழே யாரும் இல்லை.

“எங்கே எல்லாரும்?”

“ஐபில் பார்க்க போயிட்டாங்க”

“ஐபிலா?”

“ஆமாம். நல்லா விறுவிறுப்பா இருக்காம், இப்படி ஜவ்வுன்னு இழுக்காம!”

Saturday, March 28, 2009

ஒபாமா கண்டிபிடித்த ரகசியம் & ஒரு இந்திய ரகசியம்

இன்று ஒரு மீட்டிங்கில் பேசிய ஒபாமா கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

“இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டிருந்த வேலைகள், குறைந்த ஊழியத்திற்கானவை. ஆனால், அதிக வேலை பளு உள்ளவை. இதை தடுத்து, அமெரிக்காவிற்கு கொண்டு வருவதால் எந்த பலனும் இல்லை. இதற்கு பதில், அமெரிக்கா வாழ்க்கை தரத்திற்கு ஏற்றாற்போலான உயர் நிலை வேலைகளை இங்கு உருவாக்க வேண்டும்.”

அப்பாடி, ஒரு வழியாக விஷயத்தை கண்டுபிடிச்சுட்டாரு! இந்த விஷயம் தெரியாமத்தான் தேர்தல்ல அப்படி பிரச்சாரம் பண்ணினாரா?

எது எப்படியோ, இந்த நெருக்கடி நேரத்தில், இந்திய ஐடி & பிபிஒ துறை நிறுவனங்கள் சந்தோஷப்பட்டு கொள்ள ஒரு செய்தி.

---

மருத்துவ சுற்றுலா என்றழைக்கப்படும் வெளிநாட்டினர்க்கு மருத்துவ சேவை அளிப்பதில், இந்தியா உலகத்திலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறதாம். இங்கு மருத்துவ செலவு குறைவென்பதால், வெளிநாட்டில் இருந்து நிறைய பேர் இந்தியா வருகிறார்களாம்.

அதே சமயம், இன்னொரு விஷயம். இந்தியா, தன் மக்களின் மருத்துவத்திற்காக செலவளிப்பது, மொத்த ஜிடிபியில் 1.2 பர்சண்டேஜ் தான்.

‘ஊரார் வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் வீட்டு பிள்ளை தானா வளரும்’ன்னு சொல்ற மாதிரி, வெளிநாட்டுக்காரங்களை நல்லா கவனிச்சு அனுப்பினோம்ன்னா, இங்குள்ள மக்களின் உடல் நலம் தானா கவனிக்கப்படும்’ன்னு நினைச்சுக்கிச்சா அரசாங்கம்?

Friday, March 27, 2009

பாதை மாறிய படைப்பாளிகள்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பிடித்த வேலை ஒன்றாக இருக்கும். செய்கிற வேலை ஒன்றாக இருக்கும். வேறு வேலை செய்பவர்களில் ஒரு சிலரே, பிடித்த வேலையை நோக்கி நகருவார்கள். எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களை பார்த்தால் ஒன்று புரிந்து கொள்ளலாம். வெற்றியடைந்தவர்கள் அனைவரும் அவர்களுக்கு பிடித்த வேலையை தான் செய்திருக்கிறார்கள்.

---

சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் வேறு பல துறைகளில் பலர் இருக்கிறார்கள். அதேப்போல், சினிமாவிலும் ஒரு துறையில் நுழைய ஆசைப்பட்டு, ஆனால் வேறு துறையில் பணிபுரிபவர்கள் என்று ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். நடிக்க வந்து இயக்குனராக பணிபுரிபவர்கள் இருக்கிறார்கள். தயாரிக்க வந்து பின்பு நடிகரானவர்கள் என சிலர் இருக்கிறார்கள். ஏன், டிக்கெட் கொடுத்தவர் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அதே திரைத்துறையில் ஸ்டாராக விருப்பப்பட்டு இன்னமும் டிக்கெட் கிழித்து கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

---

ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு செல்வது என்பது சிரமமான காரியம். அதிலும் வெற்றி பெறுவது என்பது குதிரை கொம்பு. அதைவிட மிகவும் முக்கியமானது, மாறிய பாதை, மாறியவர்களுக்கு மட்டும் சந்தோஷத்தை கொடுத்ததா? அல்லது அவர்களது ரசிகர்களுக்குமா?

---

பாக்யராஜ், பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த போது அவரது ஊரான கோயமுத்தூருக்கு செல்கிறார். அச்சமயம், அவருடைய ’கிழக்கே போகும் ரயில்’ ரிலீஸ் ஆகிறது. ஊரெங்கும் அப்படத்தின் போஸ்டர்கள். தன்னை போலவே, தன் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கும் என்ற எண்ணத்தில் சென்றவருக்கு ஏமாற்றம். அவருடைய பாட்டி அவரை திட்டுகிறார். ‘ஏண்டா இதுக்கா சினிமாவுக்கு போன?’

இவருக்கு ஒன்றும் புரியவில்லை. விஷயம் இதுதான்.

அந்த படத்தில் இவரும் ஒரு காட்சியில் வேறு வழியில்லாமல் நடித்திருந்தார். சுதாகரை கழுதை மேல் வைத்து கொண்டு வருகிற காட்சியில், கழுதையை இழுத்து கொண்டு வருபவராக. அதைத்தான் ஊரெங்கும் போஸ்டர் அடித்திருந்தார்கள்!

இவரால் அவர் வீட்டில் உள்ளவர்களை என்ன சொல்லியும் சமாளிக்க முடியவில்லை. அப்போது அவருக்கு ஏற்பட்ட எண்ணம்தான் கதாநாயகனாக நடிப்பது என்பது. எண்ணியபடியே நடித்தார். வெற்றியும் பெற்றார். ஹீரோ பாக்யராஜை இயக்குனர் பாக்யராஜ் தூக்கி நிறுத்தினார். வெற்றிக்கு இயக்குனர் பாக்யராஜின் பலமே காரணம்.

பலவீனமான விஷயம், இவர் நாயகனாக நடிப்பதால், ஹீரோ கதாபாத்திரத்தை இவரது இமேஜிற்க்கு ஏற்றாற்போல் அமைக்கவேண்டி இருந்தது. இதனால், இவரது கதாபாத்திரம் பெரும்பாலான படங்களில் ஒரே மாதிரி இருந்தாற்போல் தோற்றமளித்தது. இவர் கதாநாயகனாக நடிக்காமல், இயக்குனராக மட்டும் இருந்திருந்தால் இன்னும் வெவ்வேறு பாத்திரப்படைப்புகள் அமைந்திருக்கும். வெவ்வேறு கதைக்களங்கள் அமைந்திருக்கும். அதனால், இவரது திரையுலக மைலேஜ் இன்னும் அதிகரித்திருக்கலாம்.

---

படங்களை மட்டும் உணர்வுபூர்வமாக கொடுக்காமல், சொந்த வாழ்க்கையிலும் உணர்ச்சிமயமாக வாழ்ந்து கொண்டிருப்பவர், சேரன். ஒரு படைப்பாளி தன் படத்தை காண வரும் ரசிகனுக்கு நல்ல கருத்தை கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உழைத்து கொண்டிருப்பவர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடிக்கட்டு என உணர்ச்சிமயமான களத்தில் சமூக கருத்துக்களுடான படங்களை கொடுத்தவர்.

நடிகர்கள் மேலான இவரது குற்றசாட்டு, நல்ல படங்களில் இவர்கள் நடிக்க தயங்குகிறார்கள் என்பது. இதற்கு தீர்வாக இவரே நடிக்க தொடங்கிவிட்டார். நல்ல விஷயம் தான். ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படைப்புகள் இதனால் தான் உருவாகி இருக்கலாம். ஆனால் ஒன்று நிச்சயம். நடிகர் சேரனின் திறமைக்கும் இயக்குனர் சேரனின் திறமைக்கும் இடைவெளி அதிகம். இயக்குனர் சேரன் அவரது படங்களை வேறு ஒரு நடிகரை வைத்து இயக்கியிருந்தால் அவரால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்க முடியும். கொஞ்சம் பிரபலமான நடிகரென்றால், படம் சென்றடையும் தூரமும் அதிகமாக இருந்திருக்கும். தவிர, இயக்குனர் சேரன் வேறு இயக்குனர் படங்களில் நடிகராக நடிப்பது தவிர்க்கப்பட்டு, மேலும் அதிகமான படைப்புகள் அவரின் முழுமையான கைவண்ணத்தில் மெத்த மெருகோடு படைக்கப்பட்டிருக்கும்.

