Friday, January 23, 2009

நொந்த பயணங்கள்

பயணங்களின் போது எடுத்த படங்களை பதிவாக போட்டபோது, சில நொந்து போன பயணங்களும் நினைவுக்கு வந்தது. சரி, அதையும் சொல்லிடுவோம்.

---

கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, கோயம்புத்தூரிலிருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்தேன். பஸ்சில் ஏறி உக்கார்ந்து விட்டேன். எனக்கு ஒரு நல்ல பழக்கம். பஸ்சில் ஏறினா நல்லா தூங்குவேன். இதனால் கஷ்டப்பட்டதும் உண்டு. அதை கடைசியில் சொல்றேன். கோவையிலிருந்து பஸ் கிளம்பி நல்லாத்தான் போயிட்டு இருந்திச்சி. நானும் வழக்கம் போல் தூங்கிட்டேன். காலையில ஒரு நாலு - அஞ்சு மணி இருக்கும். எந்திரிச்சி பார்த்த பஸ் ஒரு போலீஸ் ஸ்டேசன்ல நிக்குது.

எந்த ஊருன்னு பார்த்தா, தாராபுரம். அடப்பாவிகளா.

அப்புறம் என்னன்னு விசாரிச்சா பஸ்சுக்கு பெர்மிட் கிடையாதாம். டிரைவருக்கு லைசன்ஸ் கிடையாதாம். சுத்தம்.

பிறகு அவனுங்க இன்னொரு பஸ் அனுப்பி வச்சானுங்க. இனி எப்ப ஊருக்கு போயி சேருறது? யாராவது முக்கிய வேலையா, ஊருக்கு போறாங்கன்னா என்ன பண்ணுவாங்க? எனக்கு பரவாயில்லை. நான் திரும்பவும் புது பஸ்ல தூங்க ஆரம்பிச்சிட்டேன்.

----

இது சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதே கோயம்புத்தூரிலிருந்து சேலத்துக்கு நைட் பனிரெண்டு மணிக்கு பஸ் ஏறினேன். காலையில் வேலை இருந்தது. ஏறியாச்சு. டிக்கெட் எடுத்தாச்சு. இனி என்ன? தூங்க வேண்டியது தான்.

ஒரு மணி நேரம் கழிச்சு முழிச்சு பார்த்தேன். பஸ் கோயம்புத்தூர் இறுதியில் உள்ள கருமத்தம்பட்டியில் நின்று கொண்டிருந்தது. பஸ் பஞ்சராம்.

ஆரம்பிச்சுடாங்கடா! சரி எப்படியும் பஞ்சர் சரி பண்ணி கிளம்பிடுவாங்கன்னு நினைத்துக்கொண்டு மழை வேறு பெய்து கொண்டிருந்ததால் அப்படியே தூங்க ஆரம்பித்தேன். ஒரு அரை மணி நேரம் சென்று இருக்கும். ஒன்றும் நடந்தது போல் இல்லை. ஸ்டெப்னி இல்லையாம்.

அந்த பஞ்சர் ஆனா பஸ்சோடு ஒவ்வொரு டிப்போவாக சென்று ஸ்டெப்னி பிச்சை கேட்டு கொண்டு இருந்தார்கள். எல்லாம் அரசாங்கத்துடையது தான். அதற்குள் வட்டம், கோட்டம் என்று வேறுபாடு. பஸ் கண்டக்டர் சாலையில் போகும் ஒவ்வொரு பஸ்சையும் கைகாட்டி நிறுத்த முயன்று கொண்டிருந்தார். நிறுத்தினால் நேரமாகும் என்று பறந்து கொண்டிருந்தார்கள். சக பயணிகளும் இதுக்கு தான் பிரைவேட் கிட்ட கொடுக்கணும்ன்னு பொறுப்பா பேசி கொண்டு இருந்தார்கள்.

பணத்தை திருப்பி கொடுத்தால் நாமாகவே எதிலாவது ஏறி சென்று விடலாம் என்று கேட்டால் அதுவும் கண்டக்டர் தர மாட்டாராம். பாலிஸி சார். நல்ல பாலிஸி.

போனா போகுது என்று பின்பு நானே ஒரு பஸ்சில் ஏறினேன். சீட் இல்லாததால் பஸ் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். வெளியே சில்லென்று காற்று. நல்ல அனுபவம். அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு சீட் கிடைக்க, உக்கார்ந்து பயணத்தை தொடர்ந்தேன்.

---

இது தமாஷான அனுபவம். அன்றும் அவசரமாக ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். நேரடி பஸ்சில் முன்பதிவு செய்யாததால், மாறி மாறி செல்வதாக திட்டம். நன்றி : தமிழக அரசு போக்குவரத்து கழகம். பெங்களூரில் இருந்து ஓசூர் சென்றவுடன் கிளம்பி கொண்டிருந்த ஒரு சேலம் பஸ் கிடைத்தது. சூப்பர்டா. ஆரம்பமே அசத்தலா இருக்கேன்னு கூட்டம் இல்லாத அந்த பஸ்சில் பயணத்தை தொடங்கினேன்.

