பாகிஸ்தான். நமக்கு அடிக்கடி தொல்லை கொடுக்குற பக்கத்து வீட்டுக்காரன். ஏன் இப்படி பண்றான்? அப்படி நம்மள பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான்? இப்படி என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளது, முஷரப்பின் சுயசரிதையான "IN THE LINE OF FIRE" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, "உடல் மண்ணுக்கு". மொழி பெயர்த்திருப்பவர், நாகூர் ரூமி.
சுயசரிதை, ஒரு மனிதனின் வாழ்நாள் டைரி. சுயசரிதைகளில் உள்ள விசேஷம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த, மற்றவர்களுக்கு தெரியாத, சில விஷயங்கள் அவனுக்கு தான் தெரியும். அது போன்ற முக்கிய விஷயங்கள் அவர்கள் எழுதும் நூலில் வர வாய்ப்புள்ளது. குறை : நல்ல விஷயங்களை மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களையும் சொல்லும் நேர்மை, துணிவு அனைவருக்கும் இருக்காது. முஷரப், இந்த புத்தகத்தை எழுதியதன் நோக்கம், தான் சார்ந்த சில நிகழ்வுகளின் உண்மை நிலையை (?) எடுத்துரைக்கவும், தன் பக்க நியாயத்தை எடுத்து சொல்லவும் என்றே நினைக்கிறேன்.
முஷரப் பாகிஸ்தான் தலைமை பொறுப்பில் இருந்த போது, அவரை பற்றி ஒரு கொடூரமான உருவகமே எனக்கு இருந்தது. இப்போது பாகிஸ்தானில் நடப்பதை பார்க்கும் போது அவரே பரவாயில்லை என்று தோன்றுகிறது. இந்த புத்தகத்தின் மூலம் அவரை மட்டும் இன்றி, அவரது நாட்டை பற்றியும், அந்நாட்டின் ராணுவத்தை பற்றியும், அரசியல் நிலைமையை பற்றியும், அரசு இயந்திரத்தை பற்றியும், அந்நாட்டின் வெளியுலக தொடர்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். பாகிஸ்தான் கதை மட்டுமில்லாமல், பங்களாதேஷ் கதையும் ஒரளவுக்கு உள்ளது. அவரே, இப்படி அவரது வார்த்தைகளில் சொல்கிறார்.
"ஆரம்பத்திலிருந்தே, எனது கதையும், பாகிஸ்தானின் கதையும் ஒன்றாகிப் போனது."
-------
கதையை தாத்தா காலத்திலிருந்து ஆரம்பிக்கிறார். டெல்லியில் பிறந்தவர், தேச பிரிவினையின் போது குடும்பத்துடன் பாகிஸ்தான் சென்று அங்கு வளர்கிறார். சிறிது காலம் துருக்கியில் வாழ்ந்திருக்கிறார்கள். அந்நேரங்களில், எல்லா பிள்ளைகளை போலத்தான் வாழ்ந்திருக்கிறார். கோலி குண்டு விளையாடியிருக்கிறார். திருட்டுத்தனமாக மரத்திலேறி பழங்கள் பறித்திருக்கிறார். லவ் பண்ணியிருக்கிறார் (பெயிலியர் தான்). பின்பு, ராணுவ
கல்லூரியில் சேர்ந்த பிறகு, சராசரி வாழ்க்கை சடுகுடு வாழ்க்கையாகியிருக்கிறது.
ராணுவ கல்லூரியில் சிறப்பாக பயின்று, ராணுவத்திலும் கடமை உணர்ச்சியுடன் பணியாற்றியுள்ளார். சில சேட்டைகளையும் செய்திருக்கிறார். பல பொறுப்புகளில் ஜொலித்த முஷரப், ஒரு கட்டத்தில் ராணுவ தலைவராக பொறுப்பேற்கிறார். அப்போது, பிரதமராக இருந்த நவாஸ் செரிப்புடன் ஏற்பட்ட உரசலால் பற்றி கொண்டு எரிந்திருக்கிறார். பிரதமர் பதவியிலிருந்து நவாஸை எறிந்திருக்கிறார்.
அதன் பின், உலகத்தின் பார்வை இவர் மேல். பாகிஸ்தான் அதிபர் என்றொரு சிக்கல் பதவி. அதனுடன் சேர்ந்து கொண்டு வலுகட்டாயமாக ஏற்பட்ட அமெரிக்காவுடன் கூட்டணி என்றொரு புலி வால் பொறுப்பு. இதற்கு நடுவே, அரசியல் கட்சிகளுடன் மோதல், நாட்டின் பொருளாதார சீர்குலைவு, நீதி துறையுடன் சண்டை, அதற்கு மேல் தாலிபான், அல்-கொய்தாவால் அவரை சுற்றி வைக்கப்படும் குண்டுகள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள். அப்பப்பா...
ஒரு நாளாவது தலைவலி இல்லாமல் தூங்கி இருப்பாரா என்பது சந்தேகமே!