---

வாலி படம் வந்திருந்தபோது, அப்படம் ஆபாச படம் என்று விமர்சிக்க படவில்லை. கத்தி மேல் கவனமாக நடந்திருக்கிறார் இயக்குனர் என்று பாராட்டப்பட்டது. சைக்காலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் தந்த இயக்குனர் என்று எஸ்.ஜே. சூர்யாவை உயரத்தில் வைத்தார்கள். அதன் பின் வந்த குஷியிலும் கதையை முதல் ரீலிலேயே சொல்லிவிட்டும் ரசிகனை கடைசி ஃப்லிம் வரை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்திருந்தார்.

அதற்கு பிறகு, தான் சினிமாவுக்கு வந்ததே நடிகனாகத்தான் என்று சொல்லி ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அப்படங்களில், இயக்குனர் சூர்யாவிடம், அவர் ஸ்பெஷல் க்ரியேட்டிவ் திங்க்கிங்கை விட அதிகம் எதிர்ப்பார்த்தது, இரட்டை அர்த்த வசனங்களை. எனக்கு தெரிந்து படங்களில் வெற்றியடைந்த பின்பு, தடை செய்யப்பட்ட படம் நியூ.

பாரதிராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இந்த தலைமுறையில் தன்னை அதிகம் கவர்ந்த இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா என்று. அப்பேட்டியிலேயே அவர் சொல்லி இருந்தது, ‘அந்த பையன் ஏன் இரட்டை அர்த்த காட்சிக்களை நம்புறானோ?”ன்னு. இன்று தமிழ்நாட்டில் எந்தவொரு தமிழ் வார்த்தையையும் கவனமாக உபயோகிக்கவேண்டி இருக்கிறது. கொஞ்சம் கேப் விட்டால், நரசமாகி விடும் அபாயம் உள்ளது. அபாயம் உபயம் எஸ்.ஜே. சூர்யா. அந்த விஷயத்தை விட்டு விட்டால், ஹாலிவுட்டிற்கு இணையானது அவரது க்ரியேட்டிவிட்டி.

ஆனால் இப்போது கவனம் அதில்லில்லாமல், தன்னை கதாநாயகனாக நிலை நிறுத்துவதிலேயே உள்ளது. இதில் இழப்பு ரசிகர்களுக்குதான்.

---

எனக்கு கலையுணர்ச்சியும் வேண்டாம், கருத்து குத்தும் வேண்டாம்... படம் பார்க்க குடும்பத்தோடு வந்தால் சந்தோஷமாக சிரிக்க வச்சி அனுப்பினா போதும் என்கிற மெஜாரிட்டியான தமிழ் ரசிகர்களுக்கு விருந்து வைத்து கொண்டிருப்பவர், ஸாரி, கொண்டிருந்தவர், சுந்தர் சி. கவுண்டமணியின் கடைசி ரவுண்டை, படத்தின் ஹீரோக்களுக்கு இணையான ரவுண்டை, ‘உள்ளத்தை அள்ளித் தா’ மூலம் கலக்கலாக ஆரம்பித்து வைத்தவர் சுந்தர் சி. இவர்தான் வடிவேலுவின் தற்போதைய ஹிட் ரேட்டை ‘வின்னர்’ கைப்புள்ள மூலம் அமர்க்களமாக தொடங்கி வைத்தவரும்.

கமலின் ‘அன்பே சிவம்’ படத்திலும் மறைந்திருந்து ஆங்காங்கே சிரிப்பு பொட்டு வெடியை வைத்து, வெயிட்டான சப்ஜெக்ட்டை இலகுவாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள செய்தவர்.

இவருடைய இப்போதைய நிலை? சன் டிவி பார்த்தால், ‘ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்குல முஸ்லீமுக்கு பெட்ரோல் போடுறது இல்லையா?’ என்று மொக்கை வசனம் பேசிக் கொண்டும், அம்மணமாக மெயின் ரோட்டில் நடந்து கொண்டிருக்கிறார்.

பாஸ், நாங்க உங்கக்கிட்ட எதிர்ப்பார்க்கிறது வேற...

---

முதல் பத்தியில் சொன்னது படி பார்த்தால், நடிப்பது தான் இவர்களுக்கு விருப்பமானதாக இருந்தால், இதில் இப்படைப்பாளிகள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். ஆனால், இவர்கள் இதுவரை பெற்றிருக்கிற வெற்றியை பார்த்தால், இவர்களது முழு ஈடுபாடும் இருப்பது திரைக்கு பின்னால்தான். இவர்களுக்கு உள்ள படைப்பாற்றல் தனிச்சிறப்பானது. அதை தங்களது சொந்த ஆர்வத்திற்காக மட்டுப்படுத்தாமல், ரசிகர்களுக்கு தொடர்ந்து படைப்பது இவர்களது கடமை.

Tuesday, March 24, 2009

லட்ச ரூபாய் கார் பிறந்த கதை

ரத்தன் டாடாவுக்கு ஒரு ஆசை. ஸ்கூட்டரில் போய் கொண்டிருக்கும் இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு குறைந்த விலையில் கார் கிடைக்க வேண்டும். சின்னதாக இருந்தாலும் குடும்பத்துடன் செல்லும் வகையில் இருக்க வேண்டும்.

ஒரு ஸ்கூட்டரில் இருக்கும் பாகங்களை வைத்து ஒரு கார் தயாரித்தால் எப்படி? சாத்தியமே இல்லை என்று தோன்றினாலும் முயற்சி செய்தால் ஏதோ ஒரு வழி பிறக்கும் அல்லவா? ’ஸ்கூட்டர் கார்’ முயற்சியை பெரிதாக யாரும் எடுத்து கொள்ளவில்லை. ஆர்வம் உள்ள சிலர் முயற்சி செய்து பார்த்ததில், ஸ்கூட்டர் பார்ட்ஸ் காருக்கு பத்தாது, பொருந்தாது என்று முடிவு செய்து அந்த முயற்சியை மூட்டை கட்டினார்கள்.

இரும்புக்கு பதில் பிளாஸ்டிக் உபயோகித்தால் விலையை கட்டுப்படுத்தலாம் இல்லையா? அப்படி செய்து பார்த்தால், பெரிய பொம்மை கார் போல அல்லவா இருக்கிறது?

சரி. அதை விடுவோம். சின்னதா ஒரு கார் பண்ணுவோம். எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனம் பண்ணி விலையை குறைக்க முடியுமோ, அவ்வளவு முயலுவோம் என்று திட்டமிட்டிருந்தார் டாடா. ஒரு லட்ச ரூபாய் என்றெல்லாம் டார்க்கெட் வைக்கவில்லை, ஜெனிவாவில் நடந்த கார் கண்காட்சியில் பேசும் வரை.

அங்கு தன்னுடைய சின்ன கார் கனவை பற்றி சொல்லி கொண்டிருந்த போது, ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். “மிஸ்டர். டாடா, உங்கள் காரின் விலை என்னவாக இருக்கும்?”

ஒரு நொடி யோசித்த டாடா குத்துமதிப்பாக சொன்னார்.

“ஒரு லட்சம் இருக்கலாம்”

அடுத்த நாள் பேப்பரில் செய்தி. ஒரு லட்ச ரூபாய்க்கு கார் தயாரிக்கிறது டாடா.

பேப்பர் படித்த மக்கள் மட்டும் திகைக்கவில்லை. டாடாவும் தான்.

மறுப்பு சொல்லலாமா? ஏன் மறுக்க வேண்டும்? ஒரு லட்ச ரூபாய்க்கு கார் தயாரித்தால் என்ன? ஏன் முடியாது? முயன்று தான் பார்ப்போமே?

முயற்சியின் முடிவுதான் நமக்கு தெரியுமே? நானோ.

என். சொக்கனின் ரத்தன் டாடா புத்தகத்தின் பதினான்காம் அத்தியாயத்தில் (ஒரு லட்ச(சிய)ம்) இருந்து.

Monday, March 23, 2009

நாட்டு சரக்கு - ஐடி & ஐபில் டயலாக்ஸ்

"உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2010 மத்தியில் சரி வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மிகவும் மோசமான நிலையை எடுத்து கொண்டால், 2014 வரை போகலாம்” என்று இன்போசிஸ் முதன்மை அதிகாரி கூறியுள்ளார் - என்ற செய்தியை படித்த ஐடி நண்பன் கேட்டான்.

“அப்ப அதுவரை என் வாழ்க்கையில எதுவும் நடக்காதா?”

----

"உனக்கு ஏதாச்சும் ஆன்-சைட் சான்ஸ் இருக்கா?”