ரொம்ப நேரம் ஆகியும் டிக்கெட் கொடுக்க கண்டக்டர் வரவில்லை. திரும்பி திரும்பி பார்த்து கொண்டேன். கண்டக்டர் போல் யாரும் இல்லை. என்னுடன் இருந்தவர்களும் திரும்பி பார்த்துகொண்டார்கள். சரி, கொஞ்சம் தூரம் சென்றவுடன் கண்டக்டர் எங்காவது ஏறி கொள்வார் என்று நினைத்து கொண்டேன்.

பின்னால் இருந்தவர்கள் குசுகுசுவென பேசி கொண்டார்கள். டிரைவரிடம் கேட்டு விடலாம் என்று முடிவு செய்து ஒருவர் முன்னால் சென்று டிரைவரிடம் 'கண்டக்டர் எங்கே?' என்று கேட்டார். அதை கேட்டவுடன் டிரைவர் போட்டார் பாருங்க, ஒரு பிரேக். கண்டக்டரை ஓசுரிலே விட்டுவிட்டு வந்து விட்டாராம்.

டிரைவர் வயதானவர். அவரிடமும் செல்போன் இல்லை. கண்டக்டரிடமும் செல்போன் இல்லை. 'நல்லாதானே போயிட்டு இருந்திச்சி' என்றிருந்த எனக்கு கடுப்பு. ரோட்டையே பார்த்து கொண்டிருந்த டிரைவர், வண்டியை ஓசூருக்கு திருப்பும் முடிவுக்கு வந்தார். ஏற்கனவே இருபது - இருப்பத்தைந்து கிலோ மீட்டர் வந்திருந்தோம். 'இது ஆவுற கதையில்லை' என்று இறங்கி கொண்டேன். பின்பு, சூளகிரி என்ற ஊருக்கு ஒரு டப்பா பஸ்சில் ஏறி, கிருஷ்ணகிரிக்கு வந்து சேலத்திற்கு சென்றேன்.

அதற்கு பின், பஸ்சில் ஏறியவுடன் கண்டக்டர் இருக்கிறாரா என்று பார்த்துதான் ஏறுகிறேன். நீங்களும் அப்படியே பண்ணுங்க. டிரைவரையும் பார்த்துக்கோங்க. :-)

---

இது என் தூக்கத்தால் நொந்த கதை. கோவையிலிருந்து பெங்களூர் பயணம். ஓசூர் தாண்டியவுடனே சிறிது நேரத்தில் இறங்க வேண்டும். பெங்களூர் மைய பகுதியான மெஜஸ்டிக் சென்று விட்டால், திரும்ப ஒரு மணி நேரம் பயணப்பட வேண்டும். அதனால், எப்போதும் ஓசூர் தாண்டியவுடன் இறங்க ரெடியாகி விடுவேன்.

அந்த சமயம், கோவையில் எனக்கு நல்ல அலைச்சல். மதியமே பஸ் ஏறி விட்டேன். அது பெங்களுருக்கு இரவு பத்து மணிக்கு வந்து விடும் என்று நினைத்தேன். ஆனால் நேரமாகிவிட்டது. அலைச்சல் காரணமாக எனக்கு நல்ல உறக்கம் (இல்லாட்டியும்...).

ஓசூரில் விழிக்கவில்லை. கண் முழித்து பார்த்தால் மெஜஸ்டிக். மணி பன்னிரண்டு. அந்நேரம் எங்கள் பகுதிக்கு (எந்த பகுதிக்கும்) செல்ல எந்த பஸ்சும் இருக்காது. வேற என்ன பண்ண? ஆட்டோ பிடித்து வந்தேன். பத்து மணிக்கு மேல அவன் சொல்றதுதான் கட்டணம்.

ப்ரிபேடில் ஒரு போலீஸ்காரர் தான் ஏற்றிவிட்டார். இருந்தும், நான் வீடு வர கொடுத்த பணம், கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வந்ததை விட அதிகம்.

7 comments:

கணேஷ் said...

கிருஷ்ணகிரி, நான் நாலு வருஷம் படிக்கிறேன்னு பேர்ல் ஊர் சுத்துன இடம்.

உங்க ஃபர்ஸ்ட் அனுபவமும், லாஸ்ட் அனுபவமும் டாப்.

சரவணகுமரன் said...

நன்றி ராம்சுரேஷ்

துளசி கோபால் said...

ஹைய்யோ.....

நல்லாச் சிரிச்சேன்.:-)))))

சரவணகுமரன் said...

நன்றி துளசி கோபால்

vithyasagar said...

en anubangalum sila

சரவணகுமரன் said...

வித்யாசாகர், உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்குன்னு சொல்றீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பயணத்தால் நொந்த குமாரனா நீங்க ?