----------
இப்படி தினமும் அசாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வை எழுத்தாக்கியிருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, வங்காள தேசம் பிளவு, இந்தியாவுடன் போர், ராணுவ புரட்சி, தீவிரவாதத்திற்க்கெதிரான போர், தாலிபான் உறவு என இவர் வாழ்வை தொட்டு சென்ற சம்பவங்கள் எல்லாம் மறக்க முடியாத, மறைக்க முடியாத வரலாறு.
பிரிவினையின் போது, ரயில் பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் அந்நாட்களின் துயரத்தை உணர்த்துகிறது.
"வரும் வழியில் (இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு) பழிவாங்கும் எண்ணம் கொண்ட சீக்கியர்களாலும் ஹிந்துக்களாலும் அவர்கள் (முஸ்லிம் குடும்பங்கள்) சித்திரவதை செய்யப்பட்டார்கள். எதிர்த் திசையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த பல ஹிந்துக்களும் சீக்கியர்களும், பதிலுக்கு முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டார்கள்"
ராணுவ அதிகாரி என்றால் வெடுக்கென்றுதான் இருப்பார்களா?
"ராணுவத்தால் ஒரு மனிதனின் எத்தனையோ குணங்களை மாற்ற முடியும். ஆனால் தொன்று தொட்டு வரும் உணர்ச்சிகளை ஒன்றும் செய்ய முடியாது"
ஆனாலும், நிச்சயதார்த்தம் முடிந்தபின் வருங்கால மனைவி அனுப்பிய லெட்டரில் எழுத்து பிழையை திருத்தியிருக்கிறார். இவரை என்னன்னு சொல்ல?
கார்கில் போரின் போது தங்கள் நாட்டில் இருந்து வெளிப்படையான, பெரும்பான்மையான ஆதரவு வராததை கண்டு வருந்துகிறார்.
"இந்திய ஊடகங்கள் அவர்களது வெற்றியை மிகைப்படுத்திக் காட்டியன. எங்களது அரசியல் தலைமைக்கோ எந்த வித ஆட்சித்திறமையும் இல்லை. கார்கில் விஷயத்தில் நாட்டை ஒருங்கிணைக்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை."
இந்தியா பாகிஸ்தானை தாக்கியது. அப்பாவி மக்கள் இறந்தார்கள் என்பது போன்ற குற்றசாட்டுகள் இந்தியனாகிய நம்மை தடுமாற தான் வைக்கும். உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. முஷரப் வேறு என்ன சொல்லுவார்? இம்மாதிரியான கருத்துகளை இந்தியாவில் இருந்து கொண்டு படிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் இல்லையே?
1965 போரில் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி இல்லை என்கிறார். ஆனால், இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி மூக்கை உடைத்ததாகவும், அதிகமான நில பிரதேசங்களை பிடித்ததாகவும் கூறுகிறார்.
கொழும்பில் இருந்து கராச்சிக்கு வந்து கொண்டிருந்த முஷரப்பின் விமானத்தை தரையிறங்க நவாஸ் ஷெரிப் செய்த சதியை ஒரு அத்தியாயத்தில் விவரித்துள்ளார். அவர் அந்த நிமிடங்களில் அனுபவித்த சங்கடங்களை வார்த்தைகளில் அப்படியே இறக்கி வைத்துள்ளார்.
"’பாகிஸ்தானில் எங்கும் நீங்கள் தரையிறங்க முடியாது. பாகிஸ்தானின் வான் எல்லையைவிட்டு உடனே சென்று விட வேண்டும்.” அந்த பதிலை எங்களால் நம்ப முடியவில்லை. என்னிடமிருந்து விடுபடுவதற்காக, எங்கள் அனைவரையும் (விமானத்தில் 198 பயணிகள்) கொல்ல அவர்கள் முயன்றுகொண்டிருந்தார்களா என்ன?"
நவாஸ் ஷெரிப்பை தூக்கியெறிந்து விட்டு, ஆட்சியை அமுக்கியது அடிதடி மசாலா படம்தான். முஷரப் இல்லாமலே, எதுவும் சொல்லாமலே அவருக்காக செயல்பட்ட ராணுவம், அவர் ராணுவத்தின் மேல் கொண்ட ஆளுமையை காட்டுகிறது. ராணுவமும் போலிஸும் மோதி கொண்டால் யார் ஜெயிப்பார்கள்? சிறுபிள்ளைத்தனமான கேள்வியா இருக்கா? எனக்கும் படிக்கும்போது விநோதமாகத்தான் இருந்தது.
"பிரதமர் வீடுக்கு ராணுவம் வந்து சேர்ந்தபோது, ஒரு கும்பலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்ததைப் போல, தேவையான அளவு ஆயுதம் தாங்கிய போலீஸார் அங்கு நிறைந்திருந்தனர். அத்தகைய ஆயுதக் காவல் படை பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் இருந்தது. அந்தப் படையைப் பார்ப்பவர்கள் குறைந்தது ஒருமுறைக்கு இருமுறையாவது யோசிக்கவேண்டும்."