“அட போப்பா! ஆன்-ப்ராஜக்ட்டே பெரிய விஷயமா இருக்கு. இதுல, ஆன்-சைட்டாம்?”

----

டிசிஎஸ், தங்கள் கம்பெனியில் இருந்து நீக்கிய ஊழியர்களுக்கு தங்களது துணை நிறுவனங்களிலும், மற்ற இடங்களிலும் வேலை கிடைக்க உதவ போகிறார்களாம்.

”டாடா ’கன்சல்டன்சி’ சர்வீஸஸ்ன்னு பேரு வச்சிட்டு அது ஒண்ணுதான் பண்ணாம இருந்தாங்க”

----

அடுத்த மூன்று வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்ப உள்ளார்கள். அவர்களின் பங்களிப்பு மூலம் நமது நாட்டுக்கு சில நன்மைகள் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.

சில கவலை குரல்கள்.

“அப்புறம் ஏன் அமெரிக்கா கவுந்திச்சு?”

“குசேலன், குருவி மாதிரியான உலக திரைப்படங்களை பதினைஞ்சு, இருபது டாலர் கொடுத்து பார்க்க ஆளிருக்காதே?”

"ஏம்பா, அதனால சரக்கு விலை கூடாதே?”

”இனி நைட் பதிவு போட்டா சுத்தமா ஹிட் வராது”

----

ஐபில் கிரிக்கெட் தொடர், இந்த வருடம் வெளிநாட்டில் நடக்க போகிறது. இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நல்ல வேளை, இப்படியெல்லாம் சொல்லவில்லையே?

“ஐபில் வைக்கும் போதுதான் எலக்சன் நடத்தணுமா? வேற நேரமா இல்ல? இரண்டு மாசம் தள்ளி வச்சா என்ன?”

“ஓட்டு போடுற மக்களை விட கிரிக்கெட் பார்க்குற மக்கள்தான் அதிகம். நாங்க கிரிக்கெட்ட இங்க நடத்துறோம். எலக்சன வேணா ஏதாச்சும் வெளிநாட்டுல நடத்திக்கோங்களேன்?”

“தேர்தலை கிரிக்கெட் ஸ்டேடியத்துலேயே வைச்சிக்கலாமே? கிரிக்கெட் பார்க்க வந்தவுங்க, ஓட்டு போட்ட மாதிரியும் இருக்கும். பாதுகாப்பு ஒரே இடத்துல இருந்த மாதிரியும் இருக்கும்.”

“உள்நாட்டில் பாதுகாப்பு தரமுடியாததற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்கி, வெளிநாட்டில் நடத்துவதற்கான செலவை ஏற்க வேண்டும்.”

----

பாகிஸ்தான் பாதுகாப்பில்லாத நாடு என்பதை அந்நாட்டு தீவிரவாதிகள் காட்டியது போல், நம் நாட்டை பற்றி தங்கள் எண்ணத்தை கூறியிருக்கிறார்கள், பிசிசிஐ என்னும் பண தீவிரவாதிகள். இவனுங்க இங்கிலாந்து போயி வரும்போது, ‘பாதுகாப்பு இல்லாத நாட்டுக்கு ஏண்டா வரீங்க’ன்னு அப்படியே திருப்பி அனுப்பிரணும். யாரு எக்கேடு கெட்டு போனா என்ன? நம்ம பாக்கெட் நிறைஞ்சா போதுங்கிறது எவ்ளோ கேவலமான விஷயம். அதை எவ்ளோ தைரியமா சொல்லிட்டு செஞ்சிட்டு இருக்காங்க?

----

“அண்ணே, ஸ்கோர் என்னண்ணே?”

“டேய்! வீட்டுல சோறு இருக்கா? அப்புறம் என்ன ஸ்கோரு?”

!

Sunday, March 15, 2009

பீதியை கிளப்பீட்டு அப்புறம் என்ன யாவரும் நலம்?

ஏற்கனவே பாசிடிவ் ரிவ்யூஸ் படித்திருந்ததால் படம் பார்க்கும் ஆவலில் இருந்தேன். என் நண்பனை கூப்பிட்டேன். மாதவன் படமா? முடியாது என்றவனை தியேட்டருக்கு இழுத்து சென்றேன். அங்கு ஒட்டியிருந்த குடும்ப பின்னணியில் இருந்த போஸ்டரை பார்த்து, பிரியசகி, வாழ்த்துக்கள் பாணி படம் என்று, வேண்டாம் வேண்டாம் என்று கெஞ்சினான். நானும் சொல்லவில்லை திகில் படம் என்று.

“நான் இந்த படத்தை பத்தி ஒரு விஷயம் சொன்னா பயந்திடுவே?”

“என்ன?”

“இந்த படத்தோட டைரக்டரோட முத படம் என்ன தெரியுமா?”

“என்ன?”

“அலை”

“அய்யயோ!”

----------

படத்தின் முதல் சீன்லேயே. ’நான் இருக்கேன்’ என்று தன் கேமரா மூலம் சொல்லிவிட்டார், பி.சி. ஸ்ரீராம். பொதுவா, கேமராவை எங்கே வைப்பார்கள்? இவர் அலமாரி, பிரிஜ், வாஷிங் மெஷின், ஸ்கூல் பேக் என்று எல்லாவற்றுக்குள்ளும் வைத்து முதல் காட்சியிலேயே முத்திரையை நச் என்று பதித்துவிட்டார். அப்புறம் லிப்ட்டினுள்ளே இருந்ததும் கலக்கலாக இருந்தது. மாதவன் குழப்பத்தில் தடுமாறும்போதெல்லாம், கேமரா போடும் ஆட்டம் நம்மையும் ஆட்டம் காண வைக்கும். ஸ்ரீராம் ஸ்ரீராம்தான்.

இந்த படத்தின் மேக்கிங் பல ஆங்கில படங்களில் உருவப்பட்டது என்று சொன்னார்கள். எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. பல காட்சிகள் இங்கிலிஷ் படம் போலவே இருந்தது. ’இந்திய கலாசாரத்திற்கு’ ஏற்ப, தாய்குலம், சீரியல் என்று காட்சிகள் வைத்தது, நிகழ்வாழ்வுடன் தொடர்புப்படுத்தி பார்க்க உதவியது. சரண்யா பேசும் வசனங்களும், அந்த போலீஸ் பேசும் வசனங்களும் நல்ல கலகலப்பு. இயக்குனர் பாராட்டுக்குரியவர். மாதவன் அவருடைய வேலையை சிறப்பாக செய்திருந்தார். அவருக்கு பொருத்தமான வேடம்.

தக்காளி சீனிவாசன், யார் கண்ணன் போன்றவர்கள் எடுக்கும் முழுமையான பேய் படங்களில் யாரும் லாஜிக் பார்க்க மாட்டார்கள். பாசில் எடுத்த பேய் படங்களில் லாஜிக் பார்த்தாலும் ஒரளவுக்கு சரியாக இருக்கும். இது ஒருவித இரண்டுகெட்டான் நிலை படம். கண்றாவி வேஷம் போட்டெல்லாம் பயமுறுத்தாமல், கேமரா, இசை (சங்கர் மகாதேவன் அன் கோ), எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), நடிப்பு இவற்றை வைத்து மட்டும் பயமுறுத்தியிருப்பதால் நல்ல திகில் அனுபவம். நான் சீட் நுனிக்கெல்லாம் போகவில்லை. சாய்ந்துதான் கிடந்தேன். அப்படியே பக்கத்தில் இருப்பவர்களின் பயத்தை ரசித்துக்கொண்டு.

--------

வெளியே வந்த நண்பன் போஸ்டரை பார்த்து சொன்னதுதான் தலைப்பு.

நல்ல கூட்டம். யாவரும் நலம் - ரிலையன்ஸின் வியாபாரமும் நலம்.

--------

படம் விட்ட பிறகு நல்ல மழை. வண்டியை எடுத்து கொண்டு கிளம்பியாச்சு. ஒரு லாரியை முந்த நினைக்கும் போது தான் மழை வீரியம் தெரிந்தது. மழை அடிக்கும் அடியில் வண்டியை ஓட்ட முடியவில்லை. அப்படியே ஒதுக்கி ஒரு கடையின் கிட்டே நிறுத்தினேன்.

சரியான இருட்டு. பூட்டப்பட்ட ஒரு கிரில் கேட்டின்கிட்டே நின்று கொண்டிருந்தோம்.

“இன்னைக்குதானா இப்படி பெய்யணும்?” நண்பன் சொல்லிக்கொண்டிருந்தபோது,

கிரில் கேட்டின் உள்ளே, இருட்டில் ஒரு உருவம் எழுந்து உட்கார்ந்தது.

பகீரென்றது எங்கள் இருவருக்கும். அதுதான் படத்தின் எபெக்ட்.

Saturday, March 14, 2009

அற்புதக் கோயில்கள்

பொதுவா, எனக்கு பயணங்கள் ரொம்ப பிடிக்கும். நண்பர்கள் எங்காவது ரவுண்ட் அடிக்க கூப்பிடும்போது மறுக்காமல் போவேன். டிரிப், கல்யாணம், கோவில் என்று சரியான இடைவெளியில் எங்கே என்றாலும். இப்ப நண்பர்களுடன் செல்லும்போது, நாமே எந்த கட்டுப்பாடும் இல்லாம சுதந்திரமாக திட்டமிட்டு செல்லலாம். சிறு வயதில் கசந்த பயணங்கள், இப்போது பிடிப்பதற்கு காரணம், இதுவாக இருக்கலாம். தனியாக பயணிக்கும் போது உதவும், mp3 பிளேயர், புத்தகங்கள், நண்பர்களுடன் செல்லும்போது தேவைப்படாது. பேசி கொண்டே செல்லும் போது, நேரம் போவது தெரியாது. ஒத்த கருத்தென்றால் மனம் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கும். அதுவே, எதிர் கருத்தென்றாலும் வாக்குவாதம் என்று சுவாரஸ்யமாக செல்லும். வெயில், மழை பெரியதாக தெரியாது. கொஞ்சம் சகிப்பு தன்மையும், மற்றவர் மனநிலையை புரிந்துகொள்ளும் ஆர்வமும் இருந்தால் போதும்.

சொல்ல வருவது வேறு விஷயம். என் நண்பர்களில் ஒருவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என்று மாநிலங்கள் தாண்டி வார வாரம் கோவில்களுக்கு செல்லுவான். ஆன்மீகம் பற்றியும், கோவில்களை பற்றியும் ஏகப்பட்ட விஷயம் தெரியும். நம்ம இதிகாசங்கள் முதல் Sigmund Freud வரை எல்லா விஷயங்களையும் நல்லா பேசுவான். பேசிக்கிட்டே இருப்பான். அவனுடன் ஒருமுறை திருவண்ணாமலை சென்றிருந்தப்போது, இரவு கிரிவலத்தின் போது ஏகப்பட்ட கதைகள் சொன்னான். தல புராணம், ரமணர் என்று ஏகப்பட்ட விஷயங்கள். கேட்டுக்கொண்டே நடந்தது நல்லா இருந்தது. ஒரு இடத்தை பற்றி தெரிந்துக்கொண்டு அந்த இடத்திற்கு செல்லும் அனுபவம் விசேஷமானது.

அது போல், மற்ற கோவில்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று வாசித்த புத்தகம், வரம் வெளியீடான கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் எழுதிய அற்புதக் கோயில்கள். சிதம்பரம், திருநாகேஸ்வரம், திருமங்கலக்குடி, திருக்கருகாவூர், திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கடவூர், திருவானைக்கா, திருப்புறம்பியம், சிக்கல், ஸ்ரீவாஞ்சியம், திருச்சேறை, நாச்சியார் கோயில், திருமணஞ்சேரி என மொத்தம் பதினான்கு கோவில்களை பற்றிய தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளது. இதில் நான் ஏற்கனவே அறிந்தது மூன்றை மட்டும் தான். இதில் இதுவரை போயுள்ளது திருச்சி பக்கமுள்ள திருவானைக்காவல் கோவிலுக்கு மட்டும்தான்.




நான் திருவானைக்காவல் கோவில் சென்றிருந்த போது, ஒரு யானைக்கு உணவு கொடுத்து கொண்டிருந்தார்கள். எல்லா கோவிலிலும் யானை இருக்கும். அப்படித்தானே என்றிருந்தப்போது இல்லை, இங்கு இந்த யானை விசேஷமானது என்றார்கள். அப்போது எனக்கு தெரியவில்லை. இப்புத்தகம் படித்தபோது அந்த புராணம் தெரிந்தது.



ஆலயங்களை பற்றி புத்தகத்தின் ஆரம்பத்தில் ராகவன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

துளசி போன்ற செடிகள்; முல்லை போன்ற கொடிகள்; பனை போன்ற மரங்கள் என பலவிதமான தலவிருட்சங்களை கொண்டு விளங்குகின்றன ஆலயங்கள். இதைக் காணும் போது, பசுமை இயக்கத்தின் வேர் இவைதான் என்பது தெளிவாகிறது.

புனிதத் தீர்த்தம் என்றும் புஷ்கரிணி என்றும் ஆலயந்தோறும் நீர்நிலைகள். இதை காணும்போது, நீர் சேமிப்பையும், நீர் பயன்பாட்டையும் பற்றிய அக்கறையும் தெளிவும் இங்குதான் பிறந்திருக்கிறது என்பது புலனாகிறது.

வானம் பொய்த்து பூமி வறண்ட சமயங்களில், ஆலயத்தின் களஞ்சியத்தில் இருந்து மக்களுக்கு தானியங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதை அறியும்போது, ஆலயம் ஒரு சமுதாயக்கூடம் என்பதும் புரிகின்றது.

மன்னர்களின் வெற்றிகள், அரசின் நிர்வாகம், தண்டனைகள், சமூக வழக்கங்கள் போன்றவற்றை விவரிக்கும் கல்வெட்டுகளோடு தொடங்குகின்றன ஆலயங்கள். இப்படிப் பார்த்தால், வரலாறின் வெளிச்ச சாட்சி இவை என்று தோன்றுகிறது.

ஆக, ஆலயங்கள் வழிபாட்டுத்தலமாக மட்டுமின்றி கூடவே, மக்களின் நலனுக்காகவும், சமுதாய வளர்ச்சிக்காகவும் மகத்தான பங்கு கொண்டுள்ளன என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.


கோயிலை பற்றிய மாற்று கருத்துக்கள் இருந்தாலும், இதெல்லாம் உண்மைதானே?

பொதுவா, ஒரு கோயிலை கட்டும் அரசரை பற்றிய வரலாற்று கல்வெட்டு சான்றுகள் இருக்கும். அதேப்போல், ஒரு கோவிலுடன் தொடர்புடைய கடவுள் பற்றிய புராணம் உண்டு. இரண்டையும் இணைத்து கோவிலின் சிறப்பை விளக்குகிறார் ராகவன். கோவிலுக்கு செல்லும் வழியையும், வழிப்பாட்டு நேரங்களையும், ஆலய தொடர்பு தகவல்களையும் இத்துடன் இப்புத்தகத்தில் கூறிப்பிட்டுள்ளார்.

ஒரு கோவிலை பற்றி சொல்லும்போது அது சம்பந்தப்பட்ட இன்னும் பல கோவில்களை பற்றியும் நாம் அறிந்திராத விஷயங்களை சொல்கிறார்.

இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு, என் எதிர்ப்பார்ப்பு வேறு மாதிரியாக இருந்தது. நிறைய கோவில்களை பற்றிய விஷயங்கள் இருக்கும் என்று நினைத்திருந்தேன். நான் சென்று வந்த, செல்ல நினைக்கிற சில கோவில்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தேன். அதை இப்புத்தகம் பூர்த்தி செய்யாதது எனக்கு ஏமாற்றம் தான்.

மற்றப்படி, ஆன்மீக ஆர்வம் உள்ளவர்கள், கோவில்களுக்கு வாடிக்கையாக செல்கிறவர்கள் ஆகியோரை இப்புத்தகம் கவரும். நம்பிக்கையில்லாதவர்கள், தலைப்பை பார்த்தே அல்லது முதல் இரண்டு பத்தி படித்தே ஓடியிருப்பார்கள்.

Wednesday, March 11, 2009

சாப்ட்வேர் மக்களுக்கு ரஜினியின் ‘பஞ்ச்’

ரஜினியின் பஞ்ச் வசனங்கள் - டானிக். சாப்ட்வேர் மக்களுக்கு ஒரு ஸ்பூன்.


பக் எப்ப வரும், எப்படி வரும்ன்னு யாருக்கும் தெரியாது
ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும்

-----

நீ விரும்புற ப்ராஜக்ட்ல ஓர்க் பண்ணுறத விட
உன்னை விரும்பற ப்ராஜக்டல ஒர்க் பண்ணினா
உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.

-----

கஷ்டப்படாம பிக்ஸ் பண்ணுற பக் க்ளோஸ் ஆகாது
அப்படி க்ளோஸ் ஆனாலும் ரீ-ஓபன் ஆகாம போகாது.