தாலிபான், உமர், பின்லேடன் பற்றியெல்லாம் நிறைய தகவல்களை சொல்லி உள்ளார். அமெரிக்காவுக்காக நிறைய ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை பிடித்திருப்பதாகவும், அதற்காக அமெரிக்காவிடம் இருந்து நிறைய பரிசுகளை பெற்றிருப்பதாகவும் சொல்லி பெருமைபட்டு கொள்கிறார். ஒரு பக்கம் பொருளாதார துணையுடன் அமெரிக்கா, இன்னொரு பக்கம் அமெரிக்க எதிர்ப்புணர்வுடன் பாகிஸ்தான் மக்கள் என்று இடிப்பட்டும் காட்டிக்கொள்ளாமல் ஆட்சி நடத்தியிருக்கிறார்.
தீவிரவாதத்தை எதிர்க்கப்போய், ஒரு கட்டத்தில் தீவிரவாதத்திற்க்கே குறியாய் மாறி, அதனால் அவர் எதிர்க்கொண்ட சம்பவங்களும், அதை அவர் குறிப்பிடும்போது சில ஆங்கில படங்கள், மணிரத்னம் படங்கள், ஷங்கர் படங்கள் எல்லாம் கண்முன் வந்து செல்கின்றன.
"இதெல்லாமும் நடக்க ஒரு விநாடிகூட ஆகியிருக்காது. என் தலையை நான் திருப்புவதற்குள் காதடைக்கும் ஒரு பெரும் சத்தம் கேட்டது. மறுபடியும் எனது கார் ஆகாயத்தில் இருந்தது."
-------------
முஷரப், பொதுவாகவே தீவிர இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு ஆதரவளிப்பவராக தெரியவில்லை. மேற்கத்திய கலாசாரத்திற்கு சார்பாகவே இருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தான் மக்கள் பற்றிய அவர் கருத்து இது.
"அடிப்படையில், பாகிஸ்தான் மக்கள் மத உணர்வு மிக்கவர்களாகவும், மிதவாதிகளாகவும்தான் இருக்கிறார்கள். இந்த துணைக்கண்டத்தில் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் நாடுதான் பாகிஸ்தான். அந்த மக்களில் ஒரு சிறு பகுதியினர்தான் தீவிரவாதிகளாக இருக்கின்றனர். இந்தப் பிரிவினர் இணக்கமற்ற, பழைமைவாத, சகிக்கமுடியாத மதக்கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அக்கருத்துக்களை அடுத்தவர்மீது திணிக்கும்போது, பிரச்சினை ஏற்படுகிறது. இந்தச் சிறு பிரிவு எப்போதுமே உணர்ச்சிவசப்படுபவர்கள். எளிதாகப் பயங்கரவாதக் கருத்துக்களைத் திணித்து இவர்களை பயங்கரவாதிகளாக மாற்றிவிட முடியும்."
ரொம்ப சிம்பிளான, அதே சமயம் நேர்மையான கருத்து என்று இதை கருதுகிறேன்.
புத்தகத்தில், சிறுவயதிலிருந்து தான் கடந்து வந்த பல மனிதர்களை நினைவு கூர்கிறார். அவர்களின் தற்போதைய நிலையையும் சொல்கிறார். இது இடைவிடாமல் அவர் அவர்களுடன் கொண்டிருக்கும் தொடர்பை காட்டுகிறது.
இந்த புத்தகம் மூலம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே உள்ள உறவு முறை தெரியவருகிறது. இந்தியா பற்றிய அவர்களின் எண்ணங்கள் வெளி வருகிறது. பாகிஸ்தான் என்றொரு அடி மேல் அடி வாங்கும் நாட்டின் தொடர் போராட்டம் விளங்குகிறது.
இந்த நூலை மொழிபெயர்த்து இருப்பது, நாகூர் ரூமி. ஆங்கிலத்தில் இருந்தால் என்னால் இந்த அளவுக்கு ஆர்வமாக படித்திருக்க முடியுமா? என்பது சந்தேகம் தான். நன்றி, நாகூர் ரூமி. மொழிப்பெயர்ப்பு செய்யும் போது சில கட்டுபாடுகள் இருக்கும். அதற்குள் சிறப்பாக செயல்பட்டு வாசிப்பவர்களை சலிப்படையாமல் வாசிக்க வைத்து வெற்றியடைந்திருக்கிறார் நாகூர் ரூமி. வாழ்த்துக்கள்.
புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.
படிச்சி முடிச்சத்துக்கப்புறம் ஒரு மாதிரியா இருக்கு. உடனே, மானேக்ஷா பத்தின புக்கை படிக்கணும்.
5 comments:
அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......
அன்புடன்
காவேரி கணேஷ்
kaveriganesh.blogspot.com
பண்ணிட்டா போச்சி... :-)
Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com
விரிவான அறிமுகத்திற்கு நன்றி சரவணகுமரன்.
நன்றி Bee'morgan
Post a Comment