-----

ப்ரோமோஷன், ஹைக், ஆன்சைட்
இது பின்னாடி நாம போக கூடாது
இதெல்லாம்தான் நம்ம பின்னாடி வரணும்

-----

கை அளவு லாஜிக் எழுதினா, அது நம்ம காப்பாத்தும்
அதுவே கழுத்தளவு எழுதினா, அதை நாம காப்பாத்தணும்.

-----

மேனேஜர், ஃப்ரஷ்ஷரை ரொம்ப சோதிப்பான்
ஆனா கைவிட மாட்டான்.
எக்ஸ்பிரியன்ஷுக்கு நிறைய கொடுப்பான்
ஆனா கை விட்டுடுவான்.

-----

அசந்தா அடிக்குறது கவர்மெண்ட் பாலிஸி
அசராம அடிக்குறது சத்யம் பாலிஸி

-----

டெவலப்பர் டீம் போடுறது, லாஜிக் கணக்கு
டெஸ்ட்டர் டீம் போடுறது, டிஃபக்ட் கணக்கு
மார்க்கட்டிங் டீம் போடுறது, ப்ராஜக்ட் கணக்கு
மேனேஜ்மெண்ட் டீம் போடுறது, ரெவன்யூ கணக்கு
ஹெ.ஆர். டீம் போடுறது, தலை கணக்கு
சிஸ்.அட்மின் டீம் போடுறது, வலை கணக்கு
சேல்ஸ் டீம் போடுறது, விற்பனை கணக்கு
ரிசர்ச் டீம் போடுறது, கற்பனை கணக்கு
கூட்டி கழிச்சி பாரு! கணக்கு சரியா வரும்!

-----

லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்

அதிகமா பெஞ்ச்ல இருக்குற எம்ப்ளாயும்
அதிகமா லே-ஆஃப் பண்ணுற முதலாளியும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை.

-----

இது எப்படி இருக்கு?

Tuesday, March 10, 2009

ஒகேனக்கல் (புகைப்படப் பதிவு)

தர்மபுரி பக்கம் போயிட்டு, பொழுது போக்கணும்ன்னா தாராளமா ஒகேனக்கல் போகலாம். நான் அப்படித்தான் போனேன். நான் போன சமயம், அவ்வளவா தண்ணி இல்ல. ஏதோ விழுந்துட்டு இருந்திச்சு.



எப்போதும் இருக்குற சுற்றுலா இடம்ங்கறத சிறப்பம்சம் தவிர, இப்ப அரசியல் சர்ச்சையும் கூடி இடத்தோட முக்கியத்துவம் அதிகரிச்சிருக்கு.



சாப்பிட மீனு பிரஷ்ஷா கிடைக்குது. அங்கயே பிடிச்சு, பொறிச்சு, சாப்பிகிற சப்ளை செயின் மாடல். நான் அங்க இருக்குற ஹோட்டல் தமிழ்நாடுல சாப்பிட்டேன். இங்க வெளியில எப்படி இருக்குன்னு தெரியலை.






மீனுக்கு அடுத்தப்படியா இந்த உள்ளூர் மசாஜ் நிபுணர்கள பார்க்கலாம். கையில ஒரு பாட்டில் தென்னமரக்குடி எண்ணையோடு விரட்டுக்கிறார்கள். எங்கனாலும் உக்கார்ந்து மசாஜ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.



ஒகேனக்கல்ல பரிசல் ரொம்ப பிரபலம். நான் ரொம்ப நாளு முன்னாடி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாவது, பரிசல்காரங்க தெரிஞ்சே கூட வருறவங்கள தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுவாங்களாம். அப்புறம், பாடியை எடுக்க எக்கச்சக்கமா பணம் கேப்பாங்களாம். இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை. கவர்மெண்ட் பல இடங்களில் போர்டு வச்சிருக்கு. பரிசல்காரங்க அடையாள அட்டை வச்சிருப்பாங்க. பார்த்து ஏறுங்கன்னு. கவர்மெண்ட்டே ஒரு கவுண்டர் வச்சு டிக்கெட் போட்டு பரிசல்ல ஏத்தி விடலாம். இப்ப என்னன்னா, பரிசல்காரங்க சுத்தி சுத்தி வந்து ஆள் பிடிச்சிட்டு இருக்காங்க.



இதுக்கே பயந்து நாங்க போயிட்டு இருக்கும் போது, ஒரு பரிசல்காரர் வந்தாரு.

“வாங்கண்ணா, அந்த பக்கம் கூட்டிட்டி போறேன்.”

“இல்ல...வேணாம்”

“அட வாங்கண்ணா, முதலை எல்லாம் காட்டுறேன்”

ஆஹா... இது எப்படி இருக்கு? யாருக்கிட்ட வந்து என்ன பேச்சு பேசுறாரு? விடு ஜூட்...



பரிசல்ல தலைக்கு மேலே தூக்கிட்டு பரிசல்காரங்க நம்மை கடந்து போயிட்டே இருக்காங்க. மேலே இருந்து பார்த்தா, வட்ட ஆமைகள் போல தெரியிறாங்க.



ரெண்டு பசங்க மேல நின்னுக்கிட்டு, கீழே பரிசல்ல போறவுங்கக்கிட்ட “அண்ணா அண்ணா... பத்து ரூபா குடுண்ணா... குதிக்குறோம்...”ன்னு பத்து ரூபாய்க்கு டைவ் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க. எந்தளவுக்கு ஆபத்துன்னு புரியலை. உதவுறோம்ன்னு ஊக்குவிக்க கூடாதுன்னு மட்டும் புரியுது. பசங்கள தெளிவா பார்க்க, படத்தை கிளிக்குங்க.



நுழைவு கட்டணம்ங்கற பேர்ல 2, 3, 5 ரூபாய்ன்னு ஆங்காங்கே உக்கார்ந்து வசூல் பண்ணிட்டு இருக்காங்க. வாட் வரி மாதிரி. பல இடங்களில். ரேட் கம்மி தான். இருந்தாலும் ஒரு என்ட்ரியில் வசூல் செய்யலாம்.

இந்த இடம் முழுக்க அந்த ஊர் மக்கள் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக தெரிகிறது. சுத்தமா, சுத்தம் இல்லை. சுற்றிலும் பிளாஸ்டிக் குப்பைகள். ஒகேனக்கலில் சுகாதாரம் கவிழ்ந்து கிடக்கிறது.

Thursday, March 5, 2009

இயக்குனர் நாடித்துடிப்பு - கே.எஸ்.ரவிக்குமார்

ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த இயக்குனர்களால், ரசிகர்கள் ரசிக்கும்வகையிலான படங்களைக் கொடுக்க முடிவதை போல், இயக்குனர்களின் நாடித்துடிப்பை ரசிகர்கள் அறிந்து கொண்டால், எவ்வித தவறான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவ்வியக்குனர்களின் படங்களை ரசிக்க முடியும். இப்பதிவு, தற்போதைய காலக்கட்டத்தில் ரசிகர்களின் மனநிலையை அதிகம் புரிந்து கொண்டதாக கூறப்படும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரைப் பற்றியது.

ரவிக்குமாரின் அப்பா பெரிய தொழிலதிபர். உதவி இயக்குனராக இருந்த காலத்தில், ரவிக்குமார், அப்போது இருந்த மற்ற உதவி இயக்குனர்கள் போல பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவில்லை. பைக்கில்தான் ஷூட்டிங் ஸ்பாட் வருவாராம். உதவி இயக்குனராக இருக்கும்போதே ஒரு பாக்டரி ஆரம்பித்தார். இயக்குனராக வெற்றி பெற முடியவில்லையென்றால் அந்த தொழிலை தொடரலாம் என்ற எண்ணம். துரதிஷ்டவசமாக, இந்திய தொழில் துறை ஒரு தொழிலதிபரை இழந்தது. பட வாய்ப்பு கிடைக்க தொடங்கிய உடனே, பாக்டரிக்கு பூட்டு போட்டு விட்டார்.

வாழ்க்கையில் பொருள் ஈட்டுவதின் முக்கியத்துவம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனாலேயே, படம் வெற்றி பெற என்ன தேவையோ, அதையே தொடர்ந்து செய்து வருகிறார். தயாரிப்பாளரின் வருமானத்தை முக்கியமாக கருதி படங்களை இயக்கி வருகிறார்.

இவர் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இவர் எந்த படத்தில் பணியாற்றினாலும் அந்த படம் வெளிவராதாம். புது வசந்தம் படத்தில் இவர் இணை இயக்குனர். அந்த படத்தில் தான் அவரும் விக்ரமனும் முதலும் கடைசியுமாக இணைந்து பணியாற்றியது. விக்ரமன் ரவிக்குமாருக்கு சீனியர் என்றெல்லாம் கிடையாது. சௌத்ரிக்காக ரவிக்குமார் பணியாற்றிய படம் அது. அந்த படத்தில் நடிக்கும் போது சார்லி ரவிக்குமாரை கவனித்து விட்டு அவர் மேனேஜரிடம் சொன்னாராம், ‘ரவிக்குமார் ஒர்க் பண்ற படம். ஒழுங்கா சம்பளத்தை முதலிலே வாங்கிடு’. மனுசனுக்கு எவ்ளோ கோபம் வரும்? அந்த கோபம் தான் மனுசனை வெற்றியை நோக்கி தள்ளிவிட்டிருக்கிறது.

இவருடைய முதல் படமான ’புரியாத புதிர்’ ஒரு திரில் படம். ஒரு கன்னட படத்தை பார்த்து ஆர்.பி.சௌத்ரி ரவிக்குமாரை ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொல்லியிருக்கிறார். அவரும் ஆர்வத்துடன் செய்து கொடுத்திருக்கிறார். அவரிடமே, படத்தை இயக்க சொல்லியிருக்கிறார் சௌத்ரி. ரவிக்குமாரோ, இது சரி வராது என்றிருக்கிறார். சௌத்ரியோ பிடிவாதமாக படத்தை இயக்க சொல்லி வற்புறுத்தி, இயக்கினால்தான் அடுத்த பட வாய்ப்பு என்றிருக்கிறார். அடுத்த படம் என்பதற்காகவே அவர் இயக்கிய முதல் படம், புரியாத புதிர். படம் தியேட்டர் ரிலீஸில் தோல்வி என்றாலும் சன் டிவி ரிலீஸில் வெற்றிதான்.

அந்த படத்தின் தோல்வியில் அவர் கற்ற பாடம், திரில் படங்கள் ஒரு சிறு பிரிவையே கவரும். ஒரு படம் வெற்றியடைய வேண்டுமென்றால் பெருவாரியான மக்களை சென்றடைய வேண்டும். அனைவரையும் கவர வேண்டும் என்றால் நகைச்சுவையும் செண்டிமெண்டும் அவசியம். அவர் அன்று கற்ற பாடத்தை இன்று வரை செயல்படுத்தி வருகிறார்.

அதன் பின்பு, சரத்குமார் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்க, ரவிக்குமார் இயக்கிய படம், ‘சேரன் பாண்டியன்’. அதில் ஆரம்பித்தது அவர் வெற்றி பயணம். கிராமத்து படங்கள் எடுப்பதில் எக்ஸ்பர்ட் ஆனார். கிராம படங்கள் மட்டுமில்லாமல், எல்லா வகையான படங்களும் எடுத்தார். படம் வெற்றியடைகிறதோ இல்லையோ, கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுப்பதில்லை.

அவருடைய பத்தாவது படமான நாட்டாமை அவருக்கு மெகா ஹிட் பம்பர் பரிசை அளித்தது. அந்த படத்தின் வெற்றி, அவருக்கு ரஜினியை வைத்து முத்து படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது. முத்து, ரவிக்குமாரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக ஆக்கியதோடு மட்டுமில்லாமல், ரஜினியையும் ஜப்பான் வரை கொண்டு சென்றது. ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவதையே வாழ்நாள் சாதனையாக எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் மத்தியில், ரஜினியை வைத்து இரண்டு படங்கள் இயக்கியது மட்டுமில்லாமல், அவருடைய நெருங்கிய நண்பராகவும் ஆனார், ரவிக்குமார்.

ரவிக்குமார் போன்ற கமர்ஷியல் இயக்குனரை ரஜினி நம்புவது பெரிய விஷயமில்லை. சினிமாவின் ஒவ்வொரு இடுக்கையும் அறிந்து வைத்திருப்பவரும், தமிழ் சினிமாவின் பெருமையாக இருக்கும் கமலும் நம்புவது, கண்டிப்பாக ரவிக்குமாரின் சாதனை. அவ்வை சண்முகியில் ஆரம்பித்து தசாவதாரம் வரை நான்கு படங்கள் கமலை வைத்து இயக்கியிருக்கிறார். என்னதான் தசாவதாரம் வெற்றியில் கமல் பிரமாண்டமாக முன்னணியில் இருந்தாலும், பின்னணியில் ரவிக்குமாரின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தின் வெற்றியின் மேல் பெரும்பாலோர் வைத்திருந்த நம்பிக்கைக்கு காரணம், ரவிக்குமார். இந்த படத்தை இதை விட குறைவாக ரவிக்குமாரை தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்று படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். அதுதான் ரவிக்குமாரின் பலம். ரஜினிக்கு நண்பர் என்றால், கமல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரவிக்குமாரை சகோதரன் என்றழைத்தார்.

நடிகர் சரத்குமாரும் இவரும் சினிமாவில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அதனாலயோ என்னவோ, இவர்களது காம்பினேஷன் நன்றாக ஒர்க அவுட் ஆகும். சிறு வயதில், கே.எஸ். ரவிக்குமார் அவருடைய நண்பர்களுடன் ஒரு பெண்ணை டாவடித்திருக்கிறார். இவர்களுக்கு பயந்து பெண்ணின் வீட்டார், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் வாட்டசாட்டமான நபரை துணைக்கு பஸ் ஸ்டாண்ட் வரை அனுப்பி இருக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டில் ரவிக்குமாரும் அவர் நண்பர்களும், ’அங்கிள் அங்கிள்’ என்று அந்த ‘வாட்டசாட்டத்துடன்’ பேசியிருக்கிறார்கள். கலாய்த்திருக்கிறார்கள். பின்னாளில் இயக்குனராகி சரத்குமாரை இயக்கி கொண்டிருக்கும்போது தான் அவருக்கு நினைவுக்கு வந்திருக்கிறது, அந்த அங்கிள் சரத் தான் என்று. மறுபடியும், கலாய்க்க தொடங்கி விட்டார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என இரு தலைமுறையின் முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்தவர் இவர் ஒருவரே. நடிக்கும் நடிகரை சரியாக, முழுமையாக பயன்படுத்துவார். நன்றாக வேலை வாங்குவார். அஜித் நடித்த வில்லன், வரலாறு, இரண்டு படங்களிலுமே அவரை வித்தியாசமான வேடத்தில் நடிக்க வைத்திருந்தார். சிம்பு வளவளவென்று பேசுவார் இல்லையா? அவரை வைத்து எடுத்த சரவணா படத்தில், பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை தேடி செல்வதை பற்றி ஒரு நீளமான வசனத்தை கோவிலில் ஜோதிகாவுடன் பேச வைத்திருப்பார். சிம்பு, ஓவரா பேசியும் மக்கள் ரசித்த காட்சி அது.

அவர் ஆரம்பக்காலத்தில் எடுத்த படங்களில் பஞ்சாயத்து, தண்டனை, மாலை பறந்து வந்து நாயகன் மேல் விழுவது, தாலி பறந்து சென்று நாயகி மேல் விழுவது போல செண்டிமெண்டாக அமைந்திருந்த காட்சிகள், இளைஞர்களை கவராவிட்டாலும் தாய்குலங்களை பெரிதும் கவர்ந்தது. அதே படங்களில் கவுண்டமணி நடித்திருந்த காட்சிகள் இளைஞர்களை கவர்ந்தது. இப்படி அவர் படங்கள் அனைவரையும் கவரும் விதத்தில் பேலன்ஸ்டாக இருக்கும். ஆனால் இன்னமும் அவர் படங்களில் ஒரு கற்பழிப்பு காட்சி வந்துவிடுவது கடுப்பான விஷயம்தான்.

என்னதான் கலவை ஒன்றுப்போல இருந்தாலும், படத்தின் கதை வேறு வேறு மாதிரியாக இருக்க காரணம், கதையை இவர் எழுதுவது இல்லை. படத்தின் மேக்கிங்கும் ஒரே மாதிரி என்று சொல்ல முடியாது. இவர் பலதரப்பட்ட கலைஞர்களுடன் சுலபமாக ஒன்றிணைந்து பணியாற்றுவார். ஒரு படத்தில் தேவா, இன்னொரு படத்தில் வித்யாசாகர், இன்னொன்றில் ரஹ்மான், மற்றொன்றில் யுவன். இளையராஜாவில் இருந்து யுவன் வரை, இப்படி போய் கொண்டே இருப்பார். அதேப்போல் தான் நகைச்சுவை நடிகர்களுடன் பணியாற்றிய விதமும். ஆரம்பத்தில் கவுண்டமணி இவர் படங்களின் ப்ளஸ் பாயிண்டாக இருந்தார். பின்பு, வடிவேலு, விவேக் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. ரமேஷ் கண்ணா கண்டிப்பாக இருப்பார். நாட்டாமை படத்தின் போது, அவர் போட்ட சத்தத்தில், படத்தின் ஒளிப்பதிவாளர் பயந்து ஓடிவிட்டாராம். ரவிக்குமார் எதற்கும் தயங்கவில்லை. கேமராவை அவரே இயக்க ஆரம்பித்து விட்டாராம். படத்தில் அந்த சண்டைக்காட்சி சிறப்பாக வந்திருந்தது.

காட்சி ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காக மோதிர கையால் குட்ட மாட்டார். கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்து விடுவார். சிவாஜி, ரஜினி என்று இரு இமயங்களை ஒன்றாக வைத்து படையப்பா படத்தை இயக்கியது அவரது வாழ்நாள் சாதனை. படையப்பா படத்தில் சிவாஜி படிக்கட்டில் இருந்து வேலுடன் இறங்கி வருவது போல ஒரு காட்சி. விடியகாலை அது. எடுத்து கொண்டிருந்த போது, முக்கால் வாசி படிக்கட்டுகள் இறங்கிய பின்பு தான் பின்னணியில் யாரோ நிற்பதை ரவிக்குமார் கவனித்தாராம். திரும்ப எடுக்க வேண்டுமென்றால் சிவாஜி திரும்பவும் மேலே ஏற வேண்டும். பின்னணியில் ஒரு ஆள் நிற்பதை கவனிக்காத ஒளிப்பதிவாளர் மேல் ரவிக்குமாருக்கு கடும் கோபம். கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டார். திட்டி முடிந்து திரும்பி பார்க்க, அங்கே சிவாஜி பழையபடி மேலே சென்றிருக்கிறார். அதற்கு பிறகு, சிவாஜி ரஜினியிடம் கேட்டிருக்கிறார். ‘எங்கையா இவன பிடிச்ச?’. ரஜினி அதற்கு ரவிக்குமாரை பற்றி விளக்கி சொல்லியிருக்கிறார். இப்போது, ரவிக்குமார் நிறையவே மாறியிருக்கிறார்.

ஒரு படத்தின் கேப்டன் டைரக்டர் என்று சொல்வார்கள். அதற்கு, ரவிக்குமார் ஒரு உதாரணம். பிரச்சினைகளின் போது முன்னால் நிற்பவர்களில் ஒருவர் அவர். சமுத்திரம் படத்தின் மைசூர் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பிரச்சினையின் போது முன்னால் நின்று அனைவரையும் வண்டியேற்றி விட்டு, கடைசியாக அந்த இடத்தில் இருந்து வந்தவர் இவர்.

ரிசல்ட் முக்கியம் என்று நினைப்பவர். பாட்ஷா படத்தை காண்பித்து விட்டு, ரவிக்குமாரின் கருத்தை கேட்டு இருக்கிறார் ரஜினி. அப்போது ரவிக்குமார் அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால், ரஜினி கவனித்து கொண்டே வந்திருக்கிறார். ”படம் பிரமாதம் சார். தம்பி, தங்கச்சிகள் பெரிசான பிறகும் ஹீரோ இளைஞனா இருப்பது லாஜிக்கலா ஒரு குறை. ஆனா, ரசிகர்கள் அதை கவனிக்க மாட்டாங்க சார்”.

இவரது வளர்ச்சி படிப்படியானது. சிறு கதாநாயகர்களை வைத்து இயக்கத்தை ஆரம்பித்தவர், தமிழின் உச்ச நடிகர்களை சிறப்பாக கையாளுபவர் என்று பெயரெடுக்கும் அளவுக்கு திரையுலகில் முன்னேற்றத்தை கண்டவர். இளைஞர்களுக்கு நகைச்சுவை, பெண்களுக்கு செண்டிமெண்ட் என்று வெற்றி படங்களாக, தவறும் பட்சத்தில், ஆவரேஜ் படங்கள் என கொடுத்து வருகிறார். முத்துராமனுக்கு எப்படி ரஜினியோ, அது போல் ரவிக்குமாருக்கு சரத்குமார். தசாவதார பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது சரத்குமாருடன், ரஜினிக்கு தயார் செய்த ஜக்குபாய் படத்தை இயக்கி வருகிறார். அதற்கு அடுத்தாற் போல், சூர்யா, விக்ரம் என தொடர்ந்து நட்சத்திர படங்கள் வரவிருக்கின்றன.

‘ஏன் இப்படி கமர்ஷியல் படமாக எடுத்து கொண்டு வருகிறீர்கள்?” என்று கேட்டால் அவர் சொல்லும் பதில், “நான் தோல்வியடைந்த தயாரிப்பாளர்கள் பலரை கண்டிருக்கிறேன். அவர்கள் முகம் எப்போதும் என் கண் முன்னால் வரும். என்னால் யாரும் அந்த நிலைக்கு வர வேண்டாம். அந்த சூழ்நிலையை நான் உருவாக்க மாட்டேன்.” நல்ல நோக்கம் தானே? புதியதாக தன் முயற்சியை பரிசோதித்து பார்க்கவும், தன் ரசனைக்கு படம் எடுக்கவும் ஏன் இன்னொருவரை பலிகடாவாக்க வேண்டும்?

Wednesday, March 4, 2009

நாட்டு சரக்கு - கரகாட்டக்காரனும் ஸ்லம்டாக்கும்

இப்ப டிவியில் மூணு விளம்பரங்களை மாத்தாம பார்க்குறதுண்டு. ஏற்கனவே இரண்டு விளம்பரங்களை பற்றி கார்க்கியும், பரிசலும் சொல்லிட்டாங்க.

இன்னொன்னு பஜாஜ் விளம்பரம். இரண்டு பொண்ணுங்க, அக்கா - தங்கச்சிக, பயங்கரமா சண்டை போட்டுக்குவாங்க. எதுக்கு? இங்க பாருங்க...



இது அந்த ஏர்டெல் விளம்பரம். ரஹ்மான் இசையாமே? அப்படியா? கலக்கல்தான் போங்க...



அசினொட ‘யம்மாடி ஆத்தாடி’ விளம்பரம் இங்கே. இதன் மூலம் சர்வதேச பார்வை பேரரசு மேல விழுந்து, பாடல் வரிகளுக்காக அடுத்த ஆஸ்கார் கிடைச்சா நல்லாருக்கும்.



------

ஆபிஸில் வட இந்திய நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தேன். தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்று பேச்சு போய் கொண்டு இருந்தது.

“டைம்ம தமிழ்ல எப்படி சொல்றது?”

”மணி”

“யூ மீன் money?"

"ஆமாம்”

!

“Time is money, right? தமிழொட பெருமையை பாருங்க..."

-----

ஸ்லம்டாக் மில்லினியர், “நானும் கோடீஸ்வரன்” என்ற பெயரில் தமிழ் பேசி கொண்டிருக்கிறது. ஹீரோவுக்கு சிம்பு குரல் கொடுக்கபோவதாக செய்தி வந்தவுடன், ’கிழிஞ்சது’ன்னுதான் நினைச்சேன். படத்தில் கேட்கும் போது, எஸ்.பி.பி., ராதாரவி போலில்லாமல் சிம்பு நினைவுக்கே வரவில்லை.

சிம்பு, நீங்க டப்பிங்ல கலக்குறீங்க. அதனால,...

-----

ரஹ்மான், தமிழ் இசையுலகம் தந்த பாராட்டு விழாவில்,

”இந்த சந்தோஷத்திலும் எனக்கு ஒரு வேதனை உண்டு. ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இணையத் தளங்களில் என்னை வாழ்த்துவதற்காக இன்னொருவரை தூற்ற வேண்டாம். என்னையும் இளையராஜா சாரையும் ஒப்பிட்டு மோசமாக சிலர் எழுதுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.”

------

நான் கடவுள் படத்தை விட பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாருவின் நான் கடவுள் விமர்சனத்தில் சாரு,

“ஸ்லம்டாக் மில்லினியரில் ஒரு ஹிந்தி பாடலை சிறுவன் பாடும் இரண்டு தருணங்களிலும் பின்னணியில் அல்லா ரக்கா ரஹ்மானின் பிரம்மாண்டமான ஆர்க்கெஸ்ட்ரா ஒலிக்கவில்லை. ஒரு கண்பார்வையற்ற பிச்சைக்காரன் தெருவோரத்தில் பாடும்போது எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இருக்கிறது இசையும். அப்படியில்லாமல் நான் கடவுளில் அம்சவல்லி பாடும் தருணங்களில் எல்லாம் ராமராஜனின் கரகாட்டக்காரனுக்கு அமைப்பது போல் பின்னணி இசை தந்திருக்கிறார் இளையராஜா.”

------

ஒரு நாள் பெங்களூர் ரயில்வே ஸ்டேசன் வெளியே உள்ள ப்ரிபெய்டு ஆட்டோ க்யூவில் நின்று கொண்டு இருந்தேன். ஒரு ஆட்டோ டிரைவர், கவுண்டரில் நின்று கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் இருந்து டிக்கெட்டை வாங்கி பார்த்து, வரிசையில் இருந்த ஆட்டோக்களில் ஏற்றி விட்டு கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியம். தான் தன் வேலைன்னு இல்லாம, மத்தவங்களுக்கு உதவிக்கிட்டு இருக்காரேன்னு. என் முறை வந்தது. நான் இறங்க வேண்டிய இடத்திற்கு கிட்டத்தட்ட இருநூறு ரூபாய். நம்ம பொது நல ஆட்டோ டிரைவர், வழக்கம் போல் டிக்கெட்டை பார்த்தார். எந்த ஆட்டோவில் ஏற்றி விட போகிறாரோன்னு பார்த்து கொண்டிருந்தேன்.

அவர் போயி அவர் ஆட்டோவை எடுத்து வந்தார்.

-----

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை, 9/11 என்றே மீடியாக்கள் குறிப்பிட்டு வரும். அதன் பின் நடந்த லண்டன் தாக்குதலுக்கு பெயர், 7/21. மும்பை தாக்குதல் - 11/26. 9/11 போல் 11/26, 7/21 குற்றவாளிகள் இப்படிதான் செய்திகள் வரும். இப்ப லேட்டஸ்ட்டா, 3/3 - லாகூர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியினர் மேல் தாக்குதல்.

முன்ன பரவாயில்லை. நினைவில்ல வைக்க முடிஞ்சது. இப்ப, கஷ்டமா இருக்குது. வருஷம் முழுவதும் இப்படி அடிக்கடி நடந்துக்கிட்டே இருந்தா, பின்ன எப்படி?

-----

என்னை பாட சொன்னால் என்ன பாட தோணும்? :-)

காங்கிரஸ் வரும் தேர்தலுக்காக 'ஸ்லம்டாக் மில்லினியர்' படப்பாடலான 'ஜெய் ஹோ'வை காசு கொடுத்து வாங்கி இருக்கிறதாம். மற்ற கட்சிகள் கவலைப்படவேண்டாம். அவர்களும் வாங்குவதற்கு பொருத்தமாக எனது சில பரிந்துரைகள்.

பிஜேபி

"ஹேய்! ராமா ராமா ராமா ராமா...
ராமன் கிட்ட வில்ல கேட்டேன்..."

திமுக

"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றுமில்லை தேய்பிறை"

அதிமுக

"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே"

தேமுதிக

"புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பொழிய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்"

பாமக

"சகலகலா டாக்டர் டாக்டர்
ஜெகஜாலம் அறிஞ்ச டாக்டர்"

மதிமுக

"நானொரு ராசியில்லா ராஜா"

பொதுவா மத்திய மாநில எதிர்க்கட்சிகளுக்கு

"காந்தி தேசமே காவல் இல்லையா?
நீதிமன்றத்தில் நீதி இல்லையா?"

மக்களுக்கு

"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லை"

நீங்களும் சொல்லுங்க?

Tuesday, March 3, 2009

கு.பூவும் கொ.புவும்

ஹிந்தி படங்களில் பெரிய படப்பெயரை சுருக்கி சொல்லுவாங்க. தமிழ்லயும் சில படங்கள் அப்படி சொன்னாங்க. ஏ.டி.எம்., எஸ்.எம்.எஸ். அப்படின்னு. நான் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், அப்படிங்கற படப்பேர சுருக்கி தலைப்பு வச்சா, அது கெட்ட வார்த்தை போலுள்ளது.

சென்னை 28 யை தொடர்ந்து எஸ்.பி.பி. சரண் தயாரிக்கும் படம். யுவன், தனது வழக்கமான இசையமைப்பில் இருந்து சற்றே விலகி இதில் இசையமைத்துள்ளார். இது போன்ற வாய்ப்புகள் தான், ஒரு இசையமைப்பாளரின் பன்முக இசை திறமையை காட்ட உதவும்.

கேசட் கவரை பார்த்தா, ஏதோ ஃபேமிலி ஆல்பம் போல இருக்கு. எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் வழங்கும் படம். யுவன் இசை. கங்கை அமரன் வாலியுடன் பாடல்கள் எழுதியிருக்கிறார். தவிர, எஸ்.பி.பி., எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு பாடியிருக்கிறார்கள். இளையராஜாவையும் பாட வைத்திருந்தால் முழுமையடைந்திருக்கும்.

சின்னஞ்சிறுக

யுவன் பாட்டுல, இளையராஜா கொடுக்குற ஃபீலை கொடுத்திருக்காரு. அருமையான மெலடி டூயட். எனக்கென்னமோ இந்த பாட்டு ரொம்ப நாளு நிக்கும்போல தோணுது.

“அரைடிராயர் போட்ட பையன் நீ... பாடாத லாவணி...
விரல் சூப்பி நின்ன புள்ள நீ... போட்டாச்சு தாவணி...”


கடலோரம்

இந்த பாடலை ஒருமுறை யுவனும், ஒருமுறை சரணும் என்று இரு வெர்சன்கள் உள்ளது. சரண் பாடியதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. யுவனுக்கு மூக்கு அடைத்தது போல் உள்ளது. சரணின் குரலும், பாடலின் வரியும் உருக்குது, போங்க!

“பள்ளிக்கூட சிநேகம் பள்ளியறை பாய் வரை போகும் யோகம் நமக்கிருக்கு
கட்டுக்களை போட்டு நட்டு வைச்ச வேலிகள் தாண்டி காதல் ஜெயிச்சிருக்கு”


நான் தருமன்டா

எஸ்.பி.பி, தனது கம்பீரமான குரலில் ஆக்ரோஷமாக பாடியிருக்கிறார். இசையை மீறின ஆக்ரோஷம். கேட்க கேட்க எனக்கே தொண்டை வலிக்குது. பரத்வாஜ் ஏனோ நினைவுக்கு வருகிறார்.

”இது துள்ளிக்கிட்டு வரும் காளையடா!
என்னை தேடிக்கிட்டு வரும் மாலையடா! இவன் தென்பாண்டி நாட்டு சிங்கமடா!”


ஒரு நிமிஷம்

வேல்முருகன் என்பவர் பாடியிருக்கிறார். கானா உலகநாதன் குரல் போலுள்ளது. இது ஒரு சோகமான புலம்பல் பாடல் போல இருந்தாலும், யுவன் அடி பின்னியிருக்கிறார். தியேட்டர் சாமியாடப்போவது உறுதி. பாட்டு புது மாதிரியாயிருக்கு.

”நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா, உன் கழுத்தில் என் தாலி
ஒத்துக்கிட்டு நீ இருந்தா, உடையும்மடி பெரும் வேலி”


முட்டத்து பக்கத்திலே

வெங்கட் பிரபு பாடியிருக்கிறார். பாடினதுல ஏதும் குறை சொல்லமுடியாது. இருந்தாலும், அவருதான் பாடணுமா என்ன? யாராச்சும் வாய்ப்பு கிடைக்காம இருக்குறவுங்களுக்கு கொடுத்திருக்கலாம். சரி, அது எதுக்கு நமக்கு? கரகாட்டக்காரனில், ‘நந்தவனத்தில் ஒரு ராஜகுமாரி’ன்னு ஒரு பாட்டு இருக்குமே? அதை அப்படியே தழுவிட்டாங்க. இடையில் புல்லாங்குழலில் நல்ல மெல்லிசை.

“இது டைம்பாஸு பாட்டு இல்ல... இதுக்கு டிக்கெட்டு தேவையில்ல...
ராத்திரி ஆட்டத்துக்கு நாந்தான் பாட்டாளி... போக்கிரி கூட்டத்துக்கு ஏத்த கூட்டாளி...”


எல்லா பாடல்களையும் இணைக்கும்படி ஒரு குழல் ஓசை (சங்கு?) எல்லா பாடல்களிலும் வருகிறது. கடற்கரையோரம் இருக்கும் உணர்வை கொடுப்பது அதுதானோ?

யுவனுக்கு இசையில் இன்னொரு பருத்தி வீரன்.